தமிழ் ஒரு அதிசய மொழி!

tamil-1

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1376; தேதி அக்டோபர் 29, 2014.

தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர் – – பாரதியார்

தமிழ் மொழிக்கும் சுமேரிய, மெசபொடோமிய மொழிகளுக்கும் தொடர்பு உண்டு, தமிழ் மொழிக்கும் ஜப்பானிய, கொரிய மொழிகளுக்கும் தொடர்பு உண்டு, தமிழ் மொழிக்கும் துருக்கிய, பின்லாந்திய மொழிகளுக்கும் தொடர்பு உண்டு — என்று 40 ஆண்டுக் காலமாகப் படித்துப் படித்து அலுத்துப் போய்விட்டது. சாத்தூர் சேகரன் என்ற தமிழ் மொழி ஆர்வலர் லண்டனுக்கு வந்தபோது – 1990 ஆம் ஆண்டு என்று நினைவு — அவரை BBC பி.பி.சி. “தமிழோசை” சார்பாக பேட்டி கண்டு பி.பி.சி.யில் ஒலிபரப்பினேன். அவர் எனக்கு சில புத்தகங்களை அன்பளிப்பாக அளித்தார். அதில் ஒன்று, செர்போ–க்ரோட் –( யூகோஸ்லாவியா என்று அப்போது இருந்த இடம்; இப்போது செர்பியா, குரோவேசியா Serbia and Croatia என்பன ) — மொழிகளுடன் தமிழுக்கு இருந்த “நெருங்கிய” தொடர்புகள் பற்றிய புத்தகம்!!

பேட்டி கண்டபோது அவரை உரிய மரியாதைகளுடன் நடத்திவிட்டு, பின்னர் தனிப்பட்ட முறையில் பேசுகையில் அவரது அணுகுமுறையில் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டினேன். அவர் கணக்குப்படி உலகில் உள்ள எல்லா மொழிகளும் தமிழில் இருந்து உருவானவை. அவர் அப்போதே 140 நூல்கள் எழுதி இருப்பதாகக் கூறினார். ஆங்கில—தமிழ் மொழி நெருக்கம் பற்றியும் பேசினார். உண்மை என்ன?

அப்போது லண்டனில் உள்ள சேனல் 4 Channel Four டெலிவிஷன் ஒலிபரப்பிய புதிய மொழியியல் கொள்கை பற்றி அவரிடம் கூறினேன். அதாவது மக்கள் எல்லோரும் ஒரே மொழி பேசிக்கொண்டிருந்தனர் – அவர்கள் சுவர்க்கத்தை எட்டிப் பிடிக்க கோபுரம் கட்ட முயன்றபோது— கடவுள் நீங்கள் எல்லோரும் பல மொழிகள் பேசி பிரிந்து செல்க —- என்று சபித்துவிட்டதாக பைபிளில் ஒரு கதை உண்டு. அது உண்மைதான்; உலகில் உள்ள மொழிகள் எல்லாம் ஒரே மூலத்தில் இருந்து வந்தவைதான் என்று ஒரு இஸ்ரேலிய மற்றும் ஒரு ரஷிய அறிஞர் கூறியது பற்றிய டாகுமெண்டரி (செய்திப்படம்) அது. இதை திரு. சாத்தூர் சேகரனிடம் சொல்லி அவர் இந்தக் கோணத்தில் இருந்தும் பார்க்கவேண்டும் என்றேன்.

