Date: 7 FEBRUARY 2018
Time uploaded in London- 7-51 am
WRITTEN by S NAGARAJAN
Post No. 4711
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))
அருட்பா இரகசியம்
வள்ளலாரின் தமிழ்!
ச.நாகராஜன்
1
சமீப கால சரித்திரம் கண்ட ஒரு மாபெரும் மகான் வடலூர் வள்ளலார்.
தமிழை எனிய இனிய சொற்களால் எளிமைப் படுத்தி பழகும் தமிழில் ஞான தத்துவங்களையும் சாகாக் கலையையும், அனைவரும் உளமுருகத் துதிக்க வைக்கும் தோத்திரப் பாடல்களையும் அளித்து ஆச்சரியப்படுத்திய தமிழ்ச் சித்தர் அவர்!
முருகன் அவரை ஆட்கொண்டதால் அவன் அளித்த தமிழைக் கொண்ட தமிழாகரன் அவர்!
(உண்மையில் தமிழாகரன் என்ற பெயரை உடைய ஞானசம்பந்தரைத் தன் ஞான குருவாகக் கொண்டவர் ஆயிற்றே. அதனால் இவரும் தமிழாகரனைக் குருவாகக் கொண்ட தமிழாகரன் ஆகிவிட்டாரோ!)
அதாவது தமிழை உடலாகக் கொண்டவர்; உயிராகக் கொண்டவர்.
வள்ளலார்.
2
வள்ளலாரின் பாடல்களைத் தத்துவத்திற்காகவும், இனிமைக்காகவும், ஓசை நயத்திற்காகவும், வெவ்வெறு அணிகளுக்காகவும், பல உவமைகளுக்காகவும், பல ரகசியார்த்தங்களுக்காகவும், மருத்துவத்திற்காகவும், வாழ்முறை நெறிகளுக்காகவும், தமிழுக்காகவும் ஏன் சாகாக் கலையை அறியவும் பலமுறை படிக்கலாம்; படிக்க வேண்டும்.
அவரது வார்த்தை விளையாட்டுக்கள் மிகவும் சுவாரசியமானவை.
அதற்காகவும் ஒரு முறை படிக்கலாம்.
உதாரணத்திற்குச் சில பாடல்கள் இங்கே பார்க்கலாம்.
வெம்பு முயிருக் கோருறவாய்
வேளை நமனும் வருவானேல்
தம்பி தமையன் துணையாமோ
தனையர் மனைவி வருவாரோ
உம்பர் பரவுந் திருத்தணிகை
உயர்மா மலைமேல் இருப்பவர்க்குத்
தும்பக் குடலை யெடுக்காமல்
துக்க வுடலை எடுத்தேனே!
தொல்லைக் குடும்பத் துய்ரதனில்
தொலைத்தே னந்தோ காலமெலாம்
அல்ல லகற்றிப் பெரியோரை
யடுத்து மறியேன் அரும்பாவி
செல்வத் தணிகைத் திருமலை வாழ்
தேவா வுன்றன் சந்நிதிக்கு
வில்வக் குடலை யெடுக்காமல்
வீணுக் குடலை யெடுத்தேனே
அவல வயிற்றை வளர்ப்பதற்கே
அல்லும் பகலும் அதில் நினைவாய்க்
கவலைப் படுவ தின்றிசிவ
கனியைச் சேரக் கருதுகிலேன்
திவலை யொழிக்குந் திருத்தணிகைத்
திருமால் மருகன் திருத்தாட்குக்
குவளைக் குடலை யெடுக்காமல்
கொழுத்த வுடலை யெடுத்தேனே.
பாடலின் பொருள் நயம், ஓசை நயம், உருக வைக்கும் பக்தி நயம் பற்றி விளக்க உரையே வேண்டாம்,
வில்வக் குடலை எடுக்காமல் வீணுக்கு உடலை – வீணுக் குடலை எடுத்தேனே என்பதில் உள்ள நயம் அவர் தம் தமிழைக் காட்டும் இடம். தும்பைக் குடலை எடுக்காமல் துக்க உடலை எடுத்தேனே; குவளைக் குடலை எடுக்காமல் கொழுத்த உடலை எடுத்தேனே என்பதில் நாம் காணுவது வள்ளலாரை அல்ல; நம்மை நாமே காணும் இடமாக அமைகிறது.
3
இனி அவரது வார்த்தை விளையாட்டுக்கு இரு பாடல்களைப் பார்ப்போம்!
