காஷ்மீர் அமைச்சரின் தியாகம்! (Post No.3874)

Written by London swaminathan

Date: 3 May 2017

Time uploaded in London: 15-52

Post No. 3874

Pictures are taken from various sources; thanks.

contact; swami_48@yahoo.com

 

கல்ஹணர் என்ற பிராமணனை வெளிநாட்டு அறிஞர்கள் அனைவரும் சிலாகித்துப் பேசுவர். அவருக்கு ஏன் அவ்வளவு கியாதி (புகழ்)? ஏனெனில் இந்தியாவில் முதல் முதலில் வரலாற்றை எழுதியவர் இவர்தான் என்பது வெளிநாட்டு அறிஞர் கருத்து. சங்கத் தமிழ் நூல்களில் எண்பதுக்கும் அதிகமான வரலாற்றுச் செய்திகளை வரலாற்று மன்னன் பரணன் அளித்த போதும், அதற்கு முன்னால் 140-க்கும் மேலான தலைமுறை

 

மன்னர்களைப் புராணங்கள் பட்டியலிட்ட போதும் அதை எல்லாம் அறிஞர்கள் ஒப்புக்கொள்வதில்லை. ஆனால் இந்தக் காஷ்மீரி பிராமணன் 3400 க்கும் மேலான சம்ஸ்கிருத ஸ்லோகங்களில் “வருட”த்தைக் குறிப்பிட்டு வரலாறு எழுதியுள்ளான்.

 

கல்ஹணர் சொன்ன பல அதிசய விஷயங்களை ஏற்கனவே பல கட்டுரைகளில் தந்தேன். இதோ மேலும் ஒரு அற்புதம்!

 

ரிக்வேதத்தில், தலைகொடுத்த தத்யாங்க் பற்றிப் படித்தோம். புராணங்களில் , வஜ்ராயுதம் செய்ய தன் முதுகெலும்பையே தியாகம் செய்த ததீசி முனிவர் கதையை அறிந்தோம்; சிவபெருமானுக்காக கண்களையே தியாகம் செய்த கண்ணப்ப நாயனார், மஹாவிஷ்ணு பற்றிப் பெரிய புராணத்திலும் தேவாரத்திலும் கேட்டோம். ஆனால் உடலையே நீச்சல் அடிக்க உதவும் தோல் பையாயாக்கி உயிர்த் தியாகம் செய்த தேவ சர்மன் பற்றிக் கேட்டிருக்க மாட்டோம்.

 

இதோ கல்ஹணர் வாய்மொழியாக கேட்போம்:

காஷ்மீரில் கி.பி.750-ஆம் ஆண்டை ஒட்டி ஜெயபீடன் என்ற அரசன் ஆட்சி செய்து வந்தான். அவன் நேபாள நாட்டின்மீது படை எடுத்தபோது அங்கே அரமுடி என்ற மன்னன் ஆட்சி செய்துவந்தான். அவன் கில்லாடி. மந்திர தந்திரங்களில் வல்லவன்; ராஜ தந்திரமும் கற்றவன்.

 

ஜெய பீடனின் படைகளை நேரில் சந்திக்காமல் அவனைத் தாக்காட்டி தொலைதூரம் இழுத்து வந்தான். ஒரு கடலும் நதியும் சந்திக்கும் இடம் (முகத்துவாரம்) வரை படைகளை இழுத்தான். ஆற்றின் ஒரு பக்கத்தில் ஜெயபீடனின் படைகளும் மறுபுனிறத்தில் அரமுடியின் படைகளும் நிலைகொண்டிருந்தன. மிகவும் திட்டமிட்டு ஒரு நாள் திடீரென்று போர் முழக்கம் செய்து முரசு கொட்டினான் அரமுடி. அவனுடைய சூது வாது தெரியாத ஜெயபீடனி ன் படைகள், ஆற்றைக் கடந்தன. முழங்கால் அளவே தண்ணிர் என்று கருதி ஜெயபீடன் ஆற்றில் புகுந்தான். ஆயினும் நதியைக் கடப்பதற்குள் கடல் அலைகள் உள்ளே வந்து நீர் மட்டத்தை உயர்த்தின ஜெயபீடன் தத்தளி த்தான். பெரும்பாலான படைகளை வெள்ளம் கடலுக்கு அடித்துச் சென்றது