tamil 2

அவரது பேட்டி ஒலிபரப்பைப் பாராட்டி பல நேயர்கள் எழுதியது உண்மை என்ற போதிலும் பலருக்கும் மொழி இயல் தெரியாது. மொழி வளர்ச்சிக் கும், எழுத்து வளர்ச்சிக்கும் உள்ள வேறுபாடு கூடத் தெரியாது. திருவள்ளுவர் இன்று உயிருடன் வந்தால் அவருக்குத் தமிழ் ஓரளவு புரியும்- ஆனால் தமிழ் எழுத்து அவருக்கு விளங்காது. ஏனெனில் எழுத்து உருமாறிப் போனது. நான் லண்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் வகுப்பு நடத்துகையில் என்னை அறியாமல் “னை,, ணை, லை” – போன்ற எழுத்துக்களுக்கு பழைய எழுத்து முறையைப் போர்டில் (கரும் பலகை) எழுதுகையில் பயன்படுத்துவேன். உடனே சார், இது என்ன எழுத்து? என்று சிலர் என்னை இடை மறிப்பர். பெரியார் சொன்ன எழுத்து சீர்திருத்தத்துக்கு முன் நாம் (old orthography) அத்தகைய கொம்புள்ள/ துதிக்கை போடும் எழுத்துகளை — லை, னை — முதலியவற்றைப் பயபடுத்தினோம். ஆகவே மொழியும் எழுத்தும் காலப்போக்கில் மாறும் என்று அறிய வேண்டும்.

தமிழ் ஒரு அதிசய மொழி. இதில் இரண்டு எழுத்துக்கள் சேரும் போது என்ன மாற்றம் அடைகின்றன என்பனவற்றைக் கண்டு இது போல மற்ற மொழிகளில் உண்டா? என்றும் காண வேண்டும். இதை சந்தி இலக்கணம் என்பர். வடமொழியில் இது உண்டு. ஆகவே தமிழை வேற்று மொழிகளுடன் ஒப்பிட்டு — “இது அதுவே, அது இதுவே” — என்று முழங்கும் முன்னர் பல விஷயங்களைக் கருத்திற் கொள்ள வேண்டும். எந்த இரண்டு மொழிகளிலும் மேம்போக்கான சில ஒற்றுமைகள் இருக்கத்தான் செய்கின்றன. அவை போதா. உண்மையில் வேற்றுமை உருபுகள், மொழிக்குள் உள்ள சந்தி இலக்கணம் ஆகியவற்றையும் ஒப்பிட வேண்டும்.

வேதங்களுக்கு காலம் நிர்ணையிக்க மாக்ஸ் முல்லர் கையாண்ட “குத்து மதிப்பான” முறை ஓரளவுக்கு உண்மை. ஆனால் இதையே தமிழ் மொழிக்கும் கையாண்டால் பல தமிழ் நூல்களின் காலம் கேள்விக் குறி ஆகிவிடும். அவர் சொன்னார்: “ஒரு மொழி 200 ஆண்டுகளுக்கு ஒரு முறை குறிப்பிடத்தக்க மாற்றம் அடைகிறது”. அப்படியானால் தொல்காப்பிய நடைக்கும் சங்க இலக்கிய நடைக்கும் பெரும் வேறுபாடு இருக்க வேண்டும் (.உண்மையில் அப்படி இல்லை. இதைப் பற்றி மூன்று தமிழ் சங்கங்கள் உண்மையா? என்ற கட்டுரையில் எழுதி விட்டேன்). அதே போல சங்க இலக்கியத்துக்கும் சிலப்பதிகாரத்துக்கும் ஒற்றுமை இருக்க வேண்டும். அப்படி இல்லை. அதிக அளவு வேறுபாடு இருக்கிறது. இளங்கோ காலமும் செங்குட்டுவன் காலமும் ஒன்று என்று வாதிப்போருக்கு இதை நான் சொல்கிறேன்.

சுருங்கச் சொல்லின் மாக்ஸ்முல்லர் சொன்ன முறையை உலகில் வேறு எந்த மொழிக்கும் பயன்படுத்தவில்லை. இருந்த போதிலும் ரிக்வேதத்துக்கு அவர் நிர்ணயித்த காலம் கி.மு1200 என்று அப்போது ஏற்றுக் கொண்டனர். இப்போது அது தவறு என்பதற்கு வேறு சில சான்றுகள் கிடைத்துவிட்டன.

