தமிழர் கண்ட விஞ்ஞானம்- மரபியல் GENETICS அறிவு (Post No.4315)

Written by London Swaminathan

 

Date:19 October 2017

 

Time uploaded in London- 11-06 am

 

 

Post No. 4315

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

‘தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை’ – என்ற பழமொழி பற்றியும் அதற்கிணையான சம்ஸ்கிருத பழமொழியையும் ஏற்கனவே கொடுத்தேன் (அடிக்குறிப்பை காண்க)

 

தமிழர்களுக்கு மரபியல்  (GENETICS ஜெனெடிக்ஸ்) மீது ரொம்ப நம்பிக்கை என்றே தோன்றுகிறது. ஏனெனில் நாலடியாரும் பழமொழியும் கூட இதே கருத்தை உறுதி ப்படுத்துகின்றன.

‘மகனறிவு தந்தை அறிவு’ Nature Vs Nurture

ஒருவனுடைய அறிவுக்குக் காரணம் அவனுடைய தாய் தந்தையர் மூலம் வரும் மரபணுவா  (GENE) அல்லது அவன் வளர்க்கப்படும் சூழ்நிலையா என்று மேல் நாட்டு அறிவியல் இதழ்களில் (Science Journals) அடிக்கடி கட்டுரைகள் ( Nature Vs Nurture or Heredity or Environment) வரும். இரண்டுக்கும் ஆதரவான, எதிரான வாதங்கள் முன்வைக்கப்படுவதால் முடிவு எதுவும் சொல்ல முடியாது. ஆயினும் தமிழர்களுக்கு மரபணு  GENE) விஷயத்தில்தான் அதிகம் நம்பிக்கை என்று தோன்றுகிறது.

 

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களான பழமொழியிலும் நாலடியாரிலும் இக்கருத்து வருவதால் அந்தக் காலத்தில் இப்பழமொழி  மிகப் பிரசித்தம் என்பது புலனாகும்.

 

செந்நெல்லா லாய செழுமு ளை மற்றுமச்

செந்நெல்லே யாகி விளைதலால் – அந்நெல்

வயனிறையக் காய்க்கும் வளவயலூர!

மகனறிவு தந்தை அறிவு — நாலடியார்

 

பொருள்:-

அதிகமான செந்நெற் பயிர் வயல்கள் உடைய வயலூரா!

 

செந்நெற்களால் உண்டாகிய செழிப்பான முளைகள், பின்னர் அந்த செந்நெற் பயிர்களாகவே வளர்வது போல, ஒரு தந்தையினுடைய அறிவு போலவே மகனுடைதைய அறிவு அமையும்.

 

நெல்லின் முளையினால் அந்த நெல்லே விளைவது போல, தந்தையின் குணமே மைந்தனுக்கும் அமையும் என்பது கருத்து. இதே கருத்தை பழமொழி என்னும் நூலிலும் காண்போம். இது 1200 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கருத்து.

 

இதே போல மகனைப் பார்த்தால், அவர்களுடைய தாய் தந்தையர் எப்பேற்பட்டவர் என்பதும் தெரியும். சில குழந்தைகள் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இடையே நடக்கும்  சண்டை போது பயன்படுத்தும் கெட்ட வார்த்தைகளை நாலு பேர் முன்னால் சொல்லிவிடும்; மற்றவர்கள் இதைக் கண்டும் காணாதது போல முகத்தைத் திருப்பிக் கொள்வர். ஆனால் அவர்களுக்குத் தெரியும் இச்சொற்கள் அந்த வீட்டில் நடந்த காரசார வாக்குவாதத்தின் போது உதிர்ந்த முத்துக்கள் என்பது; ஒரு குழந்தை வளரக்கூடிய தெரு, பேட்டை ஆகியனவும் இதன் மூலம் தெரியும்

“மகனுரைக்கும் தந்தை நலத்தை” என்ற தொடராலும்,  “தாயைத் தண்ணீர் தடத்தில் பார்த்தால் பிள்ளையைப் பார்க்க வேண்டியதில்லை” என்ற பழமொழியாலும் இதை அறியலாம். “தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை” என்பது எல்லோரும் அறிந்த பழமொழி.

(பிள்ளை என்பது மகன், மகள் இருவரையும் குறிக்கும் சொல்)

 

நோக்கி யறிகல்லாத் தம்முறுப்புக் கண்ணாடி

நோக்கி யறிப; அதுவே போல் — நோக்கி

முகமறிவார் முன்ன மறிய வதுவே

மகனறிவு தந்தை யறிவு — பழமொழி

 

பொருள்:-

தன்னுடைய கண்களால் பார்த்து அறிய முடியாத முகத்தை, கண்ணாடியில் பார்த்து அறிவர்; அதுபோல ஒருவர் முகத்தைப் பார்த்தே அவர்கள் கருத்தை அறியலாம். மகனுடைய அறிவு தந்தையின் அறிவைப் போன்றது போல.

 

அதாவது மகனைக் கொண்டு தந்தையின் அறிவையோ, அல்லது தந்தையைக்  மகன்   கொண்டு  மகன்  அறிவையோ அறிந்து விடலாம் என்பது தமிழர் கண்ட உண்மை. புலிக்குப் பிறந்தது பூனை ஆகுமா? என்பதும் இதன் அடிப்படையிற் பிறந்ததே.

 

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்

கடுத்தது காட்டும் முகம் (குறள் 706)

 

தாயைப் போல | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/தாயைப்-போல/

 

வெள்ளை காகம் விலை இரண்டரை ரூபாய்!! white crow (2). கண்ணு! கண்ணு !! ஏ, கண்ணு!!! kannu kannu (2). தாயைப் போல பிள்ளைநூலைப் போல சேலை! poy thay …

 

–சுபம்–