திருவிளையாடல் புராணம் உண்மையே!

tv sirpam2

Part 1 of Thiru Vilaiyadal Puranam by s. swaminathan

எழுதியவர் : லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண் 855 தேதி 21 February 2014

பெரும்பற்றப்புலியூரார் (13 ஆம் நூற்றாண்டு) என்ற கவிஞரும் அவருக்குப்பின் வந்த பரஞ்சோதி முனிவர் (17 ஆம் நூற்றாண்டு) என்ற கவிஞரும் இரண்டு திருவிளையாடல் புராணங்களை எழுதினர். இவைகளை ஹாலாஸ்ய மஹாத்மியம் என்றும் சிவ லீலா வர்ணம் என்றும் சம்ஸ்கிருதத்தில் வேறு இரு வடமொழிக் கவிஞர்கள் மொழிபெயர்த்தனர். இது மதுரையில் சிவபெருமான் நடத்திய 64 லீலைகளை புரணக் கதை ரூபத்தில் வருணிக்கின்றன. இதில் பல பாண்டிய மன்னர்களின் பெயர்கள் வருகின்றன. அவை எல்லாம் வடமொழிப் பெயர்களாக இருப்பதாலும் அந்தப் பெயர்களில் கல்வெட்டுகள் கிடைக்காததாலும் இது உண்மை வரலாறா? கட்டுக கதையா? என்று ஐயப்பாடு நிலவி வந்தது. ஆனால் இது உண்மை வரலாறு என்பதற்கு இலக்கியச் சான்றுகள் இருக்கின்றன.

பாண்டியர் செப்பேடுகளிலும் சிலப்பதிகாரம், கல்லாடம் போன்ற நூல்களிலும் திருவிளையாடல் நிகழ்ச்சிகள் (குறிப்பிட்ட மன்னர்களின் பெயர்கள் இல்லாமல்) குரிப்பிடப்படுவதால் இவை 1500 ஆண்டுகளுக்கு முன்னரே பிரபலமாகிவிட்டதை அறிய முடிகிறது.

மதுரைக்கு வந்த திரு ஞான சம்பந்தர் பல அற்புதங்களைப் புரிந்து கூன் பாண்டியனை நின்ற சீர் நெடுமாறனாக்கியது தேவாரப் பாடல்களாலும் உறுதி செய்யப்படுகிறது. மதுரையிலும் மதுரையைச் சுற்றிலும் ஊர்ப்பெயர்கள் திருவிளையாடல் நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டவை. இவையெல்லாம் பொய்க் கதைகளால் உருவாக முடியாது. அப்படி உருவானாலும் காலத்தைக் கடந்து நிற்கமுடியாது. எல்லாவற்றுக்கும் மேலாக தமிழன் செய்த தவப் பயன் அப்பர் பாடிய தேவாரப் பாடல்களாகும். தருமி, பொற்கிழி வாங்கிய வரலாறும், நரியைப் பரியாக்கிய வரலாறும் அப்பரின் தேவாரப் பாடல்களில் வருகிறது.
tv sirpam3

Picture of Tiruvilayadal from Madurai Sri Meenakshi Temple.

திருவிளையாடல் புராணமென்ற திரைப்படம் சிவாஜி கணேசனின் சிறந்த நடிப்பால் பெரிய வெற்றி அடைந்தது. அதிலுள்ள அருமையான வசனங்களும் ஏ.பி நாகராஜனின் டைரக்சனும் மேலும் மெருகூட்டின. இதிலுள்ள கதைகளுக்கு மதுரையில் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. அன்னக் குழி மண்டபம், மேங்காட்டுப் பொட்டல் (மெய் காட்டிய), கால் மாறிய நடராஜர் உள்ள வெள்ளியம்பலம், புட்டுத் தோப்பு — இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இந்தக் கட்டுரையாளர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மதுரையில் வசித்ததால் ஆண்டு முழுதும் நடக்கும் திருவிளையாடல் திருவிழாக்களை நேரில் கண்டு ரசித்ததுண்டு.

வளையல் விற்ற திருநாளன்று வளையல் கொடுப்பார்கள். புட்டுத் திருவிழா அன்று புட்டு கிடைக்கும். நரியைப் பரியாக்கிய திருநாளன்று உண்மையான நரியைக் கொண்டுவருவார்கள். அதைப் பார்க்க கூட்டமாகச் செல்வோம். திக்கு விஜயம் அன்று மீனாட்சியும் சிவனும் நான்கு திக்குக்கும் பல்லக்கில் ஓட்டம் ஓட்டமாகச் செல்வார்கள். பல்லக்குகள் பின்னால் நாங்களும் ஓடுவோம். இவை எல்லாம் இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டும் மாறிக் கொண்டும் வருகின்றன. கால வெள்ளத்தை யாரால் தடுக்க முடியும்?

ther sirpangkal from potramarai

Wooden sculptures from the chariot (Ther); from Potramarai book.

