Dr R Nagasamy ,an eminent archaeologist, historian and a Tamil-Sanskrit scholar has written several books on Tamil culture.
கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1469; தேதி 9 டிசம்பர், 2014.
முதல் பகுதி நேற்று வெளியாகியது. அதைப் படித்துவிட்டு இதைப் படிக்க வேண்டுகிறேன்.
அதிசயம் 5
அகநானூற்றில் பல காடுகளின் பெயர்கள் வருகின்றன. அவை அழும்பிற்காடு, ஆஅய்ஆனம், ஆலங்கானம், உம்பற்பெருங்காடு, உறந்தைப் புறங்காடு, ஓரிக்கானம், குடவாயின் மிளை, சாய்க்கானம், முள்ளூர்க் கானம், வலத்துப்புறமிளை முதலியன. (மிளை என்பது சின்னக் காடு; கானம் என்பதும் காடு)
இந்துக்கள் புனித நதிகள், புனித மலைகள், புனித கற்புக்கரசிகள், சிரஞ்சீவியாக வாழும் ஏழு மனிதர்கள், புனித நகரங்கள் என்று எல்லாவற்றையும் ஏழு ஏழாகப் பிரித்து ஸ்லோக வடிவத்தில் சிறுவர்களுக்குக் கற்பிப்பது வழக்கம் (அந்தக் காலத்தில்). இப்பொழுது ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தில் மட்டும் இதைக் கற்பிக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு பூகோளம், சரித்திரம், புராணம், இதிஹாசம் எல்லாம் அத்துபடியாகிவிடும். சாகும் வரை இந்தப் பாடல்கள் மறக்காது. தமிழ்நாட்டில் வேதாரண்யம் (திருமறைக்காடு) போன்ற காடுகள் புனிதம் மிக்கவை. இப்பொழுது காடு எல்லாம் நாடு ஆக மாறிவிட்டது.
அதிசயம் 6
பல விழாக்களின் பெயர்களையும் அகநானூற்றில் காணலாம். சங்க காலத்தில் விழா என்று சொல்லாமல் விழவு என்பர். சங்க இலக்கியச் சொற்களில் குறில் ஒலியில் இருந்த சொற்கள் எல்லாம் இப்பொழுது நெடில் ஒலியில் ஒலிக்கப்படும். புறவு என்று இருப்பதை நாம் புறா என்று நெடிலாக உச்சரிப்போம். அதே போல விழவு என்பதை இப்பொழுது விழா என்போம். சங்க கால விழாக்கள்:-
உள்ளி விழவு, உறந்தை விழவு, கழார்ப் புதுப்புனல் விழவு, கார்த்திகை விழவு, கூடல் விழவு, பங்குனி விழவு, பரங்குன்ற விழவு, பூந்தொடை விழவு, யாழ் விழவு, வேல் விழவு முதலியன.
இதில் கார்த்திகை விழா, பங்குனி உத்திரம், கூடல்—பரங்குன்ற (சித்திரைத் திருவிழா) விழாக்கள் இன்றும் பெருமளவில் கொண்டாடப்படுகின்றன. எல்லாப் பௌர்ணமி நாட்களும் இந்துக்களுக்கு திருவிழா நாட்கள். திருஞான சம்பந்தர் தேவாரத்திலும் எல்லா விழாக்களையும் ஒரு சேரப் பட்டியல் இடுகிறார். படித்து இன்புறுக.
(உள்ளி விழவு- சுமேரிய பூருள்ளி விழவு- வட இந்திய ஹோலி விழவு தொடர்பு பற்றி நான் எழுதிய ஆய்வுக் கட்டுரையையும் படிக்க வேண்டுகிறேன்)
அதிசயம் 7
தமிழ் நாட்டிலும் சங்க காலத்தில் ஜாதிகள் இருந்தன. பெரும்பாலும் அந்தந்தக் குலத்தில் பிறந்தவர்கள் அந்தந்தத் தொழில்களையே செய்து வந்தனர். அவை அண்டர் (இடையர்), அத்தக் கள்வர், அந்தணர், உமணர், உழவர், குயவர், கொல்லர், தட்டார், பரதவர், பழையர், பாணர், யானைப் பாகர், வேளாப் பார்ப்பார் முதலியோர்.
