
Written by London swaminathan
Research Article no. 1705; dated 10 March 2015
uploaded at காலை 11-10 London time லண்டன் நேரம்
கர தூஷணர்கள் என்னும் ஏழு கோடி அவுணர்களை ஸ்ரீ ராமர் அம்புகளின் மூலம் எளிதில் கொன்றார். ஆனால் ஏன் ராவணனை அப்படிக் கொல்ல முடியவில்லை?
அர்ஜுனன், துரியோதனன் போன்றோருக்கு ரஹசிய ஆயுதக் கலையைச் சொல்லிக் கொடுத்த துரோணர், அதை ஏன் ஏகலைவனுக்கு சொல்லிக் கொடுக்க மறுத்தார்?
பிரம்மாஸ்திரம் போன்ற அஸ்திரங்களை ஏன் “ஒரே ஒரு முறை” மட்டும் பிரயோகிக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டது?
இவை எல்லாவற்றிற்கும் ஒரே விடைதான்.
பழங்கால இந்துக்களிடம் ஒலி (சப்த) ஆயுதங்கள் இருந்தன. அவை அதிர்வு அலைகளைப் பரப்பி, பிரம்மாண்டமான அழிவுகளை உண்டாக்கும். இதை இன்னும் மேலை நாடுகள் கண்டு பிடிக்கவில்லை. எதிர்காலத்தில் கண்டுபிடிக்கக் கூடும். நம் நாட்டில் அந்தக் கலை அறவே மறைந்துவிட்டது. இவைகளை மிக, மிக அரிதாகவே பயன்படுத்துவர்.
தர்ப்பைப் புல், தண்ணீர், மந்திர சக்தி மூன்றையும் இணத்து அவர்கள் செயற்கரிய செயல்களைச் செய்தனர். வரம் கொடுத்தனர், சாபம் கொடுத்தனர், அஸ்திரங்களைப் பிரயோகித்தனர்.
தற்போது இந்தியா உள்பட உலகில் ஏழு நாடுகளிடம் அணு ஆயுதங்கள் உள்ளன. ஆனால் அவைகளை எல்லா யுத்தங்களிலும் பிரயோகிப்பதில்லை. இதுவரை அமெரிக்கா மட்டும் ஜப்பானில் ஹிரோஷிமா, நாகசாகியில் அணுகுண்டுகளைப் போட்டு பல்லாயிரக் கணக்கான மக்களை ஒரே நொடியில் கொன்றது. இந்தியப் பிரதமர், அமெரிக்க- ரஷிய ஜனாதிபதிகள் ஆகியோரிடம் அணுகுண்டு உபயோகிக்கும் ரகசிய சங்கேதச் சொல் – கோட் – உள்ளது. இது போல துரோணர், கிருபர் ஆகியோரிடம் இருந்த ‘பாஸ்வோர்ட்’ – அர்ஜுனன், கர்ணன் போன்றோருக்கு மட்டுமே தெரியும். எப்படி இந்திய—அமெரிக்க—ரஷிய அதிபர்கள் இதை அரிதாகவே பயன்படுத்துவார்களோ அதே போலத்தான் அக்காலத்திலும் அஸ்திரங்களை அரிதாகப் பயன்படுத்தினர்.
தற்காலத்தில் புற்றுநோயைக் கொல்லும் அரிய அணுசக்தி ஐசடோப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை உடலுக்குள் செலுத்தப்பட்டவுடன், புற்று நோய் செல்களை மட்டும் தாக்கி அழிக்கும். நல்ல செல்களை விட்டுவிடும். இதே போல இந்துக்களின் ஒலி ஆயுதங்கள், யார் மீது எய்யப்படுகிறதோ அவர்களை மட்டும் கொல்லும். ஆயினும் இவைகள் பேரழிவையும், பக்க விளைவு களையும் ஏற்படுத்தும் என்பதால் முதலிலேயே சத்தியம் வாங்கி விடுவார்கள் — “ஒரே முறைதான் பிரயோகிப்பேன்” என்று.
அணுசக்திக்கு நல்ல, கெட்ட உபயோகம் இருப்பதைப் போலவே இவைகளுக்கும் நல்ல, கெட்ட பயன்பாடுகள் உண்டு. ஆகையால்தான் இவ்வளவு முன் எச்சரிக்கை.

