தாவரங்களின் அறிவு!

ச.நாகராஜன்

 

பேராசிரியர் ஸ்டீபனோ மங்குசா இன்று உலகிலுள்ள தாவரங்களுக்கான ஒரே சோதனைச்சாலையை நடத்தி வருபவர்!

 

தாவரங்களுக்கான ‘ப்ளாண்ட் நியூரோ பயாலஜி’ எனப்படும் தாவர மூளை அறிவியல் துறையில் உள்ள இந்தப் பன்னாட்டுச் சோதனைச்சாலை இத்தாலியில் ப்ளோரென்ஸ் நகருக்கு அருகில் ஏழு மைல் தொலைவில் உள்ளது. மங்குசாவும் அவரது ஒன்பது சகாக்களும் தாவரங்களைப் பற்றிய பல மர்மங்களை விடுவிக்கும் ஆராய்ச்சியில் இப்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். உடலியல், தாவர மூளை உயிரியல்,சுற்றுப்புறச்சூழல் இயல் ஆகிய மூன்று துறைகளையும் கலந்து செய்யும் அபூர்வமான ஆய்வு இவர்களுடையது.

 

“பிரச்சினைகளைத் தீர்ப்பது தான் அறிவு” என்று அறிவிற்கான இலக்கணம் வரையறுக்கப்படுமானால்  தாவரங்கள் நமக்குக் கற்பிக்க ஏராளமானவற்றைத் தங்கள் வசம் கொண்டுள்ளன என்கிறார் மங்குசா!

 

“மூளை என்ற ஒரு அங்கம் இல்லாமலேயே அவை ஸ்மார்ட்டாக அற்புதமாக உணர்கின்றன! எப்படி வளர்வது, எப்படி சூழ்நிலைக்கேற்ப மாறிக்கொள்வது,எப்படி முன்னேறுவது என்பதையெல்லாம் இவைகள் காண்பிப்பது அலாதி ஆச்சரியத்தை நமக்குத் தருகின்றன” என்று மேலும் அவர் கூறுகிறார்!

 

அறிவு என்பது மூளையினால் மட்டுமே அளக்கப்படும் ஒன்று இல்லை என்பது அவரது திடமான நம்பிக்கை.

 

வெறும் கறிகாய் வகைத் தாவரம் தானே என்று செடிகொடிகளை அனைவருமே அலட்சியம் செய்கின்றனர்.அவற்றிற்கு உரிய மரியாதையைத் தருவதில்லை.ஆனால் நவீன தகவல் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தில் ரொபாட்டுகளுக்கு இன்று எந்த அளவு முக்கியத்துவம் உண்டோ அந்த அளவு முக்கியத்துவம் வயல்வெளிகளில் அதேபோல தாவரங்கள் அதிசய செயல்களைப் புரிவதால் உண்டு என்பது மங்குசா தரும் புதிய விவரம்.

 

உதாரணமாக இன்று இவர்களது சோதனைச்சாலையில் நடைபெறும் ஆய்வுகளை எடுத்துக் கொள்வோம்.தாவர ஆராய்ச்சியின் விளைவாக இப்போது கண்டுபிடிக்கப்பட்ட ‘ப்ளாண்டாய்ட்’ தான்  செடியின் தண்டானது தகவலை அனுப்புவது போல இயந்திர வகையில் ஒன்றான பாட்ஸ் என்பவை  செவ்வாய் கிரகத்தின் தரையில் போடப்பட்டு அங்கிருந்து பூமிக்கு தகவலை அனுப்ப முடிவதற்கான ஏற்பாட்டைச் செய்ய வழிவகை செய்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.

 

பல் டாக்டர்களின் வாசல் அறைகளை அலங்கரிக்கும் வெறும் அலங்காரப் பொருளாக செடிவகைகள் இருந்த காலம் மலையேறிப் போனது என்று கிண்டலடிக்கிறார் மங்குசா.

