
Written by London Swaminathan
Date: 18 JANUARY 2018
Time uploaded in London 7-54 am
Post No. 4632
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.
மநு நீதி நூல்- Part 11
எந்த திசை நோக்கி அமர்ந்து உண்டால் என்ன
கிடைக்கும்? மநு தரும் அதிசய தகவல்! (Post.4632)
மநு நீதி நூல் இரண்டாம் அத்யாயம் தொடர்ச்சி
163.பிராமணர்கள் வில்வம் அல்லது பலாச மரத்தால் ஆகிய தண்டத்தையும் (கையில் வைத்திருக்கும் குச்சி), க்ஷத்ரியர்கள் ஆல், கருங்காலியால் ஆகிய தண்டத்தையும், வைஸ்யர்கள் அத்தி, இரளி ஆகிய தண்டத்தையும் வைத்திருக்க வேண்டும். ஆனால் இரண்டில் ஒரு தண்டம் மட்டுமே இருக்கலாம்.. (2-45)

164.தடியின் அல்லது குச்சியின் உயரம் பிராமணன், க்ஷத்ரியன், வைஸ்யன் ஆகியோருக்கு தலை, நெற்றி, மூக்கு அளவில் இருக்க வேண்டும்.
165.இந்த குச்சிகள் வடுக்கள் இல்லாததாகவும், கோணல் இல்லாமலும், அழகானதாகவும், தீயினால் கருகாததாகவும், பார்ப்போருக்குப் பயம் ஏற்படுத்தாததாகவும் இருக்க வேண்டும். மேலும் அந்தந்த மரத் தோலுடன் இருக்க வேண்டும்.
166.அவரவர்க்குரிய தண்டத்துடன் புறப்பட்டு, சூரியனை நமஸ்கரித்து, அக்னியை (தீ) வலம் வந்து அவரவர்களுக்குரிய கோஷங்களுடன் பிச்சை கேட்க வேண்டும். இனி சொல்லப் போகிற விதிப்படி பிச்சை கேட்க வேண்டியது.
- பிராமணன் ‘பவதி பிக்ஷாம் தேஹி’ என்றும், க்ஷத்ரியன் பிக்ஷாம் பவதி தேஹி என்றும், வைஸ்யன் தேஹி பிக்ஷாம் பவதி என்றும் சொல்லி பிச்சை கேட்க வேண்டும் (Permutation combinations!)
168.பூணூல் போட்டவுடன் எடுக்கும் முதல் பிச்சையை தாயிடம், அல்லது அவளுடைய சஹோதரிகளிடம், அல்லது தனது சொந்த சஹோதரியிடம் செய்ய வேண்டும். இவர்கள் இல்லாத பட்சத்தில் அந்த மாணவன் மீது அன்புடையோரிடம் எடுக்க வேண்டும்.(2-50)
169.இவ்வாறு மூன்று பேரிடம், போதுமான அளவு வாங்கிய பின்னர், அதை குருவுக்கு நிவேதனம் செய்து, கிழக்கு முகமாக அமர்ந்து ஆசமனம் செய்துவிட்டுப் புசிக்க வேண்டும்.
- ஆயுளை விரும்புபவன் கிழக்கு முகமாகவும், கீர்த்தியை (புகழ்) விரும்புபவன் தெற்கு முகமாகவும், சம்பத்தை (செல்வம்) விரும்புபவன் மேற்கு முகமாகவும் சத்தியத்தை விரும்புபவன் வடக்கு முகமாகவும் அமர்ந்து சாப்பிடுக.
171.இரு பிறப்பாளன் (மூன்று வருணத்தார்) தினமும் கைகால் கழுவி, உணவைப் பூஜித்துவிட்டு, பரிசேசனம் செய்து அன்னத்தை உண்ண வேண்டும்; பின்னர் ஆசமனம் செய்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும்
(பரிசேசனம்+ மந்திரம் சொல்லி நீரால் அன்னத்தைச் சுற்றுதல்.
ஆசமனம்; கையில் உளுந்து மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் எடுத்து மந்திரம் சொல்லி உண்ணல்).