‘த்ருதி’ என்னும் தோல் பைகளை கட்டி நீந்தி வந்த வீரர்கள் வந்து ஜெயபீடனைக் கைது செ ய்து சிறைவைத்தனர். ‘த்ருதி’ என்பது எருமை மாட்டின் தோலினால் ஆனது. அதைக் காற்றடைத்து,  அதைப் பிடித்துக்கொண்டு நீந்துவது காஷ்மீரி மக்கள் அறிந்ததே.

ஜெயபீடனை ஒரு உயரமான கட்டிடத்தில் நதி ஒரமாகக் காவலில் வைத்தான் நேபாள மன்னன் அரமுடி!

 

ஜெயபீடனிடம் தேவ சர்மன் என்ற புத்திசாலி அமைச்சன் வேலை பார்த்து வந்தான். மன்னரைக் கடவுளாகக் கருதி தன் இன்னுயிரையும் ஈயும் உத்தம குணம் கொண்ட சத்திய சீலன் அவன். நல்ல தந்திரம் ஒன்றை வகுத்தான். மன்னன்  அரமுடிக்குத் தூது அனுப்பி, ஜெயபீடன், இதுவரை போரில் வென்ற செல்வப் புதையலை எல்லாம் அளிப்பதாகவும் ஜெயபீடனை மட்டும் விடுவித்தால் போதும் என்றும் செப்பினான்.

 

தலையில் குறை முடியே உடைய அரைமுடியும் அதற்குச் சம்மதித்தான். உடன்படிக்கை கையெழுத்தானது. தங்கள் மன்னரை ஒருமுறை சந்திக்க அனுமதி கோரினான் தேவசர்மன். அப்பொழுது நடந்த சம்பாஷணை:–

“மன்னர் மன்னவா

தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தில் குறைவதுண்டோ; சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ? நீங்கள் சிறைப்பட்டாலும் உங்கள் வீரமும் மனோ திடமும் குலையவில்லை என்றே கருதுகிறேன்” – என்றான் தேவ சர்மன்

 

“அது எப்படி முடியும் சர்மா? என்ன வீரம் இருந்து என்ன பயன்? நான்கு சுவருக்குள் இருக்கும் நான் என்ன செய்ய முடியும்?” – என்றான் ஜெயபீடன்

 

“மன்னா! நான் படைகளை நதியின் மறு கரை யில் தயாராக வைத்துள்ளேன். நீங்கள் மட்டு ம் இப்பொழுது நதியில் குதித்து, மறுகரைக்கு நீந்திச் சென்றால் போதும்.”

“நானா? இவ்வளவு ஆழத்திலிருந்து குதித்தால் மேலே  உடல் வராது. தோல் பையைக் கட்டிக் கொ ண்டு குத்தித்தாலோ தோல் பை கிழிந்துவிடும்”.

 

“அரசே! துணிவை இழக்காதீர்கள் நான் சொல்லும்படி செய்யுங்கள். ஒரு இரண்டு நாழிகை ( 48 நிமிடம்) வெளியே நில்லுங்கள்” – என்று மன்னனிடம் சொல்லிவிட்டு மன்னனின் அறைக்குள் சென்று, எல்லாவற்றையும் தயார் செய்துவிட்டு, தன்னையே கத்தியால் குத்திக் கொண்டு இறந்தான் தேவ சர்மன்.

