ஸ்வாமி தயானந்த சரஸ்வதி! – 2 (Post No.10,342)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,342

Date uploaded in London – –   16 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஸ்வாமி தயானந்த சரஸ்வதி! – 2

ச.நாகராஜன்

அடுத்து இன்னொரு சம்பவம் ஸ்வாமி தயானந்த சரஸ்வதி பிரம்மசர்யத்தின் மஹிமையை உணர்த்தியது.

ஒருமுறை பஞ்சாபில் உள்ள குஜ்ரன்வாலாவில் ஒரு கூட்டத்தில் அவர் பேசினார்.

அப்போது அவர், “எனக்கு இப்போது 51 வயதாகிறது. எனது பிரம்மசர்யம் தடையற்றுக் கடைப்பிடிக்கப்படும் ஒன்று. இதை மிகுந்த நம்பிக்கையுடன் என்னால் சொல்ல முடியும். உங்களில் எவரேனும் மிகுந்த பலசாலியாக இருந்தால் அவர் என்னிடம் வரட்டும். அவரது கையை நான் பிடிக்கிறேன். அவர் அதை என்னிடமிருந்து விடுவித்துக் காண்பிக்கட்டும் அல்லது இதோ, எனது நீட்டிய கையை மடக்கட்டும்’ என்று சவால் விடுத்தார்.

அந்தக் கூட்டத்தில் பல மல்யுத்த வீரர்கள் இருந்தனர். ஆனால் அவர்களில் ஒருவர் கூட அவரது சவாலை ஏற்க முன் வரவில்லை.

ஆறடி உயரமுள்ள ஸ்வாமிஜி நல்ல அழகிய தோற்றமுடையவர். பிரம்மசர்ய தேஜஸ் தவழ அவர் நடந்து வரும் போது அனைவரும் அவரை வியப்புடன் பார்ப்பர். கெட்டவர்களுக்கோ அவர் ஒரு சிம்ம சொப்பனம். அவர்கள் அவரை அணுகப் பயப்படுவர்.

தீயவரைக் கண்டால் அவரது குரல் ஓங்கி ஒலிக்கும்; அந்த சிம்ம கர்ஜனையைக் கேட்டால் அவர்கள் அலறி ஓடி ஒளிவர்.

ஒரு நாள் அதிகாலை நேரத்தில் அவர் மிக்க ஓய்வாக நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அவர் பின்னால் ஒரு மல்யுத்த வீரர் வந்து கொண்டே இருந்தார்.

அந்த மல்யுத்தக்காரரின் நடையைக் கவனித்த ஸ்வாமிஜி நிச்சயம் அவர் ஏதோ ஒரு கெட்ட எண்ணத்துடன் தன்னைப்  பின் தொடர்வதாக அனுமானித்தார்.

ஒரு கணம் நின்று ஒரு கர்ஜனை செய்தார். அவ்வளவு தான், அந்த தீய எண்ண மல்யுத்தக்காரர் ஓடலானார். அடுத்து என்ன செய்வது என்று ஸ்வாமிஜி நினக்கக் கூட அவர் சந்தர்ப்பம் அளிக்கவில்லை. அவ்வளவு வேகமாக வந்த வழியே ஓடி விட்டார்.

இன்னொரு சம்பவம் பரூக்காபாத்தில் நடந்தது.

சில மல்யுத்த வீரர்கள் தங்கள் தங்கள் வலிமையைப் பற்றித் தற்பெருமை பேசிக் கொண்டிருந்தனர்.

இதைக் கேட்ட ஸ்வாமிஜி புன்முறுவல் பூத்தார். தனது கையில் ஈரமாக இருந்த தனது கௌபீனத்தை அவர்களிடம் காண்பித்தார்.

பின்னர் அதைக் கையில் வைத்து ஒரு அமுக்கு அமுக்கினார். ஈரமாக இருந்த கௌபீனத்தில் இருந்து நீர் வெளியேறியது.

பின்னர் அந்த மல்யுத்த வீரர்களை நோக்கி ஸ்வாமிஜி கூறினார்:

உங்களில் எவரேனும் ஒருவர் இந்த  கௌபீனத்தை அழுத்திக் கசக்கி இன்னும் ஒரே ஒரு சொட்டு தண்ணீரை வெளியேற்றிக் காண்பியுங்கள் பார்ப்போம்.”

அவர்கள் இந்த சுலபமான சவாலை ஏற்றனர். ஒவ்வொருவராக வந்து தன் வலிமையைக் காண்பித்தனர். ஆனால் யாராலும் இன்னும் ஒரு சொட்டு நீரைக் கூட வெளியேற்ற முடியவில்லை. அப்படி ஒரு பிரம்மசர்ய வலிமையுடன் ஒரே ஒரு அழுத்தலில் அனைத்து நீரையும் அவர் வெளியேற்றிக் காண்பித்து அனைவரையும் பிரமிக்க வைத்தார்.

இன்னொரு சம்பவம் இது :

ஜட் சமூகத்தினரிடம் ஒரு நாள் அவர் பேசிக் கொண்டிருந்தார். கூட்டத்தில் கட்டுமஸ்தான ஒருவர் பெரிய கழியுடன் ஸ்வாமிஜியை நெருங்கினார்.

“அட, துறவியே! விக்ரஹ வழிபாட்டை வேண்டாம் என்கிறாய். கங்கா மாதாவை வழிபட வேண்டாம் என்கிறாய், உடனே சொல், உன் உடலில் எந்த அங்கத்தில் அடி வாங்க விருப்பம், ஒரே அடியில் இனி ஒருபோதும் அப்படியெல்லாம் பேசாதபடி உன்னை நான் செய்து விடுகிறேன்” அவரது ஆவேசக் குரலைக் கேட்ட ஸ்வாமிஜி சற்றுக் கூட அசையவில்லை.

“கனவானே! உங்கள் கருத்துப்படி வேத பிரசாரம் தப்பானது, இல்லையா! அதற்குப் பொறுப்பான அங்கம் என் தலை தான்! ஆகவே எனக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என்றால் என் தலையில் தான் அடிக்க வேண்டும்” என்றார் ஸ்வாமிஜி.

இதைச் சொல்லி விட்டு வந்தவரின் கண்களை கூரிய பார்வையுடன் ஆழப் பார்த்தார்.

வந்த குஸ்தி பயில்வான் இப்போது ஒரு கணத்தில் மாறியவராகத் தோற்றமளித்தார். ஸ்வாமிஜி கண்களிலிலிருந்து வந்த ஒளி அவரது இதயத்தை ஊடுருவியது. அவரது மனத்தில் இருந்த அழுக்கெல்லாம் நீங்கியது.

அப்படியே நெடுஞ்சாண்கிடையாக ஸ்வாமிஜியின் பாதத்தில் விழுந்து வணங்கினார்.

அவர் அற்புதம் நிகழ்த்தி விட்டார் என்று பலர் சொன்னாலும் உண்மைக் காரணம் அவரது பிரம்மசர்ய சக்தியே!

இப்படி இன்னும் பல வியப்பூட்டும் சம்பவங்கள் ஸ்வாமிஜியின் வாழ்க்கையில் உண்டு!

**

tags- தயானந்த சரஸ்வதி! – 2

பிரம்மசர்யத்தின் சக்தி- ஸ்வாமி தயானந்த சரஸ்வதி! – 2 (Post No.6534)

WRITTEN by S Nagarajan

swami_48@yahoo.com


Date: 12 June 2019


British Summer Time uploaded in London –  6-29 am

Post No. 6534

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.co