பல்லாயிரம் கோவில்களைக் காத்த ஜோதிடம்!

திப்புவின் ஆட்சி

18ம் நூற்றாண்டின் இறுதியில், தான் சென்ற வழியிலெல்லாம் நூற்றுக் கணக்கான கோவில்களை இடித்து லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தவன் திப்பு சுல்தான்!1782ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதியிலிருந்து 1799ம் ஆண்டு மே 4ம் தேதி முடிய சுமார் பதினாறரை ஆண்டு காலமே ஆட்சி புரிந்த திப்பு சுல்தான் தன் வாளில் “எனது வெற்றி வாள் (இஸ்லாமை) நம்பாதவர்களை அழிக்கவே ஒளிர்கிறது” என்று எழுதிப் பொறித்தான். போர்த்துக்கீசிய பயணியான •ப்ரா பார்டாலோமாகோ மற்றும் மலபார் கலெக்டராக இருந்த வில்லியம் லோகன் உள்ளிட்ட ஏராளமானோர் திப்புவின் நடுநடுங்க வைக்கும் சித்திரவதைகளையும் கோவில் இடிப்புகளையும் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதியுள்ளனர்.

 

வேத ஜோதிடம் காத்த கோவில்கள்!

இருந்த போதும் அவனது அக்கிரமத்திலிருந்து பல கோவில்களையும் ஆயிரக்கணக்கான மக்களையும் வேத ஜோதிடம் காத்தது என்பது சரித்திரம் கூறும் அதிசய உண்மை! அந்த உண்மையான வரலாற்றைப் பார்ப்போம்.

திப்புவுக்கு ஜோதிடத்தின்  மீது அசைக்க முடியாத நம்பிக்கை. இந்த ஒரு காரணத்தினால் தான் ஸ்ரீ ரங்கநாதரின் ஆலயத்தை அழிக்காமல் விட்டு வைத்தான். ‘அதை அழித்தால் உன் ஆசை நிறைவேறாது’ என்று கடுமையாக ஆஸ்தான ஜோதிடர்கள் அவனை வலியுறுத்தி எச்சரிக்கவே எப்படியாவது “பாத்ஷா” (சக்கரவர்த்தி) ஆக வேண்டுமென்று விரும்பிய திப்பு அந்த ஆலயத்தை விட்டு வைத்தான். இது தவிர அவனது தாயாரும் அந்த ஆலயத்தை அழித்து விடக் கூடாது என்று கட்டளையிட்டிருந்தாள். அவனிடம் 90000 போர் வீரர்கள் அடங்கிய மாபெரும் முரட்டுப் படை ஒன்று இருந்தது. தனது படையில் 60000 வீரர்களை அழைத்துக் கொண்டு கொச்சி மீது படையெடுக்கப் புறப்பட்டான்

 

திப்பு சந்தித்த ஜோதிடர்

திப்பு. வழியில் படையை ஒரு கிராமத்தில் இளைப்பாறத் தங்க வைத்திருந்தான். அந்த கிராமத்தில் என்ன விசேஷம் என்று ஆராயுமாறு தன் படை வீரர்களைப் பணித்தான். அவர்களுள் ஒருவன் அங்கு ஒரு பிரபல ஜோதிடர் இருப்பதாகவும் அவர் கூறுவதெல்லாம் நூறு சதவிகிதம் பலிக்கும் என்று அறிய வருவதாகக் குறிப்பிட்டான். ஜோதிடத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த திப்பு உடனடியாக அந்த ஜோதிடரை அழைத்து வருமாறு ஆணையிட்டான்.

ஜோதிடரும் நடுங்கியவாறே வந்து சேர்ந்தார். தன் கையில் ஒரு கிளியை வைத்த வாறே அந்த ஜோதிடரை நோக்கி திப்பு, “நீ பெரிய ஜோதிடன் என்று கேள்விப்படுகிறேன். நீ சொல்வதல்லாம் அப்படியே பலிக்குமாமே. இது உண்மையா? அப்படி என்றால் நான் உன்னை ஒன்று கேட்கலாமா?” என்று கேட்டான். தான் ஜோதிடர் என்பதை ஒப்புக்கொண்ட அவர்,”மன்னா! எது வேண்டுமானாலும் கேளுங்கள்” என்று பயந்தவாறே பதில் அளித்தார். திப்பு தன் கையிலிருந்த கிளியைச் சுட்டிக் காட்டி.” இதன் ஆயுள் எவ்வளவு என்று சரியாகக் கூறு!” என்றான்.