உலகம் முழுதுமே ஜாதிகள் இருந்தன. எல்லா நாட்டு சரித்திரத்தைப் படிப்போருக்கும் ஓருண்மை புலப்படும். ராஜா மகன்தான் ராஜாவானான். அப்படி மாறுபட்டு இருந்தால் அது வன்முறைப் புரட்சியில்—கிளர்ச்சியில் ஏற்பட்ட மாறுதலாக இருக்கும். படைத் தலைவன் மகன் படைத் தலைவன் ஆனான்.
அதிசயம் 7
பிராணிகள் பற்றி பல குறிப்புகள் உள. அவற்றில் ஒலி கேட்டால் இறந்துவிடும் அசுணமா என்னும் அதிசய மிருகம் பற்றி நான் ஏற்கனவே எழுதி விட்டேன். சிலர் இதை பறவை என்பர். சிலர் இதை மலைப் பாம்பு என்பர். இன்னும் சிலர் இப்பொழுது அழிந்து போய்விட்ட ஒரு மிருகம் என்பர்.
அதிசயம் 8
பறந்தலை என்ற சொல்லை நாம் இப்பொழுது பயன்படுத்துவதில்லை. சங்க காலத்தில் பாழ்பட்ட இடத்தையும் போர்களத்தையும் இச் சொல் குறித்தது. இதன் மூலம் தமிழர்கள் நடத்திய போர்களையும் போர்க் களங்களையும் நாம் அறிய முடிகிறது.
அகநானூற்றில் இடம் பெறும் சங்க இலக்கியப் போர்களங்கள்:-
ஆமூர்ப் பறந்தலை, கழுமலப் பறந்தலை, குறுக்கைப் பறந்தலை, கூடற் பறந்தலை, தலையாலங்கானப் பறந்தலை, பருவூர்ப் பறந்தலை, பாழிப் பறந்தலை, பெருந்துறைப் பறந்தலை, மணவாயிலுறத்தூர்ப் பறந்தலை, முசிறிப் பறந்தலை, வல்லப் பறந்தலை, வாகைப் பறந்தலை, வெண்ணிப் பறந்தலை.
உலகிலேயே நீண்ட காலத்துக்கு உட்சண்டை—கோஷ்டிப் பூசல் போட்ட ‘’பெருமை’’ தமிழர்களுக்கு மட்டுமே உண்டு. சங்க காலம் துவங்கி (கி.மு. முதல் நூற்றாண்டு) முஸ்லீம் மன்னர்களும் வெள்ளைக்காரனும் தமிழர்களைத் துண்டாடும் வரையில் ஏறத்தாழ 1600 ஆண்டுகளுக்கு சேர, சோழ, பாண்டியர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு செத்தார்கள். இது போல யாங்கனும் கண்டதில்லை. அண்மைக் காலத்தில் இலங்கையிலும் இதையே கண்டோம்.
அதிசயம் 8
பல அரிய வழக்குகளும் அகநானூற்றில் இடம் பெறும்.
வேளாப் பார்ப்பனர்கள்— பிராமணர்களில் ஒரு சாரார் — சங்குகளை அறுத்து வளையல் செய்தல் முதலிய தொழில்களில் ஈடுபட்டனர். இவர்கள் வேள்வி முதலிய அறுதொழில்களைச் செய்யாமையால் வேளாப் பார்ப்பார் என்று அழைக்கப்பட்டனர்.
சிவபெருமானையே உனக்கு குலம் கோத்திரம் ஏதேனும் உண்டா? என்று கேள்வி கேட்ட நக்கீரனார் ஒரு வேளாப் பார்ப்பார் என்பர்.
சங்கறுப்பது எங்கள் குலம், சங்கரனார்க்கு ஏது குலம்.
நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே
என்று சொன்னதாக வரலாறு.
ஏனைய வழக்குகள்:
தொல்காப்பியத்தில் வேத காலக் கடவுளரான இந்திரன், வருணன் ஆகியோரை தமிழர் வழிபடும் தெய்வங்களாகத் தொல்காப்பியர் குறிப்பிடுவார். சிலர் இதை இடைச் செருகல் என்று பிதற்றுவர். அவர்கள் சொல்வது தவறு என்பதற்கு அகநானூற்றில் உள்ள வருண வழிபாடு ஒரு சான்று ஆகும். நுளைச்சியர் சுறா மீனின் கொம்பை நட்டு வருண பகவானுக்கு பரவுக் கடன் கொடுத்த செய்தி இங்கே உள்ளது.
