
Written by S Nagarajan
Date: 15 DECEMBER 2018
GMT Time uploaded in London –7- 14 am
Post No. 5782
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
தமிழ் இலக்கியம்; அறநூல்!
பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த நூறு இரகசியம் விளக்கும் கேள்விகள்! – 9
மனிதன், தெய்வம், பேய், தலைவன்!
ச.நாகராஜன்
இன்றுடன் வள்ளுவரின் அருளுரை முடியப் போகிறது என்பதை அறிந்த மக்கள் சற்று வருத்தப்பட்டனர். என்றாலும் மூன்று தினங்களுக்கு மேல் ஓரிடத்தில் இருக்காத வள்ளுவப் பிரான் முப்பெரும் தேவியருக்காக ஒன்பது நாட்கள் இருந்ததை எண்ணி அவர்கள் ஆறுதல் அடைந்தனர்.
சபை ஆரம்பித்தவுடன் வேகம் வேகமாக கேள்விகள் வர ஆரம்பித்தன.
ஒருவர் எழுந்து கேட்டார்.
நல்ல முறையில் வாழ்க்கை நடத்துகின்ற ஒருவனை நாம் எப்படி வாழ்த்த வேண்டும்?
வள்ளுவர் உடனே கூறினார்:
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
அப்படி வாழாதவன்?
ஒத்ததறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்
பேய் உண்டா?
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப்படும்
தலைவன் யார் ஐயனே!
முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறை என்று வைக்கப்படும்
ஒரு புலவர் உற்சாகத்துடன் எழுந்தார்.
பார்த்தீர்களா, வாழ்வாங்கு வாழ்பவனை தெய்வத்துள் வைத்தார். மற்றவருக்கு உதவி செய்யாமல் வாழ்பவனை செத்த பிணத்துடன் வைத்தார். உலகத்தோடு ஒட்ட ஒழுகாமல் உலகம் உண்டு என்று சொல்வதை இல்லை என்று சொல்பவனைப் பேயாக வைத்தார். நீதிமுறை தவறாமல் மக்களைக் காப்பாற்றுபவனை தலைவன் என்று வைத்தார். இப்படி நான்கு விதமாக மனிதர்களைப் பிரிக்கிறார் வள்ளுவப் பிரான் என்று அவர் முடித்தவுடன் அனைவரும் கைதட்டி ஆரவாரித்தனர்.

ஒருவரை நடுநிலைமை உள்ளவரா என்று எப்படி அறிவது?
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்
இங்கு புலவர் இரு வரிசையாகப் பிரிந்தனர். ஒரு சாரார் ஒருவன் இறந்த பின் அவனைப் பற்றி நிற்கும் புகழாலும் பழியாலும் அவனது நடுநிலைத் தன்மை காணப்படும் என்றனர். இன்னொரு சாரார் அவனது எச்சம் என்பது அவனது பிள்ளைகளே, அவர்கள் வாழ்வைப் பார்த்து அறியலாம் என்றனர். இரு கருத்துக்களையும் மக்கள் ஏற்றுக் கொண்டனர்.
தர்மவான் போல இல்லாத ஒருவனை எப்படி இனம் காண்பது?
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்
மற்றவனைப் பற்றிப் புறங்கூறும் ஒருவன் தர்மவான் இல்லை என்பதை எளிதில் அறிந்து கொள்ளலாம்.
பிறவித் துன்பம் ஒழிவது எப்படி, ஐயனே?
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்
ஆசைகளை விடு; அப்பொழுதே பிறவித் துன்பம் ஒழியும். இல்லையேல் மாறிமாறிப் பிறக்கும் நிலையாமை காணப்படும்.
அனைவரும் பெரிய ரகசியத்தை உணர்ந்தனர்.
பிறவித் துன்பம் அற வழி கேட்ட உடனேயே காமம் சம்பந்தமாக ஒருவர் ஒரு கேள்வி எடுத்து வைத்தார். மகளிரும் ஆண்களும் மிகவும் ஆவலாக வள்ளுவரைப் பார்த்தனர்.
