கண்ணதாசனும் தி.ஜ.ர.வும்

kannadasan

Written by S NAGARAJAN

Research Article No.1896; Dated 29 May 2015.

Uploaded at London time 5-56 am

By ச.நாகராஜன்

தமிழின் நடை வளம்!

தமிழின் சிறப்புகள் ஏராளம்; அவற்றில் ஒன்று எந்த நடைக்கும் ஏற்றபடி நெகிழ்ந்து கொடுக்கும் அதன் தன்மை.

தமிழ் தனது – ஒரு நடையில் உருக்கும்; ஒரு நடையில் மயக்கும்; ஒரு நடையில் குதூகலப்படுத்தும்; ஒரு நடையில் ஆட வைக்கும்.. இப்படி பல வடிவங்களை எடுக்க வல்ல தெய்வ மொழி தமிழ்.

நடைகளின் வடிவங்களுக்கு உதாரணங்களாக ஆயிரம் நடைகளைச் சொல்லலாம். இடம் கருதி சமீப கால ‘நடை மன்னர்கள்’ சிலர் பெயரை மட்டும் இங்கு குறிப்பிடுவோம்.

உ.வே.சாமிநாதையர். தமிழ் தாத்தா. அழகிய ஆற்றொழுக்கு போன்ற நடை. பேசுவது போல இருக்கும். உம் உம் என்று உம் கொட்டி, சிறு குழந்தைகள் அடுத்து என்ன என்று கேட்பது போல ஆர்வமூட்டுவதாக இவர் நடை இருக்கும்.

மஹாகவி பாரதியார் நடை. சின்னச் சின்ன வாக்கியங்கள். வலிமையும் ஆழமும் நிறைந்திருக்கும். வேத சப்தங்கள் போல! நிறுத்தி, நிதானித்துப் பல முறை படித்து உத்வேகம் பெற முடியும். அதில் எழும் உணர்ச்சி பல காலம் நம்மை விட்டுப் போகாது.

கல்கி கிருஷ்ணமூர்த்தி நடை. ஜில்லென்ற தென்றல் காற்று போல மேலே வந்து குளிர்விக்கும் நடை. எந்த இடத்தில் தொட்டாலும் ஒரு ஜில்லிப்பு. எடுத்த புத்தகத்தைக் கீழே வைக்க மனமே வராது. பொன்னியின் செல்வனைத் தொட்டவர்கள் தொட்டவர்களே. அதன் நடையழகிலும் கதையழகிலும் ஈடுபட்டவர்கள் பட்டவர்களே!

தி... நடை

இதையெல்லாம் தாண்டி இன்னொரு நடை. திஜர நடை. மஞ்சரி ஆசிரியராகப் பல காலம் பணி புரிந்த தி.ஜ.ரங்கநாதன் சிறு சிறு வாக்கியங்களாக அழகாக எழுதுவார். படிப்போரின் மனதில் எளிதாக அவர் சொல்வது ஆழப் பதியும்.

எடுத்துக்காட்டாக அவர் தன் கதைகளைப் பற்றிச் சொல்லும் சில வாக்கியங்களை இங்கே பார்ப்போம்:-

கதைகளை எல்லாம் பொதுப்படையாக இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம்; ஒன்று, பிரத்தியட்ச வாழ்க்கைச் சித்திரம். மற்றது அமானுஷ்ய கற்பனை. மேதைகள் தாம் சுவைக்குறைவு இல்லாத அமானுஷ்ய கற்பனைகளைப் படைக்க முடியும். என்னைப் போன்றவர்களுக்கு பத்திரமான வழி, பிரத்தியட்ச வாழ்க்கைச் சித்திரங்களே. எங்களைச் சூழ்ந்த உலக அரங்கத்தை நாங்கள் போட்டோ எடுப்போம். எங்களுடைய வாழ்க்கை ஆதர்சங்களும் லட்சியங்களும் அந்தப் போட்டோவுக்கு மெருகு கொடுக்கும்.

 

 thi.ja.ra-1

கண்ணதாசனும் தி...வும்

தி..ரவுடன் நெடுங்காலம் நெருங்கிப் பழகிய ஒருவர் ராஜரங்கன் (எம்.ஆர். ரங்கராஜன் என்ற 17 வயது பையன் திஜரவுடன் பழக ஆரம்பித்த போது அவருக்கு வயது 55. அவருக்கு ராஜரங்கன் என்ற பெயரைத் தந்தவரே திஜரதான்!)