கழங்குக் குறி பார்த்தல், பல்லி சகுனம் கேட்டல், நிமித்தம் பார்த்தல், நடு கல்லைப் பூசித்தல் போன்ற விஷயங்களும்,
குட ஓலை எடுத்துப் பிரமாணம் செய்தல், மணமகளைப் புதல்வர்களை ஈன்றெடுத்த நால்வர் குளிப்பாட்டல், சுவரில் கோடு கிழித்து நாள் எண்ணுதல் முதலிய விஷயங்களும் குறிப்பிடத் தக்கவை.
அதிசயம் 9
பெண்களும் அக்காலத்தில் சிறந்த கவிஞர்களாக விளங்கினர். ஏறத் தாழ 12 பெண் புலவர்களின் பாடல்கள் அகநானூற்றில் இடம்பெற்றுள்ளன.
அஞ்சில் ஆந்தை மகள் நாகையார், அள்ளூர் நன்முல்லையார், ஒக்கூர் மாசாத்தியார், ஔவையார், கழார்க் கீரன் எயிற்றியார், குமிழிஞாழார் நப்பசலையார், நக்கண்ணையார், போந்தைப் பசலையார், மதுரை நல்வெள்ளியார், முள்ளியூர்ப்பூதியார், வெள்ளிவீதியார், வெறி பாடிய காமக்கண்ணியார்.
இவர்களில் காமக்கண்ணி என்பது காஞ்சீபுரம் உறை காமாக்ஷியின் தமிழ் மொழி பெயர்ப்பு ஆகும். இதை காஞ்சி பரமாசார்ய சுவாமிகளும், உ.வே.சாமிநாத அய்யரும் உறுதி செய்துள்ளனர்.
இன்னும் ஒரு அதிசயம் பெண்களின் பெயர்கள் ‘’ஐ’’ அல்லது ‘’இ’’ என்னும் உயிர் எழுத்துக்களில் முடிவதாகும். வடமொழியில் உள்ள பெண்கள் பெயர்களும் இப்படித்தான் இருக்கும். இது இமயம் முதல் குமரி வரை வாழ்ந்த மக்கள் ஒரே இனத்தவர் என்பதற்கு மேலும் ஒரு சான்று.
வடமொழியில் ‘’ஆ’’ என்னும் உயிர் எழுத்தில் முடிந்த பெயர்களைத் தமிழர்கள் ‘’ஐ’’ என்பதில் முடிப்பர்: எடுத்துக்காட்டு: சீதா=சீதை, கீதா=கீதை, அபலா=அபலை
உலகம் முழுதும் உள்ள பெரிய மொழிகளில் தமிழ், சம்ஸ்கிருதம் இவைகளின் தாக்கத்தைக் காணலாம். சுருங்கச் சொல்லின் எல்லாப் பெயர்களையும் சொற்களையும் இவ்விரு மொழிகளில் அடக்கிவிடலாம்.
அதிசயம் 10
சில புலவர்களின் பெயர் தெரியாத காரணத்தாலோ, அல்லது அவர்கள் பயன்படுத்திய சொற்றொடர்களின் சிறப்பு காரணமாகவோ, அந்த சொற்றொடர்களின் பெயர்களே அவர்கள் பெயராக சங்க இலக்கிய நூல்களில் காணப்படுகிறது. குறுந்தொகையில் இத்தகைய 13 பெயர்களை ஏற்கனவே கண்டோம். இந்நூலில் ஐந்து பெயர்கள் உள்ளன:
அந்தி இளங்கீரனார், இம்மென்கீரனார், ஊட்டியார், நோய்பாடியார் வண்ணப்புறக் கந்தரத்தனார்.
உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்தில் இம்முறை கையாளப்பட்டுள்ளது. உலகில் வேறு எந்த கலாசாரத்திலும் இருப்பதாகத் தெரியவில்லை. நம்மவரின் சொல், செயல், சிந்தனை ஆகியன ஒரே மாதிரியானவை எனபதற்கு இது மேலும் ஒரு சான்று.
அகநானூற்று அதிசயங்கள் தொடரும்…………………………
You must be logged in to post a comment.