முருகனை முதலாகக்கொண்ட உத்தமர்: திருப்புகழ் தியாகராஜன் (Post No.8533)

WRITTEN BY S NAGARAJAN & S.SRINIVASAN  

Post No. 8533

Date uploaded in London – – –19 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

திருப்புகழ் தியாகராஜன் மலருக்காக எழுதப்பட்ட கட்டுரை இது!

பாடும் பணியே பணியாய் அருள்வாய்!

முருகனை முதலாகக்கொண்ட உத்தமர்: திருப்புகழ் தியாகராஜன்

சந்தானம் சீனிவாசன், சந்தானம் நாகராஜன்

இறைவன் சிலரை தன் புகழ் பாடவே அனைத்தையும் அருளி அதைத் திரும்பப் பெற்று மகிழ்வான் என்பதை அருணகிரிநாதர் தெளிவாகக் கூறியுள்ளார்:

யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும்

தாமே பெற வேலவர் தந்ததனால்

பூமேல் மயல் போய்அற மெய்ப்புணர்வீர்

நாமேல் நடவீர் நடவீர் இனியே (கந்தர் அநுபூதி)

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் வேலவன் தந்தது என்றால் அவர் வழியில் அவர் தந்த திருப்புகழைப் பாடுவது ஒன்றையே தன் பணீயாய்க் கொண்டவர் மதுரையில் வாழ்ந்த திருப்புகழ் தியாகராஜன் அவர்கள்.

எங்கள் குடும்ப நண்பர். எங்கள் தந்தையார் தினமணி திரு வெ;சந்தானம் மதுரையில் தினமணியின் பொறுப்பாசிரியராக ஐம்பதுகளில் மதுரை வந்தது முதலாக நெருங்கிப் பழகிய குடும்பங்களுள் திரு திருப்புகழ் தியாகராஜன் அவர்களின் குடும்பமும் ஒன்று.

பல்லாண்டு கால பழக்கத்தின் அடிப்படையில் அவர் வாழ்க்கை மொத்தத்தையும் ஒரே ஒரு சொல்லில் சுருக்கமாகச் சொல்லி விடலாம்.

முருகன் – இது தான் அந்த வார்த்தை.

காலையில் முருக நாமத்துடன் எழுந்து அனைத்து வேலைகளையும் செய்து இரவில் முருக நாமத்துடன் உறங்கச் செல்லும் உத்தமர் அவர்.

இடையில் உள்ள நேரத்தில் அலுவலகப் பணியை மதுரை கார்ப்பரேஷனில் சிறப்பாக ஆற்றியதோடு மட்டுமின்றி முருகன் புகழையும் பரப்பிக் கொண்டே இருப்பார்.

இதற்கான சரியான கருவியாக, அமைப்பாக இலங்கியது மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் தெற்கு ஆடி வீதியில் அமைந்திருக்கும் திருப்புகழ் சபை.

நூற்றுக்கணக்கான பேர்களுக்கு திருப்புகழைச் சொல்லித் தந்து, பாடுவதற்கு களம் அமைத்து அவர்கள் நலமுடன் வளமாக வழி வகுத்தது திருப்புகழ் சபை. திருப்புகழ் சபையின் மூச்சாக்த் திகழ்ந்தார் அவர்.

வெள்ளிக்கிழமை பஜனை என்றால் எந்த வேலையையும் உதறி விட்டு அங்கு அன்பர்கள் ஓடி வருவது வழக்கம்.

“அறிவால் அறிந்து உன் இருதாள் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே” என்றார் அருணகிரிநாதர்.

இரு தாள் இறைஞ்ச திருப்புகழ் சபையை செவ்வனே நடத்தி வந்த அவர் அறிவால் அறிவதற்கும் வழி வகுத்தார்.

தேன் சொட்டும் திருப்புகழை அவர் நா கொட்டும் மளமளவென்று.

அருணகிரிநாதரின் உள்ளக் கருத்தைத் தெள்ளத் தெளிவாக மடை திறந்த வெள்ளம் போல அனைவரின் உள்ளமும் கவரும் வண்ணம் சொற்பொழிவாற்றுவார்.

மதுரையை மையமாகக் கொண்டு அவர் பல ஊர்களிலும் ஆற்றிய திருப்புகழ் சொற்பொழிவுகள் பலரையும் கவர்ந்தன; திருப்புகழ் மர்மத்தை உணர்த்தின.

பலரது வாழ்க்கையையும் மாற்றி முன்னேற்றத்திற்கு வழி வகுத்தன.

கந்த சஷ்டி விழா என்றால் ஆன்மாவிற்கு முருக நாமமும் பௌதிக உடலுக்கு உகந்த அற்புதமான முருகனின் பிரசாதமும் இணைத்து திருப்புகழ் சபை தரும்.