பகுதி தகுதி விகுதியெனும் பாட்டில்
இகலி லிடையே யிரட்டித் – தகவின்
அருச்சித் தான் முன்னா மதுகடையாங் கண்டீர்
திருச்சிற் சபையானைத் தேர்ந்து.
பாடலில் என்ன புரிகிறது? – திருச்சிற்சபையான் மட்டும் புரிகிறது.
மற்ற சீர்கள் சொல்லும் சிறப்பான செய்தி என்ன?
உதவிக்கு நாட வேண்டியவர் கிருபானந்தவாரியார் தான்!
அவரது உரை விளக்கம் படித்தால் உளமும் விளக்கம் அடைகிறது.
பகுதி, தகுதி, விகுதி
இந்த மூன்று வார்த்தைகளில் இடையெழுத்து – அதாவது நடுவில் வரும் எழுத்து எது? ‘கு’ ஆகும்.
இதை இரட்டியுங்கள் என்கிறார் அருளாளர்.
இரட்டித்தால் – அதாவது இருமுறை எழுதினால் வருவது
குகு, குகு, குகு!
அதாவது ஆறுமுறை ‘கு’ வருகிறது. அதாவது அறுகு (ஆறுமுறை ‘கு’வை அறுகு என்று தானே கூற வேண்டும். அதாவது அறுகம்புல்!)
முதலெழுத்துக்களைக் கூட்டினால் வருவது ப, த, வி.
பத முத்தி ஆகும்.
கடை எழுத்துக்களைக் கூட்டினால் தி, தி, தி. அதாவது மூன்று முறை ‘தி’ வருகிறது. முத்தி.
திருச்சிற்சபையானை அறுகம்புல்லால் அர்ச்சித்தால் பத முத்தியும் ஐக்கிய முத்தியும் சித்திக்கும் என்ற அரிய இரகசியத்தை இந்த புதிர்ப் பாடலில் அருளுகிறார் வள்ளலார்.
4
இன்னொரு பாடல்:
தாதாதா தாதாதா தாக் குறைக்கென் செய்குதும்யாந்
தாதாதா வென்றுலகிற் றானலைந்தோம் – போதாதா
நந்தா மணியே நமச்சிவா யபொருளே
யெந்தா யெனப் புகழவே.
என்ன பொருள், புரியவில்லையே!
கிருபானந்தவாரியார் சுவாமிகளை நாடுகிறோம்; பொருள் விளங்குகிறது.
ஏழு முறை தா வருகிறது; எழு முறை தா! அதாவது எழுதா!
எழுதாக் குறைக்கு என் செய்குதும்? தலையில் எழுதாக் குறைக்கு என்ன செய்வது?
தாதா – தாதா என்றால் தெரியுமே; ஆம் வள்ளல்!
மூன்று தா வருகிறது இரண்டாம் அடியில்!
தாதா, தா! வள்ளலே தா என்று அலைந்தோம். இப்படி அலைந்தது போதாதா?
இனியேனும் நந்தா மணியே, நமச்சிவாயப் பொருளே எந்தாய் எனப் புகழுங்கள்; வழிபடுங்கள்; வாழ்க்கையைச் சிறக்க அமையுங்கள்!
5
நமக்காகக் குறுகிய காலத்தில் ஆயிரக் கணக்கான பாடல்களை அருளியுள்ளார் வள்ளலார் பிரான் – அரிய இரகசியங்களை அடக்கி, இனிய தமிழில்!
கொஞ்ச நேரம் ஒதுக்குவோம்; அருட்பாவை ஓதுவோம்!.
என்னென்ன பயன்களைப் பெற முடியும் அருட்பாவைப் படித்தால்.
வாரியார் சுவாமிகளின் திருவருட்பா தொகுதி (1) -யைப் படித்தால் முதல் பக்கத்தில் முதல் பாடலிலேயே பதில் வருகிறது!
பத்தி வரும் பழவினைகள் பற்ந்தோடும்
மூல மலப் பகுதி மாயும்
புத்தி வரும் புலைகொலைகள் புறம்போகும்
ஆனந்தம் பொங்குஞ் சாந்த
முத்தி வரும் அழியாநன் மோக்கமுறு
முதுகடல்சூ ழுலகி லெல்லாச்
சித்தி வரும் இராமலிங்க தேசிகன்றன்
அருட்பாவைச் சிந்திப்போர்க்கே.
அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை!
***
You must be logged in to post a comment.