கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:–1191; தேதி 24 ஜூலை, 2014.
ஒரு வீட்டில் தயிர்ப் பானையில் தயிர் வைத்திருந்தார்கள். அதை மூட மறந்து விட்டனர். இரவு நேரத்தில் தாவிக் குத்தித்து வந்த இரண்டு தவளைகள் அதில் தவறி விழுந்துவிட்டன. ஒரு பெரிய தவளை தன்னால் முடிந்த மட்டும் காலால் உதைந்து வெளியே குதிக்கப் பார்த்தது. முடியவில்லை. அலுத்துப் போய் அப்படியே அமைதியானது. சிறிது நேரத்தில் பானையின் கீழே போய் மாண்டு போனது.
மற்றொரு தவளை உருவில் சிறியது. அது முயற்சியைக் கைவிடாமல் உதைந்து கொண்டே இருந்தது. இரண்டு தவளைகளும் முன்னர் நீந்தி உதைத்ததிலும், குட்டித் தவளை கடைசி வரை உதைத்ததாலும் தயிர்ப் பானையில் வெண்ணை திரண்டது. கொஞ்சம் கொஞ்சமாக உருண்டு திரண்டு கட்டியாகியது. குட்டித் தவளை அதன் மீதேறித் தாவி வெளியே குதித்து தப்பி ஓடியது.
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்!!
கடவுளை அடைய விரும்புவோரும் இடை விடாமல் சாதகம் செய்தால் இறைவன் வெண்ணை போல திரண்டு வந்து உதவுவான் என்பார் இக்கதையைச் சொன்ன சுவாமி ராமதாஸ்.
திருவள்ளுவரும் இதையே சொன்னார்; சொல்லப்போனால் இதற்கு மேலே ஒரு படி சென்று, முயற்சிக்கான பலனைத் தெய்வமே கூட தடுக்க முடியாதென்றார்:
தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் – (குறள் 619)
அதாவது இறுதி வெற்றி என்பது தர்மமா, அதர்மமா என்பதைப் பொறுத்தே அமையும். ஆனால் அதற்கு முன் வரை அவரவர் முயற்சிக்குத் தக முன்னேற்றம் அமையும். கடவுள் உங்களுக்கு உதவாவிட்டாலும் முயற்சிக்கான பலன், முயற்சியின் அளவுக்கேற்ப அமையும்.
‘முயற்சி திருவினை ஆக்கும்’ — முயற்சியினால் செல்வம் பெறலாமென்று சொன்ன வள்ளுவர், விதியையும் கூட வெல்லலாம் என்பார்:
ஊழையும் உட்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்றுபவர் (620)
அடிக்க அடிக்க அம்மியும் நகரும் என்பர். கல்லே நகரும் போது நம் முயற்சிகளும் பயிற்சிகளும் பலன் தராமல் போகுமா?
–சுபம்–
You must be logged in to post a comment.