 

அரசன் உள்ளே சென்ற போது சடலத்தைப் பார்த்து திடுக்கிட்டான். தனது உடலையே தோல்பையாகக் கொண்டு நீந்தி மறுகரைக்குச் செல்லும்படி குறிப்பு எழுதி வைத்திருந்தான் மன்னன் வசதியாக அமர பல பாகங்களில் துணிமணிகளைக் கட்டி வைத்தீருந்தான். மன்னனும் அவனது தியாகம் வீணாகக் கூடாது என்று எண்ணி உடனே ஆற்றுக்குள் குதித்தான். தனது படைகளை அடைந்தான்.

 

பின்னர் பெரும்படை திரட்டி, நேபாளத்தை நோக்கிச் சென்று அரமுடியைக் கவிழ்த்தான். தேவ சர்மனின் தியாகத்தால் காஷ்மீர் அரசு பிழைத்தது! இது உண்மையில் நடந்த சம்பவம்.

 

–சுபம்–

மகனைத் தியாகம் செய்து இளவரசனைக் காப்பாற்றிய வீரத்தாய்! (Post No 2680)

 

panna2 (2)

Written by london swaminathan

Date: 31 March,2016

 

Post No. 2680

 

Time uploaded in London :–  8-56 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

akbar7 (2)

ராஜஸ்தானில், மேவாரில் சங்க ராஜா என்ற ஒரு ரஜபுத்ர வீரன் ஆண்டுவந்தான். அவனுக்கு உதயசிம்மனென்ற சிறு குழந்தை இருந்தது. சங்கராஜா திடீரென்று இறந்துபோகவே, அரசவைப் பெரியோர்கள் கூடி, பான்பீர் என்னும் ஒரு இளவரசனை அழைத்து, உதய சிம்மன் பெரியவானாகும் வரை நீ நாட்டை ஆண்டு வா என்று உத்தரவிட்டனர்.

 

பான்பீர் முதலில் நன்றாகவே அரசாட்சி செய்து வந்தான். சில காலத்துக்குப் பின்னர் தானே மேவாருக்கு அரசனாக வேண்டும் என்ற பேராசை உண்டாயிற்று. உடனே பல வகைகளிலும் அரசாட்சியை நீட்டிக்கத் திட்டமிட்டான்.

 

 

பன்னா என்னும் தாதிதான் உதய சிம்மனைப் பாதுகாப்பாக வளர்த்து வந்தாள். அவளுக்கும் அதே வயதில் ஒரு குழந்தை இருந்ததால் இரண்டு குழந்தைகளையும் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தாள். ரஜபுத்ரப் பெண்கள், அந்நாட்டு ஆண்களைப் போலவே வீரமிக்கவர்கள். அவளுக்கு பான்பீரின் துர்புத்தி நன்றாகத் தெரியும். உதய சிம்மனை சிறு வயதிலேயேக் கொல்ல, பான்பீர் திட்டமிட்டதும் அவளுக்குத் தெரியவந்தது. உடனே பாரி என்ற பெயருள்ள நாவிதனை வீட்டுக்குக் காவலாகப் போட்டாள்.

 

ஒருநாள் பான்பீர், வாளும் கையுமாக, பன்னாவின் வீட்டு வாயிலில் வந்து இறங்கினான். உடனே நாவிதன் பாரி, ஓடிப்போய் அவளிடம் தகவல் சொல்லவே, அவள் வீட்டின் பின்புறமாக உள்ளே நுழைந்து, தன் கையிலிருந்த பழக்கூடையில் ராஜகுமாரன் உதயசிம்மனை வைத்து பழக்கூடையை நாவிதனிடம் கொடுத்து ஊர்க்கடைசியிலுள்ள மரத்தடியில் காத்திருக்கச் சொன்னாள்.