ஐயனே! மனைவி ஊடலின் போது ஒருவர் விட்டுக் கொடுக்கிறார். யார் இதில் வென்றது?
வள்ளுவர் சிரித்தார்.
ஊடலில் தோற்றவர் வென்றார் அது மன்னும்
கூடலிற் காணப் படும்

மணம் புரிந்த அனைவரும் ஓஹோ என்று சிரித்து அதை ஆமோதிக்க இளம் மங்கையரும் வாலிபரும் புரியாமல் சற்று நாணித் திகைத்தனர்.
புலவர் ஒருவர் எழுந்து நான்கு ‘காணப்படும்’ விஷயங்களை பிரான் உணர்த்தி இருக்கிறார். இத்துடன் புறந்தூய்மை நீரால் அமையும் அகத் தூய்மை வாய்மையால் காணப்படும் என்று சொன்னதையும் சேர்த்துப் பார்த்தால் ஐந்து ‘காணப்படும்’ என்ற ரகசியங்களை அறிகிறோம் என்றார்.
எதைக் கண்டால் அஞ்ச வேண்டும்?
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்
தீய செயல்கள் தீயினும் கொடியன. ஆகவே அந்தத் தீமை விளவிக்கும் செயல்கள் அஞ்சப்படும்.
வள்ளுவர் தொடர்ந்தார்:
முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்
முகத்தினால் சிரித்து அகத்தினால் தீமை கொள்ளும் கறுப்பு உள்ளத்தவரை நட்பாகக் கொள்ள அஞ்ச வேண்டும்.
இரு அஞ்ச வேண்டிய விஷயங்களைக் கேட்டவுடன் ஒருவர் ஒருவனை எப்படி ஆராய்ந்து நம்புவது என்று கேட்டார்.
அறம் பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறம் தெரிந்து தேறப் படும்
அறம், பொருள், இன்பம், உயிரச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஒருவனை ஆராய்ந்து பார். பின்னரே அவனைப் பற்றி அறிய முடியும்!
வள்ளுவர் மன்னனைப் பார்த்துத் தொடர்ந்தார்:
ஒற்றெற் றுணராமை ஆள்க உடன் மூவர்
சொற்றொக்க தேறப் படும்
ஒரு ஒற்றனை இன்னொரு ஒற்றனால் ஆராய்க; அப்படி ஆளப்பட்ட மூன்று பேர்களின் சொற்கள் ஒத்திருக்கிறதா என்று பார்த்து உண்மையை அறிக.
எப்போது ஒருவனின் மதிப்பு கெட்டுப் போகும்?
வள்ளுவர் கூறினார்:
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்
நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்
கல்லாத ஒருவன் தன்னைத் தானே உயர்த்திக் கொண்டு பேசும் மதிப்பானது கற்றவர் அவையில் கூடிப் பேசும் போது கெட்டுப் போகும்.
நன்கு படித்த ஒருவன் நல்ல நூலின் பொருளை விரித்து உரைத்தாலும் கூட அவன் வறியவனாக இருந்தால் அவன் சொற்களை மதிப்புக் கொடுத்து யாரும் கேட்க மாட்டார்கள் அவன் சொற்கள் பயனின்றிப் போகும்.
கண்ணுக்கு அணிகலன் எது ஐயனே! கைகளில் மை தீட்டிய ஒரு அழகிய இளம் பெண் கேட்டாள்.
வள்ளுவர் குரல் புன்சிரிப்புடன் ஒலித்தது:
கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும்.

அந்தப் பெண்ணை கருணை பொதிந்த கண்களால் பாண்டிமாதேவி பார்க்க அவள் கண்களுக்கு அழகு மை அல்ல; கருணைப் பார்வை இல்லையேல் அது புண் என உணர்ந்து அமர்ந்தாள்.
ஒருவர் எழுந்து கேட்டார்: சற்றுக் கருணையற்றுக் கடுமையான சொற்களால் குடும்பத்தில் உள்ளவர்கள் கடிந்து கொண்டால்?
