அன்னிய மத மன்னர்களுக்கும் அருளிய மகான்கள்!

tansen

தான்ஸேன்   தபால்தலை

Written  by S NAGARAJAN

Article No. 1963

Dated 30 ஜூன் 2015.

Uploaded at London time : 7-47 am

By ச.நாகராஜன்

மகமதிய படையெடுப்பு

வில் டியூரண்ட் என்ற பிரபல அறிஞர் மனித குலத்தின் சரித்திரத்தை எழுதும் போது மனித குல சரித்திரத்திலேயே இந்தியாவின் மீதான முகமதியர்களின் படையெடுப்பு தான் மகா மோசமானது என வர்ணிக்கிறார். அழிந்த ஆலயங்கள் ஆயிரக் கணக்கில்; வதை பட்ட ஹிந்துக்களோ பல்லாயிரக் கணக்கில்!

என்றாலும் கூட இந்த தேசத்தையும் அதன் பண்பையும் அழிந்து விடாமல் காக்க இந்த மோசமான கால கட்டங்களிலும் மகான்கள் தோன்றி ஒரு பெரும் அரணாக விளங்கி ஹிந்து மதத்தைக் காத்து வந்துள்ளனர். சமர்த்த ராமதாஸர் – சிவாஜி, வித்யாரண்யர் – ஹரிஹர புக்கர் போன்ற ஏராளமான உதாரணங்கள் இந்த சரித்திரத்தில் உள்ளன. இந்த சரித்திரத்தின் தொடர் வரிசையில் அக்பரின் வாழ்விலும் ஔரங்கசீப் வாழ்விலும் ஏற்பட்ட இரு சம்பவங்கள் பிரமிப்பை ஊட்டுபவை.

அக்பரும் தான்ஸேனும்

அக்பர் காலத்தில் பிரசித்தி பெற்ற பாடகராக விளங்கிய தான்ஸேன் ஒப்புவமை இல்லாத உயர்ந்த இசை விற்பன்னராகத் திகழ்ந்தார். தனது அரசவையில் இப்படிப்பட்ட பெரும் பாடகர் இருப்பது குறித்து அக்பருக்கு சொல்லவொண்ணாப் பெருமை.ஒரு சமயம் தான்ஸேன் பாடக் கேட்ட அக்பர் அப்படியே உருகி விட்டார். கண்கள் ஆறாய்ப் பொழிய பாட்டு முடிந்த பின்னரும் நெடு நேரம் அப்படியே உருகிப் போய் அமர்ந்திருந்தார். அவையினரும் அப்படியே மெய்மறந்து இருந்தனர். நேரம் சென்றது. மெதுவாகத் தன் இயல்பு நிலைக்குத் திரும்பிய அக்பர் தான்ஸேனை தழுவிப் புகழ்ந்து, “எனக்கு ஒரே ஆச்சரியமாக இருக்கிறது. எப்படி ஒரு மனிதனால் இப்படிப்பட்ட தேவ கானத்தைத் தர முடியும்? இது எப்படி உங்களுக்கு வந்தது. காரணத்தைக் கட்டாயம் கூற வேண்டும்!” என்றார்.

தான்ஸேன், “இசை நுணுக்கங்களையும் நுண்ணிய உணர்ச்சிகளின் வெளிப்பாடுகளும் என்னிடம் சிறிதளவே இருக்கின்றன! இதையே இப்படிப் புகழ்கிறீர்களே! இதற்கெல்லாம் காரணமான என் குரு நாதரின் இசையைக் கேட்டால் நீங்கள் எப்படி உணர்வீர்களோ! என் சிறிதளவு திறமைக்கு என் குருநாதர் போட்ட பிச்சையே காரணம்!” என்று அடக்கத்துடன் கூறினார்.

அக்பர் எல்லையற்ற ஆர்வத்துடன், “உடனே உங்கள் குருநாதரை அரசவைக்கு அழைத்து வாருங்கள். அவரை நன்கு கௌரவிக்க வேண்டும்” என்றார்.

தான்ஸேனோ, “அரசே! என் குருநாதர் வனத்தில் குடில் ஒன்றைக் கட்டிக் கொண்டு இறைவன் புகழ் பாடி வாழ்ந்து வருபவர். அவர் பொன்னுக்கும் புகழுக்கும் ஆசைப் படுபவர் இல்லை” என்று பணிவுடன் கூறினார்.