ஒரு உண்மையை யாரும் மறுக்க முடியாது — உலகில் மாறாத பொருள் எதுவுமே இல்லை. மாற்றம் என்பது இயற்கை நியதி (Change is inevitable).— நான் வகுப்பு எடுக்கும் போது, “ஒரு மொழி 200 மைல்களுக்கு ஒரு முறை மாறும், ஒரு மொழி 200 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறும்” — என்று குத்துமதிப்பாக வைத்துக் கொள்ளுங்கள் என்று மாணவர்களிடம் சொல்லுவேன் ( நியூ கினி என்னும் தீவு இதற்கு விதி விலக்கு. அந்தத் தீவில் மட்டும் 700 மொழிகள் உள்ளன!! ) இதற்குக் கோவைத் தமிழ், மதுரைத் தமிழ், நெல்லைத் தமிழ், சென்னைத் தமிழ் முதலியவற்றை எடுத்துக் காட்டாகவும், எங்கள் நாட்டில் வேல்ஸ் ஆங்கிலம், ஸ்காட்டிஷ் ஆங்கிலம், இங்கிலாந்து ஆங்கிலம் முதலியவற்றை எடுத்துக் காட்டாகவும் தருவேன். உச்சரிப்பு மட்டுமின்றி சொல் வழக்குகள் முதலியனவும் வேறுபடும். எட்டாம் நூற்றாண்டில் எழுந்த ஆங்கில நூலின் எழுத்தும் , பொருளும் யாருக்கும் புரிவதில்லை!!

கீழ்கண்ட தமிழ் அமைப்பைக் காணுங்கள். இது போன்ற ஒற்றுமை தமிழுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் (சந்தி இலக்கணம்) ஓரளவு உண்டு. சம்ஸ்கிருதத்துடன் தொடர்புடைய ஐரோப்பிய மொழிகளில் உண்டு. தமிழைப் போலவே வேறு மொழிகளில் இருந்தால் அதை நன்கு ஆராய்தல் அவசியம்! அப்போதுதான் நாம் அவ்விரு மொழிகளும் “நெருக்கமானவை” என்று மேலும் ஆராய வேண்டும். இது ஒரு அம்சம் மட்டும்தான். இதுபோல வேறு பல அம்சங்களும் உண்டு. கட்டுரையின் நீளத்தைக் கருதி ஒரே வரியில் சொல்லிவிடுகிறேன்: உறவு முறை, எண்கள், நான், நீ போன்ற சொற்கள், வீடு வாசல் தொடர்பான சொற்கள் –முதலிய சுமார் 100 சொற்களில் – ஒற்றுமை இருக்க வேண்டும்.
tamil 3

விதி 1 (Rule 1 M-V-B/P)

ம – வ — ப – ஆகியன — பல மொழிகளில் இடம் மாறும். இது இயற்கையான மொழிப் பாகுபாடு. தமிழ் மொழிக்குள்ளேயே இதைக் காணலாம்
ம = வ= ப

முழுங்கு—விழுங்கு ( ம=வ )
முழி = விழி
மேளா- விழா
மாரி—வாரி
மல்லிப்புத்தூர் – வில்லிப்புத்தூர்
மண்டோதரி – வண்டோதரி
மயக்கு – வயக்கு
மானம்—வானம்
மிஞ்சு = விஞ்சு
மணிக்கிராமம் = வணிகக் கிராமம்

வ= ப
வங்கம் = பங்கம்
வங்காளம் = பெங்கால்
வந்தோபாத்யாயா = பந்தோபாத்யாயா

விதி 2 (Rule 2 R–L–D/T)

ர – ல – ட இடம் மாறும்.
இது பற்றி பாணினி சூத்திரம் கூட உண்டு. இந்த ஒலி மாற்றம் வேறு பல நாடுகளிலும் காணப்படுகின்றன என்பதை பலர் அறியார்.