 

வீட்டிற்குள் மீண்டும் வந்து, ராஜ குமாரனின் உடைகள், அணிகலன்களைத் தன் மகனுக்கு அணிவித்தாள்; பின்னர் கதவைத் திறந்துவிட்டாள். ஆவேசத்துடன் நுழைந்த பான்பீர், தொட்டிலில் அரசனுக்குரிய ஆடை அணிகலன்களை அணிந்திருக்கும் சிறுவன் தான் உதயசிம்மன் என்று எண்ணி ஒரே குத்தில் கொன்றுவிட்டான். உடனே பன்னா வீறிட்டழுதாள். அக்கம்பககத்திலுள்ள பெண்கள் ஓடிவந்து அரசன் பான்பீர் நிற்பதைப் பார்த்துவிட்டு, பயந்து பிரமையுடன் நின்றனர். அவன் கொக்கரித்துவிட்டு வெளி ஏறினான்.

தந்நாட்டு அரசகுமாரனைப் பாதுகாப்பதற்காக தன் மகனையே தியாகம் செய்த பன்னா, சிறிதும் தாமதியாமல் மரத்தடிக்கு ஓடிச் சென்று நாவிதனின் கையிலிருந்த கூடையை வாங்கினாள். அதிலுள்ள ராஜகுமாரனை அருகாமை நாட்டிலுள்ள சிற்றரசனிடம் ,நடந்த கதை அனைத்தும் கூறி, உதய சிம்மன் பெரியவனாகும் வரை பாதுக்காக்க வேண்டினாள்.

 

உதயசிம்மன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து, நல்ல வாலிபப் பருவம் எய்திய பின்னர் முழுக் கதைகளையும் கேட்டறிந்து படை திரட்டிச் சென்று பான்பீரைக் கொன்றான். மேவாரின் ஆட்சியை மீண்டும் ஏற்றான்.

 

ஒரு தாதி, ரஜபுத்ர அரசனுக்கு விசுவாசமாக இருந்து தன் மகனையே தியாகம் செய்த கதையை ரஜபுத்ர கிராம மக்கள் இன்றும் கிராமம்தோறும் பாடிப்பரவி வருகின்றார்கள்.

அவள் ஒரு வீரத்தாய்!

வேதத்திலும், புறநானூற்றிலும் வரும் வீரத் தாய்கள் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன். அவ்வரிசையில் காலத்தால் வெல்ல முடியாத பகழ் படைதுவிட்டாள் பன்னா என்னும் சாதாரணப் பணிப்பெண்!!!

–subam–

கடலில் மூழ்கிய டைடானிக் கப்பலில் உள்ளத்தை உருக்கும் ஒரு சம்பவம்!

Canada Post unveiled today the images of the five stamps that will be issued on April 5 to mark the centennial of the sinking of RMS Titanic. (CNW Group/Canada Post)

Canada Post unveiled today the images of the five stamps that will be issued on April 5 to mark the centennial of the sinking of RMS Titanic. (CNW Group/Canada Post)

எழுதியவர்:- லண்டன் சுவாமிநாதன்

கட்டுரை எண்:– 2005

தேதி:– 20 ஜூலை, 2015

லண்டனில் பதிவேற்றப்பட்ட நேரம்:– காலை 9-28

தியாகம், அன்பு, நன்றி ஆகிய நற்குணங்களுக்கு இலக்கணமாகத் திகழ்ந்த மக்களின் வாழ்க்கையைப் படிக்கும்போது உலகத்தில் எல்லா இன மக்களிடையேயும் இப்படிப்பட்ட நல்லோர் இருப்பதை அறிய முடிகிறது.

டைட்டானிக் கப்பல் விபத்தை அறியாதோர் யாரும் இருக்கமுடியாது. இந்தக் கப்பல் பிரிட்டிஷ் பயணிகள் கப்பல் ஆகும். 1912 ஏப்ரல் 15-ஆம் தேதி பிரிட்டனின் தென்பகுதி நகரான சௌதாம்ப்டனில் இருந்து நியூயார்க் நோக்கி தனது முதல் (கன்னி) பயணத்தைத் துவக்கியது. வட அட்லாண்டிக் மஹா சமுத்திரத்தில் ஒரு மிதக்கும் பனிப்பாறை (ஐஸ்பெர்க்) மீது மோதி கடலில் மூழ்கியது. இந்தக் கப்பலில் 2224 பேர் சென்றனர். அவர்களில் 1500-க்கும் மேலானோர் கடலில் மூழ்கி இறந்தனர். அதில் ஒரு சம்பவம்.