உறாஅ தவர் போல் சொல்லினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்
வெளிப்பட அன்பில்லாதவர் போலக் கடுமையாகச் சொன்னாலும் கூட, அது அகத்தே பகையில்லாமல் தன் அன்புக்குரிய ஒருவரின் நன்மைக்காகவெ சொல்லப்பட்டது என்பதை விரைவில் யாரும் உணர்வர்.
வள்ளுவர் உடன் தொடர்ந்தார்:
நட்டார் போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்
அதே போல நண்பர்கள் போல நல்லனவற்றைச் சொன்னாலும் கூட, மனதிலே பகைமை கொண்டவர்கள் கூறும் சொற்களின் உண்மைத் தன்மையை விரைவில் யாவரும் உணர்வர்.
வள்ளுவரின் தீர்க்கமான சொற்களையும் அதற்கு புலவர்களின் விளக்க உரையையும் கேட்ட மக்கள் மகிழ்ந்தனர்.
ஆராயத் தக்கது எது?
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்
பொறாமை நெஞ்சம் கொண்ட ஒருவனுடைய செல்வமும், பொறாமை இல்லாத ஒருவனின் கேடு காலமும் ஏன் என்று ஆராயப்பட வேண்டியவை.
எள்ளப்படுவது எது?
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்
கேட்டவர்கள் எல்லாரும் வெறுக்கும் படியாக ஒரு பயனும் இல்லாத வெற்றுச் சொற்களைச் சொல்லும் ஒருவன் எல்லாராலும் இகழைப் படுவான்.
உள்ளப்படுவது எது?
வீறெய்தி மாண்டார் வினைத் திட்பம் வேந்தன் கண்
ஊறெய்தி உள்ளப் படும்
நல்ல செயல் திறன் மூலம் தன் திறமை காட்டி உயர்ந்தவரின் வினைத் திட்பமானது அரசு வரை எட்டும்; அவரை அரசனும் மதிப்பான்.
எள்ளப்படுவதையும் உள்ளப்படுவதையும் கேட்டவுடன் மக்கள் மகிழ அந்தி மாலை வந்தது.
பாண்டிமாதேவி பாண்டியனுடன் வள்ளுவரின் பாதம் தொட்டு பாத பூஜையைச் செய்ய சேரமாதேவியும் சோழமாதேவியும் ஏக்கத்துடன் பார்த்தனர்.
காலையில் பாண்டிமாதேவியிடம் வள்ளுவர் தங்கள் நாட்டிற்கு வருகை தந்து தங்களைப் புனிதப் படுத்தக் கூடாதா என்ற ஏக்கத்தை அவர்கள் கொட்டித் தீர்த்தனர்.
பாண்டிமாதேவி வள்ளுவரிடம் வினயமாக ஏதோ விண்ணப்பித்தாள்.
மக்கள் அப்படி தங்கள் மஹாராணி எதை விண்ணப்பிக்கிறார் என்று அறிந்து கொள்ள ஆவல் கொண்டனர்.
வள்ளுவர் புன் சிரிப்புடன் தலையை அசைக்க பாண்டியன் பெரிதும் மகிழ்ந்து உற்சாகக்குரலை எழுப்பினான்.
மக்கள் புரியாமல் திகைக்கவே ராணி சேரமாதேவியையும் சோழமாதேவியையும் பார்த்துக் கூறினாள் : “காலையில் என்னிடம் வள்ளுவப் பிரான் உங்கள் நாட்டிற்கு வர வேண்டும் என்ற ஆசையைக் கூறினீர்கள் அல்லவா? அதை உங்கள் சார்பில் அவரிடம் விண்ணப்பித்தேன். அவர் வருகிறேன் என்று கூறி விட்டார். சென்று ஏற்பாடுகளைச் செய்யுங்கள். அங்கே உங்கள் மன்னருடன் நீங்கள் பாத பூஜை செய்யலாம்.”