( எங்கள் வீட்டுக்கு அடுத்த வீட்டில் ஐரிஷ்காரர்கள் வசித்தனர். அந்த வீட்டுச் சின்னப் பையன் என் மனைவியிடம் “க்லிஸ்ப், க்லிஸ்ப் தா” (klisp) என்று மழலை மொழியில் கேட்பான். உருளைக்கிழங்கு வறுவல் “க்ரிஸ்ப்” Crisp என்று சொல்லப்படும். நான் உடனே அட, மழலை வாயில் கூட ர என்னும் எழுத்து ல ஆக மாறுகிறதே என்று வியப்பேன்.))

ர = ல = ட
தார்வார் = தார்வாட்
சிம்மகர் – சிம்ம கட்

விதி 3 ( N- D/T)

ண் — ட் – இடம் மாறும். மேலே ல – ட – ர மாற்றத்தைக் கண்டோம். அப்படியானால் ண என்பது ட ஆக மாறி ல ஆகவும் மாற வாய்ப்பு இருக்கிறது.

இதை அறியாத பழைய மொழியியல் “அறிஞர்கள்” ட , ண போன்ற நாமடி ஒலிகள் இந்திய சம்ஸ்கிருதத்தில் மட்டுமே உண்டு என்றும் இதை அவர்கள் சிந்துவெளி திராவிடர்கள் இடமிருந்து கற்றதாகவும் எழுதி வைத்தனர். இதன் அடிப்படையே தவறு. அப்படியே அவர்கள் சொல்வதை நாம் ஏற்றாலும், இந்தியாவில் இருந்து போன இந்துக்கள் அங்கே போனவுடன் அந்த நாட்டு மக்கள் பேச்சுக்கேற்ப ஒலியை மாற்றிக் கொண்டனர் என்றும் வாதிட முடியும்.

இதை எழுதும்போது ஒரு சுவையான சம்பவம் எனக்கு நினைவுக்கு வருகிறது. நான் கொஞ்சம் காலத்துக்கு லண்டன் தமிழ் சங்கத்தின் மானேஜராகவும் பகுதி நேர வேலை செய்தேன். ஆண்டுதோறும் ஒரு நாள் தமிழ் பள்ளி ஆண்டு விழா நடத்துவோம். அப்போது திருக்குறள் போட்டி நடத்துவோம். எல்லா குழந்தைகளும் ஆங்கிலத்தில் குறளை எழுதி மனப்பாடம் செய்து கொண்டு வருவர்.

அகர முடல எலுட்டு எள்ளாம் ஆடி பகவன் முடட்ரே உலகு —

என்று பத்து குறளையும் ஒப்பித்தவுடன் விண்ணதிர கை தட்டிப் பரிசு கொடுப்போம். இது போல இலங்கையர்கள் அரங்கேற்றம் நடத்தும் நிகழ்ச்சிகளிலும் வாலிபர்களும் வாலிபிகளும் பாடும் பாட்டும் பேசும் பேச்சும் அவர்களைக் காட்டிக் கொடுத்துவிடும். அவர்கள் ஆங்கிலத்தில் எழுதி அதை ஒப்பிப்பர். தமிழ் அறிவு மிகவும் சொற்பம் (எங்கள் வீட்டிலும் இதே கதைதான்!! நான் தமிழில் சொல்லச் சொல்ல அவர்கள் ஆங்கிலத்திலேயே விடை கொடுப்பர்) ஆக மொழி என்பது வாழும் இடத்திற்கேற்ப மாறும் என்று புரிந்துகொண்டால் “நாமடி” (ண, ட) ஒலிகள் பற்றிய சித்தாந்தம் நகைப்புரியதாகிவிடும். தமிழ் மொழிக்குள்ளேயே இந்த மாற்றங்களைக் காணும் போது நான் சொல்வது இன்னும் உறுதியாகிறது.