Straus-Park-Memorial

டைட்டானிக் கப்பலில், உயிர்காக்கும் அவசரப் படகுகள், பாதிப்பேரை மட்டுமே காக்கும் எண்ணிக்கையில் இருந்தன. ஆகையால் முதலில் குழந்தைகளையும், பெண்களையும் படகுகளில் ஏற்றுவது என்று தீர்மானித்தனர். சில தியாக உள்ளம் படைத்தோர் தன்னுடைய இன்னுயிரையும் பொருட்படுத்தாது மற்ற எல்லோரையும் படகுகளில் ஏற்றி கரை சேர உதவினர். இவர்களில் அன்றிற் பறவைபோன்ற இணைபிரியா கணவன் மனைவி தம்பதிகள் இருவர் எல்லோருக்கும் உதவி செய்தனர். அநேகமாக எல்லாப் பெண்களும் ஏற்றியாகிவிட்டது என்று அறிந்தபோது நியூயார்க் நகர பெண்மணி திருமதி ஈடா ஸ்ட்ராஸ் என்பவரை அவரது கணவர் ஈஸிடோர் ஒரு படகுக்குள் உள்ளே தள்ளி, “நீயாவது உயிர் தப்பு” என்று சொன்னார். அந்தப் பெண்ணோ படகிலிருந்து மீண்டும் கப்பலுக்குள் — மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலுக்குள் –- குதித்தார்.

“அன்பரே! நீரும் நானும் எத்தனை காலம் சேர்ந்து வாழ்ந்தோம். இந்த இக்கட்டான நேரத்தில் உம்மை விட்டுப் பிரியமாட்டேன். நீங்கள் எங்கே செல்கிறீர்களோ அங்கே நானும் வருவேன்” என்று சொல்லி அவரை அணைத்துக் கொண்டார். இருவரும் கப்பலுடன் கடலுக்கடியில் சென்றுவிட்டனர். அதனால் என்ன? பூத உடல்தானே மறைந்தது. அவர் புகழ் உடம்பு மனித சமுதாயம் வாழும்வரை என்றும் நிலைத்து நிற்குமே!! அவர் எங்கு வேலை பார்த்தாரோ அந்த நிறுவன (மேஸிஸ்) ஊழியர்கள், அந்த தியாக சீலிக்கு ஒரு சிலையே வைத்துவிட்டனர் நியூயார்க் நகரில்!

samoa

சமோவா தீவில் ஒரு எழுத்தாளனுக்கு சமாதி!

ஆங்கிலம் படித்தவர்கள் ஆர்.எல்.ஸ்டீவன்சன் எழுதிய ‘ட்ரெஷர் ஐலண்ட்’, கிட்நாப்ட்’ போன்ற கதைகளைப் படித்திருப்பார்கள். அந்த ஸ்டீவென்சன் பசிபிக் மஹா சமுத்திரத்தில் உள்ள சமோவா தீவின் மக்களின் உள்ளத்தில் அழியாஇடம் பெற்றுவிட்டார். எப்படி?

