சிவனை வழிபட மூன்று மருத மரங்கள் தேவியை வழிபட மூன்று மாணிக்கங்கள்
எழுதியவர்—லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்— 1000 (ஆயிரம்) தேதி—-25 ஏப்ரல் 2014
சிவன் எங்கே இருக்கிறான்? நம் உள்ளத்தில் இருக்கிறான் என்று ஞானிகள் சொல்லுவர். ஆனால் நாம் எளிதாகக் காண முடிவதில்லை. பாலில் வெண்ணை இருக்கிறது என்று பாட்டி சொன்னாள். குழந்தை போய் பாலை எட்டிப் பார்த்தது. வெண்ணையைக் காணவில்லை. விறகில் தீ இருக்கிறது என்று அம்மா சொன்னாள். குழந்தை போய் விறகைத் தொட்டுப் பார்த்தது. தீயும் இல்லை, சுடவும் இல்லை. பாட்டியும் அம்மாவும் சொன்னதைத்தான் அப்பர் பெருமானும் கூறினார். ஆனால் அந்த வெண்ணையையும் தீயையும் பார்க்க கடைய வேண்டும் என்ற ஒரு வரியையும் சேர்த்துக் கொண்டார். மத்ததைக் கொண்டு பாலைக் கடைந்தால் வெண்ணை மேலே வரும். அரணிக் கட்டையைக் கடைந்தால் தீப்பொறி பறக்கும். நம் உள்ளத்தைக் கடைந்தால் சிவன் வெளிப்படுவான்:
விறகில் தீயினன், பாலில் படு நெய் போல்
மறைய நின்றுளான் மாமணிச் சோதியான்
உறவுகோல் நட்டு உணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக் கடைய முன் நிற்குமே. (5-ஆம் திருமுறை, அப்பர்)
உள்ளத்தை எப்படிக் கடைவது. பல வழிகள் உண்டு. புனித யாத்திரை போனாலும் உள்ளம் கடையப்படும். தமிழ் கூறு நல்லுலகில் இதற்கு நமக்கு வழிகாட்டியவர்கள் தேவாரம் பாடிய மூவரும், திருவாசகம் பாடிய ஒருவரும், திவ்யப் பிரபந்தம் பாடிய பன்னிருவரும் ஆவர். அவர்களைத் தொடர்ந்து வந்த பக்தர் பட்டியலை எழுதி மாளாது. 300 தலங்களுக்கு மேல் பாத யாத்திரையாகச் சென்று சிவபெருமானையும், பெரிய பெருமாளையும் தரிசித்தனர்.
நமது காலத்தில் வாழ்ந்த காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் அவருடைய சொற்பொழிவில் மூன்று மருத மரங்களிடையே வாழும் சிவன் பற்றிக் கூறினார். அவருக்கு முன் வாழ்ந்த வள்ளலார் பெருமான் மூன்று மாணிக்கங்கள் இடையே வாழும் சிவ பெருமான் மற்றும் தேவியர் பற்றிக் கூறினார். இந்த ஆறு தலங்களையும் மனதால் தரிசித்து வருவோம்.
மூன்று தலங்களில் மருத (அர்ஜுன) மரம் தல விருட்சமாக இருக்கிறது.
ஸ்ரீசைலம்= மல்லிகார்ஜுனம்
திருவிடை மருதூர் = மத்யார்ஜுனம்
திருப்புடை மருதூர் = புடார்ஜுனம்
திருவிடை மருதூர் கோவிலில் உள்ள லிங்கம் மஹாலிங்கம். மத்ய அர்ஜுன என்றும் அழைப்பர் ( மத்யார்ஜுனம்= இடை மருது). அர்ஜுன என்பது மருத மரத்தின் சம்ஸ்க்ருதப் பெயர்.
மருத மரத்தின் தாவரவியல் பெயர் டெர்மினாலியா அர்ஜுனா. தமிழ்நாட்டில் திருவிடை மருதூர், திரு இடையாறு ஆகிய இடங்களில் இதுதான் தல மரம். ஆந்திரப் பிரதேசத்தில் ஸ்ரீசைலம் என்னும் புண்ய க்ஷேத்திரத்திலும் மருதமரமே. ஸ்ரீசைலத்தில் உள்ள இறைவன் மல்லிகார்ஜுனன். இங்கு மல்லைகை, அர்ஜுன (மருது) இரண்டும் சேர்ந்து உள்ளன. இது சக்தியும் சிவனும் இணை பிரியாதவர்கள் என்பதைக் காட்டும் சின்னம். அருகில் கிருஷ்ணா நதி பெருக்கெடுத்து ஓடுவதையும் காணலாம்.