அக்பருக்கு ஒரே ஆச்சரியம். பேரரசனான தன்னைப் பார்க்கக் கூட விரும்பாத ஒரு ‘மனிதர்’ இருக்க முடியுமா என்ன?! அவர் யோசித்தார். தான்ஸேனை நோக்கி, “சரி, அவர் இங்கு வராவிட்டால் என்ன? நான் அவர் இருக்குமிடம் வருகிறேன். அவருக்கே தெரியாமல் செல்வோம். குடிலின் அருகில் என்னை அழைத்துச் செல்லுங்கள்” என்றார்.

ஆரவாரமின்றி அக்பரின் சிறு படை குடிலை நோக்கிச் சென்றது. ஒரு பல்லக்கில் பொன் நாணயங்களும் பவளம், முத்து, வைரம் முதலிய நவமணிகள் தட்டு தட்டாக எடுத்துச் செல்லப்பட்டன. குடிலுக்கு அருகில் யாரையும் வரவிடாது தான்ஸேனும் அக்பரும் மட்டும் சென்றனர்.

ஆஹா, அற்புதமான கான மழை பொழிந்து கொண்டிருந்தது. அக்பர் பிரமித்து சிலை போல நின்றார். தான்ஸேனை விட பல மடங்கு உணர்ச்சி பாவங்களை எழுப்பிய அந்த இசையில் அவர் முற்றிலுமாகக் கரைந்து போனார்.

வீசி எறியப்பட்ட நவமணிகள்

நீண்ட இசை நின்றது. அக்பர் சுய உணர்வுக்குத் திரும்பினார். ஏவலாள்களை அழைத்து அனைத்துத் தட்டுக்களையும் கொண்டு வரச் சொன்னார். வைரங்களையும், முத்துக்களையும், பவழம், கோமேதகம், பொன் நாணயங்கள் அனைத்தையும் இரு கரங்களாலும் வாரி வாரி எடுத்து குடிலின் முன் புறம் வீசலானார்.

தான்ஸேன் திகைத்து நின்றார். என்ன இது? அக்பரை நோக்கி, “அரசே! என்ன, இப்படிச் செய்கிறீர்கள்?” என்றார்.

“தான்ஸேன்! இந்த நவ மணிகளையும் பொற்காசுகளையும் கொடுத்து இவரைக் கௌரவிக்க நான் இங்கே வந்தது உண்மை தான்! ஆனால் இறைவனைப் பாடி இவர் உதிர்த்த ஸ்வர வரிசைகளுக்கு முன்னர் என் மணிகள் எம்மாத்திரம்! இறைவனைப் பற்றிய இசை மணிகள் அல்லவோ மணிகள்!” அது தான் ஒன்றுக்கும் உதவாத இவற்றை அவர் குடில் முன்னேயே வீசி எறிந்து விட்டேன். வாருங்கள், உள்ளே சென்று அவரை வணங்கி வருவோம்!” என்றார் அக்பர்.

எல்லையற்ற மகிழ்ச்சியுடன் தான்ஸேன் அக்பரை தன் குருநாதரான ஹரிதாஸ் ஸ்வாமியிடம் அழைத்துச் சென்றார். ஹரிதாஸர் அக்பரை ஆசீர்வதித்து இறைவன் ஒருவனே என்பதையும் அவனைப் பல வழிகளிலும் அடையலாம் என்பதையும் உணர்த்தினார்.

பல மதங்களையும் ஒன்று இணைத்து தீன் இலாஹி காண அக்பரை உத்வேகமூட்டிய சம்பவங்களுள் இது முக்கியமான ஒன்று!

kumaraguruparar-1

ஔரங்கசீப்பும் குமரகுருபரரும்

அக்பரின் கால கட்டத்திற்குப் பின்னர் டில்லி பாதுஷாவாக அரசாண்ட ஔரங்கசீப்பைக் காண அருளாளரான குமர குருபரர் விரும்பினார். (சிலர் காசியை ஆண்ட பாதுஷாவையே குமரகுருபரர் கண்டதாகக் கூறுவதும் உண்டு) காசியில் ஓரிடத்தைக் கேட்டு அங்கு ஒரு மடம் அமைக்க வேண்டும் என்பது அவரது உன்னத நோக்கம். சைவம் பரப்பும் ஒரு மடத்தைக் காசியில் அதுவும் ஔரங்கசீப்பின் அனுமதி பெற்று அமைக்க முடியுமா! யாருக்கும் நம்பிக்கை இல்லை.

அரசனைப் பேட்டி காண அரசவைக்கு வந்த குமரகுருபரர் திடீரென அரசன் பேசும்  அவனது மொழியிலேயே பேசலானார்.