ஐரோப்பிய காலனியாதிக்கம் கொடிகட்டிப் பறந்த நாட்களில் உலகம் முழுதும் பிரிட்டனும், பிரான்சும், போர்ச்சுகல்லும் ஸ்பெயினும், ஹாலந்தும் பல நாடுகளுக்குச் சென்று அங்குள்ள மக்களை அடக்கி ஒடுக்கி ஆண்டனர். உள்நாட்டு மக்களை குருவி, கொக்கு சுடுவதுபோலச் சுட்டுத் தள்ளினர். பசிபிக் மஹா சமுத்திர சமோவா தீவில் வாழ்ந்த பழங்குடி இன மக்கள் தலைவர் மடாFபாவைப் பிடித்து சிறையில் தள்ளினர். அவரும் மற்ற அரசியல் கைதிகளும் இருந்த சிறைகளுக்கு, கதாசிரியர் ஸ்டீவென்ஸன்,  சென்று புகையிலை முதலிய பொருட்களைக் கொடுத்து, ‘கைம்மாறு வேண்டாக் கடப்பாடு’ (பலனை எதிர்பாரா உதவி) செய்தார். கொஞ்ச காலத்துக்குப் பின் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

R L Stevenson

பழங்குடி இனமக்களுக்கு எழுத்தறிவு கிடையாது. ஆனால் குணநலன்களில், படித்தவர்களை விட ஒரு படி மேல்தான். அவர்களாக முன்வந்து ஸ்டீவன்ஸன் வாழும் மலைப்பகுதிக்கு சாலை அமைத்தனர். அந்த சாலை அவர் வீட்டு வாசல் வரை சென்றது. அது மட்டுமல்ல. அவரை தங்கள் இனத்தின் தலைவர்களில் ஒருவராக அறிவித்தனர்.

“அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?”

ஸ்டீவென்சனின் மெய்க்காப்பளரும் அந்த பழங்குடி இனத்தச் சேர்ந்தவரே. அவரிடம் ஸ்டீவென்ஸன் சொன்னார்:

அடடா! உங்களுக்குத் தான் என்னே விவேகம் இருக்கிறது.

உடனே அந்த பழங்குடி இனத்தவர் சொன்னார்

விவேகம் அல்ல! இது பேரன்பு! என்றார்.

samoa-stamps-1969-Robert-Louis-Stevenson

நல்ல குணங்களைப் பின்பற்ற எழுத்தறிவு தேவை இல்லையே!

ஸ்டீவென்சன் இறந்தவுடன் அவர்களே அந்த சடலத்தை மலை உச்சிக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர். அங்கு முக்கியமான வர்கள் மட்டுமே அழைக்கப்படிருந்தனர். அந்த இடத்தில் ஒரு ஸ்காட்லாந்துக்காரர் இருந்தார். எல்லோரும் வியப்புடன் நீங்கள் யார்? ஏன் இங்கே வந்தீர்கள்? என்று கேட்டனர். நீண்டகாலத்துக்கு முன் தான் தற்கொலை செய்துகொள்ள மலை உச்சிக்குச் சென்றபோது அந்தப் பக்கம் வந்த ஸ்டீவென்சன், காரணத்தைக் கேட்டுவிட்டு தன்னை தற்கொலை செய்யாமல் இருக்க அறிவுரை பகன்றதாகவும் அதனால்தான் இன்று நான் உயிருடன் இருக்கிறேன் என்றும் நன்றியுடன் சொன்னார்.

“நன்றி மறப்பது நன்று அன்று” என்பதற்கு பழங்குடி இன மக்களும் இந்த ஸ்காட்ஸ்மேனும் எடுத்துக் காட்டுகள்!

இளங்கோ, பீஷ்மர், தேவாபி செய்த மாபெரும் தியாகம்!

எழுதியவர்-லண்டன் சுவாமிநாதன்

ஆய்வுக் கட்டுரை எண் 1814;

தேதி: 20 ஏப்ரல் 2015

இலண்டனில் பதிவு எற்றிய நேரம் – காலை 9–31

This is already published in English by me.