இந்தப் புராணத்தில் கூறப்படும் பாண்டிய மன்னர்கள் உண்மையிலேயே மதுரையை அரசாண்டார்கள் என்றால் அது எந்தக் காலத்தில் என்ற கேள்வியும் எழுகிறது. இரண்டு திருவிளையாடல் புராணங்களுக்கும் சிறிது வேறுபாடு இருந்தாலும் பரஞ்சோதி முனிவரின் புராணமே மிகவும் பிரபலமானது. அதிலுள்ள நிகழ்ச்சிகளின் வரிசையும் மன்னர்களின் வரிசையும் உண்மையா என்று தெரியாது. ஆயினும் அதில் வரும் மாடக் கூடல், தாமரை வடிவில் அமைந்த நகரின் நடுவில் கோவில் இருந்தது ஆகிய செய்திகள் கலித்தொகை, பரிபாடல் ஆகிய சங்க இலக்கிய நூல்களில் இருக்கின்றன.

மதுரையுடன் தமிழ் மொழிக்குள்ள தொடர்பும் ஐம்பது சங்கப் புலவர்களால் தெரிய வருகிறது. மேலும் ஒன்பதாம் நூற்றாண்டு நூலான கல்லாடத்தில் 30க்கும் மேலான லீலைகள் வருகின்றன. இந்த லீலைகள் சார சமுச்சயம் என்ற வடமொழி நூலைத் தழுவி எழுதப்பட்டது. ஆக இவை அனைத்தும் கட்டாயம் ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முன்னர் நடந்தது தெரிகிறது. மேலும் களப்பிரர் ஆட்சிக்குப்பின் வந்த பாண்டிய மன்னர்களின் வரலாறு ஆறாம் நூற்றாண்டில் இருந்து வரிசையாக கல்வெட்டு, செப்பேட்டு ஆதாரங்களுடன் கிடைத்துவிட்டதால் அதற்கு முன் தான் இவை நடந்திருக்க முடியும்.

மீனாட்சி ஆட்சி எப்போது நடந்தது?

மீனாட்சி பற்றிய மறைமுகக் குறிப்பு கிரேக்க தூதரான மெகஸ்தனீஸ் (கி.மு. 330-290) எழுதிய இண்டிகா என்ற நூலில் இருந்து கிடைக்கிறது. பண்டேயா என்ற தெற்கத்திய தேசத்தை ஒரு பெண் அரசி ஆண்டதாக அவன் எழுதியுள்ளான். ஆக குறைந்தது 2300 ஆண்டுகளுக்கு முன் மீனாட்சி ஆட்சி புரிந்தது இதில் இருந்து தெரிகிறது. ஆக மலயத்துவஜ பாண்டியன் கி.மு நாலாம் நூற்றாண்டில் ஆண்டிருக்க வேண்டும். இதை மஹாவம்சமும் அதரிக்கிறது. இலங்கையில் வந்து இறங்கிய ஒரிஸ்ஸா மன்னன் விஜயனுக்கு ராஜ வம்ச பெண்கள் இலங்கையில் இல்லாததால் அவனுக்கும் அவனது அமைச்சர்களுக்கும் பெண் கொடுத்து உதவியது பாண்டிய நாடே! இது நடந்தது கி.மு 543 வாக்கில்( காண்க: மஹா வம்சம்)

மதுரையை அரசாண்ட மீனாட்சியும் வடக்கத்திய தொடர்புடைய பெண்மணியாக இருக்கக்கூடும். மலத்துவஜனின் மனைவியான காஞ்சன மாலா (மீனாட்சியின் தாய்) சூரிய குல வேந்தன் சூரசேனனின் மகள். சூரிய குலம் என்பது சோழ தேசத்தைக் குறித்தாலும் கூட, அவர்களும் வடக்கத்திய மன்னர்களே என்பதை “சோழர்கள் தமிழர்களா?” என்ற கட்டுரையில் எழுதிவிட்டேன். மேலும் பாண்டியர்—பாண்டவர் தொடர்புக்கும் சில ஆதாரங்கள் இருக்கின்றன. ஆகையால் மெகஸ்தனீஸ் சொல்லுவது உண்மையே என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