முதல் நாள் சரஸ்வதியை துதி செய்து சகலகலாவல்லி மாலையை அவர் இயற்றி  அநுக்ரஹம் பெற்று அரசனுடன் பேச அவன் அறிந்ததற்கும் மேலாக அந்த மொழியில் புலமை பெற்றிருந்தார். பாதுஷா திடுக்கிட்டார். குமரகுருபரருக்கு ஆசனம் கொடுக்காமல் அவரை எதிரிலே நிறுத்தி, “என்ன விஷயம்!” என்று கேட்டார்.

சிங்கமே சரியாசனம்

தனக்கு ஆசனம் தரப்படாததை எண்ணிய குமரகுருபரர், ஒரு சிங்கத்தை வரவழைத்து அதன் முதுகின் மீது அமர்ந்தார். அரசவையில் உள்ளோர் பயந்தனர்; திடுக்கிட்டனர்; பிரமித்தனர். பாதுஷா கேள்விகளைக் கேட்க குமரகுருபரர் பதில் சொல்ல, அனைவருக்கும் அவரது மெய்ஞானத்தைப் பற்றிய மெய் சிலிர்ப்பு ஏற்பட்டது. மறுத்துக் கூற முடியாத இறை மொழிகள்!

அரசனிடம் மகமதிய குருமார்கள் சென்று, “இவரது தெய்வம் உண்மை என்றால் பழுக்கக் காய்ச்சிய இரும்பைக் கையில் ஏந்தி பதில் தரச் சொல்லுங்கள்” என்றனர்.

குமரகுருபரர் புன்சிரிப்போடு அந்த சவாலை ஏற்றார். பழுக்கக் காய்ச்சிய இரும்புத் துண்டைக் கையில் ஏந்தி இன்னும் ஆணித்தரமாக உவமைகளுடன் தன் பதில்களைக் கூறினார். அடுத்து என்ன செய்வது?! தன் பதில்களைக் கூறிய குமரகுருபரர், பாதுஷாவை நோக்கி, “மன்னா! நான் இதைப் பிடித்தவாறே என் தெய்வத்தின் துணையோடு பதில்களைக் கூறி விட்டேன். இப்போது இவர்கள் முறை!” என்றார். பழுக்கக் காய்ச்சிய இரும்புக்கும் அவரின் கேள்விகளுக்கும் பயந்த அவர்கள் அனைவரும் வெளியே ஓடினர்.. பாதுஷா அவரை வணங்கித் தன் கடைசி சோதனையைச் செய்தான். அனைவரும் சமம் எனில் தன்னுடன் விருந்துண்ண முடியுமா என்பதே அவன் கேள்வி. ஒரு செவ்வலரி மலரைத் தட்டில் வைத்து அதை மூடி மன்னனிடம் குருபரர் அளித்தார். அதில் என்ன இருக்கிறது என்று பாதுஷா கேட்க பன்றியின் மாமிசம் என்று அவர் பதிலளித்தார். பாதுஷா வெறுப்புடன் விழித்துப் பார்க்க, “அனைத்துமே சமம் என்று பாருங்கள்” என்று கூறிய குமரகுருபரர் விருந்தில் வைக்கப்பட்ட புலால் வகை உணவுகளை சைவ உணவுகளாக மாற்றி அனைவரையும் திகைக்க வைத்தார்.

 

ஶ்ரீ காசி மடம் உருவானது

எல்லையற்ற விளையாட்டின் முடிவில் அவரின் மெய்யான நிலைகயைக் கண்ட பாதுஷா, “உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும், கூறுங்கள்” என்று பணிவுடன் வினவினான்.

“மடம் ஒன்றைக் காசியில் துவங்க நமக்கு உத்தேசம். அதற்கு இடத்தையும் இதர வசதிகளையும் செய்ய வேண்டும்” என்று அருளினார் குமரகுருபரர்.

ஶ்ரீ காசி மடம் உருவானது; பாதுகாப்புடன் அது அன்னியர் காலத்தில் நடந்ததோடு சைவ சமயத்தைப் பரப்ப ஆரம்பித்தது.

இன்றும் காசியில் அற்புதமாக நடந்து வரும் ஶ்ரீ காசி மடம் உருவான வரலாறு இது தான்!

மிக பிரம்மாண்டமான ஆலமரமான ஹிந்து மதத்தின் விழுதுகள் போல அவ்வப்பொழுது தோன்றிய மகான்கள் ஏராளம்; அவர்கள் அருளிய விளையாடல்களும் ஏராளம்.

