தென்புலத்தாருக்கு 96 கும்பிடு!

rameswaram

Rameswaram Agni Theertham where ancestors are worshiped on important days.

ஆராய்ச்சிக் கட்டுரையாளர்- லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்- 1371: தேதி 26 அக்டோபர் 2014

தந்யம் யசஸ்யம் ஆயுஷ்யம் ஸ்வர்க்யம் சத்ரு விநாசனம்
குல சந்தாரகம் சேதி ச்ராத்தமாஹூர் மநீஷிண:
-மஹா பாரதம், அநுசாஸந பர்வம் ஸ.145

“ இறந்தோரை உத்தேசித்துச் செய்யப்படும் தர்ப்பணமானது செல்வம், புகழ், ஆயுள், ஸ்வர்கம் முதலிய நன்மைகளை அளிக்கும். எதிரிகளை ஒழிக்கும், தன் குலம் தழைத்தோங்கச் செய்யும்” —மஹா பாரதம், அநுசாஸந பர்வம் ஸ.145

உலகில் மிகவும் ஆச்சர்யமான பிறவிகள் இந்துக்கள். முன்னோர்களை அவர்கள் வழிபடும் முறை தனிச் சிறப்புடைத்து. இவர்கள் போல இறந்து போனோரைக் கொண்டாடும் இனம் உண்டோ என்றில், இல்லை என்று பகர ஒரு நொடியும் தேவை இல்லை. பெரிய தலைவர்கள் இறந்தால் அடக்கம் நடைபெறும் போது 21 முறை பீரங்கிக் குண்டு வெடித்து மரியாதை செய்வர். இதற்கு கடற்படை சம்பிரதாயமே காரணம் என்று கலைக் களஞ்சியங்கள் செப்பும். பின்னர் ஆண்டுதோறும் அவர்கள் கல்லறைக்குச் சென்று மலர் தூவுவர். ஆனால் இந்துக்களோ ஆண்டுக்கு குறைந்தது 96 முறை வணங்குவர். ஆதிகாலத்தில் மூன்று வர்ணத்தாரும் செய்த இக்கடன் இப்போது குறுகிப்போய் ‘’பிராமணர் மட்டும்’’ என்று ஆகிவிட்டது. அதுவும் அருகிப் போய் 96 முறைக்குப் பதில் 12 அல்லது 24 முறை என்று சுருங்கிவிட்டது. காலத்தின் கோலம்!!

தினமும் முன்னோர்களை வழிபடும் வழக்கத்தைப் “பஞ்ச யக்ஞம்” என்ற தினசரிக் கடமைகளில் காண்கிறோம். அது என்ன ஐவேள்வி?

திருவள்ளுவர் பதில் சொல்கிறார்:
தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை — (குறள் 43)

தென்புலத்தார்= தெற்கு திசையில் வசிக்கும் முன்னோர்கள்
தெய்வம்= கடவுள் என்பதன் சம்ஸ்கிருதச் சொல்
விருந்து = வீட்டிற்கு வரும் விருந்தாளிகள் (சாது, சந்யாசிகள்)
ஒக்கல் = சுற்றத்தார்,
தான் = தான் (அதாவது தனது சொந்தக் குடும்பம், அவர் வளர்க்கும் ஆடு, மாடு, மரத்தில் வசிக்கும் காக்கை, குருவி, வீட்டில் ஓடும் எறும்பு முதலியன. இதை பூத யக்ஞம் என்பர்= உயிரின வேள்வி)
என்று = என்ற
ஐம்புலத்து = ஐந்து இடங்களில் செய்ய வேண்டிய (பஞ்ச வேள்வி)
ஆறு= வழியினை
ஓம்பல் = பாதுகாத்தல்
தலை= சிறந்த அறம் ஆகும் (தர்மம்)
மனு ஸ்மிருதியில் 3-72 ஸ்லோகத்தில் கூறியதற்கும் இதற்கும் சிறிதும் வேறு பாடு இல்லை — மேலும் குறள் 41-ல்
இல் வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை (41)
என்பது மனு ஸ்மிருதியின் 3-78 ன் மொழியாக்கம் என்பதையும் இரண்டையும் கற்ற சான்றோர் உணர்வர்.

அதாவது கிருஹஸ்தன் என்பவன் வானப் ப்ரஸ்தம், சன்யாசம், பிரம்மசர்யம் என்ற மற்ற மூன்று நிலையில் உள்ளவர்க்கும் உதவுவதால் அதுதான் சிறந்த அறம் — கல்யாணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு மற்ற மூன்று நிலையில் உள்ளவர்களையும் ஆதரிப்பவர்கள் போற்றுதலுக் குரியவர்கள்.

thai amavasya

இதை எதற்குச் சொல்கிறேன் என்றால், பிள்ளை பெறுவது எதற்காக என்று புற நானூற்றில் கோப்பெருஞ்சோழன் சொல்கிறான் — சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த இடத்திற்கு வந்த பல புலவர்களில் ஒருவர் பொத்தியார். அவருக்கு இடம் தர மறுத்த சோழ மன்னன் புதல்வன் பிறந்த பின் வருக — என்கிறான். புதல்வர் எதற்காக? பிண்டோதக் கிரியை என்னும் இறுதி யாத்திரைக் கிரியை செய்வதற்காகும் என்று உரைகாரர்கள் நவில்வர்.

உரைகாரர் சொன்னால் நாங்கள் நம்பவேண்டுமா? என்போருக்கு அகநானூற்றுப் புலவர் செல்லூர் கோசிகன் கண்ணனார் — (கௌசிக கோத்ரத்துதித்த கிருஷ்ணன் என்னும் புலவர்) — வாய்மொழியாக உண்மை அறிதல் நலம்:

“இம்மை உலகத்து இசையொடும் விளங்கி
மறுமை உலகமும் மறு இன்று எய்துப
செறுநரும் விழையும் செயிர்தீர்காட்சிச்
சிறுவர்ப் பயந்த செம்மலோர்” எனப்——— அகம்.66

பிள்ளைகள் இல்லாவிட்டால் நரகமா?