மரப்பாச்சி பொம்மை மர்மம்
பிரம்மாஸ்திரம் ஒரு அணு ஆயுதமா? – என்ற ஆங்கிலக் கட்டுரையை லண்டனில் அச்சிட்ட சவுத் இந்தியன் சொசைட்டியின் 2005-ஆம் ஆண்டு மலரில் எழுதி இருந்தேன். அதே கட்டுரையை இந்த பிளாக்-கில் 2011ல் போட்டேன். இதுவரை தினமும் புதுப் புது நேயர்கள் அதைப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் உத்திரையின் கருவைக் கூட பிரம்மாஸ்திரம் பாதிக்கும் என்பதை அறிந்து கிருஷ்ண பரமாத்மா காப்பாற்றிய விதத்தையும் எழுதி இருக்கிறேன். இக்காலத்திலும் அணுக்கதிரியக்கத்தில் இருந்து பாதுகாக்க ஈயமும், செஞ்சந்தன மரங்களும் பயன்படுவதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். இதனால் இந்தியாவில் இருந்து ஜப்பானுக்கு செஞ் சந்தன மரக் கட்டைகள் ஏராளமாக ஏற்றூமதியாகின்றன. இதனால்தான் அக்காலத்தில் மரப்பாச்சி என்னும் பொம்மைகளை செஞ் சந்தன மரக் கட்டைகளில் செய்து கொடுத்தார்கள்
அதர்வ வேதத்தில் நிறைய ரஹசியங்கள் இருக்கின்றன. அதில் தர்ப்பை பற்றிய மந்திரங்கள் அவற்றின் சக்தியை விளக்குகின்றன. ஆனால் தர்ப்பை என்பது “டெலிவரி வெஹிக்கிள்” போன்றவை —அதாவது ஆணு ஆயுதத்தை சுமந்து செல்லும் வாஹனங்கள் – உண்மையான அணுகுண்டு என்பவை துரோணர், கிருபர் போன்றோர் மட்டும் அறிந்த அரிய மந்திரங்களாகும். எப்படி இன்று அணு ஆயுத ரஹசியங்களையும், அவற்றுக்கான சங்கேதக் குறியீடுகளையும் ஆட்சியில் உள்ள ஒரு சிலர் மட்டும் ரஹசியமாகப் பாதுகாக்கிறார்களோ அப்படி அக்காலத்தில் ராஜசபையில் உள்ள பெரியோர்கள் மட்டுமே அறிந்து வைத்திருந்தனர். வள்ளுவருக்கும் கூட இவ்விஷயம் தெரியும்:
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல் – (குறள் 894)
பெரியவர்களுக்கு தீமை செய்வது, எமனை தானே கைதட்டி வா என்று கூப்பிடுவதற்குச் சமம் என்கிறார் வள்ளுவர். அதற்குக் கீழே இன்னும் ஒரு குறளில் ஆட்சியைக் கூடக் கவிழ்க்கும் வல்லமை பெரியோருக்கு உண்டு என்கிறார். ஆனால் பெரியோர்கள் எல்லோரையும் ஆசீர்வாதிபார்களேயன்றி அழிக்க மாட்டார்கள்.
நாட்டில் தர்மம் முற்றிலும் அழியும் ஆபத்து வரும்போது மட்டும், வித்தியாரண்யர், சமர்த்த ராமதாசர் போன்றோர் மந்திர சக்தியுள்ள வாட்களை (பவானி வாள்) கம்பண்ண உடையார், வீர சிவாஜி போன்றோர் கையில் கொடுத்து காரியத்தை நிறைவேற்றுவர். அடுத்த கல்கி அவதாரத்தில் உலகம் வியக்கும் இந்து ஆயுதங்களைக் காணலாம்.
ராமன் கூட இதை ராவணன் விஷயத்தில் பயன்படுத்தவில்லை. ராவணன் வேதம் அறிந்தவன் – முறையான யுத்தம் செய்ய வல்லவன். ஆகையால் ராமனும் கூட அவன் போர்க்களத்தில் நிராயுத பாணியாக ராவணன் நின்றபோது, “இன்று போய் நாளை வா” என்று அனுப்பினன். கரதூஷணர்கள் தர்மயுத்தம் செய்பவர்கள் அல்ல.
