தாயுமானவர்! – 3 (Post No.10,503)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,503
Date uploaded in London – – 30 DECEMBER 2021

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

தாயுமானவர்! – 3
ச.நாகராஜன்

அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது எனும் பெரிய ஆப்தர் மொழி ஒன்று பற்றி அவர் சுட்டிக் காட்டுகிறார்.
அவரது கண்ணிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.
அன்பர் பணி செய்ய வெனை யாளாக்கி விட்டு விட்டால்
இன்ப நிலை தானே வந்தெய்தும் பராபரமே என்று பராபரக் கண்ணியில் தொண்டு பற்றிக் குறிப்பிடுகிறார்.
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல்
வேறொன்றறியேன் பராபரமே.

இதுவே அவரது கொள்கை.
காகமுறவு கலந்துண்ணக் கண்டீர் அகண்டாகார சிவ
போகமெனும் பேரின்ப வெள்ளம் பொங்கித் ததும்பிப் பூரணமா
யேக உருவாக் கிடக்குதையோ வின்புற்றிட நாம் இனி எடுத்த
தேகம் விழுமுன் புசிப்பதற்குச் சேர வாரும் ஜெகத்தீரே
என்று ஜெகத்தினரை பேரின்ப வெள்ளத்தை அனுபவிக்க அழைப்பு விடுக்கிறார்.

சைவ சமயமே சமயம் என்பதில் திடமாக இருக்கும் அவர் அதை அப்படியே கூறி விடுகிறார்:
சைவ சமயமே சமயம் சமயாதீதப் பழம் பொருளைக்
கைவந்திடவே மன்றுள் வெளிக்காட்டு மிந்தக் கருத்தை விட்டுப்
பொய் வந்துழலும் சமய நெறி புகுத வேண்டா முத்தி தரும்
தெய்வ சபையைக் காண்பதற்கு சேர வாரும் ஜெகத்தீரே
இதுவே அவரது அறைகூவல்!

அத்வைத மார்க்கத்தைப் போற்றும் அவர் அதுவே Inference, experience, Logic ஆகிய மூன்றுக்கும் ஒத்தது என்று உறுதி கூறுகிறார் இப்படி:

“வேதமுடன் ஆகம முராண இதிகாசமும்
வேறும் உள கலைகள் எல்லாம்
மிக்காக அத்வைத த்வைத மார்க்கத்தையே
விரிவாய் எடுத்துரைக்கும்
ஓதரிய த்வைதமே அத்வைத ஞானத்தை
உண்டு பணும் ஞானம் ஆகும்;
ஊகம், அனுபவம், வசனம் மூன்றுக்கும் ஒவ்வும் ஈது”

இது அவர் வாக்கு!
மனத்தைப் பற்றிப் பல இடங்களில் அவர் அழகுறக் குறிப்பிடுகிறார்:

கந்துக மதக் கரியை வசமா நடத்தலாம்;
கரடி வெம்புலி வாயையும் கட்டலாம்;
ஒரு சிங்கம் முதுகின் மேல் கொள்ளலாம்;
கண் செவி எடுத்து ஆட்டலாம்;
வெந்தழலின் இரதம் வைத்து ஐந்து லோகத்தையும் வேதித்து விற்று உண்ணலாம்;
வேறு ஒருவர் காணாமல் உலகத்து உலாவலாம்;
விண்ணவரை ஏவல் கொள்ளலாம்;
சந்ததமும் இளமையோடு இருக்கலாம்;
மற்று ஒரு சரீரத்தினுள் புகுதலாம்;
ஜலம் மேல் நடக்கலாம்;
கனல் மேல் இருக்கலாம்;
தன் நிகர் இல் சித்தி பெறலாம்;
என்று பட்டியலிடும் அவர்
“சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது;

சத்து ஆகி என் சித்தமிசை குடி கொண்ட அறிவு ஆன தெய்வமே!
தேஜோமயானந்தமே என்று கூறுகிறார்.