ஆடி வீதியில் திரு முருக கிருபானந்தவாரியாரின் சொற்பொழிவை திரு தியாகராஜன் ஏற்பாடு செய்தார் என்றால் மதுரை மக்களுக்குக் கொண்டாட்டம் தான்!

பல்லாயிரக்கணக்கில் வடக்காடி வீதியும் தெற்காடிவீதியும் நிறைந்து எள் போட்டால் விழ் இடமின்றி நெருக்கமாக மக்கள் அமர்ந்திருப்பர்.

ஆன்மீக பிரச்சாரத்தை அவர் தலை மேல் பொறுப்பாக ஏற்று நடத்திய கால கட்டத்தையும் இங்கு சொல்ல வேண்டும்.

கொளுத்து புராணத்தை; அடி இறை பக்தர்களை என்று தீய சக்திகள் தலைதூக்கி விரித்தாடிய காலம் அது.

எங்கள் தந்தையார் உள்ளிட்டோர் ஆன்மீக காவ்லர்களுக்கு பக்க பலமாக இருந்தனர். தீய சக்திகளை தக்கபடி எதிர் நோக்கி வென்றனர்.

சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும் திருப்புகழ் நெருப்பென்றறிவோம் யாம்

என்று அருணகிரிநாதர் அருளியபடி பழித்தவ்ர் செயலற்றுப் போக இன்றும் திருப்புகழ் சபை மதுரை நகரில் தலைமை பீடமாக நின்று திருப்புகழை ஓதி வருகிறது. இதற்குக் காரணம் திரு திருப்புகழ் தியாகராஜன் என்பதை நினைக்காமல் இருக்க முடியாது.

எளிமையாக வாழ்ந்தவர். பணத்திற்கு மதிப்புக் கொடுத்தவரில்லை.

முருகனையே முதலாகக் கொண்டவர் என்பதோடு மற்றதை எல்லாம் பூஜ்யமாகக் கருதினார்.

அதனால் தான் முருகன்  ஒன்றாக  தான் முதலில் நின்று அவர் கருதிய பூஜ்யங்களை எல்லாம் , குடும்பம், உறவினர், நண்பர்கள், உலக மக்கள் ஆகிய  அனைத்தையும் ஒன்றுக்குப் பக்கத்தில் போடப்பட்ட பூஜ்யமாக ஆக்கி பத்து, நூறு, ஆயிரம், பதினாயிரம். லட்சம் என்று மதிப்பு மிக்கவையாக மாற்றி விட்டான்.

நல்ல நண்பர்கள், திருப்புகழையே உருகிப் பாடும் குடும்பம் என அவர் வாழ்க்கையை அமைத்தது முருகனின் அருளே அன்றி வேறு என்ன?

எங்கள் தந்தையார் எப்படிப்பட்ட முக்கிய வேலையாக இருந்தாலும் சரி, திரு தியாகராஜன் அழைப்பைத் தட்ட மாட்டார். கண்டிப்பாக திருப்புகழ் சபைக் கூட்டங்களில் உரையாற்றுவார். சபைக் கூட்டங்களில் ஆற்றப்பட்ட ஆன்மீக உரைகள் தினமணியில் வெளியாகி லட்சக்கணக்கான வாசகர்களைச் சேர்ந்து விடும்!

வெள்ளிக்கிழமை பஜனை என்றால் அனைவரும் அங்கு செல்வோம்.

குடும்ப சம்பந்தமான எந்த விஷயத்தையும் எங்கள் தந்தையாரிடம் அவர் பகிர்ந்து கொள்ளாமல் இருந்ததே இல்லை.

அதே போல எங்கள் தந்தையார் எங்களையும் அழைத்துக் கொண்டு அவர் வீட்டிற்குச் சென்று உரையாடி இரவு நெடுநேரம் கழித்து வீட்டிற்குத் திரும்பி வரும் அந்த நாட்கள்  மிக்க இனிமையானவை!

“பாடும் பணியே பணீயாய் அருள்வாய்”

என்ற வரத்தை வாங்கி வந்தவர் போலும், அவர்!

திருப்புகழ் குடும்பத்தைச் சேர்ந்த தன் மனைவி, மகன் கிருபாசங்கர், மருமகள் உள்ளிட்ட அனைவரையும் இந்தப் பணியில் ஈடுபடுத்தி திருப்புகழின் புகழை வானளாவ இன்றும் ஓங்கி வளர்வதற்கென இறைப்பணியில் ஈடுபடும்படி செய்து விட்டார்.

அன்னாரது நினைனைப் போற்றினாலேயே முருகனின் திருப்புகழ் நமக்கு வந்து சேரும். திருப்புகழ் சேர்வதோடு முருகனின் அருளும் நமக்குக் கிட்டும்.

வாழ்க அவர் புகழ்! வளர்க திருப்புகழ் தொண்டு!

TAG- திருப்புகழ் தியாகராஜன்

*******