பாம்பு நீர் குடித்தால் விஷமாகும்; பசு நீர் குடித்தால் பால் ஆகும்! (Post No.5848)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 28 December 2018
GMT Time uploaded in London –20-40
Post No. 5848


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

பர்த்ருஹரியின் நீதி சதகத்திலுள்ள நூறு பாடல்களில் இது வரை 44 பாடல்களைக் கண்டோம். மேலும் சில பாடல்களைத் தமிழ் இலக்கியத்துடன் ஒப்பிட்டு மகிழ்வோம்

இதோ பாடல் 45

கெட்டவனுக்கு இயல்பாகவே கொடுஞ்செயல்கள் வரும்.

காரணம் இல்லாமலேயே சண்டைக்கு வருவான்.

மற்றவர் செல்வத்துக்கும் மனைவியர்க்கும் ஆசைப்படுவான்.

நல்லோரைக் கண்டால் சீறி விழுவான்.

தனது குடும்பத்தினரையே நிந்திப்பான்.

ராவணன் இந்த எல்லா கெட்ட குணங்களையும் உடையவன்.

குபேரனின் புஷ்பக விமானத்தைப் பறித்தான்;

சிவ பெருமானின் கயிலை மலையை அசைத்தான்;

ராமனின் மனைவியைக் கவர்ந்தான்.

தேவர்களைத் துன்புறுத்தினான்.

எல்லா ராக்ஷசர்களும், நல்லோரைத் துன்புறுத்தியதால்தான் விஷ்ணு பல அவதாரங்களை எடுக்க நேரிட்டது.

திருவள்ளுவரும் தமிழ் வேதமான திருக்குறளில் கயவர்களின் குணத்தை வருணிக்கிறார்

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்

வடுக்காண வற்றாகும் கீழ் -குறள் 1079

பிறர் நன்றாக உடுப்பதையோ உண்பதையோ கண்டால்,கயவர்கள், பொறாமை கொண்டு அதற்கும் குற்றம் காண வல்லவர் ஆவார்கள்.

ஈசாப்   கதையில் வரும் ஆடு- ஓநாய் கதை போலத்தான். வலிய சண்டைக்கு இழுத்து ஆட்களைக் கொல்லுவர். ரிஷி முனிவர்கள் காடுகளில்  பழங்களையும் தேனையும் சேகரித்து உண்டு அமைதியான வாழ்க்கை நடத்தியபோதும் அவர்களுடன் வம்புச் சண்டைக்குப் போனவர்கள் அரக்கர்கள்.

பிறன் மனை நோக்காத பேராண்மை

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்

இகவாவாம் இல்லிறப்பான் கண்- குறள் 146

பிறருடைய மனிவியை நாடிச் செல்பவனுக்கு நான்கு கெடுதிகள் எப்போதும் வரும்/ இருக்கும்:–

பகைமை, பாவம், பயம், உலகமே பழித்துரைக்கும் வசவுகள் இவை நான்கும் நீங்காமல் நிற்கும்.

இதை பர்த்ருஹரி அழகாகஒரே ஸ்லோகத்தில் சொல்லிவிட்டார்.

அகருணத்வமகாரணவிக்ரஹக பரதனே பரயோஷிதி ச ஸ்ப்ருஹா

ஸுஜன பந்துஜனேஸ்ஹ்வஸஹிஷ்ணுதா ப்ரக்ருதி ஸித்தமிதம்  ஹி துராத்மனாம்-45

xxxxxx

பாடல் 46

கற்றவர்களாயினும் தீய குணம் இருந்தால் அவர்களைத் தவிர்க்க வேண்டும். பாம்பின் தலையில் மாணிக்கம் இருந்தாலும் அது ஆபத்தானதல்லவா?

துர்ஜனஹ பரிஹர்தவ்யோ வித்யயாஅலக்ருதோ அபிஸன்

மணினா பூஷிதஹ ஸர்பஹகிம் அஸௌ ந பயங்கரஹ- 1-46

தீயவர்பால் கல்வி சிறந்தாலு மற்றவரைத்

தூயவரென்றெண்ணியே துன்னற்க– சேயிழையே!

தண்ணொளிய மாணிக்க சர்ப்பந் தரித்தாலும்

நண்ணுவரோ மற்றதனை நாடு- நீதிவெண்பா

பொருள்

பாம்பிடம் ஒளிமிக்க மாணிக்கக் கல் இர்ந்தாலும் யாராவது அதை நெருங்குவார்களா? அதே போல கெட்டவர்களிடம் கல்வி அறிவு இருந்தாலும் நாடக் கூடாது.

 பசுவுக்கு நீர்பால்; பாம்புக்கு நீர் – விஷம்

பாம்புண்ட நீரெல்லாம் நஞ்சாம் பசுவுண்ட

தேம்படு ஹெண்ணீர் அமுதமாம் – ஓம்பற்கு

ஒளிஆய்ம் உயர்ந்தார்கண் ஞானம் அதுபோற்

களியாம் கடையாயார் மாட்டு- அறநெறிச்சாரம்

பொருள்

பாம்புகள் குடிக்கும் நீர் எல்லாம் விஷமாக மாறுகிறது;

கயவர்கள் கற்கும் ஞன நூல்கள் அவர் மாட்டு மயக்கத்தையே விளைவிக்கும்;

பசு மாடுகள் குடிக்கும் தண்ணீர் இனிய பாலாக மாறும்;

உயர்ந்தோர் கற்கும் ஞான நூல்கள் அவர்கள் மாட்டு அறிவினை வளர்க்கும்.

