பாவங்களும் அஜீரணமும்: மஹாபாரதத்தில் விசித்திர உவமை (Post No.3659)

2fc99-hell2b3

நரகக் காட்சிகள்

Written by London swaminathan

 

Date: 22 FEBRUARY 2017

 

Time uploaded in London:- 9-02  am

 

Post No. 3659

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

புறநானூற்றில் பாபம்

 

ஆன்முலை அறுத்த அறனிலோர்க்கும்

மாண் இழை மகளிர் கருச் சிதைத்தோர்க்கும்

பார்ப்பார்த் தப்பிய கொடுமையோர்க்கும்

வழுவாய் மருங்கில் கழுவாயும் உள என

நிலம் புடை பெயர்வது ஆயினும், ஒருவன்

செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் என

அறம் பாடின்றே — ஆயிழை கணவ!

புறநானூறு 34, ஆலத்துர்ர் கிழார் பாடியது

 

 

இது வால்மீகி சொன்ன விஷயம் (4-34-12); தமிழில் ஆலத்தூர் கிழார் தந்துள்ளார்.

 

இதன் பொருள்:

ஆராய்ந்து எடுத்த அணிகளை அணிந்த மஹாராணியின் கணவனான சோழன் ((குளமுற்றத்துத் துஞ்சிய)) கிள்ளிவளவனே!

பசுவில் பாலைப் பெறாதபடி அதைக் கொன்று தின்பது பாவம்;

பெண்கணிளின் கருவை அழித்தல் பாவம்;

அந்தணர்களுக்குத் தீங்கு செய்வது பாவம்;

இதற்கெல்லாம் கூட பரிகாரம் உண்டு; நீ தப்பிக்கலாம்;

ஆனால் பெரிய பூகம்பமே ஏற்பட்டு உன் சோழ நாடே அழிந்தாலும்

ஒருவன் செய்த உதவியை மறந்து அவனுக்குத் தீங்கு செய்தால் அதற்குப் பரிகாரமே இல்லை; கட்டாயம் நரகத்தில் விழுவாய் என்று தர்ம சாஸ்திரங்கள் சொல்லுகின்றன (புறம்.34)

வள்ளுவனும் இதையே சொன்னான்:

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்நன்றி கொன்ற மகற்கு ( திருக்குறள் 110)

 

பிராமணர்களுக்குத் தீங்கு செய்யாதே ; உன் முன்னோர்கள் யாரும் செய்ததில்லை என்று சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தானை தாமப்பல் கண்ணனாரும் (புறம்.43) எச்சரிக்கிறார்.

c6295-hell2b2

நரகக் காட்சிகள்

பாவமும் அஜீர்ணமும்

ஒரு பாவத்தின் பலன், பசுவின் பால் போல உடனே கிடைக்காது; ஒருவன் வாழ்க்கையிலேயே அது தெரியும்; அப்படியில்லாவிடில் அது அவனுடைய பிள்ளைகள், பேரக்குழந்தைகளிடம் காணப்படும்; அதிகம் சாப்பிட்டவனின் வயிற்றில் உணவு அஜீரணமாகாமல் உட்கார்ந்துகொண்டு, எப்படித் தொல்லை கொடுக்குமோ அப்படி அதன் விளைவுகள் கட்டாயமாகத் தெரியும் (மஹாபாரதம் 1-75-2)

 

நா தர்மஸ் சரிதோ ராஜன் சத்ய: பலதி கௌர் இவ

புத்ரேஷு வா நப்த்ர்ஷு வா ந சேத் ஆத்மனி பஸ்யதி

பலதி ஏவ த்ருவம் பாபம் குருபுக்தம் இவோதரே

 

திருக்குறளில் பாபம்

 

திருவள்ளுவர் பாப, புண்ணியத்துக்காக ஒரு அதிகாரமே (வினைத் தூய்மை) ஒதுக்கிவிட்டார். அதிலிருந்து சில குறள்கள்:

 

ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் செய்யற்க

சான்றோர் பழிக்கும் வினை (குறள் 656)

 

அம்மாவே பசிக்கொடுமையில் வாடினாலும் பணம் சேர்க்க பாபத் தொழில்களைச் செய்யாதே

 