172.தினமும் உண்ணும் உணவு இறைவனின் வடிவம் (பரப் பிரம்ம ஸ்வருபம்) என்பதால் உணவை நிந்திக்கக்கூடாது. அதைப்போற்றிப் புகழ்ந்து, பார்த்து, சந்தோஷத்துடன் உண்ண வேண்டும்.
173.அன்னத்தைப் பூஜித்து உண்டால் தைரியமும் உணவின் சத்தும் (பலன்) கிடைக்கும்; இல்லாவிடின் இது அழிந்துபோகும்
174.தான் உண்ட மிச்சத்தை எவனுக்கும் இடக்கூடாது. இரவும் பகலும் மட்டும் இரண்டே முறைதான் சாப்பிடலாம். அதிகமாகப் புசிக்ககூடாது; அதிகமாக உண்பது இக, பர லோக நன்மைகளைத் தராது.

எனது கருத்துகள்:
மநு ஒரு பெரிய உளவியல் நிபுணன் (great Psychologist). மநு ஒரு பெரிய விஞ்ஞானி- அறிவியல் வித்தகன் (great scientist); மநு ஒரு டாக்டர் (physician). எப்படி?
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? என்றனன் வள்ளுவன்.
மூன்று வர்ணத்து பாலகர்களும் முதலில் பிச்சை எடுப்பது அம்மாவிடமோ சின்னம்மாவிடமோ அல்லது பெரியம்மாவிடமோ, அவர்கள் வராவிடில் அல்லது அப்படி உறவுகள் இல்லாவிடில் சொந்த சஹோதரியிடமோ செய்ய வேண்டும். அவர்களும் பூணூல் விழாவுக்கு வரவில்லையென்றால் உன்னிடம் அன்பு பாராட்டுவரிடம் முதல் பிஷையை வாங்கிக்கொள்! என்ன அற்புதமான அறிவுரை!!
பச்சிளம் பிராஹ்மணப் பையன், அல்லது க்ஷத்ரியப் பையன் அல்லது வைஸ்யப் பையன் முதல் நாளிலேயே தெருவில் சென்று பிச்சை எடுத்து, அவர்கள் சீ’, போ!’ என்று சொல்லிவிட்டால் அந்த இளம் உள்ளம் எவ்வளவு வருந்தும்? இந்த அற்புதமான உண்மை தெரிந்த அன்பே உருவான மாபெரும் ரிஷி மநு!
மஹா அற்புதம்; அவர் ஒரு மாபெரும் ஸைகாலஜிஸ்ட் (Psychologist).
எந்த திசையில் அமர்ந்து எந்த திசையை நோக்கி உணவு அருந்தினால் என்ன கிடைக்கும் என்றும் சொல்கிறார். அவர் ஒரு பெரிய டாக்டர். இன்னும் விஞ்ஞானம் கண்டு பிடிக்காத விஷயங்களை அவர் ஞான த்ருஷ்டியில் கண்டு நமக்கு வழங்கியுள்ளார். இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் நியூ ஸைன்டிஸ்ட் அல்லது ஸைன்டிபிக் அமெரிக்கன் (New Scientist or Scientific American) பத்திரிக்கையில் “திசையும் உணவும்” என்று ஆராய்ச்சிக் கட்டுரை வரும்போது நாம் வியப்போம்; அன்றே சொன்னார் எங்கள் மநு என்று!
மநு ஒரு பெரிய பொடானிஸ்ட் (Botanist); அவரது தாவரவியல் அறிவு வியக்கத்தக்கது. மரம் வளர்ப்பது பற்றியும், மரங்களை வெட்டுவது பாவம் என்றும் வரப்போகும் அத்தியாயங்களில் விளம்புவார். இப்போது எந்த ஜாதிக்காரன் எந்த குச்சி வைத்துக் கொள்ள வேண்டும் என்று மொழிவது அவர்தம் தாவரவியல் அறிவுக்குச் சான்று
இங்கே மேலும் ஒரு கருத்தையும் சுட்டிக் காட்டுவேன். மநு தர்ம சாஸ்திரம் 2200 ஆண்டுகளுக்கு முந்தையது எனது மேலை நாட்டாரும், அவர்தம் அடிவருடும் அரை வேக்காடுகளும் சொல்லும்.
