தழுவி நின்றொழியான், தரை மேல் வையான்!-கம்பன் (Post No.10,643)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,643
Date uploaded in London – – 9 FEBRUARY 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

கம்பன் தரும் காதல் சித்திரம்

தழுவி நின்றொழியான், தரை மேல் வையான்!
ச.நாகராஜன்

கவிச்சக்கரவர்த்தி கம்பனுக்கு ஒரு சங்கடம்.
இராமாயணத்தில் எந்த இடத்தில் சிருங்கார ரஸத்தை உச்சத்தில் கொண்டு வைப்பது?
ஒரே வழி!

சீதையின் கல்யாணத்தை வைத்துக் காட்சிகளை அரங்கேற்ற வேண்டியது தான்!
அப்படி மலர்ந்தவை தான் பால காண்டத்தில் உள்ள எழுச்சிப் படலம், வரைக்காட்சிப் படலம், பூக்கொய் படலம், புனல் விளையாட்டுப் படலம், உண்டாட்டுப் படலம் முதலிய ஐந்து படலங்கள்.
82+77+34+33+67 = 293 பாடல்கள்!

ஆக இந்த 293 பாடல்களிள் படை எழுச்சி, படைவீரர் எழுச்சி, மகளிரின் ஊடல், கூடல், காதலர் கண்ணோடு கண் நோக்குவது, அழகிகளைத் தழுவுவது உள்ளிட்ட அனைத்தையும் சித்தரித்தான்; மகிழ்ந்தான். நம்மையும் மகிழ்விக்கிறான்.
எழுச்சிப் படலத்தில் ஒரு ஆறு இளைஞர்களின் செயலை அட்டகாசமாய் சித்தரிக்கிறான். (பாடல்கள் 31 முதல் 36 முடிய)
அவற்றில் ஒன்று தான் தழுவி நின்று ஒழியான்; தரை மேல் வையான் என்னும் காட்சி.

காட்சி என்ன?

சுழிகள் அமைந்த்த பாய்ந்து செல்லும் வல்லமை படைத்த ஒரு குதிரை.
அதில் ஒய்யாரமாக ஏறி உட்கார்ந்து சென்று கொண்டிருக்கிறாள் மயில் போன்ற சாயலை உடைய ஒரு இளம் அழகி. குதிரையின் ஒரு திடீர்த் துள்ளலில் அவள் குதிரையிலிருந்து தவறி கீழே விழத் தொடங்குகிறாள்.
இதைப் பார்த்து சும்மா இருக்க முடியுமா? வள்ளல் ஒருவன் வேகமாக வந்து அவளைக் கீழே விழாமல் தாங்கிக் கொள்கிறான்.
அப்படியே ஏந்திய வேகத்தில் மார்போடு அணைத்துக் கொள்கிறான்.
சரி தரையில் வைக்க வேண்டியது தானே!

அது தான் இல்லை!
தழுவி நின்று ஒழியான்; தரையினில் வையான்!
‘சான்ஸ்’ கிடைத்தது என்று அவளை அப்படியே தழுவிக் கொண்டே நிற்கிறான். தரையில் வைக்க மாட்டேன் என்கிறான்.
இந்த வள்ளலைக் காதலன் என்றும் கூறலாம்; கூடவே வந்த அவளது கணவன் என்றும் கொள்ளலாம்.

பாடலைப் பார்ப்போம்:
சுழி கொள் பாய் பரி துள்ள ஓர் தோகையாள்
வழுவி வீழலுற்றாளை ஓர் வள்ளல் தான்
எழுவின் நீள் புயத்தால் எடுத்து ஏந்தினான்
தழுவி நின்று ஒழியான் தரை மேல் வையான்

பாடலின் பொருள் :
சுழி கொள் – சுழிகள் அமைந்த
பாய் பரி – பாய்ந்து செல்லும் தன்மை உடைய ஒரு குதிரையானது
துள்ள – திடீரென்று துள்ளிக் குதிக்க
ஓர் தோகையாள் வழுவி வீழல் உற்றாளை – மயில் போன்ற சாயலை உடைய ஒருத்தி தவறி வீழத் தொடங்கிய போது, அவளை
ஓர் வள்ளல் – ஒரு உதாரகுணமுடையவன்
தான் எழுவின் நீள் புயத்தால் – தனது இரும்புத் தூண் போன்ற நீண்ட கைகளால்
எடுத்து ஏந்தினான் – எடுத்துத் தாங்கினான்
தரை மேல் வையான் – அவளைத் தரையில் வைக்கவில்லை
தழுவி நின்று ஒழியான் – தழுவிய வண்ணமே நின்றிட்டான்.

இப்படி இன்னும் ஐந்து இளைஞர்கள் செய்த செயல்களையும் அவன் விவரிக்கிறான்.

அருமையான செய்யுள்களில் சிருங்காரக் காட்சிகள் அரங்கேறுகின்றன!


tags- சிருங்காரக் காட்சி, தழுவி நின்றொழியான், கம்பன்,