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்

பிற்பயன் நற்பாலவை (659)

 

பிறரை அழவைத்து பிடுங்கிய பணம் எல்லாம், உன்னை அழ அழச் செய்துவிட்டு ஓடிப்போகும். உனக்கு பொருளே நஷ்டமானாலும், புண்ணியம் செய்தால் அது பிற்காலத்தில் பலன் தரும்

 

இடுக்கட் படினும் இளிவந்த செய்யார்

நடுக்கற்ற காட்சியவர் (654)

 

தனக்குத் துன்பமே வந்தாலும், அறிவுள்ளவர்கள், பாப காரியங்களைச் செய்யமாட்டார்கள்

 

எற்றென்று இரங்குவ செய்யற்க  செய்வானேல்

மற்றன்ன செய்யாமை நன்று (655)

ஐயோ, இப்படிச் செய்துவிட்டேனே என்று பின்னர் வருத்தப்படும் செயல்களைச் செய்யாதே; அப்படியே செய்துவிட்டாலும் மீண்டும் அதே பாபத்தைச் செய்யாதே

 

கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்

முடிந்தாலும் பீழை தரும் (658)

 

பெரியோர்கள், செய்யக்கூடாது என்று ஒதுக்கிய செயல்களைச் செய்யக்கூடாது; அப்படியே செய்தாலும் அது முடிவு பெறாது; முடிந்தாலும் துன்பத்தையே தரும்.

03f2f-hell2band2bheaven2b1

சுவர்க்கக் காட்சிகள்

பகவத் கீதையில் பாபம்

பகவத் கீதையில் பாபம் பற்றி பல இடங்களில் கண்ணன் கூறுகிறார். வால்மீகி ராமாயணத்திலும் வால்மீகி பேசுகிறார். அவற்றைத் தனியாகக் காண்போம்.

 

பொதுவாகப், பெண்களைக் கொல்லுதல் பாபம்; புறமுதுகு காட்டுபவனைக் கொல்வது பாவம்; செய்நன்றி மறப்பது பாவம் என்ற கருத்துக்கள் இமயம் முதல் குமரி வரை உள்ளன.

 

 

from my earlier post of 5 March 2016:—

 

பஞ்ச மாபாதகம்

 

அக்னிதோ கரதஸ்சைவ சஸ்த்ரபாணி: தனாபஹ:

க்ஷேத்ரதாராபர்ஹதா ச பஞ்சைதே ஆததாயின:

 

அக்னிதா- மற்றவன் சொத்துக்கு தீ வைப்பவன்

கரத-மற்றவர்களுக்கு விஷம் வைப்பவன்

சஸ்த்ரபாணி- ஆயுதமில்லாதவனைக் கொல்பவன்

தனாபஹ:- மற்றவன் பணத்தைத் திருடுபவன்

க்ஷேத்ரதராபஹர்தா- மற்றவன் மனைவியை அபஹரிப்பவன்

 

மனுவும் (11-54) இது பற்றிக் கூறுகிறார்:-

பிரமஹத்யா சுராபானம் அஸ்தேயம் குர்வங்கனாகம:

மஹந்தி பாதகான்யாஹுஸ்த சம்சர்கி ச பஞ்சம:

பிரம்மஹத்ய- பிராமணனைக் கொல்லுதல்

சுராபானம்- மது பானம் அருந்தல்

ஸ்தேயம்- திருடல்

குர்வங்க நாகம:- குருவின் மனையிடம் தவறாக நடத்தல்

சம்சர்கி- மெற்கண்ட நாலு பேருடன் சஹவாசம்

 

பஞ்ச கர்ம சண்டாளர்கள்

 

(செய்கையினால் சண்டாளன் நிலையை அடைபவன்)

நாஸ்திக: பிசுனஸ்சைவ க்ருதக்னோ தீர்கதோஷ:

சத்வார:கர்மசண்டாளா ஜன்மஸ்சாபி பஞ்சம:

 

 

நாஸ்திக: – கடவுள் நம்பிக்கையற்றவன்

பிசுன: – பிசிநாரி/கெட்டவன்

க்ருதக்ன: – நன்றிகெட்டவன்

தீர்க தோஷக: -பாபி (பாவாத்மா)