பிள்ளைகள் எள்ளும் நீரும் இரைத்து தர்ப்பணம், திதி முதலியவற்றைச் செய்தால் மறுமை இன்பம் கிடைக்கும் என்றால், பிள்ளைகள் பெற்றுக் கொள்ளாதோருக்கும், பிள்ளைகளே பிறவாதோருக்கும், இது பற்றி அறியாத ஜாதியினருக்கும் நரகம் வாய்க்குமா?

இல்லை. இல்லவே இல்லை. ஏனெனில் அவர்களுக்கும் சேர்த்து பிராமணர்கள் எள்ளும் நீரும் தெளித்து விடுகின்றனர். ஐயர்கள் சொல்லும் தர்ப்பண மந்திரங்களை அறிந்தோருக்கு இது தெள்ளிதின் விளங்கும் —( ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் வெளியீடுகளில் அண்ணா அவர்கள் எழுதிய தமிழ் மொழியாக்காத்தையும் உரையையும் அனைவரும் பயிலுதல் நன்று )

இதனால்தான் பிராமணர்களுக்குப் பொன்னும் பொருளையும் தமிழ் மன்னர்கள் வாரி வழங்கியதை சங்க இலக்கியத்திலும் 80,000 கல்வெட்டுகளிலும் காண்கிறோம்.

TharpaNam Pic

இதோ அவர்கள் சொல்லும் அற்புத மந்திரங்கள்:
எவர்களுக்குத் தாயோ தந்தையோ, சிநேகிதரோ, தாயாதிகளோ, பந்துக்களோ இல்லையோ — (தர்ப்பணம் செய்ய) — அவர்கள் எல்லாம் தர்ப்பை நுனியால் விடும் தீர்த்தத்தால் திருப்தி அடையட்டும்.

ஆகாய வழியாக வந்து இந்தத் தர்ப்பைப் புல்லில் எழுந்தருளுங்கள் என்று வேண்டும் போது அவர்கள் சொல்லும் மந்திரம் எல்லா இடங்களிலும் மங்களத்தையும் அமைதியையும் உண்டாக்கும்:

காற்று இனிமையாக வீசட்டும்
நதிகள் இனிமையைப் பெருக்கிக்கொண்டு ஓடட்டும்
செடி கொடிகள் இனிமை அளிக்கட்டும்
காடுகளில் உள்ள மரங்கள் இன்பம் தரட்டும்
சூரியன் மகிழ்ச்சி அளிப்பானாகுக
பசுக்கள் இனிமையான பாலைப் பொழியட்டும். (மதுவாதே ருதாயதே…..)

இவ்வாறு ஒரு ஆண் — தனது வம்சத்தில் பிறந்து இறந்த தந்தை, தாத்தா, கொள்ளுத் தாத்தா ஆகிய மூவருக்கும் நீர்க்கடன் செலுத்திய பின்னர், தாயின் வம்சத்திலும் தந்தை, தாத்தா, கொள்ளுத் தாத்தா என்று எள்ளும் நீரும் இரைப்பர். இந்த ஆறு பேருடைய மனைவிமார்களும் இதே போல மரியாதை பெறுவர். எல்லோரும் இறந்து போயிருந்தால் இப்படி 12 பேருக்கும் வழிபாடு நடக்கும். இந்த அற்புத முறையை உலகில் வேறு எங்கும் காண முடியாது!!

இனி இந்துக்கள் – குறிப்பாக பிராமணர்கள் செய்ய வேண்டிய 96 இறந்தார் கடமைகளைத் தருகிறேன் (ஸ்ரீரங்கம் பி.ஜே.ஸ்ரீனிவாசன் எழுதிய நூலில் இருந்து)
அந்தக் காலத்தில் தீ மூட்டி சிரார்த்தமாக நடந்தவை பின்னர் காலத்தின் கோலத்தினால் நீர்க்கடனாக மாறியது. அதில் ஆண்டுக்கு குறைந்தது 96 முறை இதைச் செய்ய வேண்டும் என்று சான்றோர் எழுதிய சாத்திரங்கள் கூறும்:

adi amavasya

12 மாதப் பிறப்பு தர்ப்பணங்கள்
12 அமாவாசை தர்ப்பணங்கள்
12 அஷ்டக தினங்கள் (மார்கழி, தை,மாசி,பங்குனி ஆகிய 4 மாதங்களின் சப்தமி,அஷ்டமி, நவமி தினங்கள்)
16 மஹாளய பட்ச தினங்கள் (சூரியன் கன்யா ராசியில் பிரவேசிக்கும் போது புரட்டாசி மாதத்தில் கிருஷ்ண பக்ஷத்தில் செய்யப்படும்)
4 யுக நாட்கள் (கிருத, த்ரேதா, த்வாபர, கலி யுகம் தொடங்கிய யுகாதி நாட்கள்)
14 மன்வந்தர நாட்கள் (14 மனுக்களின் ஆட்சி துவங்கிய நாட்கள்)
26 வ்யதீபாத—வைக்ருதி—விஷ்கம்ப தர்ப்பணங்கள் (27 வகை யோகங்களில் வ்யதீபாத யோகம் வரும் 13 + வைக்ருதி—விஷ்கம்ப யோகம் வரும் 13 தர்ப்பணங்கள்)
இது தவிர கிரகண காலங்களிலும் இறந்தோர் திதி வரும் நாட்களிலும் செய்வர்.

-சுபம்-