
WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN
Post No. 8960
Date uploaded in London – –23 NOVEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
23-11-2020 திங்கள்கிழமையன்று லண்டனிலிருந்து இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பப்பட்ட ஆலயம் அறிவோம் உரை.
ஆலயம் அறிவோம்!
வழங்குவது பிரஹன்நாயகி சத்ய நாராயணன்.

வெற்றிவேல் முருகனுக்கு ஹரோஹரா
திருச்செந்தூர் வேலனுக்கு ஹரஹரோஹரா
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறும் தலம் அறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடாக அமையும் திருச்செந்தூர் ஆகும்.தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இந்தத் தலம் சென்னையிலிருந்து சுமார் 600 கிலோமீட்டர் தூரத்திலும் திருநெல்வேலியிலிருந்து 55 கிலோமீட்டர் தூரத்திலும் மதுரையிலிருந்து 182 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது.
‘கயிலை மலை அனைய செந்திற் பதி வாழ்வே’ என அருணகிரிநாதர் திருப்புகழில் குறிப்பிடுவதால், இது கயிலை மலைக்கு நிகர் என்பதை அறிகிறோம். திருச்செந்தூரில் அருணகிரிநாதர் பாடி அருளிய, தித்திக்கும் 83 திருப்புகழ்ப் பாடல்கள், இந்தத் தலம் பற்றிய அரிய செய்திகளைத் தருகின்றன.
சங்க இலக்கியத்தில் திருமுருகாற்றுப்படை, புற நானூறு, அகநானூறு,தொல்காப்பியம், சிலப்பதிகாரம் உள்ளிட்ட நூல்களில் இந்தத் தலம் குறிப்பிடப்படுவதால், இது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அடியார்களால் வழிபடப்பட்டு வந்த தலம் என்பது தெரிகிறது.
ஆறுபடை வீடுகளில் இந்தத் திருத்தலம் ஒன்று மட்டுமே கடற்கரைத் தலமாக அமைகிறது. மற்ற தலங்கள் குன்றின் மேல் முருகன் குடியிருந்து அருளும் தலங்களாகும்.

இதைப் பற்றிய புராண வரலாறு பிரமிக்க வைக்கும் ஒன்று.
தேவர்களைக் கொடுமைப் படுத்தி வந்தான் சூரபத்மன் என்னும் கொடிய அசுரன். அவனை அழிக்கும்படி தேவர்கள் சிவபிரானிடம் முறையிட அவர் அருள் கொண்டு தன் நெற்றிக் கண்ணைத் திறந்து ஆறு பொறிகளை உருவாக்கினார். அந்த ஆறு பொறிகளே முருகன் திருவடிவமாயிற்று, சிவபிரான் சூரபத்மனை அழிக்க உத்தரவிட, அதையேற்ற முருகப்பிரான் இத்தலத்திற்கு வந்தார். அப்போது இங்கு வியாழ பகவான் தவமிருந்தார்.
அவரிடமிருந்து சூரபத்மனைப் பற்றிய அனைத்தையும் அறிந்து கொண்ட முருகப்பிரான், தனது சேனாபதியான வீரபாகுவை, சூரபத்மனிடம் சென்று அவனைப் பணியச் செய்ய தூதனுப்பினார். கொடிய அசுரனான அவன் கேட்கவில்லை. உடனடியாக, அவன் பல்வேறு அண்டங்களில் வைத்திருந்த படைகளையும், அவனையும் அழித்து தேவர்களின் குறையைத் தீர்த்தார் முருகன்.
வியாழ பகவான் அவரை இத்திருத்தலத்தில் எழுந்தருளுமாறு வேண்ட, முருகன் செந்தில் பதி உறை செந்தில் ஆண்டவனாக இங்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
இங்கு மூலவர் பாலசுப்பிரமணியன்.
ஆதி சங்கரர் சிறிது காலம் இங்கு தங்கி இருந்து, புஜங்க ஸ்தோத்திரம் பாடி அருளியுள்ளார். மஹரிஷிகள் சுகர், அகத்தியர் உள்ளிட்ட ஏராளமான ரிஷிகள் வழிபட்ட தலம் இது.
சூரபத்மனை வதம் செய்த சுப்ரமண்யர், தம்மைச் சூழ்ந்து நின்ற பரிவாரங்களுக்கு, தன் பன்னிரு கரங்களால், விபூதி பிரஸாதம் கொடுத்து அருளினார். பகவானின் பன்னிரு கரங்களின் ஸ்தானத்தைப் பன்னீர் இலை பெற்று, இன்று திருச்செந்தூர் இலை விபூதி என்று, பக்தர்களின் கையில் தெய்வ பிரசாதமாகக் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்தத் தலத்தில் கடல் ஸ்நானமும், நாழிக் கிணறு ஸ்நானமும் செய்வது மரபு.
மஹாபாரதம் தரும் அதிசயச் செய்தி முருகனைப் பற்றி ஒன்று உண்டு.
Cause and Effect எனப்படும் காரண காரியம் என்பதில் ஒரு செயலைச் செய்த பின்னரே, அதனால் ஏற்படும் விளைவு ஏற்படும். மற்ற தேவர்கள் போர்களுக்குச் செல்லும் போது ஜெய தேவதை அவர்களுக்குப் பின்னால் செல்லும். ஆனால் முருகன் போரிடச் சென்ற போது ஜெய தேவதை முருகனுக்கு முன்னால் சென்றது; வெற்றியை போரிடும் செயலுக்கு முன்பேயே, விளைவாக உறுதி செய்தது.
முருகன் இருக்கும் இடம் எங்கும் வெற்றி, எதிலும் வெற்றி என்பதாலேயே, வெற்றி வேலனைக் கொண்டாடி, அனைவராலும் வெற்றி பெற முடிகிறது.
கிழக்குப் பக்கம் கடல் அமைந்துள்ள படியால் திருச்செந்தூரில் முருகன் கிழக்குப் பார்த்து இருக்க, ராஜ கோபுரம் மேற்குப் புறத்தில் உள்ளது.
சீரலைவாய் என்று சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படும் இந்தத் தலத்திற்கு, ஜெயந்தி நகரம், செந்திலாபுரி, திருச்செந்தூர் என பல பெயர்கள் உண்டு.
விழிக்குத் துணை திரு மென் மலர்ப் பாதங்கள்
மெய்ம்மை குன்றா மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்
முன்பு செய்த பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும்
பயந்த தனி வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே
என அருணகிரிநாதர் சுருக்கமாக முருகனின் அருள் பெறும் வழியை உரைக்கிறார்.
காலம் காலமாக கோடானு கோடி பக்தர்கள் பயபக்தியுடன் வணங்கி வரும் திருச்செந்தூர் செந்திலாண்டவன் அனைவருக்கும் சர்வ மங்களத்தை தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
தோகை மேல் உலவும் கந்தன் சுடர்க் கரத்திருக்கும்
வெற்றி வாகையே சுமக்கும் வேலை
வணங்குவதே எமக்கு வேலை!
நன்றி. வணக்கம்.

tags- ஆலயம் அறிவோம், திருச்செந்தூர்,