ஜன்மத: – பிறப்பினால் சண்டாளன்

 

–subham–

 

திருக்குறளில் மறுபிறப்புத் தத்துவம்! -2 (Post No.3266)

1935-valluvar

Written by S. NAGARAJAN

Date: 19 October 2016

Time uploaded in London: 6-31 AM

Post No.3266

Pictures are taken from various sources; thanks

 

Contact :– swami_48@yahoo.com

 

 

ஹிந்துக்களின் மறுபிறப்புக் கொள்கையை வலியுறுத்தும் வள்ளுவர், பிறப்பு ஏன் ஏற்படுகிறது, அதை எப்படி அறுப்பது என்பதையெல்லாம் தெளிவாகச் சொல்கிறார். மறுபிறப்புத் தத்துவம் பற்றிய இறுதிக் கட்டுரை இது. முந்தைய கட்டுரையைப் படிக்காதவர்கள் தயவுசெய்து அதைப் படித்து விட்டு பின்னர் தொடரவும்.

 

திருக்குறளில் மறுபிறப்புத் தத்துவம்! -2

ச.நாகராஜன்

 

punul-valluvar

திருக்குறளில் திருவள்ளுவர் ஹிந்துக்களின் மறுபிறப்புத் தத்துவத்தை மட்டும் சுட்டிக் காட்டி நின்று விடவில்லை. பிறவிச் சுழல் ஏன் ஏற்படுகிறது, அதை எவ்வாறு போக்குவது என்பதையெல்லாம் விரிவாக விளக்குகிறார்.

ஒரு பெரிய மஹரிஷியின் போதனைகளாக அவை அமைந்துள்ளன.

 

 

தத்துவஞானிகள் பெரிய விளக்கவுரைகளில் பல நாட்கள் பேசுவதையெல்லாம் அவர் சூத்திர வடிவில் தந்து விடுகிறார்.

ஆகவே தான் உபநிடத, வேதத்திற்கு சரி நிகராக தமிழ் மறை போற்றப்பட்டு வருகிறது.

 

 

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி                   விழிப்பது போலும் பிறப்பு       (குறள் 339)

 

உறங்குவதும் விழிப்பதும் இயல்பாய் உயிருக்கு அமைவது போல சாக்காடும் பிறப்பும் மாறி மாறி வருகின்றன.

எவ்வளவு பிரம்மாண்டமான ஒரு தத்துவத்தை மிக சுலபமாக இரண்டே இரண்டு வரிகளில் தந்து விடுகிறார்!

 

பிறப்பு என்பது துன்பம்.  எதையாவது மனிதப் பிறவியில் வேண்டி நீ விரும்பினால் அது பிறவாமையாக அமைய வேண்டும்.. மற்ற எதையும் விரும்பும் அவாவை அறுத்து விட்டால் அது  தானே வரும். என்கிறார் அவர். குறளைப் பார்ப்போம்.

 

 

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை  மற்றது

வேண்டாமை வேண்ட வரும்       (குறள் 362)

 

பிறவிச் சுழலிலிருந்து ஏன் விடுபட வேண்டும்?

அதற்கு பதிலையும் அழகாகத் தருகிறார் இப்படி!

 

 

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்                                                 இறைவனடி சேராதார்        (குறள் 10)

 

 

இரகசியம் புரிகிறது இப்போது. பிறவிச் சுழலிலிருந்து விடுபட்டால் தான் இறைவன் அடியைச் சேர  முடியும்.

இல்லையேல் இல்லை தான்!

 

 

பிறப்பை அறுப்பது எப்படி? அதற்கும் வழியைச் சொல்கிறார்.

முதலில் பிறப்பை வேண்டாதவனின் இயல்பை இப்படிக் கூறுகிறார்:

 

 

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்

உற்றார்க்கு உடம்பும் மிகை    (குறள் 345)

 

 valluvar-iyengar

பிறப்பறுத்தலை மேற்கொண்ட ஒருவனுக்கு அதற்கு க்ருவியாக இருக்கும் அவன் உடம்புமே மிகை தான்! அதற்கு மேல் உலகத் தொடர்பு எதற்காக?

