திருப்பரங்குன்றம்- ஆலயம் அறிவோம் Part 29 (Post No.9615)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 9615

Date uploaded in London – – 17 May   2021          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 16-5-2021 அன்று ஒளிபரப்பான உரை!

பொன் இயல் கொன்றை பொறி கிளர் நாகம் புரிசடைத்

துன்னிய ஜோதி ஆகிய ஈசன் தொல் மறை

பன்னிய பாடல் ஆடலன் மேய பரங்குன்றை

உன்னிய சிந்தை உடையவர்க்கு இல்லை உறுநோயே.

திருஞானசம்பந்தர் திருவடி போற்றி!  

ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது முருகனின் அறுபடை வீடுகளில்  முதலாவது வீடாகத் திகழும் திருப்பரங்குன்றம் ஆகும். தமிழ்நாட்டில் உள்ள இந்தத் தலம் மதுரைக்கு தென்மேற்கே 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, 

            இந்தத் தலம் பற்றிய ஏராளமான புராண வரலாறுகள் உண்டு. தேவர்களின் துயர் தீர்க்க, சூரபத்மனை வதம் செய்தார் ஸ்ரீ சுப்ரமண்யர். அதனால் மனம் மிக மகிழ்ந்த தேவேந்திரன் தனது மகளான தெய்வயானையை முருகனுக்கு மணம் முடித்துத் தர எண்ணினான். தெய்வயானையை முருகன் திருமணம் செய்து கொண்ட தலம் இதுவே ஆகும். வடக்குப் பார்த்து முருகபிரான் தெய்வயானையுடன் திருமணக்கோலத்தில் இருந்து அருள் பாலிக்கிறார்.

இன்னொரு முக்கிய புராண வரலாறும் உண்டு. சிவபிரான் ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் உட்பொருளை பார்வதி தேவிக்கு உபதேசிக்கும் போது அதை முருகன் பார்வதி தேவியின் மடிமீது அமர்ந்து கேட்டார். முருகப்பிரான், பிரம்மனுக்கு பிரணவத்தை உபதேசம் செய்தாலும் கூட, அவர் சாஸ்திரப்படி குருவிடமிருந்து பிரணவத்தை முறையாக உபதேசம் பெற்றுக் கொள்ளவில்லை. இது சாஸ்திரத்திற்கு முரணானது. ஆகவே பரிகாரமாக முருகன் இங்கு வந்து தவம் செய்ய ஆரம்பித்தார். இதனால் மகிழ்ந்த அம்பிகையும் சிவபிரானும் இங்கு தோன்றி முருகனின் தவத்தைப் பாராட்டினர். சிவன் பரங்கிநாதர் என்றும் அம்பிகை ஆவுடைநாயகி என்றும் பெயர் பெற்றனர். அவர்கள் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயமும் திருப்பரங்குன்றத்தில் உள்ளது. இங்கு சென்று இவர்களை வழிபடுதல் ஐதீகமாகும்.

சுமார் 170 மீட்டர் உயரம் கொண்ட திருப்பரங்குன்றம் சிறிய மலையாகும். இந்த மலையே சிவலிங்கம் போல அமைந்திருப்பதால் மலையைத் தொழுவதே சிவபிரான் வழிபாடாக ஆகிறது.   

                                  இங்குள்ள மூலவருக்கு அபிஷேகம் நடைபெறுவதில்லை. வேலுக்கே அபிஷேகம் செய்யப்படுகிறது.                                                          கோவிலின் நுழைவாயிலில் இடதுபுறம் உள்ள கருப்பணசாமியை தரிசனம் செய்து விட்டுப் பின்னர் முருக தரிசனம் செய்வது மரபாகும். சரவணபொய்கையில் தீர்த்தத்தை எடுத்துக் கொண்டு பின்னர் கோவிலில் அமைந்துள்ள படிக்கட்டுகள் வழியே கர்பக்ருஹத்தை அடைய வேண்டும். இது ஒரு குகைக் கோவில் அதாவது மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட கோவில் இது. ஸ்ரீ சுப்ரமண்ய சுவாமி, துர்க்கை, கற்பக விநாயகர், சத்யகிரீஸ்வரர், பவளக்கனிவாய்ப் பெருமாள் ஆகிய ஐந்து சந்நிதிகள் இங்கு உள்ளன.

கோவிலின் நுழைவாயிலில் பத்து பெரிய கல் தூண்கள் உள்ளன. இங்கு அன்னபூரணி குகைக் கோவிலும் ஜேஷ்டா தேவிக்கான குகைக் கோவிலும் உள்ளன. ஏராளமான அற்புத சிற்பங்களும் இங்கு உள்ளன. மலையின் மீது ஜாக்கிரதையாக ஏறிச் சென்றால் அங்குள்ள காசி விஸ்வநாதரை தரிசிக்கலாம்.

