
WRITTEN BY B.KANNAN, DELHI
Post No. 9933
Date uploaded in London – 4 AUGUST 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
தமிழ்ப் புலவர்களின் ரஸிக்க வைக்கும் சொல்லாடல்–2 பா.கண்ணன், புது தில்லி
வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 2-8-2021 அன்று ஆற்றிய உரை.
எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம்.
ஞானமயம்-தமிழ் முழக்கம் ஓராண்டு நிறைவையொட்டி, அழகுத் தமிழில் பொதிந்துள்ள மேலும் சில சுவாரசியமானப் பாடல்களைப் பார்க்கலாம்…..

அழகிய மணவாளதாஸர் எனும் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் இயற்றிய 108 திருப்பதி அந்தாதி நூலை அடியொட்டி திருநின்றவூர் திருமலை அத்தங்கி தாதாரியர் தொண்டன் அதே தலைப்பில் வேறொரு நூல் இயற்றியுள்ளார் ஒரு வித்தியாசத்துடன் .ஒவ்வொரு திவ்யதேசத்துக்கும் உரிய 8 முக்கியச் செய்தி களை ஒவ்வொரு செய்யுளிலும் அதாவது, வழிபட்டோர், தீர்த்தம், விமானம், பிராட்டியாரின் நாமம், திசை, கோலம், திருமால், திருப்பதி ஆகியவற்றை விவ ரித்துள்ளார்.. காப்புச் செய்யுள் 2, & 3-ல் யமகம் கையாளப்பட்டுள்ளது. 2-வது திருமங்கை ஆழ்வார் பற்றியது. 3-வது-எதிராஜர் (ராமாநுஜர்) பிரானைப் போற்றுவது.
பரகாலன் பாசக் கயத்தார்ப் புணாகருள் பாரெனவம்
பரகால னாந்திரு மாலவ னெங்கட் படமையினிம்
பரகால னென்றி யவர்க்குரித் தாமுனைப்பற்றி னஞ்சீர்ப்
பரகால னான்மறை யாறங்க மோ துமெய்ப் பாவலனே.
பரகாலன்(யமன்), ஆர்ப்புணாது அருள் பார்(பாசக் கயிற்றால் கட்டுப் படாமல் இருக்க அருள்வாய்), அம்பரக் காலனாம் திருமால்(ஆஅகாயத்தை அளந்தப் பாதத்தையுடையத் திருமால்), இம்பர காலன் அன்றி அவர்க்கு உரித்தாம் உன்னை- இவ்வுலகில் அக்காலனுக்கு உரித்தாகாமல் விஷ்ணுவிக்கே உரித் தானப் பரகாலனான உன்னைப் பற்றினேன், நான்மறை ஆரு அங்கம் ஓதும்
(நான்மறைக்குச் சமமான, திருவாய்மொழி, திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி ஆகியவற்றுக்கு 6 அங்கங்கள் போல் அமைந்த பெரிய திருமொழி, திருவெழுக்கூற்றிருக்கை, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந் தாண்டகம், சிறிய திருமடல், பெரிய திருமடல் ஆகிய 6 நூல்களை அருளிச் செய்தப் பரகாலன் என்றத் திருமங்கையாழ்வாரைத் தாள் பணிந்துச் சேவிக் கிறேன், என்கிறார்.
தமிழுக்குத் தொண்டாற்றியப் புலவர்கள் பலருள் இரட்டைப் புலவர்கள் சிறப்பு வாய்ந்தவர்களாவர். இவர்கள் வாழ்ந்த காலம் ( நூற்றாண்டு என்கின்றனர் வர லாற்று ஆய்வாளர்கள்.