இதை எல்லாம் ராமயாணம், மஹா பாரதம், காத்யாயனர் (கி.மு நாலாம் நூற்றாண்டு) நூல், கவுடில்யரின் அர்த்தசாஸ்திரம், அசோகர் கல்வெட்டுகள், மதுரையைச் சுற்றியுள்ள பிராமி கல்வெட்டுகள், காளிதாசரின் ரகுவம்சம் ஆகியன உறுதிப் படுத்துகின்றன.

ther sirpangkal from potramarai3

தருமி பொற்கிழி கதை

நன் பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி
நற்கனகக் கிழி தருமிக்கு அருளினோன் காண்
– திருப்புத்தூர் தாண்டகம், அப்பர் தேவாரம்

திருவிளையாடல் சினிமாவில் மிகவும் மறக்க முடியாத லீலை நாகேஷும் சிவாஜியும் சேர்ந்து நடித்த தருமி பொற்கிழி கதையாகும். இதை அப்பர் பெருமான் தன் பாட்டில் கூறுவதும் சிவன் எழுதிக் கொடுத்த பாட்டு குறுந்தொகை என்னும் சங்க நூலில் இருப்பதும் இதன் காலத்தை ஓரளவுக்குக் காட்டிவிடுகிறது. அப்பரின் காலம் மஹேந்திர பல்லவனின் காலம் (கி.பி 600- 630). ஆக கி. பி. 600-க்கு முன்னர்தான் தருமி கதை நடந்திருக்க வேண்டும். சங்க இலக்கியம் முழுதும் கி.பி.300க்கு முன் எழுதப்பட்டதாக பொதுவான கருத்து இருப்பதால் சிவன் எழுதிய கொங்குதேர் வாழ்க்கை கவிதையும் அப்போதுதான் எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆக, தருமி கதையின் காலத்தை கி.பி.மூன்றாம் நூற்றாண்டில் அல்லது அதற்கு முன் வைக்கலாம்.

நரி—பரி லீலையும் அப்பர் தேவாரத்தில் வருகிறது.

நரியைக் குதிரை செய்வானும் நரகரைத் தேவு செய்வானும்
விரதங் கொண்டு ஆடவல்லானும் விச்சின்றி நாறு செய்வானும்
முரசு அதிர்ந்து ஆனை முன் ஓட முன் பணிந்து அன்பர்கள் ஏத்த
அரவு அரைச்சாத்தி நின்றானும் ஆரூர் அமர்ந்த அம்மானே
–(4-33 அப்பர் தேவாரம்,திருவாரூர் பதிகம்)

மாணிக்க வாசகர் காலம் ஒன்பதாம் நூற்றாண்டு அல்ல என்பதற்கு நரி பரியாக்கிய குறிப்பு உதவுகிறது. நரியைப் பரியாக்கிய நிகழ்ச்சியையும் அப்பர் தேவாரத்தில் காண்கிறோம். ஆக, மாணிக்கவாசகரும் அப்பர், சம்பந்தர் காலத்துக்கு முந்தையவரே. (இதற்கு மேலும் பல ஆதாரங்கள் உண்டு. அதைத் தனியாக எழுதுவேன்).

தருமி காலத்தில் அரசாண்ட மன்னன் செண்பக பாண்டியன். அவன் தான் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டா என்று ஆராய, அது பெரிய மோதலில் முடிந்தது. அதில் நக்கீரரும் சம்பந்தப் பட்டிருப்பதால் கட்டாயம் முதல் மூன்று நூற்றாண்டுக்குள்தான் நடந்திருக்க வேண்டும். தருமி சம்பவத்தைத் தெள்ளத் தெளிவாக அப்பர் குறிப்பிடுவதால் மஹேந்திர பல்லவன் காலத்துக்கு ஓரிரு நூற்றாண்டுகள் முன்னர்தான் இது நடந்திருக்கவேண்டும்.

மேலும் சில செய்திகள்

சிலப்பதிகாரத்தில் வன்னி மரம் – லிங்கம் கதை இருக்கிறது. கடல் மேல் வேல் விட்ட கதை, மேகம் சிறை செய்யப்பட்ட நான்மாடக் கூடல் கதைகளும் உள்ளன. இந்தக் காவியம், குறள், தொல்காப்பியம் ஆகிய மூன்றும் ஐந்தாம் நூற்றண்டில் எழுந்தவை என்பது என் கணிப்பு. முன்னரே எழுதியுள்ளேன் (காண்க ‘தொல்காப்பியம் காலம் தவறு’).

