Written by London Swaminathan
Date: 10 May 2017
Time uploaded in London: 21-34
Post No. 3896
Pictures are taken from various sources; thanks.
contact; swami_48@yahoo.com
புத்தர் பெருமான் கி.மு ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இன்று அவருடைய 2561-ஆவது பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. வள்ளுவர் கி.மு. 31 என்று பலர் பகர்ந்தாலும் மொழியியல் ரீதியில் அவரை கி.பி 4 அல்லது 5ஆம் நூற்றாண்டில்தான் வைக்க முடியும். ஏனெனில் வள்ளுவனின் குறளில் சம்ஸ்கிருதச் சொல் இல்லாத அதிகாரமே இல்லை. இருவருக்கும் இடையே ஆயிரம் ஆண்டு இடைவெளி. அவர்கள் எக்காலத்தில் வாழ்ந்தால் என்ன? அவர்களுடைய அரிய பெரிய கருத்துக்கள் காலத்தை வென்று நிற்பவை.
வள்ளுவன் மொழிந்தது 1330 அருங் குறட் பாக்களில் அடக்கம். அவர் யாத்த நூல் திருக்குறள்.
புத்தர் சொன்னது தம்மபதம் (அற வழி=தர்ம பாதை) என்னும் நூலில் 423 பாக்களில் அடக்கம்.
இருவர் கருத்துக்களும் பல இடங்களில் ஒரே மாதிரி இருப்பது படித்து இன்புறத் தக்கது. இதோ சில ஒப்பீடுகள்:-
உரனெனும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து -குறள் 24
அறிவு என்னும் கருவியால் ஐம்புலன்களையும், அதன் போக்கில் விடாமல் அடக்கி ஆள்பவனே, சிறந்தது எனப்படும் மேல் உலகத்துக்கு விதை ஆவான்.
இதே கருத்து திருமந்திரம், தேவாரம், பகவத் கீதை முதலிய எல்லா நூல்களிலும் வருகிறது. புத்தரும் தம்மபதத்தில் 321-324ல் சொல்லுவது இதேதான்:
பயிற்சி பெற்ற யானைகளையே போருக்கு கொண்டு செல்வர். பயிற்சி பெற்ற யானையின் மீதே அரசனும் பவனி வருவார். அதுபோலவே பயிற்சி – புலனடக்கப் பயிற்சி –பெற்றவர்களே, கஷ்டம் வந்தாலும் சாந்தமாக வாழ்வர்.
பயிற்சிபெற்ற கோவேறுக் கழுதைகளும், சிந்து மாகாணக் குதிரைகளும் பலமான யானைகளும் பயிற்சி பெற்றவுடனேயே நன்றாக இருக்கின்றன. அது போலவே புலனடக்கப் பயிற்சி பெறவனே சிறந்தவன்.
நிர்வாணம் (மோக்ஷம்) என்பது புத்திசாலியாக, தைரியமாக
பயிற்சி செய்பவனுக்கே கிட்டும்.
(பயிற்சி- ஆன்மீக சாதனை)
xxxx
இன்னொரு குறளையும் காண்போம்.
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழல் (குறள் 428)
பயப்பட வேண்டிய விஷயங்களுக்குப் பயப்படாமல் இருப்பது மடத்தனம். பயப்பட வேண்டிய பழி பாவங்களுக்குப் பயப்படுவதே அறிஞர்கள் செயலாகும்.
இதை புத்தரும் தம்மபதம் 317ல் அப்படியே புகல்வார்:
பயப்பட வேண்டிய விஷயங்களுக்கு பயப்படாமல் இருப்பவர்களும், பயப்படக் கூடாத விஷயங்களுக்கு அனாவசியமாகப் பயப்படுவோரும் தவறான கருத்துடைய மனிதர்களே. அவர்கள் கீழ்நோக்கிச் செல்பவரே
தொடரும்…………………
You must be logged in to post a comment.