சோழநாட்டில், செங்குந்தர் மரபில் தோன்றினர் என்றும், இருவரும் உறவினர் கள் – அதாவது அத்தை மகன், மாமன் மகன் என்றும், இருவரும் இணைபிரியாத வர் என்பதால் இரட்டையர் எனப் பெயர் பெற்றனர் என்றும் கூறப்படுவது உண்டு
சோழநாட்டில் வாழ்ந்த ஒரு வேளாளர் தம்பதிக்கு, சிவபெருமானின் திருவரு ளால், அஸ்வினி தேவர்களின் அம்சமாக இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.
ஒருவர் பிறவியேலேயே கண் பார்க்க இயலாதவர். மற்றொருவர் கால் நடக்க இயலாதவர்.இதனால் மனமுடைந்த தம்பதியர்க்கு,‘ஊனம் இருந்தாலும்,ஞானம் மிகப் பெற்று,ஞாயிறு போன்று பிரகாசித்து,ஞாலத்தை வலம் வருவார்கள்’ என்று பெரியோர்கள் வாழ்த்தினார்களாம்.அதனாலேயே, முன்னவருக்கு முது சூரியர் என்றும், இளையவருக்கு இளஞ்சூரியர் என்றும் பெயரிட்டனர்.
சிறு வயதிலேயே இருவரும் தமிழ்ப்பற்று மிகுந்து விளங்கினர். தமிழைக் களங்கமறக் கற்றுச் சிறந்தனர்.
இருவரும் மனமொத்தக் கருத்துக்களைக் கொண்டிருந்தனர். கால் நடக்க இயலா தவர் முதல் இரண்டு வரிகளைப் பாட, செய்யுளின் தன்மை மாறாமல் அடுத்த இரண்டு வரிகளை கண் பார்க்க இயலாதவர் பாடுவாராம்.
பெரியோர்கள் வாழ்த்தியது போல, ஞாலத்தை (தேசங்களை) வலம் வந்த இரட் டையர்கள் சென்றமிடமெல்லாம் விரும்பிப் பெற்றப் பரிசில் தொகை ஒரு பணம் மட்டுமே!
கண்பார்வை இழந்தவர் நடமாட முடியாதவரைத் தன் தோளில் சுமந்தவாறு, அவரின் வழிகாட்டுதலில் நடப்பார்.இவர்கள் ஒவ்வொரு தேசமாகச் சென்று பாடல் பாடி வந்தனர். இவர்களுடைய பாடல்களில் சைவப்பற்று
ஓங்கியிருந்தது. .
புராணங்களில் உள்ள மிக நுண்ணியக் கருத்துக்களைத் தம் பாடல்களால் வெளிக்கொணர்வதில் வல்லவர்களாக இருந்தனர்.“கண்பாய கலம்பகத்திற் கிரட்டையர்கள்” எனும் தொடர் வாயிலாகக் கலம்பகம் எனும் தமிழ் வகைப் பாடல்கள் பாடுவதில் மிகவும் தேர்ந்தவர்களாக இருந்தனர்.
கலம்பகம் என்பது தமிழ் இலக்கண வகைப்படி, கதம்ப மலர் மாலையைப் போன்று, பதினெட்டு உறுப்புகள் அமையப் பலவகைச் செய்யுள் விகற்பங்களால் பாடப் பெறுவதாகும்.

சிதம்பரம் நடராஜர் மேல் அதீத பற்றுக் கொண்டவர்கள். எழுதாக் கிளவியை (சொற்கள்)வேதம் என்றும், எழுதும் மறையை தேவாரம் என்றும், முனிவர் உபமன்யு வேதம் ஓதியவர் என்றும், கழுமல(சீர்காழி) முனிவர் சம்பந்தர் பெருமான் தேவாரம் பாடி வழிபட்டார் என்றும், இவர்களின் இனியத் திருவடிகள் எங்கள் சிரசின் மீது எக்காலமும் இருக்க வேண்டும் என்று இவ்விருவரும் ஸ்தோத்திரம் செய்துள்ளது மிகச் சிறப்பாகும். தில்லை நடராஜர் மீது அவர்கள் இயற்றியப் பாடல்கள் தில்லைக் கலம்பகம் என்று அழைக்கப்படும். இவர்கள் இரட்டையர்கள் அல்லவா ?இவர்கள் பாடிய தில்லைக் கலம்பகப் பாடல் ஒன்றில், இரண்டு பேசும் பொருள்கள் தொடர்ந்து வருவது போல் பாடுகின்றனர்.