பீஷ்மர் செய்த தியாகம் எல்லோரும் அறிந்ததே. மகத்தான தியாகம். எப்போதும் குடும்ப சுகம் அனுபவிக்க இளைஞர்களுக்கு பெரியோர்கள் எப்படியாவது உதவுவர். யாருக்காவது திருமணம் ஆகாமல் இருந்தலோ , குழந்தைகள் பிறக்காமல் இருந்தாலோ அந்த இளம் உள்ளங்களுக்காக மனதார கோவில் தோறும் சென்று பிரார்த்திப்பர். ஆனால் இதற்கு நேர் மாறாக நடந்தது மஹாபாரதத்தில்! சத்யவதி மீது சந்தனு என்ற மன்னனுக்கு ஏற்பட்ட திடீர் காதலாலும் அவளுடைய தந்தை போட்ட நிபந்தனையாலும் தேவ விரதன் என்ற பீஷ்மர் தனது வாழ்நாள் முழுதும் பிரம்மசர்யத்தைக் கடைப்பிடிக்க சபதம் செய்தார்.

ஒரு இளைஞன், தனது குடும்ப சுகத்தையே, தனது தந்தையின் குடும்ப (செக்ஸ்) சுகத்துக்காக தியாகம் செய்தது உலக இலக்கியத்தில் வேறு எங்கும் காணக் கிடைக்காத தியாகம். மஹத்தான தியாகம்! இதைக் கண்ட தேவர்கள் வியந்து பீஷ்ம, பீஷ்ம என்று கூச்சல் இட்டனர். “அதி பயங்கரமான சபதம்” என்று இதற்குப் பொருள். அதாவது நம்ப முடியாத அதிசய சபதம். இதனால்தான் ஆண்டுதோறும் பீஷ்மாஷ்டமி அன்று உலக இந்துக்கள் அனைவரும் அவருக்கும் அவரைப் போன்று இறந்த புண்ய பிரம்மசாரிகளுக்கும் தர்ப்பணம் செய்கின்றனர். இனி வருங் காலத்திலும் கூட இப்படி ஒரு அதிசயம் நிகழாது.

இதற்கு இணையான தியாகம் தமிழ் கூறு நல்லுலகத்தில் நடந்தது. சேர மாமன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் அரசவையில் வீற்றிருந்த காலத்தில் ஒரு சோதிடன் வந்து சேர்ந்தான். மன்னர் குடும்ப ஜாதகத்துப் படி அவர் மூத்த மகன் செங்குட்டுவன் மன்னன் ஆக முடியாது என்றும் “இளையவர்தான்” —இளங்கோ தான் — மன்னர் ஆவார் என்றும் சொல்லிவிட்டார். இளங்கோவின் உண்மைப் பெயர் கூட நமக்கு இன்று வரை தெரியாது. இளங்கோ என்றால் இளவரசர் என்று பொருள் (இதே போல மாணிக்கவாசகர் பெயரும் நமக்குத் தெரியாது. அவர் மாணிக்கம் போன்ற ரத்தினச் சொற்களை உதிர்த்ததால் வந்த காரணப் பெயரை மட்டுமே நாம் அறிவோம்).

உடனே இளவரசர் துறவறம் பூண்டார். இந்துக்கள் கணக்குப்படி ஒருவர் துறவறம் பூண்டால் அது மறு ஜன்மம் போல. துறவி என்பதால் அவர் அரசராக முடியாது என்பது மட்டுமல்ல;பின்னர் செங்குட்டுவன் மன்னரானார். ஆதி சங்கரரின் கால்களை முதலை பிடித்தபோது இந்த ஜன்மம் தனக்கு முடிந்துவிட்டதால் சந்யாசம் வாங்க சம்மதித்தால் முதலை காலை விட்டுவிடும் என்றார். அதாவது விதியை வெல்ல – சோதிட விதிகளை மீற – இப்படிச் சில சுருக்கு வழிகள் (ஷார்ட் கட்) உண்டு. இதே போல வித்யாரண்யர் அதிக செல்வம் வேண்டி தவம் இருந்தார். லெட்சுமிதேவி அவர் முன் தோன்றி, ‘டன்’ கனக்கில் தங்கம் தர முடியும் என்றும் ஆனால் இந்த ஜன்மத்தில் அதற்கான யோக ஜாதகம் அவரிடம் இல்லாததால் அடுத்த ஜன்மத்தில் தருவதாகவும் லெட்சுமிதேவி சொன்னார்.