Tiruppudaimarudur near Amabsamudram, Tirunelveli district.
ஆந்திரத்தின் ஒரு கோடியில் இருக்கும் மல்லிகார்ஜுனரையும் இடையே இருக்கும் (மத்யார்ஜுனம்) மஹாலிங்கத்தையும் தரிசித்தோம்.இன்னும் கொஞ்சம் தெற்கே போனால் தாமிரபரணி நதிக்கரையில் திருப்புடைமருதூர் (புடார்ஜுனம்) என்னும் க்ஷேத்திரத்தில் ஒரு மருதமரமும் ஈஸ்வரனும் உள்ளனர். நாறும்பூநாதர் என்பது இறைவனின் பெயர். கோமதியம்மன் என்பது இறைவியின் பெயர். இங்கு சாய்ந்த நிலயில் ஈஸ்வரன் காட்சிதருவது பற்றி பல கதைகள் உண்டு. திருநெல்வேலி மாவட்டத்தில் இத்தலம் உள்ளது.அற்புதமான நாயக்கர் கால ஓவியங்களும், வேலைப்பாடுடைய மரச் சிற்பங்களும் இங்கே இருக்கின்றன. ஆயிரம் ஆண்டுக்கும் மேலான பழமை உடைய கோவில்.
Source: Kanchi Paramachrya Talks
சென்னையில் மூன்று மாணிக்கங்கள்
மேலூர் = திருவுடை மாணிக்கம்
திருவொற்றியூர் = வடிவுடை மாணிக்கம்
திருமுல்லைவாயில் = கொடியிடை மாணிக்கம்
சென்னையில் மூன்று மாணிக்கங்கள் உண்டு. சென்னை அருகில் மேலூர் என்னும் திருத் தலத்தில் திருவுடை மாணிக்கம். திருவொற்றியூர் வடிவுடை மாணிக்கம். திருமுல்லை வாயில் கொடியிடை மாணிக்கம் என்பார்கள். நிறைநிலா நாளில் மூன்று மாணிக்கங்களையும் தரிசித்து மகிழும் வழக்கம் நெடுங்காலமாகத் தாய்மார்களிடையே இருந்து வருகிறது.. அங்கே உறையும் தேவியர் அருள் மழையில் நனைவர்.
திருஒற்றியூரில் பட்டினத்தாருக்கு பேய்க்கரும்பும் இனித்தது. சென்னையில் இருந்தபோது வள்ளலார் (இராமலிங்க சுவாமிகள்) நாடோறும் வழிபட்ட இடம் இது. வடிவுடை அம்பிகையை வள்ளலார் துதித்து வடிவுடைமாணிக்க மாலை அருளியிருக்கிறார்.
Beautiful Nayak period paintings of Tiruppudaimarudur
அதிலிருந்து ஒரு பாடல்:
திருநாள் நினைத் தொழும் நண்ணாள் தொழாமல் செலுத்திய நாள்
கருநாள் என மறை எல்லாம் புகலும் கருத்தறிந்தே
ஒருநாளினும் நிந்தனை மறவார் அன்பர் ஒற்றியில் வாழ்
மருநாள் மலர்க்குழல் மானே! வடிவுடைமாணிக்கமே!
உதவிய நூல்:வள்ளலார் வாழ்கின்றார்,கவிஞர் முருக சரணன், கலைவாணி வெளியீடு,சென்னை. ஆண்டு 1995.
திருமுல்லைவாயில் பதிகம்
கூடிய இலயம் சதிபிழை யாமைக்
கொடியிடை உமையவள் காண
ஆடிய அழகா அருமறைப் பொருளே
அங்கணா எங்குற்றாய் என்று
தேடிய வானோர் சேர்திரு முல்லை
வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
பாடிய அடியேன் படுதுயர் களையாய்
பாசுபதா பரஞ் சுடரே (7-ஆம் திருமுறை,சுந்தரர்)
Contact swami_48@yahoo.com
You must be logged in to post a comment.