சுருதிக்கும், தாளத்துக்கும் ஒத்து வரும் இசைவண்ணம் நிரம்பியப் பாடல்…
காதில் இரண்டு பேர்; கண்டோர் இரண்டு பேர்;
ஏதிலராய்க் காணோர் இரண்டு பேர்;
பேதை முலை உண்ணார் இரண்டு பேர்;
ஓங்கு புலியூரருக்குப்
பெண்ணான பேர் இரண்டு பேர்
சிவமஹா புராணத்தில் மிகச் சிறிய அளவில் இடம்பெறும் ஒரு சம்பவம் இது.
நாக அம்சமாகப் பிறந்த இரண்டு பேர், சரஸ்வதி கடாட்சத்தினால் அருமையான இசைஞானத்தைப் பெற்றார்கள். இவர்கள் இருவரும் தங்களின் இசை வல்ல மையை சிவபெருமானிடம் மட்டுமே சமர்ப்பணம் செய்யத் தவமிருந்தார்கள். தவத்திற்கு மெச்சிய சிவபெருமான், அவர்களின் வேண்டுதலின் படி, அவர்கள் இருவரையும் தன்னுடைய காதுத் தோடுகளாக அணிந்து கொண்டார். அந்த நாகர்கள் இரண்டு பேர் – கம்பளர் மற்றும் அசுவதரர் எப்போதும் சாமகானம் பாடிய வண்ணம் இருப்பார்களாம்..இந்த இருவரையும் தான், இரட்டைப் புலவர்கள் ‘காதில் இரண்டு பேர்’ என்கின்றனர்.
‘கண்டோர் இரண்டு பேர்’ – தில்லைச் சிதம்பரத்தில் ஆடல்நாயகனின் தாண்டவத்தைக் கண்டு பேறு பெற்றவர்கள் இரண்டு பேர். அவர்கள் பதஞ்சலி மற்றும் வியாக்ரபாத முனிவர்கள்.
‘ஏதிலராய்க் காணோர் இரண்டு பேர்’– அடிமுடி தெரியாவண்ணம் ஜோதி ஸ்வரூபமாக நின்ற சிவபெருமானை – பிரம்மாவும் விஷ்ணுவும் தலை எங்கு, கால் எங்கு என்று தெரியாமல் – திகைத்தனர். ஆகையாலேயே பிரம்மாவும், விஷ்ணுவும் ‘காணோர் இரண்டு பேர்’.
‘பேதை முலை உண்ணார் இரண்டு பேர்’ – பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டுவது மரபு. ஆனாலும், குழந்தையாய் இருந்தாலும் தாய்ப்பால் உண்ணாதவர்கள் இரண்டு பேர். ஒருவர் பிரம்மரிஷி வியாக்ரபாதர்-ஆத்ரேயி
தம்பதியின் மகன் உபமன்யு ஆவார். குழந்தைப் பசியால் அழுத போது மகேசனே அதற்குப் பாற்கடலையேக் குடிக்க வைத்துப் பசியாற்றினாராம்: மற்றொருவர் பார்வதி தேவியால் குழந்தையாக பாவிக்கப்பட்டு ஞானப்பால் அருளப்பெற்றவர் திருஞானசம்பந்தர் (இளைய பிள்ளையார்).
‘ஓங்கு புலியூரருக்கு பெண்ணான பேர் இரண்டு பேர்’ – சிவபெருமான் கங்கை, உமாதேவி இருவரையும் நாயகியராகக் கொண்டதைக் குறிக்கின்றனர் இரட்டையர்.
