பிளாஸ்டிக் பொருள்களைத் தவிர்ப்போம் (Post No.6731)

WRITTEN BY S NAGARAJAN


swami_48@yahoo.com

 Date: 5 AUGUST 2019


British Summer Time uploaded in London –8-48 AM

Post No. 6731

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

ஆல் இந்தியா ரேடியோ, சென்னை வானொலி நிலையத்தின் வாயிலாக தினமும் இந்திய நேரம் காலை 6.55 மணிக்குச் சுற்றுப்புறச் சூழல் நிகழ்ச்சியில் 1-8-19 முதல் 10-8-19 முடிய சுற்றுப்புறச் சூழலைக் காப்பது பற்றிய ச.நாகராஜனின் 10 உரைகள் ஒலிபரப்பப்படுகின்றன. இந்த உரைகளை     www.allindiaradio.gov.in  தளத்தில் தமிழ் ஒலிபரப்பைத் தேர்ந்தெடுத்து  நிகழ்நிலையில் கேட்கலாம்.   4-8-19 அன்று காலை ஒலிபரப்பட்ட நான்காம் உரை இங்கு தரப்படுகிறது.

பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டைத் தவிர்ப்போம்!

ச.நாகராஜன்   

எதிர்கால சந்ததியினருக்கு இன்று வாழும் ஒவ்வொரு மனிதனும் செய்யும்  மகத்தான உதவி இந்த பூமியை அதன் இயற்கை வளத்தை மாசுபடுத்தாமல் வாழும்படியாக விட்டுச் செல்வது தான்.

பூமிக்குப் பெரும் அச்சுறுத்தலாக இன்று விளங்குவது பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு தான்.

இதன் தீமையை ஒவ்வொருவரும் நன்கு அறிந்து விட்ட இன்றைய நாட்களில் இதன் பயன்பாட்டைத் தவிர்க்கும் வழிமுறைகளையும் அறிந்து கொள்வது இன்றியமையாதது ஆகும்.

நாம் அன்றாடம் வாங்கும் பல்வேறு பொருள்களையும் பாக்கிங் செய்ய பிளாஸ்டிக் பைகள் பெருமளவு பயன்படுத்தப் படுகின்றன. ஒவ்வொருவரும் பல்வேறு பொருள்களை சிறிய அளவில் வாங்க முயல்கையில் ஏராளமான பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு தவிர்க்க முடியாததாக ஆகி  விடுகிறது.

ஆகவே கூடுமானவரையில் நண்பர்கள் குழுவாக இணைந்து மொத்தமாக பொருள்களை வாங்கித் தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்ளலாம்.

இன்றைய நவநாகரிக உலகில் ரெடி மீல்ஸ் எனப்படும் தயாரிக்கப்பட்ட உணவை வாங்கி உண்ணும் பழக்கம் பெருகி வருகிறது. இந்த உணவு வகைகளைத் தனித்தனியே பாக்கிங் செய்ய பிளாஸ்டிக் அடிப்படையிலான பொருள்களே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆகவே இதைத் தவிர்த்து இல்லங்களிலேயே உணவைத் தயாரிப்பது அல்லது தங்களது பாத்திரங்களை எடுத்துக் கொண்டு அவற்றில் உணவு வகைகளை வாங்குவது என்ற உறுதியை மனதில் ஏற்க வேண்டும். இதன் மூலம் ஆரோக்கிய மேம்பாடும், இயற்கைச் சூழல் மாசுபடுத்தப்படாமல் இருக்கும் நல்ல நிலையும் ஏற்படும்.

தேநீரைத் தயாரிக்கும் நிறுவனங்கள் பிளாஸ்டிக் அடிப்படையிலான பாலிபுரொபொலினை (Polypropylene) தேநீர் துகள்களைப் போடப் பயன்படுத்துகின்றன. இதைத் தவிர்க்க இப்படி பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தாத நிறுவனங்களிடமிருந்து மட்டுமே தேநீர் வாங்குவது என்ற பழக்கத்தை மக்கள் ஏற்படுத்திக் கொண்டால் நாளடைவில் இப்படிப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு அறவே ஒழிந்து விடும்.

ஆங்காங்கு பல்வேறு நிறுவனங்களில் பணி புரியும் அனைவரும் தங்கள் தங்கள் நிறுவனத்தின் தலைவரிடம் பிளாஸ்டிக் பயன்பாட்டை அறவே ஒழிக்கும் முயற்சியை எடுக்க வற்புறுத்தல் இன்றியமையாதது. தொழிலகத்தின் கொள்கையாக இப்படி பிளாஸ்டிக் பொருளின் பயன்பாட்டைத் தடுத்து நிறுத்தும் முயற்சியை மேற்கொள்வதன் மூலம் இயற்கைச் சூழல் பாதுகாக்கப்படும்.

***