பாரதியார் பாடல்களில் ஆரிய என்ற சொல்- 2 (Post No.8833)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8833

Date uploaded in London – – –21 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

Broadcast and telecast at Faceboo.com/ gnanamayam on 19-10-20

First part was posted yesterday 20-10-20

பாரதியார் பாடல்களில் ஆரிய என்ற சொல், தேவாரம், சங்க இலக்கியம் போல நல்ல பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளதா? – 2

ச.நாகராஜன்

ஆரிய என்ற சொல் பாரதியாரின் தேசீய கீதங்களில் 24 இடங்களில் வருகிறது.

  ஜய வந்தே மாதரம் பாடல்:

ஆரிய பூமியில் நாரிய ரும் நர
சூரிய ரும்சொலும் வீரிய வாசகம் (வந்தே)

எங்கள் நாடு பாடல்:

உன்னத ஆரிய நாடெங்கள் நாடே
ஓதுவம் இஃதை எமக்கில்லை ஈடே.

பாரத மாதா பாடல்:

முன்னை இலங்கை அரக்கர் அழிய
முடித்தவில் யாருடை வில்? – எங்கள்
அன்னை பயங்கரி பாரத தேவி நல்
ஆரிய ராணியின் வில்.

சித்த மயமிவ் உலகம் உறுதி நம்
சித்தத்தில் ஓங்கி விட்டால் – துன்பம்
அத்தனை யும்வெல்ல லாமென்று சொன்னசொல்
ஆரிய ராணியின் சொல்.

காண்டிவம் ஏந்தி உலகினை வென்றது
கல்லொத்த தோள்எவர் தோள்? – எம்மை
ஆண்டருள் செய்பவள் பெற்று வளர்ப்பவள்
ஆரிய தேவியின் தோள்.

இங்கெல்லாம் ஆரிய தேவி என பாரத தேவியைக் குறிப்பிடுகிறார் பாரதியார்.

அடுத்து எது ஆரிய நாடு என்பதைத் தெள்ளத் தெளிவாக பாரத தேவியின் திருத் தசாங்கத்தில் குறிப்பிடுகிறார். பாரத நாட்டின் எல்லையையும் வகுத்துக் கூறும் அருமையான பாடல் இது.

தேனார் மொழிக்கிள்ளாய் தேவியெனக் கானந்த
மானாள் பொன் னாட்டை அறிவிப்பாய்! – வானாடு
பேரிமய வெற்புமுதல் பெண்குமரி ஈறாகும்
ஆரியநா டென்றே அறி.

தாயின் மணிக்கொடி பாரீர் என்று பாடிய கவிஞர் அனைவரும் அணிவகுத்து நிற்கும் காட்சியை ஆரியக் காட்சி என்கிறார்.

அணியணி யாயவர் நிற்கும் – இந்த
ஆரியக் காட்சியோர் ஆனந்தம் அன்றோ?

ஆரியம் என்பதை வடமொழி என்று குறிப்பிட்டு பாரதியார் சொல்லும் இடமும் உண்டு.

தமிழ்த்தாய் பாடலில்,

முன்று குலத்தமிழ் மன்னர் – என்னை
மூண்டநல் லன்போடு நித்தம் வளர்த்தார்,
ஆன்ற மொழிகளி னுள்ளே – உயர்
ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன்

 என்று இங்கு ஆரியத்தை வடமொழி என்ற பொருளில் குறிப்பிடுகிறார்.

தமிழச் சாதி பாடலில் பாரதத்தை ஆரிய நாடு என்று அறிவிக்கிறார்.

மற்றவை தழுவி வாழ்வீ ராயின்,
அச்சமொன்று இல்லை! ஆரிய நாட்டின்
அறிவும் பெருமையும் – … …

வாழிய செந்தமிழ்! பாடலில் ஆரியன் என இறைவனைக் குறிப்பிடுகிறார்.

ஆரியர் வாழ்வினை ஆதரிப் போனே!

ஆரிய! நீயும்நின் அறம்மறந் தாயோ?

வீர சிகாமணி! ஆரியர் கோனே!

பஞ்சமும் நோயும்நின் மெய்யடி யார்க்கோ?
பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ?
தஞ்ச மடைந்தபின் கை விடலோமோ?
தாயுந்தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ?
ஆரிய! நீயும்நின் அறம்மறந் தாயோ?
வீர சிகாமணி! ஆரியர் கோனே!