ண் = ட்
கண்+செவி = கட் செவி
மண் =கலம் = மட்கலம்

ள் = ட்
கள்+குடி = கட் குடியன்
தாள்+ தலை= தாடலை
வாள் + போர் = வாட் போர்

ல் = ற்
பல் + பொடி = பற்பொடி
கல் கண்டு = கற்கண்டு (கண்டு = கேன் டி)

பூதன் +தேவன் =பூதன்றேவன்
இலங்கைத் தமிழ்: –(கிரிக்கெட் = கிரிக்கெற், பிரென் ட் = பிரென்ற்)

tamil 4

விதி 4 Rule 4 N — R

ன் என்பது ர் ஆக மாறும்
ன் = ர்
அவன்+கள் = அவர்கள்
அவள்+ கள் = அவர்கள்
மனிதன் +கள் = மனிதர்கள்

விதி 5 Rule 5 L — N

ழ் = ன்

வாழ் + நாள் = வானாள்
பால் + நினைந்து = பானினைந்தூட்டும்

விதி 6 Rule 6 L+D=da

ழ்+த = ட

திகடச் சக்கரம் = திகழ் + தச + சக்கரம்

விதி 7 (Y — J)

ய = ச/ஜ
பங்கஜம் = பங்கயம்
தயரதன் –தசரதன்

இந்த ஜ – ச – ய- மொழி மத்திய கிழக்கு மேலை நாட்டு மொழிகளிலும் உண்டு.
யேசு – ஜீசஸ்
யூத – ஜூடா

விதி 8 Rule 8 sion = tion (S–T)

ச =ட
விஷம் = விடம்

ஆங்கிலத்திலும் ட என்பது ஷ ஆக மாறுவதைக் காணலாம்.
எடுகேஷன் = எடுகேடியன் (ஷன் = டியன்)
ஒரு உதாரணம் மற்றும் கொடுத்தேன். இது போல நூற்றுக் கணக்கான சொற்கள் உண்டு.

விதி 9 Rule 9 ( J=S)

ராஜேந்திர சோழன் = ராசேந்திர
ஜெயலலிதா = செய லலிதா
ஷேக்ஸ்பியர் = செகப்பிரியன் !!!
ஜூலியஸ் சீஸர் = சூலியசு சீசர்
ஸ்டாலின் = சுடாலின்

(தமிழ் மொழியில் மெய் எழுத்து, மொழிமுதல் எழுத்தாக வராது. சம்ஸ்கிருதத்தில் மட்டுமே இது உண்டு!!)

ஒரு மொழியில் சில எழுத்துக்கள் இல்லாத போது வேறு ஒன்றைப் போட்டு நிரப்புவர். பாரசீகர்களும் கிரேக்கர்களும் ‘’எஸ்’’ என்று சொல்ல முடியாததால் சிந்து நதி தீர மக்களை ‘’ஹி’’ந்து என்று அழைத்தனர். கிரேக்க, சீன யாத்ரீகர்கள், ஆங்கிலேய, பிரெஞ்சு ஆட்சியாளர்கள் முதலியோர் இந்திய மன்னர்கள் பெயர்களையும் ஊர்ப் பெயர்களையும் கடித்துக் குதறி விட்டார்கள் என்பதை நாம் அறிவோம். ஆகவே யாராவது தமிழுக்கும் – இதற்கும் தொடர்பு இருக்கிறது, தமிழுக்கும் – அதற்கும் தொடர்பு இருக்கிறது கதைத்தால் கொஞ்சம் சிந்தித்து முடிவுக்கு வாருங்கள். சொல்பவருக்கு எந்த அளவுக்கு வரலாறு தெரியும், மொழியறிவு உண்டு என்பதையும் பின்னணியில் பாருங்கள்.

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப் பொருள் காண்பது அறிவு (குறள் 423)

வாழ்க தமிழ்! வளர்க சம்ஸ்கிருதம்!!
(இவ்விரு மொழிகளும் ஒரே மூலத்தில் இருந்து பிறந்தவை என்பதை இன்னும் ஒரு கட்டுரையில் கூறுவேன்)
contact swami_48@yahoo.com