 

அது உடனடியாகச் சாகும் என்றால் அதை திப்பு உயிருடன் அப்படியே வைத்திருப்பான் என்பதையும் அது நீண்ட ஆயுளுடன் இருக்கும் என்றால் அவன் அதை உடனடியாகக் கொலை செய்து தன்னையும் தண்டனைக்குள்ளாக்குவான் என்பதையும் ஜோதிடர் நன்கு அறிந்து கொண்டார். இருந்தாலும் கிரக நிலைமைகளை நன்கு ஆராய்ந்து துணிந்து திப்புவை நோக்கி,” மன்னா! இந்தக் கிளிக்கு நீண்ட ஆயுள் உண்டு. இது தான் என் கணிப்பு” என்றார். இதைக் கேட்டுச் சிரித்த திப்பு உடனடியாக அதைக் கொல்வதற்காக தன் வாளை வேகமாக உறையிலிருந்து உருவினான். அவையினர் என்ன நேரப் போகிறதோ என்ற திகிலுடன் அவனைப் பார்த்தனர். வாளை வேகமாக உருவிய போது அதன் நுனி திப்புவின் கட்டை விரலைப் பலமாகக் கீறி விட ரத்தம் கொப்பளித்தது. வலியால் ஆவென்று அலறிய

 

திப்பு கிளியைத் தன் கையிலிருந்து விட்டு விட்டான். கிளி பறந்து வானில் போயிற்று. ஒரு கணம் திகைத்த திப்பு ஜோதிடரை நோக்கி, “ஆஹா! நீர் சிறந்த ஜோதிடர் தான்! ஆனால் இது தற்செயலாக நேர்ந்த ஒரு செயல் என நான் நினைக்கிறேன். இப்போது உண்மையாக உன்னிடம் ஒரு ஜோதிடப் பலன் கேட்க விரும்புகிறேன்.நான் கொச்சி மீது படையெடுத்துள்ளேன். இந்தப் போரில் நான் ஜெயிப்பேனா? சொல்லும்” என்றான். ஜோதிடர் நன்கு ஆராய்ந்து தன் முடிவைச் சொன்னார் இப்படி:”நீங்கள் என்ன முயற்சி செய்தாலும் கொச்சியை வெற்றி பெற முடியாது!” இதைக் கேட்ட திப்புவுக்கு பெரும் கோபம் வந்தது. அந்த ஜோதிடரை அந்த கிராமத்திலேயே சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டான். ‘ஜெயித்து விட்டு வரும் போது உம்மிடம் பேசுகிறேன்’ என்று கூறிய அவன் படைகளுடன் போருக்குச் சென்றான். கொச்சி மீதான போர் 15 நாட்கள் நீடித்தது. திப்பு படு தோல்வி அடைந்தான். மீண்டும் அதே கிராமம் வழியே வந்த திப்பு அந்த ஜோதிடரை விடுவித்து அவருக்கு மரியாதைகளையும் செய்தான்.

 

மனம் மாறிய திப்பு

தன்னால் பாதுஷாவாக ஆக முடியாது என்பதை ஜோதிடர்கள் சொன்னதை அவனால் ஏற்க முடியவில்லை.ஆலயங்களை இடித்ததற்கு தீய பலன் சேரும் என்பதையும் அவன் நம்பவில்லை. ஆனால் இறுதி இரண்டு ஆண்டுகளில் நிதர்சனமான உண்மையை அவன் உணர்ந்தான். அந்தக் காலத்தில் தான் கோவில்களுக்கு நன்கொடைகளை அளிக்க ஆரம்பித்தான். (இதைத் தான் தவறாக திப்பு கோவில்களுக்கு எப்போதுமே  பெரும் நன்கொடை அளித்து வந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் பின்னால் எழுதி மக்களை நம்ப வைத்தனர்!)

 

நஞ்சுண்டேஸ்வரருக்கு மரகத லிங்கம் காணிக்கை!

மைசூருக்கு 30 மைல் தொலைவில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் அவனது வேண்டுதலுக்கு இணங்க அவனுக்கு மிகவும் பிரியமாக யானையின் கண் பார்வை மீண்டும் வந்தது. அதனால் மனம் மகிழ்ந்த அவன் நஞ்சுண்டேஸ்வரருக்கு ஒரு மரகத லிங்கத்தை காணிக்கையாக அளித்தான். இன்றும் அது நஞ்சுண்டேஸ்வரருக்கு பக்கத்தில் இருக்கிறது!

800 கோவில்களை அழித்த திப்புவை, வேத ஜோதிடத்தைக் கூறும் ஜோதிடர்கள் தயங்காது  பலமுறை எச்சரித்ததால் மேலும் பல நூறு கோவில்கள் அழிக்காமல் காக்கப்பட்டன! பல்லாயிரம் மக்கள் அழிவிலிருந்து காக்கப்பட்டனர்.

நமது வரலாற்றின் ஒரு ஏடு ஜோதிடத்தின் இந்த அபூர்வ ஆற்றலை எடுத்துக் கூறுகிறது!

 

This article was written by my brother S Nagarajan.

************************