அவர், “தி...- மறவாக் கணங்கள்என்று ஒரு நூற்றாண்டு அஞ்சலிக் கட்டுரையை மஞ்சரி டிசம்பர் 2001 இதழில் எழுதியுள்ளார்அவர் விவரிக்கும் ஒரு சுவையான சம்பவத்தை அவர் எழுத்துக்களிலேயே பார்ப்போம்:-

 

குழந்தை போல மகிழ்ச்சிப் புன்முறுவலோடு ஒரு நாள் தி... என்னை மவுண்ட்ரோடுக்கு அழைத்துப் போனார். ஆயிரம் விளக்கு மசூதிக்கு எதிர்ப்புறத்தில் ஒரு கட்டிடத்தின் மாடியில், கவிஞர் கண்ணதாசன் நடத்தி வந்த தென்றல் பத்திரிகைக் காரியாலயம் இருந்தது.

வா, கண்ணதாசன் இருக்காரோ பார்ப்பாம்என்று விடுவிடுவென்று ஏறினார்.

கவிஞர் ஊரில் இல்லை. அவர் உதவியாளரிடம், “கல்கி நினைவாக சமீபத்தில் கண்ணதாசன் ஒரு தலையங்கம் எழுதினாராமே. அது இருக்கோ?” என்று கேட்டார்.

 

அதை வாங்கி,”இதைப் பார்என்று காண்பித்தார். கண்ணதாசனுக்கு தி...வின் எளிமையான தமிழ்நடையின் மேல் பெரு மதிப்பு. சிறு சிறு வாக்கியங்களாக அவர் எழுதத் தொடங்கியதே கூட அந்த பாதிப்பு தான் என்று கூறலாம். கல்கியைப் பற்றி எழுத வந்த அந்தத் தலையங்கத்தில் அவர் தி..ரவைப் பாராட்டி, அவர் தமிழ் நடையை மனமாரப் புகழ்ந்திருப்பதை, “பார்த்தாயா? எவ்வளவு பிரியமாய் சொல்லியிருக்கார்என்று ஒரு குழந்தையின் குதூகலத்துடன் சொன்னார். காழ்ப்பு நிறைந்த உலகத்தில் கள்ளமில்லாத பாராட்டை ரசிக்கும் வெள்ளை மனத்தின் வெளிப்பாடு இது.”

 

 

தி.ஜர.வைத் தன் எழுத்து நடைக்கு குருவாக கண்ணதாசன் கொண்டிருந்தார். கள்ளமில்லாமல் வெளிப்படையாக தி...வை அவர் பாராட்டி தன் நன்றியை வெளிப்படுத்தி இருக்கிறார் அந்தக் கட்டுரையில்.

 

சிறு சிறு வாக்கியங்கள்சிறப்பான கருத்துக்கள்!

கவிஞர் கண்ணதாசனின் நடை பளீர் பளீரென இருக்கும். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு செப்பு மொழி பதினெட்டு. சின்னச் சின்ன வாக்கியங்கள். நகைச்சுவையுடன் கூடிய ஆழ்ந்து சிந்திக்க வைக்கும் வைர வரிகள்.

 

நகைச்சுவைக்கு ஒரு எடுத்துக்காட்டு:-

காற்றடிக்கும் போது தென்னை மரம் கூட ஏன் ஆடுகிறது என்று வெகு நாட்கள் யோசித்துப் பார்த்தேன். பிறகு தான் விபரம் புரிந்ததுதென்னையில் இருந்து தானே கள் வருகிறது!” (கண்ணதாசன் ஜூன் 1976 இதழில் செப்பு மொழிகள் பகுதியில்)

இரண்டிரண்டு வார்த்தைகளில் பெரும் கருத்துக்களையும் சந்தோஷத்தையும் அடக்கியிருக்கும் இவரது திறமைக்கு நூற்றுக்கணக்கான பாடல்களை எடுத்துக் காட்டாகத் தரலாம். அதற்கு தனி கட்டுரை!

**********