தமிழ் அபிமானி! : மஹாகவி பாரதியாரின் விளக்கம்! -1 (Post No.8644)

S NAGARAJAN’S TALK IN GNANAMAYAM- ZOOM BROADCAST

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8644

Date uploaded in London – – 8 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

செப்டம்பர் 11: பாரதியார் நினைவைப் போற்றுவோம்; தமிழை வளர்ப்போம்!

தமிழ் அபிமானி! : மஹாகவி பாரதியாரின் விளக்கம்! -1

ச.நாகராஜன்

ஒவ்வொரு திங்கள்கிழமை தோறும் லண்டனிலிருந்து ஞானமயம் நிகழ்ச்சி லண்டன் நேரம் இரண்டு மணிக்கும் இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. கேள்வி- பதில் நிகழ்ச்சியும் இதில் ஒரு பகுதி.7-9-2020 அன்று ஒளிபரப்பான கேள்வி பதில் நிகழ்ச்சியி பாரதியார் பற்றிய கேள்விக்கு அளித்த பதிலை இங்கு காணலாம்.

கேள்வியை அனுப்ப விரும்பும் அன்பர்கள் facebook.com/gnanamayam -க்கு அனுப்பலாம்.

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம்.

இன்று நம் முன் இருக்கும் கேள்வி :-

தமிழ் அபிமானி யார் என்று பாரதியார் கூறுகிறார்? தமிழ் வாழ்க என்று கூச்சல் மட்டும் போடுவோர் பற்றி பாடல்களிலும் எழுத்துக்களிலும் அவர் சொல்லும் கருத்து என்ன?
 
தமிழ் அபிமானி பற்றி பாரதியார் ஒரு அருமையான கட்டுரையில் விவரமாகக் கூறியுள்ளார்.
அவரது பாடல்களிலும் பல கருத்துக்கள் இது பற்றி உள்ளன.
1917ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தேதியன்று நெல்லூரில் ஆந்திரமஹாசபை கூடியது. அதில் சபாநாயகராக – அதாவது தலைவராக – வெங்கடப்பய்ய பந்துலு என்பவர் தலைமை வகித்து ஒரு சொற்பொழிவை ஆற்றினார்.
அந்த உரையை வெளியிட்ட மகாகவி பாரதியார் மிக நீண்டதொரு கட்டுரையில் தெலுங்கரையும் தமிழரையும் ஒப்பிடுகிறார். தெலுங்கர்களுக்குத் தங்கள் மொழியின் மீதுள்ள பற்று போல தமிழருக்கு இல்லையே என்று அவர் வேதனைப் படுகிறார்.
அவர் கூறுகிறார்:

தெலுங்கருக்குத் தெலுங்கு பாஷையில் பிறந்திருக்கும் உண்மையான அபிமானம் தமிழருக்குத் தமிழிடம் இல்லை. தமிழிலிருந்து பூமண்டலத்திலுள்ள பாஷைகளெல்லாம் பிறந்து நிற்பதாகக் கூவின மாத்திரத்தாலேயே ஒருவன் தமிழபிமானியாக மாட்டான்.

பள்ளிக்கூடத்து சாஸ்திரங்களெல்லாம் தமிழ்ப் பாஷையில் கற்றுக் கொடுக்கும்படி முயற்சி செய்கிறவன் தமிழபிமானி. தமிழில் புதிய கலைகள், புதிய காவியங்கள், புதிய உயிர், தோன்றும்படி செய்வோன் தமிழபிமானி… தேவாரத்திலும், திருவாசகத்திலும், திருவாய் மொழியிலும், திருக்குறளிலும், கம்பராமாயணத்திலும் அன்பு கொள்ளாதவனுக்குத் தமிழபிமானம் உண்மையிலே பிறக்க நியாயமில்லை…

இந்தக் கட்டுரை சுதேசிமித்திரனில் 9.6.1917 தேதியிட்ட இதழில் ‘தெலுங்க மஹா சபை’ எனும் தலைப்பில் ‘சக்தி தாஸன்’ எனும் புனைப் பெயரில் பாரதியார் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியாகும்.

மிகத் தெளிவாக பாரதியார் தமது கருத்துக்களைப் பல பாடல்களிலும் தெரிவித்துள்ளார்.

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே -அதைத் தொழுது படித்திடடி பாப்பா என்று பாப்பா பாட்டில் குழந்தைகளுக்கு அவர் அறிவுரை கூறுகிறார்.

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்                                       இனிதாவதெங்கும் காணோம்                                             பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும்                                 இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு

நாமமது தமிழரென வாழ்ந்திடுதல் நன்றோ, சொல்லீர் என்று கேட்கும் அவர்

தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்ற தன் உள்ளார்ந்த விருப்பத்தைத் தெரிவிக்கிறார். இப்படிச் செய்பவனே உண்மையான தமிழ் அபிமானி!

யாமறிந்த மொழிகள் என்று சொல்லும் போது பாரதியாருக்கு எந்தெந்த மொழிகள் தெரியும் என்பதையும் அறிய ஆவல் எழுவது இயல்பு.

இயல்பாலே அவருக்கு தமிழ் மொழி தாய்மொழி. காசியில் இருந்த போது சம்ஸ்கிருதத்தைக் கற்றுத் தேர்ந்தார். பத்திரிகை நடத்தியதால் ஆங்கிலத்தில் வருவதை பத்திரிகை வாயிலாகத் தமிழில் தரும் அளவு அற்புதமான ஆங்கில அறிவு அவருக்கு இருந்தது; இன்னும் சொல்லப்போனால் ஆங்கிலத்திலேயே அவர் கவிதைகள் இயற்றியுள்ளார். காங்கிரஸ் மகாசபைகளில் கலந்து கொள்ள வட மாநிலங்கள் சென்றதால் ஹிந்தி மொழி அவருக்கு நன்கு தெரிந்திருந்தது. புதுவையில் மகான் அரவிந்தரது பழக்கத்தால் வங்காள மொழி நன்கு தெரிந்தது. ரவீந்திரநாத் தாகூரின் கட்டுரைகளை அவர் மொழி பெயர்த்தார். புதுவை பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்ததால் பிரெஞ்சு மொழி அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. எப்போதும் ஒரு பிரெஞ்சு மொழி புத்தகத்தை அவர் கையில் வைத்திருப்பாராம். தெலுங்கு கீர்த்தனைகளில் ஆழ்ந்த அறிவு இருந்ததால் தெலுங்கு மொழி அவருக்குத் தெரிந்திருந்தது. இப்படிப் பல்மொழி வல்லுநரான அவர் யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம் என்று பாடிய போது அதில் அதிகாரபூர்வமான உண்மை வெளிப்படுகிறது.

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்  இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும் மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணக்கம் செய்தல் வேண்டும்.

இது தான் அவரது அன்புரை. அறிவுரை. சொந்த ஆதாயத்திற்காக தமிழ் வாழ்க என்று உரத்த குரலில் கத்துவோரை அவர் தமிழ் அபிமானி என்று கொள்ளவில்லை. மாறாக, பல்வேறு மொழிகளில் உள்ள நூல்களை, கலைச் செல்வங்களைக் கொண்டு வருபவரே சிறந்த தமிழ்ப் பற்று கொண்டவர் என அவர் தெரிவிக்கிறார்.

TO BE CONTINUED……………………………….

TAGS- தமிழ் அபிமானி! -1,  மஹாகவி,  பாரதி விளக்கம்,