த……….த……….த……….:- தேசிய கீதம் ஆக்கலாமே!

golden-temple-lightning
Thunder and lightning over Amritsar

த………………….த…………………..த…………………….:-தேசிய கீதம் ஆக்கலாமே!

எழுதியவர் லண்டன் சுவாமிநாதன்

கட்டுரை எண் 850 தேதி 19 பிப்ரவரி 2014

Translation of my Post posted in English on 19th February 2014 in this blog.

த…..த…..த….. என்ற மூன்று எழுத்துக்களை (சொற்களை) பிரபலமாக்கியோர் மூவர். ஒருவர் நமது காலத்தில் வாழ்ந்து, நமக்கு எல்லாம் அருள் புரிந்து சிவமயமாகிவிட்டவர்-காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994). மற்றொருவர் ஆங்கில இலக்கிய பாடம் படிக்கும் எல்லோருக்கும் தெரிந்த அமெரிக்க ஆங்கில மொழிக் கவிஞர்– நாடக ஆசிரியர் டி.எஸ்.எலியட் (1888—1965). மூன்றாவது மனிதர் , 3000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் வாழ்ந்த ஒரு ரிஷி. பிருஹத் ஆரண்யக (பிருஹத்= பெரிய, ஆரண்யக= காடு) உபநிஷத்தில் த….த…த…..கதையை முதலில் நமக்குச் சொன்னவர். அதாவது வேத கால ரிஷிகள்.

முதலில் நமது காலத்தில் வாழ்ந்து மறைந்த காஞ்சிப் பெரியவர் எழுதிய சம்ஸ்கிருதப்பாடலும் அதன் மொழி பெயர்ப்பும். இதை 1966 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையில் பாடுவதற்காக அவர் எம்.எஸ்.சுப்புலெட்சுமிக்கு எழுதிக் கொடுத்தார்:

மைத்ரீம் பஜத, அகில ஹ்ருஜ்-ஜேத்ரீம்!
ஆத்மவதேவ பராநபி பச்யத!
யுத்தம் த்யஜத! ஸ்பர்தாம் த்யஜத!
த்யஜத பரேஷ்வக்ரமம்-ஆக்ரமணம்!
ஜநநீ ப்ருதிவீ காமதுகாஸ்தே,
ஜநகோ தேவ: ஸகல தயாளு:!
தாம்யத! தத்த! தயத்வம் ஜநதா:!

ச்ரேயோ பூயாத் ஸகல ஜநாநாம்!
ச்ரேயோ பூயாத் ஸகல ஜநாநாம்!
ச்ரேயோ பூயாத் ஸகல ஜநாநாம்!

Lightning,New-York-
Thunder and lightning over New York

இந்த கீதத்தின் தமிழாக்கம்:

அனைத்துளம் வெல்லும் அன்பு பயில்க!
அன்னியர் தமையும் தன்னிகர் காண்க!
போரினை விடுக! போட்டியை விடுக!
பிறனதைப் பறிக்கும் பிழை புரிந்தற்க!
அருள்வாள் புவித்தாய், காமதேநுவாய்!
அப்பன் ஈசனோ அகிலதயாபரன்!
அடக்கம் – கொடை – அருள் பயிலுக, மக்காள்!

உலகினரெல்லாம் உயர்நலம் உறுக!
உலகினரெல்லாம் உயர்நலம் உறுக!
உலகினரெல்லாம் உயர்நலம் உறுக! – என்பதுதான்.

கதை என்ன?

இப்பாடலில் வரும் தாம்யத – தத்த – தயத்வம் என்ற சொற்றொடர் ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் வருவதாகும். அது குறித்த கதை: ஒரு சமயம் தேவர்கள், மானுடர்கள், அசுரர்கள் ஆகிய மூன்று இனத்தாரும் ப்ரஜாபதி (ப்ரஹ்மா) யிடம் உபதேசம் வேண்டினர். அவர் தமது உபதேசத்தை த-த-த என்ற இடியின் ஒலியாகக் கூறி அருளினார். ‘த ‘ என்பதை தேவர்கள், ‘தாம்யத’ எனப் பொருள் கொண்டனர். அப்பதத்துக்குப் ‘புலன்களைக் கட்டுப்படுத்துங்கள்’ என்று அர்த்தம். தேவர்கள் புலனின்பம் துய்ப்பதிலேயே ஈடுபட்டவர்கள். ஆதலால் தங்களுக்கு இந்த உபதேசம் எனக் கொண்டனர்.
மானுடரோ ‘த’ என்பதை ‘தத்த’ எனப் பொருள் கொண்டனர். ‘தத்த’ என்பதற்கு ஈகை உடையவர் ஆக இருங்கள் என அர்த்தம். மானுடர்களுக்கு ஈகை குணம் மிகவும் குறைவாக இருப்பதாலேயே இப்படி உபதேசம். அசுரர்கள் ‘த’ என்பதை ‘தயத்வம்’ – அதாவது, தயையுடன் இருங்கள் – எனப்பொருள் கொண்டனர்.

ஆதிசங்கரர் இதற்கு உரை எழுதுகையில், மானுடரிலேயே தெய்விக குணமும், அசுர குணமும் உடையவர்கள் இருப்பதால் இம்மூன்று உபதேசங்களுமே மானுடர்களுக்கானவை எனத் தெளிவு செய்துள்ளார். –நன்றி கல்கி

இந்தப் பாடல் வெளியானபோது ஒலிப் பதிவோடு, எம்.எஸ். அவர்கள் காஞ்சி சுவாமிகளைச் சந்தித்து ஆசிபெறச் சென்றார். உனது கியாதி (புகழ்) சூரிய சந்திரர் உள்ள வரை இருக்கும் என்று எம்.எஸ்.ஸை ஆசிர்வதித்தார். அர்த்தம் புரிகிறதா? சம்ஸ்கிருதமும் காஞ்சி சுவாமிகளின் பெருமையும் எக்காலத்தும் அழியாது.