சத்ரபதி சிவாஜி பாட்டில் ஆரியன் என்பதற்கு ஒரு DEFENITION தருகிறார் இப்படி:

தாய்நாட்டு
அன்பிலா திருப்போன் ஆரிய னல்லன்.
மாட்சிதீர் மிலேச்சர் மனப்படி யாளும்

ஆட்சியி லடங்குவோன் ஆரிய னல்லன்.
ஆரியத் தன்மை அற்றிடுஞ் சிறியர்

ஆரியர் இருமின்! ஆண்கள்இங்கு இருமின்!

அடுத்து ஆரிய நீதி என்பது அறநூல்கள் காட்டும் வழி செல்வதேயாம் என்பதை இப்படிக் கூறுகிறார்:

தம்மொடு பிறந்த சகோதரராயினும்
வெம்மையோ டொறுத்தல் வீரர்தஞ் செயலாம்.
ஆரிய நீதிநீ அறிகிலை போலும்!

குரு கோவிந்தர் பாட்டில் ஆரியர் ஒரே ஜாதி அதாவது இந்த பாரத நாட்டில் வாழும் அனைவரும் ஆரிய ஜாதி என்றும் இதைப் பிளவு படுத்தி ஜாதிகள் பல பேசும் அனைவரும் மாய்க என்றும் கூறுகிறார்.

ஹிந்து இனம் ஒரே இனம் என்பது அவரது அடிப்படைக் கொள்கையாக அமைவதை இங்கு காண்கிறோம். பாடல் இது தான்:

சீடர்காள்! குலத்தினும் செயலினும் அனைத்தினும்
இக்கணந் தொட்டுநீர் யாவிரும் ஒன்றே
பிரிவுகள் துடைப்பீர்! பிரிதலே சாதல்
ஆரியர் சாதியுள் ஆயிரஞ் சாதி
வகுப்பவர் வகுத்து மாய்க, நீர் அனைவிரும்

லாஜபதியின் பிரலாபம் என்ற பாடலில் வரும் வரிகள் இவை:

ஆரியர்தம் தர்மநிலை ஆதரிப்பான் வீட்டுமனார்
நாரியர்தங் காதல் துறந்திருந்த நன்னாடு.

ஆரியர் பாழாகாது அருமறையின் உண்மைதந்த
சீரியர் மெய்ஞ்ஞான தயாநந்தர் திருநாடு.

இங்கெல்லாம் ஆரிய நாடு என்றால் பாரதம் ஆரிய தேவி என்றால் அன்னை பாரத தேவி என்ற பொருளையே காண்கிறோம்.

தெய்வப் பாடல்களில் 3 இடங்களில் வரும் ஆரிய என்ற சொல்லும் சுயசரிதையிலும் ஞானப்பாடல்களிலும் கண்ணன் பாட்டிலும் குயில் பாட்டிலும் வரும் ஆரியர் என்ற சொல்லும் பண்பாடுள்ளவர் என்ற பொருளில் வருகிறது. அதே போல பாஞ்சாலி சபதத்தில் வரும் 7 இடங்களிலும் இதே பொருளே அமைகிறது.

ஆக பாரதியார் அப்படியே அடி வழுவாது இந்த பாரத நாட்டை ஆரியர் நாடு என்றும் பண்பாளரை ஆரியர் என்றும் அறநூல்கள் வழி நடப்பவரை ஆரியர் என்றும் கூறி இருக்கிறார்.

ஆரியம் என்ற சொல்லை வடமொழி என்ற பொருளிலும் பயன்படுத்தியுள்ளார்.

ஆரியன் என்பதை ஹிந்துக்கள் வழிபடும் இறைவன் என்ற பொருளிலும் பயன்படுத்தியுள்ளார்.

தேவாரம், பண்டைய இலக்கியம் கூறியதற்கு ஒரு படி மேலே போய், காலத்தால் பின்னால் தோன்றியதால் தெளிவாக ஹிந்து தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட பாரத நாட்டை ஆரிய நாடு என்று அறிவிப்பதோடு தேசபக்தி இல்லாதோர் ஆரியர் அல்லர் என்றும் ஆரிய இனம் ஒரே இனம் என்றும் இதில் இன, ஜாதி போன்ற வேறுபாடுகளை வகுப்பவர் மாய்ந்து ஒழிக என்றும் கூறுகிறார்.

சுருக்கமாகச் சொல்லப் போனால் ஆரியன் திராவிடன் என்ற பொய்யான வாதங்கள் எல்லாம் அவர் பாடல்களால் பொடிப் பொடியாகிப் போகிறது. சங்க இலக்கியமும் தேவாரமும் சுட்டிக் காட்டும் நல்ல பொருளே அவர் பாடல்களிலும் அழுத்தமாக நிலைபெறுகிறது. வாழ்க பாரதி நாமம்!

