
Post No. 8623
Date uploaded in London – – –4 SEPTEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
பாரதியார் தீபாவளி பண்டிகை மற்றும் இதர பண்டிகைகளைப் பற்றி கவிதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளாரா? – 2
ச.நாகராஜன்
ஒவ்வொரு திங்களன்றும் இந்திய நேரம் மாலை 6-30க்கு – லண்டன் நேரம் பகல் 1.30க்கு ஒளிபரப்பாகும் ஹிந்து மதம் பற்றிய கேள்வி- பதில் நிகழ்ச்சி மற்றும் ஹிந்து ஆலயச் சிறப்புச் செய்திகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுவதை www.tamilandvedas.com நேயர்கள் நன்கு அறிவர். இதற்கு உலகெங்குமுள்ள அன்பர்கள் கேள்விகளை அனுப்பி வருகின்றனர்.
31-8-2020 அன்று ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில் வந்த கேள்வி ஒன்று இது:
பாரதியார் தீபாவளி பண்டிகை மற்றும் இதர பண்டிகைகளைப் பற்றி கவிதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளாரா?
இதற்கு பதில் அளிக்கும் பொறுப்பு எனக்கு வந்தது.
அந்தப் பதிலின் (உரையின்) சாரத்தின் தொடர்ச்சி இதோ:-

மகர சங்கராந்தி எனக் கொண்டாடும் சூரியனின் வடக்கு நோக்கிய பயணம் முக்கியமான ஒன்று. சூரிய ஸ்தோத்திரம் என்ற தலைப்பில் கவிதை ஒன்றை பாரதியார் இயற்றியுள்ளார்.
அவர் மஹாசக்தி பஞ்சகத்தைப் பாடியுள்ளார்.
ஜென்மாஷ்டமி அல்லது கண்ணனது பிறப்பைப் பற்றிக் ‘கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்’ என்று துவங்கும் பாடலைப் படைத்துள்ளார். அவரது கண்ணன் பாட்டுக்கள் குறிப்பிடத் தகுந்தவை.
நவராத்திரி பண்டிகையின் உட்பொருளை விளக்கும் விதமாக இரு கட்டுரைகளை அவர் எழுதியுள்ளார். இரு கவிதைகளையும் படைத்துள்ளார்.
அவரது கட்டுரையின் சில பகுதிகளை இங்கு பார்ப்போம்:
“ஒன்பதிரவு பராசக்தியைப் பூஜை செய்கிறோம். லக்ஷ்மி என்றும் ஸரஸ்வதி என்றும் பார்வதி என்றும் மூன்று மூர்த்தியாக நிற்பது பராசக்தி. இவ்வுலகத்தை ஆக்கல், அழித்தல், காத்தல் என மூன்று தொழில் நடத்துவது.
ஹிமாசலந் தொடங்கிக் குமரி முனை வரை, வேதத்தை நம்பும் கூட்டத்தார் எல்லாம் இந்தப் பூஜை செய்கிறோம்.”
“சக்தி : நல்ல வல்லெழுத்துச் சேர்ந்த மொழி.”
“ஒவ்வொருவருக்கும் மூன்று விதச் சக்தி வேண்டும், 1.அறிவு. 2. செல்வம். 3. தைரியம். இந்த மூன்றும் நமக்கு இஹலோகத்திலே கிடைக்கும் படியாகவும், இதனால் பரலோக இன்பங்களும் சாத்தியமாகும்படியாகவும் நாம் தெய்வத்தை வழிபடுகிறோம்.”
“விக்ரமாதித்யன் வணங்கிய தெய்வம். காளிதாஸனுக்குக் கவிதை காட்டிய தெய்வம்; பாரத நாட்டு மஹாஜனங்கள் இன்னும் தலைமையாகக் கொண்டாடும் தெய்வம்; ஸ்ரீமந் நாராயண மூர்த்தியின் சக்தியாக விளங்கும் லக்ஷ்மி தேவதை; சிவபிரானுடைய வலிமையாகத் திகழும் பார்வதி; பிரமதேவன் தலைவியாகிய சரஸ்வதி. மூன்று மூர்த்திகள், மூன்று வடிவங்கள், பொருள் ஒன்று, அதன் சக்தி ஒன்று.”