வித்யரண்யரும் ஏமாந்து போய் ‘சரி’ என்று சொல்லிவிட்டார். பின்னர் ஆலோசித்துவிட்டு, இந்த ஜன்மத்திலேயே செல்வம் கிடைப்பதற்காக துறவறம் பூண்டார். லெட்சுமியும் தங்கம் கொடுத்தாள். ஆனால் மலை போலக் குவிந்த தங்கத்தை அவரால் தொடக்கூட முடியவில்லை. ஏனெனில் சந்யாசிகள் தங்கத்தைத் தொடக்கூடாது. அடடா, இவ்வளவு தங்கத்தையும் நான் என்ன செய்யப் போகிறேன் என்று தத்தளித்த போது, படை யெடுத்து வந்த வெளித்தேச முஸ்லீம்களின் ஆட்சியை அடியோடு ஒழித்து விஜய நகர சாம்ராஜயம் எழுவதற்கு அந்தப் பணத்தைக் கொடுத்தார். இதுபோலவே இளங்கோவும் சந்யாசியானவுடன் அவர் அண்ணன் செங்குட்டுவனுக்கு அரசு கட்டில் கிடைத்தது. இளங்கோ சந்யாசம் வாங்கியதால் செங்குட்டுவனுக்கு ஒரு தம்பி இருந்ததாகவே பொருள் இல்லை. அப்போது ஒரே மகன் என்ற பெயரில் செங்குட்டுவனுக்கு பதவி கிடைத்துவிடும்.

இளங்கோ அடிகள் படம்

தேவாபி செய்த தியாகம்

சந்தனுவின் அண்ணன் உலக வாழ்வைத் துறந்து கானகம் சென்றார். இதனால் சந்தனுவுக்கு ஹஸ்தினாபுர அரச பதவி கிடைத்தது என்ற செய்தி மஹாபாரத ஆதி பர்வத்தில் உள்ளது. ரிக்வேதத்திலும் (10-98). அந்த நாட்டில் நீண்ட காலத்துக்கு வறட்சி நிலவியபோது, தேவாபி ஒரு புரோகிதர் போல செயல்பட்டு யாக யக்ஞங்களை ஏற்பாடு செய்து மழை பெய்ய வைத்ததாகவும் சொல்லப்படுகிறது. யாஸ்கர் எழுதிய நிருக்தத்திலும் (2-10) தேவாபி கதை உள்ளது. தேவாபிக்கு தோல் நோய் இருந்ததால் அவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்கவில்லை என்று ‘’பிருஹத்தேவதா’’ கூறுகிறது.ஆனால் பல சந்தனுக்கள், பல தேவாபிகள் இருக்க வாய்ப்பு உண்டு. ஆகவே தீர ஆராய்ந்து எந்த தேவாபி என்று கண்டுபிடிக்க வேண்டும்.

இதுதவிர முறை தவறிய ஆட்சி காரணமாக துஸ்தாரிது பௌம்சாயன என்ற மன்னன் ஆட்சி துறந்ததாக சதபத பிராமணம் என்னும் நூல் சொல்லுகிறது (12-9-3-1).

கலிங்க- வங்க நாடுகளை ஆண்டு வந்த விஜயன், முறை தவறிய ஆட்சி செய்த்ததால், நாடு கடத்தப் பட்டதும் அவன் இலங்கையில் போய் இறங்கி புதிய ஆட்சியைத் துவக்கியதையும் நாம் அறிவோம். இது போல நஹுஷன், வேனன், நந்த வம்சத்து அரசர்கள் ஆகியோரும் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டனர். அவை தியாகம் என்னும் வரம்பிற்குள் வாரா.

ஆதி சங்கரர்

வித்யாரண்யருக்கு தங்க மழை