***

tags- ஆரியன், திராவிடன், பாரதியார்

ஆரிய பாரதி வாழ்க!

mahakavi

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்:-1279; தேதி: 10 செப்டம்பர் 2014

தமிழுக்கு உயிர் கொடுத்த, தமிழால் உயிர்பெற்ற பாரதியின் நினைவு தினம் செப்டம்பர் 11. அந்தக் கவிஞன் பெயரைச் சொன்னாலேயே போதும். நம் நாவில் தமிழ் பொங்கித் ததும்பும். உடல் முழுதும் சக்தி பாயும்.

சீரிய சிந்தனை!
நேரிய பார்வை!
வீரிய உணர்வு!
பாரிய நோக்கு!
கூரிய மதி படைத்த பாரதியின்
ஆரியப் பாடல்களைக் காண்போமா?

ஆரிய என்றால் ‘பண்பாடுமிக்கவர்’ என்று பொருள். இது பிராக்ருதத்தில் ‘அஜ்ஜ’ என்று மருவி தமிழில் ‘ஐயர்’ என்று புழங்கியது. ஐயர் என்றால் குணத்தால், ஒழுக்கத்தால் உயர்ந்தவர் என்பது ‘பழம் பொருள்’.

தேசிய கவி சுப்பிரமணிய பாரதி 1921 ஆம் ஆண்டிலேயே இறந்து விட்டார். அப்பொழுதுதான் சிந்து சமவெளி நாகரீக அகழ்வாராய்ச்சி துவங்கியது. உலகிற்கு ஹரப்பா நாகரீகம் என்று ஒன்று இருப்பதே அப்போது தெரியாது. ஆனால் ஆரிய- திராவிட இனவெறிக் கொள்கையை அதற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னரே வெள்ளைக்காரர்கள் புகுத்திவிட்டனர். சுவாமி விவேகாநந்தர் போன்றோர் இந்தக் கொள்கையை எள்ளி நகை ஆடியதே இதற்குச் சான்று.

பாரதிக்கு இதில் நம்பிக்கை இல்லை என்பதை அவர் பாடல்கள் மூலம் காட்டிவிட்டார். இக்கொள்கையைப் பற்றிப் பாடாமல், பரிகசிக்காமல் நாசசூக்காக — வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல — ஆரிய என்ற சொல்லை ஏராளமான பாடல்களில் பயன்படுத்தி அதன் உண்மைப் பொருளைக் காட்டிவிட்டார். அவர் பாடல்களில் எங்கு எங்கெல்லாம் ஆரிய என்ற சொல் வருகிறதோ அதுதான் வேதத்திலும், இதிஹாசத்திலும் கையாளப்பட்ட பொருள். வடமொழி நூல்களில் கணவனை, மனைவி “ஏ ஆர்ய!” என்று அழைப்பார். “ஐயா, மதிப்புக்குரியவரே, உயர் குணச் செம்மலே” என்பது அதன் பொருள். இன வெறிப் பொருளைப் புகுத்தியது வெள்ளைத்தோல் “அறிஞர்”களே.

mahakavi2

இதோ சில பாரதி பாடல்கள்:
1.தமிழ்த் தாய் பாடலில்……………..
ஆதி சிவன் பெற்று விட்டான் – என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தெ – நிறை
மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்

2.ஆன்ற மொழிகளினுள்ளே – உயர்
ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்

ஆரிய நாடு எது?
3.பாரத தேவியின் திருத் தசாங்கம் பாடலில்…….
பேரிமய வெற்பு முதல் பெண் குமரி ஈறாகும்
ஆரிய நாடென்றே அறி

ஆரியர் யார்?

4.சங்கு என்ற பாடலில்………………
பொய்யுறு மாயையை பொய்யெனக் கொண்டு
புலன்களை வெட்டிப் புறத்தில் எறிந்தே
ஐயுறவின்றிக் களித்திருப்பவராவர்
ஆரியராம் என்று இங்கூதேடா சங்கம்!

