WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,382
Date uploaded in London – – 27 NOVEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ச.நாகராஜன் எழுதியுள்ள சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பற்றிய பத்து உரைகள் ஆல் இந்தியா ரேடியே சென்னை வானொலி A அலைவரிசையில் (720 Hz) தினமும் காலை 6.55 (மாநிலச் செய்திகள் முடிந்த பின்னர்) 11-11-2021 முதல் ஒலிபரப்பாகி வந்தன.
17-11-2021 காலை ஒலிபரப்பான ஏழாவது உரை கீழே தரப்படுகிறது.
ஒலி மாசால் ஏற்படும் கேடுகள்!
ச.நாகராஜன்
தேவையற்ற அளவுக்கு அதிகமான சத்தம் அனைத்துமே ஒலி மாசு (NOISE POLLUTION) எனப்படும். பொதுவாக இந்த அதிக ஒலி தொழிற்சாலைகள், மற்றும் சில குறிப்பிட்ட தொழிலகங்கள் ஆகியவற்றிலிருந்து வருகிறது. இது மட்டுமின்றி சாலைகளில் செல்லும் அதிக வாகனப் போக்குவரத்து, புகைவண்டி, விமானம், ஆகியவற்றிலிருந்தும் எழுகிறது. கட்டிடங்கள் கட்டும் இடங்களிலிலிருந்தும் அதிக ஒலி எழுகிறது.
மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு இந்த ஒலி மாசு பெரும் கேடாக இருப்பதில் வியப்பில்லை. பொதுவாக டெசிபல் என்ற அளவீட்டின் மூலம் ஒலி அளக்கப்படுகிறது. சாதாரணமாக ஒரு மனிதன் 0 டெசிபலிலிருந்து 140 டெசிபல் வரை ஒலியைக் கேட்கமுடியும். 120 முதல் 140 டெசிபல் அளவு வரை உள்ள சத்தம் காதுக்கு வலியைத் தருகிறது. ஒரு நூலகத்தில் அனுமதிக்கப்படும் ஒலி 35 டெசிபல; ஒரு பேருந்தோ அல்லது நகர்ப்புற புகைவண்டியோ தரும் ஒலி 85 டெசிபல்; கட்டிட வேலையில் எழுப்பப்படும் ஒலி 105 டெசிபல்! தூரம் செல்லச் செல்ல ஒலி குறைவதையும் நாம் உணர்கிறோம்.
80 டெசிபலுக்கு அதிகமாக தொடர்ந்து பல மணி நேரம் அதிக சத்தத்தைக் கேட்கும் போது முதலில் செவிப்பறை பாதிக்கப்படுகிறது. பின்னர் காது, கேட்கும் சக்தியை இழக்க நேரிடுகிறது. இரத்த அழுத்தம் அதிகமாகிறது. மனச்சோர்வும், தூக்கமின்மையையும் ஏற்பட்டு மன நிம்மதியை இழக்க நேரிடுகிறது. ஒருவருக்கொருவர் பேசுவது கூட இயலாத நிலை ஏற்படுகிறது. அதீதமான ஒலி இதயக் கோளாறுகளையும் ஏற்படுத்துகிறது. மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், பள்ளிக்கூடங்கள், குழந்தைகள் அதிகம் உள்ள இடங்கள், நூலகங்கள் ஆகியவற்றில் மிகக் குறைந்த ஒலி அளவைக் கண்காணித்துக் கட்டுப்படுத்துவது இன்றியமையாதது.
வீடுகளில் வானொலி, டி.வி. உள்ளிட்ட சாதனங்களை கூட ஒலிக் கட்டுப்பாட்டை அனுசரித்துக் கேட்கும் பழக்கமானது ஆரோக்கியத்தையும் அண்டை அயலாரின் பாராட்டையும் தரும்.
இந்த ஒலி பறவைகளுக்கும், பூச்சிகளுக்கும் பெரும் ஆபத்தாக அமைகிறது. சத்தத்தை வைத்து தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் இவை அப்படிச் செய்ய முடியாமல் தவிக்கின்றன. அதிக ஒலியின் காரணமாகச் சில சமயம் உயிரையும் இழக்கின்றன. சங்க இலக்கியங்களில் அசுணம் என்ற பறவை அதிக ஒலியைக் கேட்டால் உடனே இறந்து விடும் என்பதையும் நான் இங்கு நினைவு கூரலாம்.
இது மட்டுமல்ல, கடலில் ஏற்படும் பெரும் இரைச்சலால் ஒலிகளின் மூலமாக தகவலைப் பரிமாறிக் கொள்ளும் திமிங்கிலங்கள், டால்பின்கள் பெரிதும் சங்கடத்திற்கு உள்ளாகின்றன. கடலில் செல்லும் கப்பல்கள் எழுப்பும் இரைச்சல், எண்ணெய் மற்றும் எரிவாயு தொழிற்சாலை (OIL and GAS INDUSTRY) எழுப்பும் இரைச்சல் ஆகியவற்றால் இவை, தனக்கு இரை தேட முடியாமலும் சந்ததிப் பெருக்கத்திற்கு தகுந்த துணையிடம் நாட முடியாமலும் தவிக்கும் நிலைமையை ஏற்படுத்துகிறது.
திசை தெரியாமல் தடுமாறும் திமிங்கிலங்கள் பெரிய கப்பல்களின் மீது மோதி உயிரை இழக்கின்றன. ஆகவே அதிகம் திமிங்கிலங்கள் உள்ள இடங்களில் மிக மெதுவாகச் செல்லுமாறு கப்பல்கள் அறிவுறுத்தப்படுகின்றன.
ஆகவே நீரிலும் நிலத்திலும் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தும் ஒலி மாசு பற்றிய சரியான புரிதலைக் கொண்டு அதைக் கட்டுப்படுத்துவோம்; ஆரோக்கியத்தையும் இயற்கை உயிரினங்களையும் காப்போம்!
***
tags- ஒலி ,Noise Pollution, திமிங்கிலங்கள் , மாசு,