பராந்தக வீர நாராயணனின் ( 895—907; ஒன்பதாம் நூற்றாண்டு) கல்வெட்டிலும் இச் செய்திகள் உள்ளன.

குலசேகர பாண்டியன் காலத்தில் கீரந்தை சம்பவம் நடந்தது. அவன் தான் பொற்கை பாண்டியன். இந்தக் கதையும் சிலப்பதிகாரத்தில் உள்ளதால் எல்லாம் ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்னரே நடந்தவை.

சம்ஸ்கிருதப் பெயர்கள் இருப்பதால் இவர்கள் முற்கால மன்னர்களாகவே இருக்க வேண்டும். கடலில் மூழ்கிய தென்மதுரை மன்னர் பெயர்களிலும் மாகீர்த்தி முதலிய வடமொழிப் பெயர்கள் உண்டு. தென் கன்னடத்தை ஆண்ட ஆலூபா மன்னர்கள் பாண்டியருடன் தொடர்புடையவர்கள். அவர்களில் தனஞ்ஜயன், சித்திரவாகனன் முதலிய மஹா பாரதப் பெயர்கள் பாண்டியர் பெயர்களாக வருவதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

*மதுரைப் பேராலவாயார் அகநானூற்றில் நெடுஞ்செழியன் ஆண்ட மதுரையைப் பாடுகையில் மலை போன்ற மதில்கள் பற்றிப் பாடுகிறார்.

*சேரமான் பெருமாள் நாயனார்,சுந்தரர், பாண பத்திரர், அவ்வையார் ஆகியோர் சம காலத்தவர்கள். (சங்க கால அவ்வை வேறு)

*ஸ்ரீமாறன் என்ற பாண்டிய மன்னனின் சம்ஸ்கிருத பெயர் வியட்னாமில் இரண்டாம் நூற்றாண்டிலேயே கிடைக்கிறது.

*ப்ளினி (கி.பி.75) கொற்கையிலிருந்து மதுரைக்கு தலை நகர் மாறியதைக் குறிப்பிடுகிறார். கொற்கை= கபாடபுரம்?

மேலும் மூர்த்திநாயனார் போன்ற களப்பிரர் கால மன்னர்களை பெரியபுராணத்தில் இருந்து அறிகிறோம். ஆனால் சம்ஸ்கிருத பெயருடைய இவர் பற்றி வரலாறு பூர்வ ஆதாரங்கள் ஏதுமில்லை. இருந்தபோதிலும் இது உண்மை என்பதில் யாருக்கும் ஐயமில்லை.

தி வி புராணத்தில் உக்கிரகுமாரன், வீரபாண்டியன் வரலாறுகள்: —இதில் கடற்கோள், வரட்சி, இமயம் வரை பயணம் ஆகியன இருப்பதால் இவைகளை உண்மையான வரலாற்று நிகழ்ச்சிகளாகக் கொள்ளலாம். மேலும் தமிழ்நாட்டில் அதிகம் கானப்படும் பாம்புக் கடி பற்றி பல குறிப்புகள் வருகின்றன. ஒரு பாண்டியன் புலி அடித்து இறந்தது, மற்றொரு பாண்டியன் காமப் பிசாசாக வாழ்ந்தது ஆகிய எல்லாம் உண்மை வரலாற்றை எழுதுவார் போலவே எழுதப்பட்டுள்ளன. மற்ற பாண்டிய மன்னர்களின் குணாதிசயங்களை, காளிதாசன் சூரிய குல மன்னர்களின் பெருமைகளை வருணிப்பதுபோலவே பரஞ்சோதியாரும் வருணித்துள்ளார்.

ஒரு தனி மகாநாடு கூட்டிப் பொறுமையாக உட்கார்ந்து ஆராய்ந்தோமானால் மேலும் பல உண்மைகளை வெளிக் கொணரலாம்.

(தி.வி.புராணம் மதுரை, கூடல், ஆலவாய் என்ற வரிசையில் மூன்று காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இது மதுரையின் காலமுறை வளர்ச்சியைக் குறிக்கிறதா என்றும் காணவேண்டும் வங்கியசேகரன் காலத்தில் மதுரை நகரம் ஆலவாய் ஆகியது. மதுரைப் பேராலவாயார் என்ற புலவர் சங்க நூல்களில் காணப்படுகிறார்.)

Continued in part-2

(Pictures are from the Book Potramarai and Temple Souvenirs;thanks)

தொடர்பு முகவரி : swami_48@yhaoo.com