
Post No. 9977
Date uploaded in London – 15 AUGUST 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஸ்ரீ வெ.சந்தானம் அவர்களின் நினைவு தினம். அஞ்சலிக் கட்டுரை!
தெய்வத் தமிழ் கண்டவர்!
ச.நாகராஜன்
இன்று ஆகஸ்ட் 15. நமது சுதந்திர தினம். அந்த சுதந்திரத்தை வாங்கத் தங்கள் சுகபோகங்களைத் தியாகம் செய்து நாட்டிற்காக உழைத்த நல்லோர் பலர்.
அவர்களில் ஒருவர் எனது தந்தையார் தினமணி வெ.சந்தானம் அவர்கள். மதுரையில் அவர் தினமணி மதுரைப் பதிப்பின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றிய காலம் ஒரு பொன்னான காலம். அது தெய்வீகமான காலம் என்றே சொல்லலாம்.
நாத்திகம் பேசி நாத்தழும்பேறியவர்கள் ஆத்திகவாதிகளை கேலி செய்வதும் கிண்டல் செய்வதுமாக இருந்த அந்த சமயத்தில் ஆன்மிகத்திற்கு என்று ஒரு ‘காலம்’ (COLUMN) வேண்டும் என்று நிர்ணயித்தவர். அதன்படியே தினமணி நாளிதழில் ஆன்மீகத்திற்கு ஒரு COLUMN தந்தார். சில சமயம் அது ஒரு பக்கமாகக் கூட மிளிர்ந்தது. காஞ்சி பரமாசார்யாள், சிருங்கேரி மஹா பெரியவாள் உள்ளிட்ட ஆன்மீகத் தலைவர்களின் உரைகள் ஒரு பக்கம், இன்னும் தேசம் தெய்வீகம் இரண்டும் இரு கண்கள் என முழங்கிய அஞ்சாநெஞ்சர் தேவர் திரு முத்துராமலிங்கத் தேவரின் அர்த்தமுள்ள உரைகள் ஒரு புறம், ஆங்காங்கே ஆன்மிக உரைகளை லக்ஷக்கணக்கான மக்களுக்கு ஆற்றி வந்த கிருபானந்த் வாரியார் உரைகள் ஒரு புறம் இன்ன பிற அறிஞர்கள், உபந்யாசகர்களின் உரைகள் ஒரு புறம் என்று அவற்றைத் தினமும் தினமணியில் பிரசுரித்து மக்களை ஆன்மீக சிகரத்தில் அவர் ஏற்றினார்.
தருமபுரம், திருவாவடுதுறை ஆதீனங்கள் நடத்திய திருமந்திர மாநாடுகளில் கலந்து கொண்டு உரையாற்றினார். திருப்புகழ், திருப்பாவை மாநாடுகளில் உரை நிகழ்த்தினார்.
பல்வெறு ஆன்மீக புத்தகங்கள் வெளி வர ஊக்கமூட்டினார். அவற்றில் சிலவற்றிற்கு முன்னுரையும் தந்தார்.
இதெல்லாம் ஒரு புறம் இருக்க நாத்திகவாதிகள் தமிழைத் தவறாகச் சித்தரித்து நாத்திகத் தமிழாக மாற்றி அகநானூறே ஆடி வா, புறநானூறே பொங்கி வா என்று தமிழரைத் திசை மாற்றிய போது ‘தெய்வத் தமிழை’ தமிழர்களுக்குக் காண்பிக்க வேண்டும் என்று தெய்வத் தமிழைக் கண்டார்.
ஆம், மதுரையில் தெய்வத் தமிழ்ச் சங்கம் என்று ஒரு சங்கத்தை ஆரம்பித்து பிரம்மாண்டமான ஒரு விழாவை நடத்தினார். அதில் மதுரையின் பிரபல வழக்கறிஞர் திரு கே.லெக்ஷ்மிநரசிம்மன் உள்ளிட்ட பலரும் முனைப்பாக ஈடுபட்டனர். கல்லல் ராமநாதன் என்று ஒரு புகழ்பெற்ற இசைக் கலைஞர் வில்லுப்பாட்டு மூலம் ஆன்மீகத்தைப் பரப்பி வந்தார். அவரது மனைவியும் ஒரு இசைக் கலைஞர். இருவரும் இணைந்து தெய்வத் தமிழ் நிகழ்வுகளை வில்லுப்பாட்டாக இசைத்தனர். கூட்டம் வியந்து போற்றியது – தெய்வத் தமிழ் சங்கத்தை.
ஸ்ரீ சத்யசாயிபாபாவை கலியுக அவதாரமாக இனம் கண்டவர் அருளாளர் வெ.சந்தானம். அவர் மேல் தானாகப் பொங்கி வந்த கீர்த்தனைகளைத் தொகுத்தார். பாரதரத்னா திருமதி எம்.எஸ்.சுப்புலெட்சுமியின் சகோதரர் திரு எம்.எஸ்.சக்திவேல் உள்ளிட்ட ஏராளமான இசைக்கலைஞர்கள் வீட்டிற்கு அடிக்கடி வருவர். பல்வேறு ராகங்களில் அந்தக் கீர்த்தனைகளை இசைத்துக் காட்டுவர். பல இசைக்கச்சேரிகளில் பாடல்கள் அரங்கேறின.
அவற்றைப் பற்றி ஒரு இண்டர்வியூவில் ஸ்ரீ சத்யசாயிபாபா, ‘பாடலை நீ இயற்றும் போதே அதை நான் கேட்டு விட்டேன். பதங்கள் நாட்டியமாடி துள்ளி குதிக்கின்றன‘ என்றார்.