நவராத்திரிப் பாட்டு என்ற தலைப்பில்,
“மாதா பராசக்தி வையம் எலாம் நீ நிறைந்தாய்!
ஆதாரம் உன்னை அல்லால் ஆர் எமக்குப் பாரினிலே”
என்று தொடங்கும் பாடலையும்,
“உஜ்ஜயினீ! நித்ய கல்யாணீ!” என்று துவங்கும் பாடலையும் அவர் படைத்துள்ளார்.
இன்னொரு முக்கியமான சம்பவத்தையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
இந்தியா பத்திரிகை நடத்த ஆக்கமும் ஊக்கமும் பொருளுதவியும் தந்த மண்டயம் ஸ்ரீநிவாஸாரியார் பாரதியார் புதுவை வந்ததைத் தொடர்ந்து அவரும் சென்னையிலிருந்து புதுவைக்கு வந்தார்.
அவருக்கு யதுகிரி என்ற புதல்வி உண்டு. அவர் அப்போது சிறுமி. பாரதியார் தனது கவிதைகளை எல்லாம அவரிடம் பாடிக் காண்பிப்பார்.
யதுகிரி அம்மாள், பாரதியார் பற்றிய தனது நினைவுகளை, “பாரதி நினைவுகள்” என்ற நூலாக எழுதி வெளியிட்டுள்ளார்.
அதில் வரும் சம்பவம் இது.

ஒரு முறை சிவராத்திரி கொண்டாடும் சிவபக்தர்கள் பாரதியாரை அணுகி, சிவராத்திரி அன்று பஜனை செய்தவாறே ஊர்வலமாகச் செல்லும் எங்களுக்காக ஒரு கவிதை எழுதித் தாருங்கள் என்று கேட்டனர்.
உடனே பாரதியார் தந்த கவிதை தான் ‘முருகா முருகா முருகா’ என்ற அற்புதமான கவிதை.
‘முருகா முருகா முருகா
வருவாய் மயில் மீதினிலே
வடிவேலுடனே வருவாய்
தருவாய் நலமும் தகவும் புகழும்
தவமும் திறனும் தனமும் கனமும்’
என்ற பாடலைப் பாடிய பாரதியார், ‘20 பேர் கூட்டாகச் சேர்ந்து இதைப் பாடினால் பெரும் சக்தி பிறக்கும்’ என்றார்.
யதுகிரி அம்மாள் கூறும் இன்னொரு சம்பவம் மூன்று காதல் பாடல் பிறந்தது எப்படி என்பதை விவரிக்கிறது.
ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் புதுவை கடற்கரையில் பேண்ட் வாத்தியக்காரர்கள் பேண்ட் வாசிப்பது வழக்கம். ஒரு மணி நேரம் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் அவர்களைச் சுற்றி அனைவரும் கூடுவர். குழந்தைகள் கும்மாளம் போடும்.
ஒரு வியாழக்கிழமை பாரதியார், அவரது புதல்வி தங்கம்மாள் பாரதி, அவர் மனைவி செல்லம்மாள் பாரதி, யதுகிரி ஆகிய நால்வரும் கடற்கரைக்குச் சென்றனர்.
அந்த பேண்ட் வாத்திய சத்தம் பெரிதாக இருக்கவே பாரதியார், ‘சற்று அந்தப் பக்கம் போவோம்’ என்றார்.
உடனே தங்கம்மாள் பாரதி, “இந்த இசை எனக்குப் பிடித்திருக்கிறது, இது போல் நம்மால் பாட முடியுமா?” என்றார்.
பாரதியார், “ஏன் முடியாது, இதை நமக்குத் தக பாடிக் கொள்ளலாம்!” என்றார்.
உடனே தங்கம்மாள், “அப்படியானால் இந்த மெட்டில் எனக்கு சரஸ்வதி மேல் ஒரு பாட்டுப் பாடித் தாருங்கள்” என்றார்.
அப்போது உச்ச ஸ்தாயி முடிந்து இசை சற்று கீழ் ஸ்தாயிக்கு வந்தது.