சூரிய சந்திரர் உள்ள வரை இருக்கும்!

அமெரிக்க கவிஞர் டி.எஸ்.எலியட்டுக்கு இந்துமதத்தில் பேரார்வம் உண்டு. அவர் கீழை—மேலை நாட்டு கருத்தொற்றுமை காணும் முகத்தான் அவரது நீண்ட தத்துவக் கவிதையான தி வேஸ்ட்லாண்டின் இறுதிப் பகுதியில் இந்த தாம்யத, தத்த, தயத்வ என்ற சம்ஸ்கிருதச் சொற்களை அப்படியே சேர்த்து சாந்தி, சாந்தி, சாந்தி, என்று சொல்லி கவிதையை முடிக்கிறார்.
எனது ஆங்கிலக் கட்டுரையில் முழு விவரம் காண்க.

ஒரு சிறிய ஆராய்ச்சி

1. பெரிய காட்டு உபநிஷத்தில் உள்ள இந்தக் கதை மனிதனின் உளவியலை நன்கு ஆராயும் ஒரு கதை. காரல் மார்க்சும் எங்கல்சும் கம்யூனிஸ தத்துவத்தைப் பரப்புவதற்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னரே மனிதன் பகுத்துண்டு வாழ வேண்டும் என்று கூறும் கதை இது. ஒவ்வொரு மனிதன் இடத்திலும் உள்ள தீய குணங்களை அகற்ற மூன்று த—க்களும் அவசியம்தான்.

2. இந்தக் கதையை விளக்கும் காஞ்சி சுவாமிகளின் கவிதை அற்புதமான ஒரு கவிதை. அதை இந்தியாவின் தேசிய கீதமாகவோ அல்லது ஐ.நா.சபை மூலம் உலக கீதமாக அறிவிக்க வேண்டும்.

3. இந்தக் கதை ஆரிய திராவிட வாதத்துக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னரே ஆப்பு வைத்து விட்டது. மனிதர்கள், அசுரர்கள், தேவர்கள் ஆகிய மூன்று பிரிவினரையும் பிரஜாபதி (பிரம்மாவின் ) குழந்தைகளாகவும் மாணவர்களாகவும் வருணிக்கிறது பிருஹத் ஆரண்யக உபநிஷத். அது மட்டுமல்ல. மூவரும் ஒரே ஸ்கூலில்தான் படித்து இருக்கிறார்கள்! ஆக வெள்ளைக்காரன் எழுதியதெல்லாம் பொய் என்பது தெளிவாகிறது. அசுரர்களும், தேவர்களும், மனிதர்களும் ஒரு தாய் வயிற்றுப் புதல்வர்கள். ஆனால் செய்தொழிலால் வேறுபட்டு நின்றனர். நம் மனதுக்குள்ளேயே இந்த மூன்று குணங்களும் மறைதிருப்பதை விளக்கி நமக்கு தன்னடக்கம்/ புலனடக்கம், தானம் செய்யும் மனப்பாங்கு, கருணை மூன்றும் வேண்டும் என்கிறது.

4. இதில் இன்னும் ஒரு முக்கிய விஷயம்– தமிழ், கிரேக்கம் ,லத்தீன் மொழிக்காரர்களுக்கு எழுதவும், இலக்கியம் படைக்கத் தெரியாமலும் காலத்தில் எழுந்தவை உபநிஷதங்கள். புத்தர், மஹாவீரர், கன்பூசியஸ், லாவோட்சு, சொராஸ்தர், ஏசு கிறிஸ்து, ஒரு வேளை மோசசும், பிறப்பதற்கு முன்னால் எழுந்தவை உபநிடதங்கள். இவ்வளவு உயரிய சிந்தனை மலர வேண்டுமானால் அவர்கள் உலக மகா அறிவாளிகளாக இருந்திருக்க வேண்டும். ஹோமர் என்னும் கவி கிரேக்க நாட்டில் முதல் நூலான இலியட்டையும் ஆடிசியையும் எழுதும் முன்னர் வேதகாலரிஷிகள் எழுதிக் குவித்துவிட்டனர்.

5. அளவிடற்கரிய அற்புதமான இலக்கியங்களை வைத்தே ஒரு நாட்டின் அறிவு முதிர்ச்சியையும் அனுபவ முதிர்ச்சியையும் அளந்துவிடலாம். அந்த வகையில் பார்க்கப்போனால் உலகில்—பழங்கால உலகில்— ஒரே நாகரீக நாடு இந்தியாதான். கல் கட்டிடங்கள் எகிப்தில் உருவாகி இருக்கலாம்—ஆனால் கல்வி என்னும் கட்டிடங்கள் இமயமலை அடிவார குருகுலங்களில்தான் முதலில் உருவாகின. அதற்கு தெள்ளிய எடுத்துக் காட்டு பெருங்க்காட்டு (பிருஹத் ஆரண்யக) உபநிஷதம்!!!

பன்னரும் உபநிடத நூல் எங்கள் நூலே
பார் மீது ஏதொரு நூல் இது போலே— என்று சும்மாவப் பாடிவைத்தான பாரதி!

contact swami_48@yahoo.com