சகலகலாவல்லி மாலை உள்ளிட்ட அருள் நூல்களைப் படித்து ஹிந்து மதத்தின் எல்லையற்ற பெருமையை உணர்வோம்; அதை ஏற்றம் பெறச் செய்து ஏற்றமுறுவோம்!
நன்றி ஞான ஆலயம்

(This article was written by my brother S Nagarajan for Jnana alayam magazine:London swaminathan.)

ஜூலை 2015 ஞான ஆலயம் இதழில் வெளியான கட்டுரை

இசை தரும் நோயற்ற வாழ்வு! -3

indian-figurines-banjara-musician-statues

ச.நாகராஜன்

பண்டைய தமிழ் இலக்கியங்களான புறநானூறு, பரிபாடல் சிலப்பதிகாரம் உள்ளிட்ட பல நூல்களில் இசையின் நுணுக்க ங்களையும் இசையின் வலிமையையும் அதனால் நிகழ்ந்த அபாரமான சம்பவங்களையும், ஏராளமாகக் காண முடியும்.புறநானூற்றின் “தீங்கனி இரவமொடு” என்று ஆரம்பிக்கும் பாடல் இசை  மருத்துவமாகப் பயன்படுத்தப்பட்டு புண்பட்ட வீரனுக்கு இதமளித்ததைக் கூறுகிறது.

 

பெருங்கதை என்னும் காப்பியம் உதயணன் என்ற அரசன் யாழ் வாசிப்பதில் விற்பன்னன் என்பதைக் கூறி இசை பற்றிய பல செய்திகளைத் தெரிவிக்கிறது.உஜ்ஜயினி நகரத்தில் பட்டத்து யானை மதம் பிடித்து ஓட, தன் யாழை வாசித்து யானையின் மதத்தை அடக்கினான் உதயணன்.

Jaisalmer-instruments

அக்பர் சபையில் இருந்த பிரபல இசை விற்பன்னர் தான்ஸேன் தீபக் ராகம் பாடுவதில் வல்லவர். அவர் அதைப் பாடினால் இருக்கும் இடமெல்லாம் ஒளிரும். இதை நேரில் பார்க்க விரும்பிய அக்பர் தான்ஸேனை அதன் வலிமையைக் காண்பிக்குமாறு  வற்புறுத்தினார். எவ்வளவோ மறுத்தும் அக்பர் மசியவில்லை. இறுதியில் ஒரு பெரிய ஏரிக்கரையின் முன் மேடையை அமைக்கச் சொன்னார் தான்ஸேன். விவரம் என்னவென்று தெரியாத அக்பரும் அப்படியே மேடையை அமைக்க ஆணையிட்டார். தீபக் ராகத்தை பல்லாயிரக்கணக்கானோர் குழுமி இருக்க அக்பர் முன்னால் உளமுருகப் பாடலானார் தான்ஸேன். என்ன ஆச்சரியம், திடீரென்று ராகத்தின் உச்ச கட்டத்தின் போது அவர் உடல் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. உடனே முன்னால்  இருந்த ஏரியில் குதித்துத் தன்னைக் காப்பாற்றிக் கொண்டார்  தான்ஸேன்.  மிகவும் வியப்படைந்த அக்பர் வருத்தமும் அடைந்தார். நிகழ்ந்த செயலுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டதோடு தான்ஸேனை தன் உச்சி மேல் வைத்துப் புகழ்ந்து மிகுந்த  மரியாதை செலுத்தி வரலானார். இந்த சம்பவத்தை விரிவாக அக்பர் கால நூல்கள் எடுத்துரைக்கின்றன. இந்தச் சம்பவம் சைக்கிக் என்சைக்ளோபீடியாவிலும் இடம் பெற்றுள்ளது. ஆகவே இது உண்மையே என்பதை வரலாற்று ஆவணங்கள் சுட்டிக் காட்டுகின்றன!

 

தான்ஸேனின் ஒவ்வொரு நரம்பும் நாடியும் இசை மயம். அவர் இறந்தவுடன் நடந்த நிகழ்ச்சி இதை நிரூபிக்கிறது. கர்நாடக இசையில் உள்ள தோடியைப் போல இந்துஸ்தானி இசையிலும் ஒரு ராகம் உண்டு. அதை இசைப்பதில் தான்ஸேனின் புதல்வர்களுள் ஒருவரான பிலாஸ்கான் வல்லவர். தான்ஸேன் இறந்தவுடன் துக்கம் தாளாமல் அவரைச் சுற்றி இருந்தோர் வருந்தி அழ பிலாஸ்கான் புதுவிதமான தோடி ராகம் ஒன்றைப் பாடலானார். இசைக்காகவே வாழ்ந்து இசையே ஓர் உருவமாக வடிவெடுத்திருந்த தான்ஸேன் சடலமாக இருந்த போதும் அந்த ராகம் இசைக்கப்பட்டவுடன் அவரது தலை மட்டும் அந்த இசையைப் பாராட்டும் வண்ணம் ஆடியது. இதைப் பார்த்தோர் அனைவரும் வியந்தனர்; பிரமித்தனர். ஆகவே அந்த ராகத்திற்கு பிலாஸ்கான் தோடி என்று பெயரிடப்பட்டது. இன்றும் பிலாஸ்கானியா தோடி.யைக் கேட்போர் இந்தச் சம்பவத்தை நினைவு கூர்வர்.