உடனே, யதுகிரி, “இது எனக்குப் பிடித்திருக்கிறது. இது போல எனக்கு லக்ஷ்மி மீது ஒரு பாடல் பாடித் தாருங்கள்” என்றார்.
பாரதியார் உடனே, ‘லக்ஷ்மி மீது பாடல் தருகிறேன்’ என்றார்.
இதைக் கேட்ட செல்லம்மாள் பாரதி, “காசி, கல்கத்தாவில் எல்லாம் துர்க்கையை வலிமைக்காக வழி படுவது வழக்கம். நமது சங்கடங்கள் எல்லாம் தீரும். எனக்கு ஒரு பாடலை துர்க்கை மீது பாடுங்கள்” என்றார்.
பாரதியார் உடனே ‘சரி’ என்றார்.
மறுநாள் மாலை கொலுவில் யதுகிரி ஆரத்தி எடுக்கும் சமயம் உள்ளே நுழைந்த பாரதியார், “நீங்கள் கேட்ட பாடலை கொண்டு வந்திருக்கிறேன். பாடலாமா?” என்றார்.
பின்னர் பாட ஆரம்பித்த்தார்.

ஸரஸ்வதி மீது,
“பிள்ளைப் பிராயத்திலே -அவள்
பெண்மையைக் கண்டு மயங்கி விட்டேன்”
என்று தொடங்கும் பாடலையும்,
லக்ஷ்மி மீது
“இந்த நிலையினிலே- அங்கோர்
இன்பப் பொழிலின் இடையில் வேறொரு
சுந்தரி வந்து நின்றாள்”
என்ற பாடலையும்,
காளி மீது,
“பின்னோர் இராவினிலே – கரும்
பெண்மை அழகொன்று வந்தது கண் முன்பு”
என்ற பாடலையும் பாடினார்.
ஸரஸ்வதி மீதான பாடலை ஸரஸ்வதி மனோஹரி ராகத்திலும், லக்ஷ்மி மீதான பாடலை ஸ்ரீ ராகத்திலும் காளி மீதான பாடலை புன்னாகவராளி ராகத்திலும் அவர் அமைத்திருந்தார். பாடலைக் கேட்டோர் மெய் சிலிர்த்தனர்.
இப்படி பாரதியார் தொடாத பொருள் இல்லை;பாடாத தெய்வம் இல்லை.
அவர் பாடல்களையும் கட்டுரைகளையும் படித்தால் ஹிந்து பண்டிகைகளின் உட்பொருளை அறிந்து கொள்ளலாம்.
“வீரக் கனல் பொங்கும் வெற்றி மணிச் சிங்கம்
விண்ணாடு மண்ணாடு வியந்து பணி தங்கம்
கோரப் பகை அடிக்கும் கொடிய மணிக் கதிர்வேல்
கொடியவர்கள் கொட்டமழி நெடிய மணி நேமி
ஆருக்கும் அஞ்சாத ஆரமர் செல்வன்
அன்புக்கு என்பு தரும் அருளாளன் அண்ணல்
போருக்கு ரகுராமன் புலமைக்கு வாணி
பொற்புக்கும் நட்புக்கும் புண்ணியக் கண்ணன்
என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்
சுப்ரமண்ய பாரதியின் பெருமையை
என்னென்று சொல்வேன்” என்று ஹா.கி.வாலம் அம்மையார் பாரதியைப் போற்றிப் புகழ்கிறார்.
பாரதியார் நாமம் வாழ்க!
ஹிந்து தர்மம் வாழ்க!
என்று கூறி வாய்ப்பினை நல்கிய அனைவருக்கும் நன்றி கூறி,
அடுத்து இன்னுமொரு உரையில் உங்களைச் சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடை பெறுவது சந்தானம் நாகராஜன்!
*
இந்த கேள்வி பதில் நிகழ்ச்சி வாரந்தோறும் திங்களன்று இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும். தமிழ் நெஞ்சங்கள் மகிழ்ச்சியுடன் இதில் பங்கேற்க வேண்டுகிறேன்.
உங்கள் கேள்விகளையும் கருத்துக்களையும் பதிவு செய்யவும் வேண்டுகிறேன்.
tags — தீபாவளி-Part 2 ,பண்டிகை, பாரதியார்
***