தற்குறிப்பேற்ற அணி!

kokku sunset

Compiled  by S NAGARAJAN

Post No.2274

Date: 26 October 2015

Time uploaded in London: 7-56 AM

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

தமிழ் என்னும் விந்தை

கவிஞன் தன் குறிப்பைச் சொல்லும் தற்குறிப்பேற்ற அணி!

 

.நாகராஜன்

 

கவிதா அலங்காரம்

கவிதைக்கு அழகு அலங்காரம். அணி. இந்திய இலக்கியங்களுக்கே உரித்தான தனி ஒரு சிறப்பு அணிகள்.

அணிகள் நூற்றுக் கணக்கில் உள்ளன. ஆனால் தமிழில் தண்டியலங்காரம் 37 அணிகளைப் பற்றி விவரிக்கிறது.

இவற்றை அறிந்து கவிதையைச் சுவைப்பதால் தனி ஒரு இன்பம் ஏற்படும்.

உதாரணத்திற்கு ஒரு அணியை எடுத்துக் கொள்வோம்.

சூரியன் உதயம், சூரியன் அஸ்தமனம், சந்திரோதயம் ஆகியவை அன்றாடம் ஏற்படும் இயற்கை நிகழ்வுகள். சூரிய சந்திரர் உள்ளவரை என்பது நாம் அன்றாடம் உபயோக்கிக்கும் வார்த்தைகள் – ஒரு கருத்திற்கு அழுத்தம் தர இதைப் பயன்படுத்துகிறோம்.

இராமன் சூரிய குலத் தோன்றல். பாண்டவர்கள் சந்திர குலத்தில் உதித்தவர்கள். இராமாயணத்தில் வால்மீகி, கம்பன் சூரியனை தங்கள் மனதில் ஏற்றி வணங்கி அவ்வப்பொழுது தங்களின் குறிப்பை சூரியன் வாயிலாகச் சொல்வர். சந்திரன் வாயிலாகச் சொல்வர்.

அதே போல வியாஸரும், வில்லிப்புத்தூராரும் தங்கள் கருத்தை சூரிய, சந்திரர் வாயிலாக அழகுறச் சொல்வர்.

moon

ஏனைய கவிஞர்களையும் எடுத்து அலசி ஆராய்ந்தால் சூரிய, சந்திரருக்கு மட்டுமே பல்லாயிரக்கணக்கான பக்கங்களை ஒதுக்க வேண்டியிருக்கும்.

இதே போலத் தான் வானிலிருந்து பொழியும் மழை. இது அவ்வப்பொழுது நிகழும் ஒரு இயற்கை நிகழ்வு. இதிலும் கவிஞன் தன் கண்ணோட்டத்தில் ஒரு சிறப்பைக் காணுகிறான். இப்படி ஒவ்வொன்றாகத் தொகுக்க ஆரம்பித்தால் பல உயர்ந்த கருத்துக்களின் பொக்கிஷம் நம்மிடம் இருக்கும்!

சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா, சூரிய சந்திரரோ!

அனுமனின் கண்களை வர்ணிக்க வந்த வால்மீகி மஹரிஷி இப்படிக் கூறுகிறார்:

பிங்கே பிங்காக்ஷமுக்யஸ்ய ப்ருஹதீ பரிமண்டலே I

சக்ஷுஷீ சம்ப்ராகாஸேதே சந்த்ர ஸூர்யா விவோதிதௌ II (வால்மீகி ராமாயணம் சுந்தர காண்டம் ஸ்லோகம் 59)

இதன் பொருள்: வானரச்ரேஷ்டரான அனுமாருடைய பிங்கள வர்ணமான பெரிய இரண்டு கண்கள் பரிமண்டலத்தில் உதயமான சந்திர சூரியர் போல் நன்கு விளங்கின!

இதைப் படித்தவுடன் நமக்கு உடனடியாக நினைவுக்கு வருவது பாரதியாரின் பாடல் தான்!

சுட்டும் விழிச்சுடர் தான் கண்ணம்மா! சூரிய சந்திரரோ!

விழிகளைச் சூரியனுக்கும் சந்திரனுக்கும் உவமையாகக் கூறுவதில் தான் என்ன ஒரு இன்பம்! ஆழ்ந்த கருத்து!!

வள்ளலைப் போல வழங்கும் வானம்

தற்குறிப்பேற்ற அணி என்று பெயர் பெற்ற சிறப்பான அணியில் கவிஞர்கள் தம் மனோதர்மத்திற்கு ஏற்றவாறு தரும் உண்மைகள், கற்பனைகள், கருத்துக்கள் ஏராளம்.

ஒன்றே ஒன்றை மட்டும் பார்ப்போமா?

கம்பனின் பால காண்டம். ஆற்றுப்படலம். நான்காவது பாடல்:

புள்ளி மால்வரை பொன்னென னோக்கிவான்                                          

வெள்ளி வீழிடை வீழ்த்தெனத் தாரைகள்                                        

உள்ளி யுள்ளவெ லாமுவந் தீயுமவ்                                            

வள்ளியோரின் வழங்கின மேகமே

 

இமயமலை பொன் நிறமாக ஒளிர்கிறது. அதைப் பார்த்த ஆகாயத்திற்கு ஒரே சந்தோஷம்! அதனால் மழைத் தாரையைக் கொட்டியது.

வானத்திலிருந்து மழை பெய்யும் சாதாரண சம்பவம் தான்! ஆனால் கவிஞனின் கண்களில் அது பட்டவுடன் பிரம்மாண்டமான சிறப்பைப் பெறுகிறதுமலையைப் பார்த்த வானம் சந்தோஷமடைந்து நீரைப் பெய்ததே, அது எது போல இருந்தது தெரியுமாதன்னிடமுள்ள பொருளை எல்லாம் மனமுவந்து கொடுக்கும் வள்ளலைப் போல இருந்தது!

 

 

வள்ளியோர்கொடுக்கும் குணம் உடைய வள்ளல்கள்; உள்ளி என்ற சொல்லுக்கான பொருளாக பயனைக் கருதிக் கொடுப்பதை எண்ணிஎன்ற பொருளில் எடுத்துக் கொள்ளக் கூடாது. உள்ளி என்பதற்கு செல்வம் நிலையாக இருப்பதல்ல என்பதை எண்ணிஎன்று கொள்ளல் வேண்டும். நில்லா உலகத்து நிலைமை தூக்கி என பொருநராற்றுப் படை இந்தக் கருத்தைச் சிறப்பித்துக் கூறுகிறது.

தன்மைத் தற்குறிப்பேற்ற அணிக்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டை மேலே பார்த்தோம்.

 

இது போன்ற லட்சக் கணக்கான பாடல்கள் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் உள்ளன.

அவ்வப்பொழுது இவற்றைக் கருத்தூன்றிப் படித்தால் உயர்ந்த கருத்துக்கள் உள்ளத்தில் ஏறும். உன்னத உயரத்திற்கு ஏறி விடுவோம்! இல்லையா!

****************