 

சார்லஸ் டார்வினின் தாவரங்களின் இயங்கு சக்தி என்ற போட்டோட்ராபிஸம் பற்றிய பேப்பர் 1880ல் வெளியிடப்பட்டது.ஆனால் தாவரங்களின் இந்த அறிவு பற்றிய விஷயத்தில் ஆர்வமும் விழிப்புணர்வும் மெதுவாகத்தான் உலகில் பரவலாயிற்று.

 

மனிதர்களுக்கு உள்ளது போன்ற உணர்வுகள் தாவரங்களுக்கு உள்ளதா என்பது பற்றி மங்குசா தெளிவாக விளக்குகிறார்.

 

‘தி சீக்ரட் லைப் ஆ·ப் ப்ளாண்ட்ஸ்’ என்ற திரைப்படம்  ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளில் வெளியிடப்பட்ட போது உலகமே வியந்தது.தாவரங்களுக்கு உணர்ச்சிகளும் உணர்வுகளும்  உள்ளன என்பதை இந்தப் படம் சுட்டிக் காட்டிய போதிலும் அறிவியல் விஞ்ஞானிகள் ‘அறிவுள்ள தாவரங்கள்’ பற்றிப் பேசுவதைக் கூடுமான வரையில் தவிர்த்தே வந்தனர்!

சிக்னல் அனுப்புவது, அனுப்பியதை உணர்வது ஆகியவை பற்றிய விஷயங்கள் மூளைக்கு இருக்கும் திறனில் உள்ள அறிவு போல தாவரங்களுக்கும் உள்ளது என்பது பற்றிய ஏராளமான ஆராய்ச்சி முடிவுகள் இப்போது வெளியாகி உள்ளன!

 

மங்குசா சர்ச்சைக்குரிய தாவர மூளை உயிரியல் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். ‘ப்ளாண்ட் நியூரோபயாலஜி’ என்ற இந்த வார்த்தையை அவர் பயன்படுத்துவதற்குக் காரணம் மனித நரம்பு அமைப்பில் உள்ளது போலவே தாவரங்களுக்கும் அமைப்பு உள்ளது தான் காரணம்!

 

பத்து லட்சம் யூரோக்கள் ( ஒரு யூரோ என்பது சுமார் ஐம்பத்தைந்து ரூபாய்கள்) இதுவரை இந்த ஆய்வுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஐந்து லட்சம் யூரோக்கள் வழங்கப்பட உள்ளது. இவ்வளவு பணம் இந்த ஆராய்ச்சிக்குக் கொட்டப்படுவானேன்?

 

இயற்பியல் விஞ்ஞானியான பேராசிரியர் போலோ ப்ளாஸி,” இந்த ஆராய்ச்சி ஒரு போலி அறிவியல் ஆராய்ச்சியாக இதுவரை (சிலரால்) கருதப்பட்டு வந்த போதிலும் இனிமேல் அப்படி கருதப்பட நிச்சயமாக முடியாது” என்கிறார்.

 

செடிகளின் மீது இசையின் தாக்கம் நிரூபணமான ஒன்று!  இப்போது புவி ஈர்ப்பு விசையை உணர்வது, தொலைதூர தகவல்களை சிக்னல் மூலம் அனுப்புவது ஆகியவற்றில் தாவரங்களின் திறன் வியக்க வைக்கும் அளவில் உள்ளது நிரூபணமாகி விட்டது.

 

அடுத்த ஆண்டு ஜப்பானில் பன்னாட்டு விஞ்ஞானிகளின் குழு தாவரங்களின் அறிவு பற்றி உலகளாவிய அளவில் கூடி விவாதிக்கப் போகிறது!இந்த ஒன்றே இதன் முக்கியத்துவத்திற்குச் சரியான சான்று ஆகும்!

 

-தொடரும்

(என் சகோதரர் ச. நாகராஜன் எழுதும் கட்டுரைகளும் இங்கே தொடர்ந்து வரும்)