இங்குள்ள வைத்தியன் கிணறு என்னும் தீர்த்தம் சிறப்பான புராண வரலாற்றைக் கொண்டதாகும். சுடுகாட்டில் வேலை செய்ததால் ஏற்பட்ட வெண்குஷ்டத்தை நீக்க வேண்டி அரிச்சந்திர மஹாராஜன் சிவனை நோக்கி வழிபட, திருப்பரங்குன்றத்தில் உள்ள பஞ்சாக்ஷர பாறையில் தவம் செய்யும் பராசர மஹரிஷியை தரிசிக்கும் படி, சிவன் கூறி அருள் பாலிக்கிறார். அதன்படியே பராசர மஹரிஷியை தரிசித்த அரிச்சந்திரன் அவரது சொல்படி இங்குள்ள வைத்தியன்கிணற்றில் நீராட தனது வெண்குஷ்டம் மறைந்து மகிழ்ச்சி அடைந்தார். இன்றும் கிரிவலம் வருவோர் இதில் நீராடி வருகின்றனர்.

திருவிளையாடல் புராணமும் திருப்பரங்குன்ற புராணமும் விவரிக்கும் சுவையான வரலாறு ஒன்று உண்டு. சங்கப் புலவர்களுள் தலையாய புலவரான நக்கீரர் சிவனையன்றி வேறு ஒருவரையும் பாடமாட்டேன் என்ற விரதம் கொண்டவர். அவருக்கு அருள் பாலிக்க நினைத்த முருகப்பிரான் தனது பூதகணங்களான உக்கிரன் மற்றும் அண்டாபரணன் ஆகியோரை அழைத்து, “நக்கீரர் தினமும் மதுரையிலிருந்து வந்து இங்கு சரவணப் பொய்கையில் நீராடி நம்மை தரிசிக்காமல் செல்கிறார். அவரை மலையின் முன்புறம் உள்ள குகையில் வைத்து கதவை மூடி விடுங்கள்” என்று உத்தரவிட்டார். ஒருநாள், நக்கீரர், சரவணப்பொய்கையில் நீராடி தீர்த்தக் கரையில் வழக்கம் போல சிவபூஜை செய்து கொண்டிருந்தார். நக்கீரரின் தபோ பலத்திற்கு அஞ்சிய பூதகணங்கள் ஒரு சிறிய உபாயத்தைக் கையாண்டனர். அங்கிருந்த அரசரமரத்தின் இலை ஒன்றைப் பாதி தண்ணீரிலும் பாதி கரையிலும் இருக்கும்படி அவர்கள் விடுத்தனர். அந்த இலையோ தண்ணீரில் விழுந்த பக்கம் மீனாகவும் தரையில் விழுந்த பக்கம் பக்ஷியாகவும் மாறி ஒன்றை ஒன்று இழுக்கத் தொடங்கியது. இதைப் பார்த்த நக்கீரர், ‘இது என்ன அதிசயம்’ என்று எண்ணி,சிவபூஜையைப் பாதியில் விட்டு விட்டு மீனும் பக்ஷியும் படும் வேதனையைத் தீர்க்கக் கருதி, அவ்விரண்டையும் பிரிப்பதற்காக அவற்றை இணைத்திருந்த நரம்பைக் கிள்ளினார். ஆனால் அவையோ துடிதுடித்து இறந்து விட்டன. உடனே பூதகணங்கள் அவரைப் பிடித்துக் குகையில் அடைத்தனர். செய்வதறியாது திகைத்த நக்கீரர் சிந்தித்தார். முருகப்பெருமானை பாடாததே இதற்கான காரணம் என்பதை அறிந்து கொண்டார். உடனே ‘உலகம்’ என்று ஆரம்பித்துக் ‘கிழவோனே’ என்று முடித்து திருமுருகாற்றுப்படையை இயற்றினார். இதனால் மகிழ்ந்த முருகன் தனது வேலால் அவர் இருந்த பாறையைக் கீறி அவரை விடுவித்தான். இந்தப் பாறைக்கு வேலெறி பாறை என்று பெயர்.  வைகாசி விசாகம் முருகன் அவதரித்த நன்னாள். இங்கு வைகாசி மாதத்தில் வெகு விமரிசையாக நடைபெறும் 10 நாள் உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பல்வேறு விதமான காவடிகளை எடுத்து வழிபடுகின்றனர்.                                                             

 இங்குள்ள மலையின் பின்புறம் சென்றால் வேறெங்குமே எளிதில் காண முடியாத வெள்ளை நிற மயில்களைக் காணலாம். காலையும் மாலையும் முருக பக்தர்கள் அவற்றிற்கு உணவு அளிக்கும் காட்சியும் மயில்கள் நடம் புரியும் காட்சியும் இன்றும் பார்க்க முடியும் கண்கொள்ளாக் காட்சியாகும். திருஞானசம்பந்த்ரும் சுந்தரரும் இங்கு வந்து முருகனை தரிசித்து ஒவ்வொரு பதிகம் பாடியுள்ளனர். இங்கு அருணகிரிநாதர் 14 திருப்புகழ் பாடல்களைப் பாடி முருகனைத் துதித்து மகிழ்கிறார். காலம் காலமாக லக்ஷக்கணக்கான பக்தர்கள் வழிபட்டு வரும் வள்ளி தெய்வயானை சமேத முருகப்பிரான் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்,                   கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய், குருவாய் வருவாய் அருள்வாய் குகனே! நன்றி, வணக்கம்!

***

tags-

 திருப்பரங்குன்றம்,  ஆலயம் அறிவோம் 29,