5.பாஞ்சாலி சபதப் பாடலில்…………………
ஆரிய வேல் மறவர் – புவி
யாளுமோர் கடுந்தொழில் இனிதுணர்ந்தோர்
சீரியல் மதிமுகத்தார் – மணித்
தேனிதழ் அமுதென நுகர்ந்திடுவார்

6.வாழிய செந்தமிழ் பாடலில்…………………..
அறம் வளர்ந்திடுக ! மறம் மடிவுறுக!
ஆரிய நாட்டினர் ஆண்மையோடியற்றும்
சீரிய முயற்சிகள் சிறந்து மிக்கோங்குக!

maha3

பாரத மாதா= ஆரிய மாதா
7.பாரத மாதா என்ற பாடலில்…………………….
முன்னை இலங்கை அரக்கர் அழிய
முடித்தவில் யாருட வில்? – எங்கள்
அன்னை பயங்கரி பாரத தேவி நல்
ஆரிய ராணியின் வில்

சித்தமயம் இவ்வுலகம் உறுதி நம்
சித்தத்தில் ஓங்கிவிட்டால் – துன்பம்
அத்தனையும் வெல்லலாம் என்று சொன்ன சொல்
ஆரிய ராணியின் சொல்

8.தாயின் மணிக்கொடி என்ற பாடலில்………………….
அணி அணியாயவர் நிற்கும் – இந்த
ஆரியக் காட்சி ஓர் ஆனந்தம் அன்றோ?

bharathy and Chelamma

9.சத்ரபதி சிவாஜி என்ற பாடலில்…………… (மொகலாயர் பற்றி)
பாரதப் பெரும்பெயர் பழிப்பெயராக்கினர்
சூரர்தம் மக்களைத் தொழும்பராய்ப் புரிந்தனர்
வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம்
ஆரியர் புலையருக்கு அடிமைகளாயினர்

ஆரிய! நீதி நீ அறிகிலை போலும்!
பூரியர் போல் மனம் புழுங்குறலாயினை
அரும்புகழ் தேய்ப்பதும் அனாரியத் தகைத்தும்
பெரும்பதத் தடையுமாம் பெண்மை எங்கெய்தினை?
பேடிமை அகற்று! நின் பெருமையை மறந்திடேல்!
ஈடிலாப் புகழினோய் எழுகவோ எழுக
(பகவத் கீதையில் கண்ணன் சொன்ன பகுதி)

bharati kutty

10.லாஜபதிராயின் பிரலாபம் என்ற பாடலில்………………..
சீக்கரெனும் எங்கள் விறற் சிங்கங்கள் வாழ்தருநல்
ஆக்கமுயர் குன்றம் அடர்ந்திருக்கும் பொன்னாடு
ஆரியர் பாழாகா தருமறையின் உண்மை தந்த
சீரியர் மெய்ஞான தயானந்தர் திருநாடு

(சீக்கியரை சிங்கங்கள் என்றும், பஞ்சாபில் ஆரிய சமாஜத்தை நிறுவிய தயானந்த சரஸ்வதி வேதத்தின் உண்மைப் பொருளை தந்தார் என்பதையும் பாராட்டும் பாடல் இது)

இவ்வாறு பாரதி பாடல் முழுதும் ‘ஆரிய’ என்ற சொல்லை அதன் உண்மையான ,மேன்மைப் பொருளில் பயன் படுத்தியுள்ளார். ஆரிய- திராவிட இனவெறிக் கொள்கைக்கு பாரதி கொடுத்த சரியான அடி இது என்றால் எதிர்ப்பொரும் உளரோ?

மேன்மை கொள் ஆரிய நீதி விளங்குக உலகமெலாம்!!

kutti bharathi

என்னுடைய முந்தைய பாரதி பற்றிய கட்டுரைகள்:
1.மனம் ஒரு பெண், மனம் ஒரு புலி (Posted on 17-2-2014)
2.Quotes from the Greatest Tamil Poet Bharati (11-12-2013)
3.வாழ்க்கையில் வெற்றி பெற பாரதி அட்வைஸ் 10-12-2013
4.பாரதியுடன் 60 வினாடி பேட்டி (16-1-2012 & 10-9-2014)
5.பாரதியின் பேராசை (Posted on 27-12-2012)
6.பாரதி பாட்டில் பகவத் கீதை (Posted on 10-12-2012)
7.பேய்கள் பற்றி பாரதி & விவேகாநந்தர் (Posted on 29-11- 2012)
8.சொல்லில் உயர்வு தமிச் சொல்லே (Posted on 10-9-2012)
9.பாரதி பாட்டில் பழமொழிகள் (Posted on 25-6-2012)
10.உங்களுக்கு வள்ளுவனையும் பாரதியையும் தெரியுமா? (27-3-2014)
11.காலா என் காலருகே வாடா! ஞானிகளின் ஞானத் திமிர் (23-3-2014)

எனது சகோதரர் ச.நாகராஜன் எழுதியவை
1.பாரதி தரிசனம் (Posted on 10-12-2013)
2.பாரதி தரிசனம்– பகுதி 2 ( Posted on 12-12-2013)