திருக்குறளில் நெய்யப்பட்டிருக்கும் சொற்களும் கருத்தும்! (Post No.10,604)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,604
Date uploaded in London – – 28 JANUARY 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

திருக்குறள் அமுதம்

திருக்குறளில் நெய்யப்பட்டிருக்கும் சொற்களும் கருத்தும்!

ச.நாகராஜன்
உலகில் எந்த மொழியிலும் காண முடியாத அற்புதமான நூல் திருக்குறள் என்பதற்கு ஏராளமான காரணங்கள் உண்டு.
அவற்றில் ஒன்று திருவள்ளுவர், தேர்ந்தெடுத்த சொற்களைக் கொண்டு தன் நூலை அழகிய ஆடை தயாரிப்பவன் நெய்வது போல நெய்திருப்பது தான்!

ஒரு குறளுக்கு விளக்கம் இன்னொரு இடத்தில் இருக்கும்.
ஒரே சொற்றொடரின் விளக்கம் இன்னொரு குறளில் தெரிய வரும்.

ஒரு குறளின் கருத்து இன்னொரு குறளில் வலியுறுத்தப்படும்.
ஒரு குறளில் சொல்லப்பட்டிருக்கும் கருத்திற்கான காரணம் இன்னொரு குறளில் வரும்.
இப்படி ஏராளமான அழகிய வடிவமைப்பைப் பார்க்கும் போது படைப்பாற்றலின் உச்சகட்டத் தலைமைத் தன்மை கொண்ட, தகை சால் தமிழ் மொழியின் வலிமை உணர்ந்த, ஒருவரால் மட்டுமே இப்படி ஒரு நூலை யாத்திருக்க முடியும் என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

சில எடுத்துக்காட்டுகளை இங்கு பார்ப்போம்.
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை என்று குற்றங்கடிதல் அதிகாரத்தில் கூறுகிறார். (குறள் எண் 439)
ஏன் தன்னை வியக்கக் கூடாது?

பெருமை என்ற அதிகாரத்தில் 978ஆம் குறளில் விடை கிடைக்கிறது.
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.
பெருமைக் குணம் என்பது எப்போதும் பணிந்து நடப்பதே. சிறுமை என்பது தன்னை வியந்து பாராட்டிக் கொள்வது தான்.

புல்லறிவாண்மை என்ற அதிகாரத்தில் 843வது குறள் இது:
அறிவிலார் தாம் தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது

அறிவில்லாதவர்கள் தமக்குத் தாமே செய்து கொள்ளும் துன்பத்தைப் பகைவர்களாலும் கூடச் செய்ய முடியாது.

பீழிக்கும் பீழை என்ற அருமையான சொற்றொடருக்கு அர்த்தம் துன்பத்தில் துன்பம் என்பதாகும்.

இதே துன்பத்தில் துன்பம் என்ற சொற்றொடரை அவா அறுத்தல் அதிகாரத்தில் 369ஆம் குறளில் காண்கிறோம்:

இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்

ஒருவன் ஆசை என்னும் துன்பத்துள் துன்பம் கெடும்படி ஒழுகக் கற்றுக் கொண்டால் அவனுக்கு வாழ்க்கையில் இன்பம் இடையறாது வந்து குவியும்.
பீழிக்கும் பீழை, துன்பத்துள் துன்பம், இடையறா இன்பம் ஆகிய சொற்றொடரையும் அவற்றின் பிரயோகத்தையும் நினைத்து நினைத்து மகிழ முடிகிறது.

மரத்தின் நுனியை ஒரு குறளில் காண்பிக்கும் வள்ளுவர் மரத்தின் அடியை இன்னொரு குறளில் காண்பிக்கிறார்.

வலியறிதல் அதிகாரத்தில் வரும் 478வது குறள் இது.
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதியாகி விடும்.

ஒரு மரக்கொம்பின் நுனியில் ஏறி நிற்பவர் அதையும் கடந்து தன் மனக்கிளர்ச்சியால் இன்னும் மேலே செல்ல நினைப்பாராயின் அந்த ஊக்கம் அவரின் உயிருக்கு இறுதியைத் தான் கொண்டு தரும்.

இனி குடிசெயல்வகை அதிகாரத்தில் வரும் 1030 குறளைக் காண்போம்.
மரத்தின் நுனியைக் கண்ட நாம் இங்கு மரத்தின் அடியைக் காண் முடிகிறது.
இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
நல்லான் இல்லாத குடி

பக்கத்திலே இருந்து தாங்கும் ஆள் இல்லாது போனால் துன்பம் என்னும் கோடரி அடிமரமாகிய குடிமரத்தை வெட்டும். அதனால் குடியே சாய்ந்து கிழே விழுந்து விடும்.

இப்படி ஒரு தொடர் இயைபை குறளில் மட்டுமே காண முடியும்.

குறளில் உள்ள சொற்கள் மொத்தம் 4310. இப்படி ஒவ்வொரு சொல்லாக, கருத்தாக எடுத்துக் கொண்டு குறளின் இதர பகுதிகளை சற்று ஊன்றிக் கவனிக்க ஆரம்பித்தால் வள்ளுவர் சொல்லும் கருத்தாழத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

ஒரு ஆயுள் காலப் படிப்பல்லவா திருக்குறள் படிப்பு!