108 கீர்த்தனைகளின் தொகுப்பு பின்னர் நூலாக வந்தது.
ஸ்ரீ சத்யசாயிபாபா அவர் மேல் மாறா அன்பு கொண்டிருந்தார். சென்னையில் ஆபட்ஸ்பரியில் நடந்த மாபெரும் விழாவிற்கு உரை ஆற்ற அவரை அழைத்தார்.
தன்னை அவர் அழைத்திருக்க மாட்டார், அது கே.சந்தானம் என்ற நிபுணராக இருக்கக் கூடும் என்று அழைத்தவரிம் திரு சந்தானம் கூற, “இல்லை, இல்லை, நாங்கள் மிகத் தெளிவாகத் தான் கூறுகிறோம். பாபா, மதுரை தினமணி சந்தானத்தை அழையுங்கள்’ என்று ஆணையிட்டார் என்று கூறினர்.
ஒரு நாள், திரு ஆர்.ஆர்.ராமநாதன் செட்டியார் வீட்டிற்கு திடீரென வருகை புரிந்தார் பாபா அப்போது ஹாலில் அமர்ந்திருந்த எனது தந்தையாரைக் கண்ட அவர் மனம் மிக மகிழ்ந்து அவர் அருகே வந்தார். ஆசீர்வதித்தார்.
இப்படிப் பல நிகழ்வுகள்.
அச்சன்கோவிலை ஸ்தாபித்த ஆயக்குடி ஸ்வாமிஜி கிருஷ்ணாஜியைக் குருவாக ஏற்ற திரு சந்தானம் தினமும் காலையில் கணபதி ஹோமம் செய்வதை வழக்கமாகக் கொண்டார் – அவரது உபதேசத்தை அனுக்ரஹமாகக் கொண்டு.
அவருடனான அனுபவங்கள் ஒரு பெரும் புத்தக அளவில் எழுதக் கூடிய வியப்பும் பிரமிப்பும் தரக்கூடிய அற்புத நிகழ்ச்சிகளாக அமைந்தன.
இன்னும் ஸ்வாமி சாந்தானந்தா, அஷ்டபதி பாடி ராதா கல்யாணத்தைப் பரப்பிய புதுக்கோட்டை கோபாலகிருஷ்ண பாகவதர் உள்ளிட்ட நூற்றுக் கணக்கான மகான்களுடன் மிக நெருக்கமாக அவர் இருந்தார். ஸ்வாமி சாந்தானந்தா வீட்டிற்கு வந்து பிக்ஷை ஏற்பார். கோபால கிருஷ்ண பாகவதர், அவரது மகன் சஞ்சீவி பாகவதர் உள்ளிட்டோர் இல்லத்திற்கு வருகை புரிவர்.
சிருங்கேரி மகா சந்நிதானம் ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த ஸ்வாமிகள் ஒரு முறை சந்தானம் அவர்கள் இல்லத்திற்கு வருகை புரிந்தார். ‘என்ன வேணும், கேள்’ என்றார். ‘நானும் எனது குடும்பமும் இந்து மதத்தில் மாறாத பற்று கொண்டு அதன் உயர்வை அனைவருக்கும் சொல்ல வேண்டும் என்று வரம் கேட்கவே, அருகிலிருந்த அனைவரையும் பரபரப்பாக அழைத்த அவர், “பாருங்கள், என்ன கேட்கிறார் பாருங்கள்’ என்று சொல்லி மகிழ்ந்து ஒவ்வொருவராக குடும்ப உறுப்பினர்களை அழைத்து அனுக்ரஹித்தார்.
இப்படி ஏராளமான உத்வெகமூட்டும் சம்பவங்கள் உண்டு.
திருப்பாவை கழகங்களையும் வடக்காடிவீதி திருப்புகழ் சபையையும், பன்னிருதிருமுறை மன்றத்தையும் இன்ன பிற நூற்றுக்கும் மேற்பட்ட ஆஸ்தீக சபாக்களையும் வளர்த்தார். அங்கெல்லாம் சமயம் கிடைத்தபோதெல்லாம் சென்று ஆன்மீக உரைகள் ஆற்றினார்.
தெய்வீகமாக வாழ்ந்த அவர் தெய்வத் தமிழுக்காக ஆற்றிய பணியை அவர் மறைந்த இந்த நாளில் மனம் மெய் மொழிகளால் நினைத்து வியந்து சிரம் தாழ்த்தி கரம் கூப்பி அவருக்கு அஞ்சலி செய்கிறோம்.
வாழ்க தெய்வத் தமிழ்! வளர்க அவர் புகழ்!
***
INDEX
தினமணி மதுரைப் பதிப்பு, வெ.சந்தானம், சுதந்திரப் போராட்டவீரர்,
ஸ்ரீசத்யசாயி பாபா, கீதங்கள், சந்திப்பு
காஞ்சி ஆசார்யாள், சிருங்கேரி ஆசார்யாள்,
ஸ்ரீமுத்துராமலிங்கத்தேவர், ஸ்ரீகிருபானந்த வாரியார்
tags -தினமணி வெ .சந்தானம்











V SANTANAM WHEN HE WENT TO VELLORE JAIL WITH K KAMARAJ DURING INDIAN INDEPENDENCE STRUGGLE.
–SUBHAM–