.சாஸ்திரங்கள் இறைவன் உள்ளான் என நிலை நிறுத்தும்; ஆனால் ஸ்தோத்திரங்கள் இறைவனையே நம் மனக்கண் முன் காட்ட வல்லது. அதைத் தான் தில்லைக் கலம்பகம் உறுதிபடுத்துகிறது.

தமிழ் மகாசமுத்திரத்தில் அமிழ்ந்துக் கிடந்து நம்மைப் பிரமிக்க வைக்கும் இப்படிப்பட்ட இலக்கிய ரசனை மிகுந்த முத்துக்களும், இரத்தினங்களும் ஏராளம், ஏராளம்!
உயிர் எழுத்துக்களில் ஆரம்பித்தோம் அதிலேயே அழகாய் முடிப்போமே!
இதை நாம் சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா? ஈசன்-தருமி, யட்சன்-தருமன் கேல்வி-பதில் பாணியில் ஒன்று இதோ…..
“அ” வுக்கு அடுத்து “ஆ” வருவதேன்?*
*அரியும், ஆண்டியும் (பிச்சாண்டி= அரன்) ஒன்றே என்பதை அறிந்திட!!*
*”இ” வுக்கு அடுத்து “ஈ” வருவதேன்?*
*இல்லறத்தை நடத்தப் பொருள் ஈட்டி வாழ் என நினைவுறுத்த!”
*”உ” வுக்கு அடுத்து “ஊ” வருவதேன்?*
*உத்தமன் ஊருடன் கூடி வாழ்வான் எனக் கூறிட!”
*”எ” வுக்கு அடுத்து “ஏ” வருவதேன்?*
*எதையும், ஏட்டிக்குப் போட்டி ஆக்காமல் ஆழ்ந்துச் சிந்தித்துப் பார்க்க!! அல்லது இப்படியும் சொல்லலாமே.
எரு அடித்து விட்டால் அடுத்து ஏர் உழ வேண்டியதைக் குறிக்க
*”ஐ” மட்டும் ஏதோடும் சேராமல் தனித்து இருப்பதேன்?*
*யாருடனும் ஐக்கியமாகாமல் தலைக்கனம் கொண்டிருந்தால் தனிமைப் படுத்தப்படுவாய் என்பதை உணர்த்த!* அல்லது காலத்துக்கு ஏற்ப,
“ஐரேயன் (கள்) குடித்தவன் போல் சுருண்டு, வளைந்துக் குறுகிக் கிடக்காதே!” என்றுச் சுட்டிக் காட்ட!
“ஒ” வுக்குப் பின் “ஓ” வருவதேன்?
*ஒற்றுமைத் தழைக்க ஓரம் சொல்லேல் (ஓருதலைப் பட்சக் கண்ணோட்டம்) என்பதை உணர்த்திட!!!*
“ஔ”வும் தனியாக நிற்பதேன்? —அடுத்தவர் உயர்வைக் கண்டு ஔவியம் (பொறாமை) பேசி தாழ்த்திக் கொள்ளாதே என்று எச்சரிக்கவே!
ஆம், முடிவில் இந்த “(அ) ஃக்” எதற்கு? — அஃகம் சுருக்கேல் “அஃகமும் (தானியம்) காசும் சிக்கெனத் தேடு” என்று உரைத்திட!
*ஆஹா! தமிழ் ஓர் அழகு மொழியே என்பதில் என்ன சந்தேகம்!”.
தமிழ் முழக்கம் ஓங்கி ஒலிக்கட்டும். திக்கெட்டும் நீக்கமற பரவட்டும்! வாழ்த்துக்கள்.

நன்றி, வணக்கம். ஜெய் ஹிந்த்!
———————————————————————————————————
tags–தமிழ்ப் புலவர், சொல்லாடல்–2,