கண்களில் ஆனந்தக் கண்ணீர் ததும்ப இருவரும் ஓடோடி வந்து அக்கா என்று கூவி அவரைக் கட்டி அணைக்க பாண்டிமாதேவி அவர்களைக் கட்டித் தழுவிக் கொண்டாள்.
அவர்கள் வள்ளுவரின் பாதம் பணிய அவர் ஆசீர்வாதம் கூறி எழுந்தார். மக்களும் எழுந்தனர். சிலர் அழுதனர். சிலர் ஆனந்தப் பட்டனர். சிலர் பேசினர்; சிலர் மௌனமாக இருந்தனர்.
மந்திரி, படைத்தலைவர், மக்கள் உடன் வர பாண்டியனும் மூன்று தேவிகளும் முன் செல்ல வள்ளுவர் பாண்டிய நாட்டு எல்லையை அடைந்து அனைவரையும் கையை உயர்த்தி ஆசீர்வதித்தார்.
இதற்கு மேல் என்னைத் தொடர வேண்டாம் என்பதை அனைவரும் புரிந்து கொண்டனர்.
நவ ராத்திரி போல ஒன்பது பகல் நடைபெற்ற அறிவு விருந்தைச் சுவைத்த மக்கள் திரும்ப மனமின்றி வள்ளுவரை வணங்கியவாறே திரும்பலாயினர்.
அவர் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்?
கொல்லி மலையை நோக்கியா, பொதிய மலையை நோக்கியா?
யாருக்குத் தெரியும்?
வள்ளுவர் வாழ்க என்ற மாபெரும் ஒலி கொல்லி மலையையும் பொதிய மலையையும் சென்று எதிரொலித்தது.
வள்ளுவர் வாழ்க; தமிழ் வாழ்க; உலகோர் சிறந்து உயர்க!
நன்றி, வணக்கம்!
****

இந்தக் கட்டுரையில் இடம் பெறும் குறட்பாக்களின் எண்கள்
50,214,850, 388,114,185,349,1327, 202, 824,501,589, 405,1046,575, 1096, 826, 169,191,665,
இத்துடன் இந்தத் தொடர் நிறைவடைகிறது.
Index :
Chapter 1 இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள குறட் பாக்களின் எண்கள் 3,4,377,226,439,110 Total upto this article 6
Chapter 2 இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள குறட் பாக்களின் எண்கள் : 126, 667, 496, 55 total upto this :10
Chapter 3 இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள குறட்பாக்களின் எண்கள் : 56,54,1101,913,30,543,260 total upto this : 17
Chapter 4 இந்தக் கட்டுரையில் இடம் பெறும் குறட்பாக்களின் எண்கள் 293,306,799,1019,1207 Total upto this : 22
Chapter 5 இந்தக் கட்டுரையில் இடம் பெறும் குறட்பாக்களின் எண்கள் 620,380,619,371,494,505, 655,656,205,206,327,590 Total upto this : 34
Chapter 6 இந்தக் கட்டுரையில் இடம் பெறும் குறட்பாக்களின் எண்கள் 759,374,179,36,669,893,512,106,391,725,177,931,414,416,695,587 Total upto this : 50
Chapter 7 இந்தக் கட்டுரையில் இடம் பெறும் குறட்பாக்களின் எண்கள்
350, 12, 15, 291,298, 300, 292, 1081, 1085, 1113,1116, 1117 Total upto this : 62
Chapter 8 இந்தக் கட்டுரையில் இடம் பெறும் குறட்பாக்களின் எண்கள்
972,37,93,,200,645,644,711,712, 197,719, 1134,1164, 215,396,943,477, 725,33
Total upto this : 80
Chapter 9 இந்தக் கட்டுரையில் இடம் பெறும் குறட்பாக்களின் எண்கள்
50,214,850, 388,114,185,349,1327, 202, 824,501,589, 405,1046,575, 1096, 826, 169,191,665,
Total upto this : 100
tags – தெய்வம், பேய், தலைவன்,
–subham–
You must be logged in to post a comment.