சாம வேதமே இசையின் அடிப்படை என்று வேத விற்பன்னர்கள் கூறுவர். ஸ,ரிக,ம,ப, த,நி ஆகிய ஏழு ஸ்வரங்களும் ஆகாயத்திலிருந்து ஒலிக்கக் கேட்டு பூமியில் இசையின் ஆதாரமாக வடிவெடுத்தது என்று  மஹாபாரதம் கூறும்.ஒவ்வொரு ராகத்திற்கும் ஒரு தேவதை இருப்பதாக நமது பண்டைய இசை நூல்கள் கூறுகின்றன.

 

இசை ஒலியைக் கூர்ந்து நுட்பமாகக் கேட்டு அனுபவித்தவர்கள் தமிழர்கள். சட்ஜம் மயில் அகவுதலையும் ரிஷபம் மாடு கத்துதலையும் காந்தாரம் ஆடு கத்துவதையும் மத்யமம் அன்றில் பறவை கூவுதலையும் பஞ்சமம் குயில் கூவுதலையும் தைவதம் குதிரை கனைப்பதையும் நிஷாதம் யானை பிளிறுவதையும் ஒத்து இருக்கிறது என்று தமிழர்கள் இனம் கண்டனர்.

திருஞானசம்பந்தரின் தேவாரமோ ஏராளமான அபூர்வமான பண்களைக் கொண்டதாக உள்ளது. யாழையும் முரிக்க வல்ல யாழ்மூரிப் பண்ணையும் அவர் இசைத்ததை அவர் வரலாற்றில் விளக்கமாகப் படித்து மகிழலாம். தேவாரச் சுவடிகளில் உள்ள தேவாரம் பண் முறை வைப்புடன் இருப்பதால் தேவாரம் இன்றும் பாரம்பரிய வழியிலேயே இசைக்கப் படுகிறது.

 

பாரதமெங்கும் உள்ள பல்வேறு கோவில்களில் உள்ள இசைத் தூண்கள் ஹிந்து நாகரிகத்திற்கே உள்ள தனித்தன்மையுடைய இசைச் சின்னங்களாகத் திகழ்கின்றன!.மதுரை மீனாட்சி அம்மன் கோவில்,(வடக்கு கோபுர வாயில் வழியே நுழைந்தவுடன் இடப்புறம் திரும்பியவுடன் கம்பி போட்டுக் கட்டப்பட்டுள்ள இவற்றை இன்றும் காணலாம்)தாடிக் கொம்பு, ஆழ்வார்திருநகரி உள்ளிட்ட பல இடங்களில் இந்த இசைத் தூண்கள் உள்ளன. கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவிலில் உள்ள கல் நாதஸ்வரம் இசைக்கப்பட்டவுடன் அற்புத ஒலியை எழுப்பும். இந்த அதிசய நாதஸ்வரம் இசையையும் சிற்பத்தையும் இணைத்து வடிவமைக்கப்பட்டிருக்கும் மாபெரும் “இசை-சிற்ப” அதிசயமாகும்.

music spain

தாளவகைகள் எண்ணில் அடங்காதவை. இருந்தாலும் உச்சபட்சமாக 175 தாளங்களை நம் முன்னோர் இனம் கண்டனர். ஆனால் திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரோ இந்த 175 தாளங்களையும் கையாண்டதோடு அதையும் மீறிப் பல புதிய தாளங்களைத் திருப்புகழில் அமைத்துள்ளது இசையின் ஆழமும் அகலமும் எல்லையற்றது என்பதை விளக்கும் ஒரு செய்தியாக அமைகிறது.

 

சோழ மன்னனின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு மாபெரும் அதிசய சம்பவத்தை நாதமுனிகள் வாழ்க்கை வரலாறு விளக்குகிறது.அதைப் பார்ப்போம்.

This is the third part on Music written by Santanam Nagarajan of Bangalore.;already published in Bagya magazine.                                  தொடரும்

********************

contact swami_48@yahoo.com