ஆனா மநுவோ மூன்று ஜாதியினரும் பூணூல் போடுவது, கையில் தண்டம் வைத்துக்கொண்டு பிச்சை எடுப்பது, ஒவ்வொருவரும் வெவ்வேறு வாக்கியங்களுடன் பிக்ஷை எடுப்பது, பற்றி எல்லாம் பகர்கின்றார். இந்த வழக்கங்கள் 2500 ஆண்டுகளுக்கு முன் கூட இருந்ததில்லை. அப்படி இருந்தால் அது புத்தர், மஹாவீரர் கதைகளில் வரும்; அவர்கள் க்ஷத்ரியர்கள்; சம்ஸ்கிருத நாடகங்களில் வந்திருக்கும்.

முன்னரே சொன்னேன்; மநு ஸரஸ்வதி நதியின் முழு நீளம் பற்றிப் பேசுகிறார். மனைவியை எரிக்கும் உடன்கட்டை வழக்கம் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. மேலும் ரிக் வேதத்தில் பல மநுக்களைப் பற்றிய குறிப்புகள் உள. ஆகையால் ஒரிஜினல் மநு நீதி நூல் மிகவும் பழையது; அதில் பல இடைச் செருகல்கள் நுழைக்கப்பட்டுள்ளன. அதுவே இன்று நம் கைகளில் தவழ்கிறது என்பது என் வாதம்.
மேலும் பிராமணர்கள் இன்று அரச மரக் குச்சியையே கையில் வைத்துப் பூணூல் கல்யாணம் நடத்துகின்றனர். மற்றவர்கள் நடத்துவதும் இல்லை. இந்தக் குச்சி, பிச்சிசை எடுக்கும் முறை, வேதக் கல்வி ஆகியனவும் அவர்களிடையே இல்லை.
இவை எல்லாம் எந்தக் காலத்தில் விடுபட்டது? என்பதை ஆராய்ந்தால் மநுவின் பழமை விளங்கிவிடும்!
இன்று டெலிவிஷன் பார்த்துக்கொண்டே உண்ணுவதால் ஏற்படும் தீங்குகளை பிரபல ஹிப்னாடிஸ்ட் (Hypnotist) பால் மக்கென்னா சொன்னதை ஏற்கனவே ஒரு கட்டுரையில் தந்துள்ளேன். உணவை வணங்க வேண்டும்; புகழ வேண்டும்; சந்தோஷத்துடன் கண்ணால் பார்த்து உண்ண வேண்டும்– இவை எல்லாம் இன்று எடையைக் குறைக்க நவீன விஞ்ஞானம் சொல்லும் உத்திகள்; இதைப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மநு சொல்லிவிட்டார்! மேலும் உணவை நிந்திக்கக் கூடாது என்பதால் தாயையும் மனைவியையும் சமையல் அறையில் ஏசும் வழக்கமும் அறுபட்டுப் போகும். மநு மாபெரும் ஸைகாலஜிஸ்ட் (Psychologist) ; பெரிய விஞ்ஞானி! எதைச் சாப்பிட வேண்டும் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று சொல்லும் உணவியல் நிபுணன் (Dietician). மாணவர்கள் அதிகம் புசிக்கக் கூடாது; அளவோடு உண்டால்தான் மூளையில் பாடங்கள் பதியும் என்கிறான்; இது மேல் உலகிலும் உதவும் என்பான்.
இப்போது நாம் ஏற்றுக் கொண்ட நவீன மநு– அம்பேத்கரின்– அரசியல் சட்டத்தையே பார்லிமெண்ட் பலமுறை திருத்திவிட்டது! ஆகவே ஒரிஜினல் மநுவும் பல முறை திருத்தப் பட்டிருக்கும். இந்த மநு நூலின் சில ஸ்லோகங்களை மட்டும் எடுத்துக் காட்டும்- திராவிடங்களையும் மார்கஸீயங்களையும் பார்த்து அழுவதா சிரிப்பதா?
இரண்டாயிரத்து அறுநூற்று எண்பைத்தைந்து ஸ்லோகங்களில் சுமார் 200 மட்டுமே கண்டுள்ளோம்; இனியும் வரும்!!! பல வியப்பான விஷயங்கள் வரும்!!!
TAGS—உணவு, திசை, தண்டம், குச்சி, பிராமண, க்ஷத்திரிய, வைசிய, பூணூல்
–தொடரும்………………