
WRITTEN BY S NAGARAJAN
Post No. 8617
Date uploaded in London – – –3 SEPTEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
பாரதியார் தீபாவளி பண்டிகை மற்றும் இதர பண்டிகைகளைப் பற்றி கவிதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளாரா?
ச.நாகராஜன்
ஒவ்வொரு திங்களன்றும் இந்திய நேரம் மாலை 6-30க்கு – லண்டன் நேரம் பகல் 1.30க்கு ஒளிபரப்பாகும் ஹிந்து மதம் பற்றிய கேள்வி- பதில் நிகழ்ச்சி மற்றும் ஹிந்து ஆலயச் சிறப்புச் செய்திகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுவதை www.tamilandvedas.com நேயர்கள் நன்கு அறிவர். இதற்கு உலகெங்குமுள்ள அன்பர்கள் கேள்விகளை அனுப்பி வருகின்றனர்.
31-8-2020 அன்று ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில் வந்த கேள்வி ஒன்று இது:
பாரதியார் தீபாவளி பண்டிகை மற்றும் இதர பண்டிகைகளைப் பற்றி கவிதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளாரா?
இதற்கு பதில் அளிக்கும் பொறுப்பு எனக்கு வந்தது.
அந்தப் பதிலின் (உரையின்) சாரம் இதோ:-
பாரதியார் தீபாவளி பண்டிகை பற்றியும் இதர ஹிந்து பண்டிகைகளைப் பற்றியும் நிறைய கவிதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். அநேகமாக ஒவ்வொரு சிறப்புப் பண்டிகைக்கும் உரிய கவிதையை அவரிடமிருந்து கற்கலாம்; உட்பொருளை விளக்கும் கட்டுரைகளையும் காணலாம்.
சில பண்டிகைகளைப் பற்றி மட்டும் இங்கு நாம் காணலாம்.
உலகில் பல்வேறு பழைய நாகரிகங்கள் தோன்றிய காலமும் அவை மறைந்த காலத்தையும் துல்லியமாக வரலாற்று அறிஞர்கள் சொல்கின்றனர். இப்படி பாபிலோனிய நாகரிகம், அஸிரிய நாகரிகம், எகிப்திய நாகரிகம், ரோமானிய நாகரிகம் தோன்றிய காலமும் மறைந்த காலமும் நமக்குத் தெரியும். ஆனால் ஹிந்து நாகரிகம் என்று பிறந்தது என்பதை யாராலும் சொல்ல முடியவில்லை. கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றிய நாகரிகம் இது.
மஹாகவி பாரதியார் மிக அழகுற இதைச் சொல்கிறார்:
தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு
சூழ்கலை வாணர்களும் இவள்
என்று பிறந்தவள் என்று ணராத
இயல்பினளாம் எங்கள் தாய்.
இப்படி இந்தியத் தாயை – ஹிந்துத் தாயை – அவள் என்று பிறந்தவள் என்று யாராலும் கணிக்க முடியாத சிறப்பைக் கூறுகிறார்.
ஹிந்து மதம் ஒரு மதம் மட்டுமல்ல, ஒரு தத்துவமும் கூட, மதமும் தத்துவமும் மட்டுமல்ல, அது ஒரு வாழ்க்கை முறை என சாமர்செட்மாம் என்னும் மேலை நாட்டு எழுத்தாளர் தனது ‘Points of View” என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.
(The Hindu Religion is not only a Religion but also a Philosophy, not only a religion and philosopy but it is a Way of Life.)
உண்மை. இதை மஹாகவி பாரதியார் வலியுறுத்தியதோடு அந்த வாழ்க்கை முறையைப் பண்டிகைகளின் வாயிலாகப் படம் பிடித்துக் காண்பித்தார்.
தீபாவளி பற்றிய அவரது கட்டுரை முக்கியமான ஒன்று.
பாரதியார் நடத்திவந்த ‘இந்தியா’ பத்திரிகையில், 1906-இல் அக்டோபர் 20-ஆம் தேதி இதழில் தலையங்கமாக வெளிவந்தது இந்தக் கட்டுரை. பின் ‘கலைமகள்’ பத்திரிகையில் 1941-இல் அக்டோபர் மாதம் வெளியாயிற்று.