ஏகலைவன் ஒரு சாமான்யன். அவனிடம் அணு ஆயுத ரஹசியங்களைச் சொல்ல முடியாது. ரஹசியமாக அறிந்த விஷயங்களையும் கூட அவன் பயன்படுத்த இயலாதவாறு அவனுடைய கட்டைவிரல் வெட்டப்பட்டது. அக்கால மக்கள் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவர்கள்!

அதர்வண வேத தர்ப்பை மந்திரங்கள்
யத்தே தர்பே ஜரா ம்ருத்யு சதம் வர்ஷசு வர்ம தே
தேனேமம் வர்மிணம் க்ருத்வா சபத்னாஞ்ஜஹி வீர்யை :
சதம் தே தர்ப வர்,மணி சஹஸ்ரம் வீர்யா மணிதே
தமஸ்மை விஸ்வே த்வாம் தேவா ஜரஸே பர்தவா அது:
—-அதர்வ.19-30
ஏ தர்ப்பையே! மரணத்தை நீக்கி நீண்ட ஆயுளைத் தருபவன் நீ. எல்லா கவசங்களையும் விட நீ உயர்ந்தவன். உலகில் உள்ள எல்லா ஆயுதங்கலையும் விடச் சிறந்தவன் நீ. அரசனைக் காத்து, அவனது எதிரிகளை வீழ்த்துவாயாக.
ஓ தர்ப்பையே! நீ நூற்றுக் கணக்கான கேடயங்களை உடையாய். ஆயிரக் கணக்கான வழிகளில் சக்த்தியை வெளியிடுக்றாய். நீண்ட காலத்துக்கு அரசனுக்கு ஆயுள் தர பெரியோர்கள் உன்னை அவனிடம் தந்துள்ளனர்.–அதர்வம், 19-31
சதகாண்டோ த்ஸ்ச்யவன: சஹஸ்ரபர்ண உத்திர:
தர்போ ய உக்ர ஔஷதிஸ்தம் தே பந்தாம்யாயுஷே –19-31
ஓ, மனிதனே! நான் (மருத்துவன்) உன் கையில் குஷ புல்லைக் கட்டுகிறேன். இது சக்தி வாய்ந்தது நூற்றுக் கணக்கான தண்டுகளையும், ஆயிரக்கணக்கான இலைகளையும் உடையது. ஏனைய மூலிகைகளை விட இது வலிமை வாய்ந்தது. உன்னுடை வாழ் நாள் அதிகரிக்கும்.
தர்ப்பைப் புல்லுக்கு ‘குசம்’ என்ற பெயரும் உண்டு. உலகின் மிகப் பழைய சமய நூலான ரிக் வேதம் முதல் நான்கு வேதங்களிலும் தர்ப்பை வருகிறது. இதை சங்க காலத் தமிழர்களும் பயன்படுத்தியதைப் புறநானூற்றுப் பாடல்கள் காட்டுகின்றன. விழுப் புண் இல்லாமல் மன்னர்கள் இறந்தால் அவர்களை தர்ப்பைப் புல்லின் மீது கிடத்தி வாளால் வெட்டி பின்னர் புதைப்பர்.
தர்ப்பைப் புல் ஆசனங்களில் அமர்ந்து தியானம் செய்வது அபூர்வ சக்திகள் பெற உதவும் . அக்காலத்தில் இந்து மத யோகிகள் மான் தோல், புலித்தோல், தர்ப்பைப் புல் ஆசனங்களைப் பயன்படுத்தினர். இவைகளில் தர்ப்பாசனங்கள்- புறச் சூழலுக்கு தீங்கு பயக்காதவை.

பிராமணர்களின் ஆயுதம் !
(இங்கே குறிப்பிடப்படும் பிராமணர்கள் பிறப்பினால் அந்தஸ்து பெற்ற பிராமணர்கள் அல்ல. ஒழுக்கத்தாலும், தபோ சக்தியினாலும் பிராமணத்துவம் எய்தியவர்களே இங்கே பிராMஅனர்கள் எனப்படுவர்)
பிராமண புரோகிதர்கள் கையில் தர்ப்பைக் கட்டுடன் தான் வீட்டை விட்டுப் புறப்படுவர். அஃதன்றி அவர்கள் தொழில் செய்ய முடியாது.