மனதை அடக்குவது என்பது கடினமான ஒரு விஷயம் என்பதால் அவன் இறைவன் அருளை இப்படி வேண்டுகிறார்:

ஆழாழி கரை இன்றி நிற்கவிலையோ கொடிய ஆலமும் அமுதாக விலையோ,
அக்கடலின் மீது வட அனல் நிற்கவில்லையோ
அந்தரத்து அகில கோடி
தாழாமல் நிலை நிற்கவில்லையோ மேருவுந்
தனுவாக வளைய விலையோ
சப்த மேகங்களும் வ்ஜ்ரதரன் ஆணையிற்
சஞ்சரித்திடவில்லையோ
வாழாது வாழவே இராமன் அடியால் சிலையும்
மடமங்கை யாக விலையோ
மணி மந்த்ர மாதியால் வேண்டு சித்திகளுலக
மார்க்கத்தில் வைக்க விலையோ
என்று இப்படிக் கேட்கும் அவர் பாடலின் இறுதியில்
பாழான என் மனம் குவிய ஒரு தந்திரம்
பண்ணுவது உனக்கு அருமையோ

என்று,


பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கமற நிறை நின்ற பரிபூரண ஆனந்தத்திடம் கேட்கிறார்!

‘நேற்றுளார் இன்று மாளா நின்றனர்’ என்ற உண்மையை அவர் சுட்டிக் காட்டுவதோடு, ‘எத்தனை பிறப்போ, எத்தனை இறப்போ எளியனேற்கு இதுவரை அமைத்தது’ என்று கூறி ஜென்மம் இனி வேண்டாம் என்று கூறி அதற்கு அருள் பாலிக்க வேண்டுகிறார்.
சமய ஆசாரியர்களை அவர் போற்றத் தவறுவதே இல்லை.
‘ஐயா, அருணகிரி, அப்பா, உனைப் போல மெய்யாக ஒரு சொல் விளம்பினவர் யார்?” என்று அருணகிரிநாதரைப் போற்றுகிறார்.

தன் குருவான மௌனகுரு ஸ்வாமிகளை அவர் ஆங்காங்கே குறிப்பிடத் தவறுவதே இல்லை.

‘ஜாதி, குலம், புறப்பு, இறப்பு, பந்தம், முக்தி, அரு உருவத்தனமை, நாமம், ஏதும் இன்றி எப்பொருட்கும் எவ்விடத்தும் பிரிவு அற நின்று இயக்கம் செய்யும் ஜோதியை’ இனம் காட்டும் அவர்,
அதை ‘சிந்தை செய்வாய்’ என்று அறிவுரை புகட்டுகிறார்.
உலகத்தின் இயற்கையையும் ஆங்காங்கே அவர் சுட்டிக் காட்டத் தவறுவதில்லை.

“வாயார உண்ட பேர் வாழ்த்துவதும், நொந்த பேர் வைவதுவும் எங்கள் உலக வாய்பாடு” என்று உலக இயல்பை அவர் கூறுகிறார்.
எளிய தமிழில் இனிய கருத்துக்களைப் பாடுவதில் தாயுமானவர் ஒரு புதுவழியைக் காட்டியவர் என்றே கூறலாம்.
இவரை அடுத்துப் பின்னால் வந்த திரு அருட்பிரகாச வள்ளலார், மஹாகவி பாரதியார் ஆகியோர் இந்த நடையைப் போற்றித் தாமும் எளிய நடையை மேற்கொண்டதைப் பார்க்கலாம்.
ஏன், எளிய தமிழில் அரிய கருத்தை அவர் கூறுவது திரைப்படப் பாடல்களில் கூட எதிரொலிப்பதைப் பார்க்க முடிகிறது.
ஒரு எடுத்துக் காட்டு இது:

“எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி ஏழை நெஞ்சம்
புண்ணாகச் செய்தது இனிப் போதும் பராபரமே” இந்தக் கண்ணியைப் படிப்போருக்கு பின்னால் வந்த
“எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி ஏங்குறே” என்ற பாடல் நினைவுக்கு வருகிறதில்லையா?

அவரது அற்புதமான பாடல்களை விரித்துக் கூறுவதற்கோர் எல்லையே இல்லை.
அவரது பாடல்களை அனுதினமும் படிப்போம்; உணர்வோம்; உயர்வோமாக!
நன்றி வணக்கம்!


** முற்றும்

tags- தாயுமானவர் – 3