கட்டுரை இது தான்:-
“நம் நேயர்களுக்கெல்லாம் கங்கா ஸ்நான பலன் கிடைத்தது பற்றி மகிழ்ச்சி அறிவிக்கின்றோம். சரீர சுத்தியுடன் மனோசுத்தியும் ஆத்மசுத்தியும் அவர்களுக்குப் பிராப்தியாக வேண்டுமென்று விரும்புகிறோம்
தற்காலத்திலே இந்து ஜனங்களின் ஆத்மாவைப் பற்றியிருக்கும் அழுக்குகளாகிய பயம், அதைரியம் முதலியவையெல்லாம் அகன்று போய், அவர்கள் ஒளி மிகுந்த உள்ளத்தவர்களாகி விளங்க வேண்டுமென்பதே நமது கோரிக்கை.
நமது நாட்டைப் பற்றிய நரகாசுரன் இறந்து போய்விட்டான். பகவானுடைய சக்தியும் எல்லா ஐசுவரியங்களுக்கும் ஆதாரமும் ஆகிய லட்சுமிதேவி நம்மீது கருணை கொண்டவளாகி நரகாசுரனை வதைத்துவிட்டாள்.
நாமெல்லோரும் அது பற்றிச் சந்தோஷமடைந்து மங்கள ஸ்நானம் செய்து, நல்லாடைகள் புனைந்து ஆனந்தவசமாகி இருக்கின்றோம்.
ஆனால் சிறுகுழந்தைகளைப் போல் விளையாட்டுக்கு ஸ்நானம் செய்தும், தீபங்கள் கொளுத்தியும் சும்மா இருந்துவிடாமல் நாம் செய்யும் செய்கையினது பொருளை நன்றாக அறிந்து காரியங்கள் செய்ய வேண்டும்.
எத்தனை தரம் கொன்றபோதிலும் மறுபடியும் மறுபடியும் உயிர் தளிர்ப்பது ராட்சதர்களுடைய சுபாவம். அவர்களுடைய மர்ம ஸ்தலத்தை அழித்த பிறகுதான் மடிவார்கள்.
அதுபோலவே லட்சுமிதேவி நரகாசுரனை வதைத்தவுடனேயே நாம் அவனுடைய மர்ம ஸ்தானத்தை அழித்து விடாமையால் அவன் மறுபடியும் தளிர்க்கத் தொடங்குகிறான். ஆதலால் நாம் இனியேனும் நரகாசுரனுடைய மர்ம ஸ்தலத்தை நன்றாக அறிந்து அதைத் தாக்காமல் இருப்போமானால் யாதொரு பிரயோஜனமும் கிடையாது.
தீபாவளி தினத்திலேகூட அந்நிய தேசத் துணிகள் வாங்கும் ஈசுவரத் துரோகிகள் நமது நாட்டிலே இருப்பார்களானால் நரகாசுரன் எவ்வாறு ஒழிவான்? லட்சுமிதேவி எப்படி ஜயமடைவாள்?
ஆரிய குமாரர்களே! ராட்சதர், அசுரர், பிசாசர் முதலான துர்க்குணங்களுடைய ஜன்ம விரோதிகளே! உங்களுடைய உண்மையான சுபாவத்தை அறிந்து கொள்ளுங்கள்.
மஹா வீரத்தன்மை பெற்று அஷ்ட லட்சுமிகளுக்கும் இருப்பிடமாகி விளங்குதற்குரிய வழிகளைத் தேடுங்கள். உங்களுக்கெல்லாம் பரிபூர்ணமான ஆரியத்தன்மையும் சர்வாபீஷ்டங்களும் சித்தியடைவதாக. ஓம் தத் ஸத். வந்தேமாதரம்.”
வந்தேமாதரத்துடன் கட்டுரை முடிவடைகிறது.
பழம்பெரும் பண்டிகையான தீபாவளியின் சிறப்பைக் கூறிய பாரதியார் காலத்திற்குத் தக அந்நிய தேசத் துணிகளை வாங்கி அணிவோரை ஈஸ்வர துரோகிகள் என்கிறார்.
இப்படி தேசபக்தியை தெய்வப் பண்டிகை மூலம் அவர் ஊட்டினார்.
1908ஆம் ஆண்டிலிருந்து 1918ஆம் ஆண்டு வரை பாரதியார் புதுவையில் வாசம் செய்தார்.
புதுவையில் உள்ள மணக்குள விநாயகர் மீது 40 பாடல்கள் கொண்ட விநாயகர் நான்மணி மாலை -யை அவர் பாடியுள்ளார்.
*** (உரை தொடர்கிறது, அடுத்த கட்டுரையுடன் முடியும்)
tags- பாரதியார், தீபாவளி , பண்டிகை,
You must be logged in to post a comment.