சித்திரக் கவி: சுழிகுளம் – 1

suzi kulam 1

தமிழ் என்னும் விந்தை! -22

சித்திரக் கவி: சுழிகுளம் – 1

 

கட்டுரையை எழுதியவர் :– ச.நாகராஜன்

ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1542; தேதி 3 January, 2015.

 

சித்திர கவிகளில் சுழி குளம் இன்னொரு வகையாகும்.சுழி குளம் எவ்வெட்டெழுத்துக் கொண்ட நான்கு அடிச் செய்யுளாய், மேலிருந்து கீழேயும், கீழிருந்து மேலேறியும் புறம் சென்றும் முடியும்படி படிக்கத் தக்க வகையில் பாடப்படுவதாகும்.

இதற்கு எடுத்துக்காட்டாக பரிதிமால் கலைஞர் தரும் செய்யுள் இது:-

“கவிமுதி யார்பாவே                                                

விலையரு மாநற்பா                                           

முயல்வ துறுநர்                                                    

திருவழிந்து மாயா”

 

இந்தச் செய்யுளின் பொருள்:-

கவி முதியார் பாவே – செய்யுள் இயற்றுவதில் முதிர்ச்சி அடைந்தவர் பாடல்களே                                        விலை அருமை மா நன்மை பா – விலை மதித்தற்கு அரிய பெருமை வாய்ந்த நல்ல பாடல்களாகும்;   முயல்வது உறுநர் – முயற்சி செய்வதில் நன்கு பொருந்தினவர் தம்

திரு அழிந்து மாயா – செல்வம் சிதைந்து தொலையா

இதை சித்திரத்தில் அமைத்தால் வருவதை கீழே காணலாம்.

picture is given at the top.

அடுத்து இன்னொரு பாடல்:

“மதந விராகா வாமா                                                

 தநத சகாவே நீவா                                                

 நததந தாதா வேகா                                                  

 விசந விரோதா காரா”

 

 

இந்தச் செய்யுளின் பொருள்:-                                      மதந விராகா – மன்மதன் மீது விருப்பம் இல்லாதவனே!            வாமா – ஒளியை உடையவனே!                                    தநத சகாவே – குபேரனுக்குத் தோழனே!                                நத் அதந தாதா – மேகத்தினு அதிகமான கொடையாளியே!          விசந விரோதா காரா – துக்கத்தைச் செய்யும் விரோதமான விஷமாகிய உணவினை உடையவனே!  (இதன் இன்னொரு பொருள்- விசனத்திற்கு விரோதமான அதாவது விசனத்தைப் போக்கும் ஸ்வரூபத்தை உடையவனே!)                                                     நீ வா கா – நீ பிரத்தியக்ஷமாகத் தரிசனம் தந்து எம்மைக் காப்பாற்றுவாயாக!

இந்தச் செய்யுள் அமைந்த சித்திரத்தைக் கீழே காணலாம்:

suzikulam 2

கிடைமட்டமாக செய்யுளின் நான்கு அடிகளும் வருவதை முதலில் காணலாம். பின்னர் எட்டு செங்குத்தான வரிசைகளில் மேலிருந்து கீழாக முதல் வரிசையிலும் அடுத்து கீழிருந்து மேலாக எட்டாம் வரிசையிலும் இப்படி மாறி மாறி 2,7,3,6,4,5 ஆகிய வரிசைகளில் செய்யுள் அமைவதைக் கண்டு இன்புறலாம்.

இன்னும் சில சுழி குள வகைப் பாடல்களை மேலே காண்போம்

  • தொடரும்