இதோ பிராமணர்களின் சக்தி பற்றி:–
வஜ்ரோ யதா சுரேந்த்ரஸ்ய சூலம் ஹஸ்த ஹரஸ்ய ச
சக்ராயுதம் யதா விஷ்ணோ: ஏவம் விப்ரகரே குச:
இந்திரன் கையில் உள்ள வஜ்ராயுதம், சிவன் கையில் உள்ள சூலாயுதம், விஷ்ணு கையில் உள்ள சக்ராயுதம் ஆகியனவற்றுக்கு எவ்வளவு சக்தி உண்டோ அவ்வளவு சக்தி பிராமணன் கையில் உள்ள தர்ப்பைப் புல்லுக்கு உண்டு
பூதப் பிரேத பிசாசாஸ்ச யே சான்யே ப்ரம்மராக்ஷசா:
விப்ராங்குலிகுசான் த்ருஷ்ட்வா தூரம் கச்ச அதோ முகா:
பிராமணன் விரலில் உள்ள (விப்ர+அங்குலி+குசான்) தர்ப்பையைப் பார்த்தவுடன் பூதங்கள், ஆவிகள், பிசாசுகள், பிரம்ம ராக்கதர்கள் ஆகியோர் பயந்துகொண்டு தலை குனிந்தவாறு (அதோ முகா:) ஓடிப் போய்விடுவார்கள்!
குசபாணி சதா திஷ்டேத் பிராம்மணோ டம்பவர்ஜித:
ச நித்யம் ஹந்தி பாபானி தூல ராசிமிவாநல:
கையில் தர்ப்பைப் புல்லுடன் உள்ள பிராம்மணன் அஹம்காரம் இல்லாமல் இருப்பானாகில், அக்னியைக் கண்ட பனி ஒழிவது போல அவன் பாபங்களை அழிப்பான் ( சூரியனைக் கண்ட பனி போல பாவங்கள் மறையும்)
அபவித்ரகர: கஸ்சித் ப்ராம்மணே ய உபஸ்ப்ருசேத்
அபூதந்தஸ்ய தத்சர்வம் பவத்யாசமனம் ததா
சுத்தம் இல்லாத கையை உடையவன் பவித்ரம் அணிந்து தொட்ட மாத்திரத்தில் எல்லாம் புனிதம் ஆகிவிடுகின்றன.
அங்குஷ்டானாமனாமிகாப்யாம் து சின்னம் பைதாமஹம் சிர:
ருத்ரேன து த: காலாத் சமாரப்ய கரோ அசுசி:
கட்டை விரலையும் மோதிரவிரலையும் சேர்த்து பிரம்மனின் தலையைக் கொய்த அசுத்தமடைந்த சிவனின் கையும் கையில் தர்ப்பை அணிந்தவுடன் சுத்தமானது.

பாவனார்த்தம் ததோ ஹஸ்தேகச காஞ்சன தாரணம்
புஞ்சானஸ்து விஷேசேன நான்யதோதேன லிப்யதே
கையில் தங்கத்தையும் தர்ப்பையையும் அணிந்து ஒருவன் எதைச் சாப்பிட்டாலும் அவனை எந்த தோஷமும் பீடிக்காது.
குசானோ உபவிஷ்டஸ்ய சித்யதே யோக உத்தம:
தர்ப்பைபுல் ஆசனத்தில் அமர்ந்தவனுக்கு உத்தமமான யோகங்கள் கிடைக்கின்றன.
ஆதாரம்–தர்ப்பைகளின் பிரசம்ஸை – கோபிலர்
(இந்தக் கட்டுரையை வேறு இடங்களில் பயன் படுத்துவோர் எழுதியோர் பெயர், பிளாக்–கின் பெயர் இல்லாமல் வெளியிடக் கூடாது. வர,வர இலக்கியத் திருடர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மனதுக்கு வேதனை தருகிறது. இத்தகையோர் தமிழையும் இந்து மதத்தையும் அழிக்கப் பிரந்த இராக்கதர்கள் ஆவர். தமிழ்த் தாயும், மும்மூர்த்திகளும் அவர்களைச் சபிப்பர்)
You must be logged in to post a comment.