 

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று

நிலையாமை காணப் படும்    (குறள் 349)

 

 

ஒருவன் இருவகைப் பற்றையும் அறுத்து விட்ட உடனேயே அப்பற்று அவனது பிறப்பை அறுக்கும். அது அறாத போது பிறந்து இறந்து வருகின்ற நிலையாமை காணப்படும்.

 

பிறப்பு என்பது என்ன என்பதை வரையறுக்கும் குறளையும் வள்ளுவர் தந்து விடுகிறார்:

 

 

பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணரும்                     மருளான் ஆம் மாணாப் பிறப்பு     (குறள் 351) 

 

மெய்ப்பொருள் இல்லாதவற்றை மெய்ப்பொருள் என்று உணரும் விபரீத உணர்வால்  தான் இன்பம் இல்லாத பிறப்பு ஏற்படுகிறது.

 

ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்

பேர்த்துள்ள வேண்டாப் பிறப்பு    (குறள் 357)

 

உபதேசப் பொருளை ஒருவன் ந்னகு ஆராய்ந்து முதல் பொருளை உணருவானாயின், மீண்டும் பிறப்புள்ளதாக நினைக்க வேண்டாம்.

 

பிறப்பு என்னும் பேதைமை நீங்கச் சிறப்பு என்னும்

செம்பொருள் காண்பது அறிவு   (குறள் 358)

 

பிறப்பிற்கு காரணமாகிய பேதைமை நீங்க சிறப்பு என்னும் செம்பொருளைக் காண்பதே அறிவாகும்.

 

பிறப்பிற்குக் காரண்மாக எல்லா உயிருக்கும் அமைவது எது?

இரகசியத்தை வெட்ட வெளிச்சமாக்குகிறார் வள்ளுவர்.

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்

தவாஅப் பிறப்பு என்னும் வித்து   (குறள் 361)

எல்லா உயிர்களுக்கும் எல்லாக் காலத்தும் விடாமல் வருகின்ற பிறப்பிற்குக் காரணம் அவா என்று சொல்லுவர் நூலோர்

 valluvar-gold

முத்தான ஒன்பது குறள்கள்!

பிறப்பிற்குக் காரணம் அவா.

அது நீங்க செம்பொருள் காண்பது அறிவு.

 

அது நீங்க பெரியோரின் உபதேச நெறிகளை ஓர்ந்து உணர். அறி!

 

மெய்ப்பொருள் இல்லாதவற்றை மெய்ப்பொருள் என்று நினைக்கும் மயக்கத்தினாலேயே பிறப்பு ஏற்படுகிறது.

இருவகைப் பற்றையும் அறுக்கும் ஒருவனுக்கு அந்தப் பற்றே பிறப்பை அறுத்து விடும்.

 

பிறப்பு வேண்டாதவனுக்கு உடம்பே மிகை தான்.

பிறவிப் பெருங்கடலைக் கடந்தவனே இறைவன் அடி சேர முடியும்.

 

இந்த உலகில் நீ  ஒரே ஒன்றை மட்டும் வேண்ட விரும்பினால் பிறவாமையை வேண்டு!

ஏனெனில் பிறப்பும் இறப்பும் தூங்குவதும் விழிப்பதும் போலத் தான்!

 

சிறந்த தத்துவஞானியான ம்ஹரிஷி வள்ளுவரின் பிறப்பறுக்கும் உபநிடத மொழிகளைத் தொகுத்துப் பார்க்கும் போது வியப்பும் பிரமிப்பும் மேலிடுகிறது.

 

இரகசியத்திற்கெல்லாம் மேலான இரகசியத்தை தெளிவாக எளிய பாக்களில் தருகிறார் வள்ளுவர்; அதை அமிழ்தினும் இனிய தமிழில் பெறுகிறோம் நாம்!

 

எவ்வளவு பாக்கியசாலிகள்!

 

ஹிந்துப் பண்பாட்டின் ஆணிவேரை இதை விட வேறு யாரால் இவ்வளவு சிறப்பாக சூத்திர வடிவில் தர முடியும்.

வாழ்க வள்ளுவர், வாழ்க தமிழ்!

****************