தீயோர்கள் கற்றாலும் கற்றதையெல்லாம் தவறாக வியாக்கியானம் செய்வர்.

अकरुणत्वम् अकारणविग्रहः
परधने परयोषिति च स्पृहा ।
सुजनबन्धुजनेष्वसहिष्णुता
प्रकृतिसिद्धम् इदं हि दुरात्मनाम् ॥ 1.45 ॥

दुर्जनः परिहर्तव्यो
विद्यया‌உलकृतो‌உपि सन् ।
मणिना भूषितः सर्पः
किम् असौ न भयङ्करः ॥ 1.46 ॥

tags– நல்லோர்,தீயோர், பாம்பு, பசு, விஷம், பால்

Xxxxxxxxxxxxxx  subham xxxxxxxxxxxxxxxxxxxx

கொம்புள்ள மாட்டுக்கு 5 முழம் போதும், தீயோருக்கு…………… (Post No.2881)

beauty bull

Article written by London swaminathan

 

Date: 9 June 2016

 

Post No. 2881

 

Time uploaded in London :– 8-28 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

 

நீதி வெண்பா என்ற அருமையான நூலில் 100 பாடல்கள் உள்ளன.விவேக சிந்தாமணி என்ற நூலைப் போலவே இதை எழுதிய ஆசிரியர் பெயரும் கிடைக்கவில்லை. அதில் ஒரு அருமையான பாட்டு:-

கொம்புளதற்கு ஐந்து குதிரைக்கு பத்துமுழம்
வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே – வம்புசெறி
 
தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து
நீங்குவதே நல்ல நெறி. (பாடல் 20, நீதி வெண்பா)

 

கொம்பு இருக்கும் மாடு முதலிய மிருகங்களுக்கு அருகில் போகாதீர்கள். குறைந்தது ஐந்து முழமாவது தள்ளி நில்லுங்கள். குதிரைக்கு பத்து முழ தூரத்தில் நின்றால் பாதுகாப்பாக இருப்பீர்கள். யானைக்கு ஆயிரம் முழம் தள்ளி நில்லுங்கள். திடீரென்று மதம் பிடித்து ஓடிவந்தால் அதை உங்களால் முந்தமுடியாது. ஆகையால் 1000 முழமாவது தள்ளி இருங்கள். ஆனால் தீயோரைக் கண்டால் – துஷ்டர்களைக் கண்டாலோ, கண் காணாத தூரத்துக்கு ஓடிப் போய்விடுங்கள். அப்படிப்பட்ட ஆள் வருகிறான் என்றால் அந்தப் பக்கமே போகாதீர்கள். அவர்களை போலீசாரும், நீதித் துறையும் கவனித்துக்கொள்ளும். இது நல்லதொரு புத்திமதி.

India Rampaging Elephant

இதே விஷயம் சம்ஸ்கிருதத்திலும் அழகாக உள்ளது:-

சகடம் பஞ்சஹஸ்தேஷு தசஹஸ்தேஷு வாஜினம்

கஜம் ஹஸ்த சஹஸ்ரேண துஷ்டம் தூரேண வர்ஜயேத்

வண்டிகள் (சகடம்) நின்றால் அதற்கு அருகில் நிற்காதீர்கள். அது திடீரென நகரக்கூடும். குறைந்தது ஐந்து முழமாவது தள்ளி நில்லுங்கள். குதிரைகள் (வாஜினம்) இருந்தால் முனால் பாய்ந்து கடிக்கவும் செய்யும்; பின் காலால் உதையவும் செய்யும்; ஆகையால் பத்து முழம் தள்ளி நில்லுங்கள். யானைக்கு (கஜம்) ஆயிரம் முழம் தள்ளி நில்லுங்கள். துஷ்டர்களைக் கண்டாலோ வெகு தொலைவில் போய் விடுங்கள்.

 

அவ்வையாரோ இதற்கும் ஒரு படி மேலே போகிறார்; காந்திஜியின் குரங்கு பொம்மை இதிலிருந்து தோன்றியதே என்று முன்னரே ஒரு கட்டுரையில் சொன்னேன்:–

தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற

தீயார் சொல் கேட்பதுவும் தீதேயாம் – தீயார்

குணங்களுரைப்பதுவும் தீதே யவரோ

டிணங்கி யிருப்பதுவுந் தீதேவாக்குண்டாம், அவ்வையார்.

 

கெட்டவர்களைப் பார்ப்பது தீது; அவர் சொல் கேட்பதும் தீது; அவர்களுடன் சேருவது தீது (இதெல்லாம் முன்னர் சொன்ன விஷயங்களே. அவரைப் பற்றிப் பேசுவதும் தீதே. அதாவது பேஸ் புக்கிலும், ஈ மெயிலிலும், திண்ணைப் பேச்சிலும், நண்பர்களின் அரட்டைக் கச்சேரியிலும் அவர்களைப் பற்றிப் பேசாதே. ஏன்?

1.நேரம் வீண், 2.எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. யார் உங்களுக்கு குழி பறிப்பார்கள் என்பதும் தெரியாது என்று எச்சரிக்கிறார் அவ்வையார்.

3 snakes

இறுதியாக மேலும் ஒரு சம்ஸ்கிருதப் பாடல்:–

துர்ஜன: பரிஹர்தவ்யோ வித்யா அலங்க்ருதோ அபி சன்

மணினா பூஷித ஸர்ப: கிம் அசௌ ந பயங்கர:

படித்தவர்களாக இருந்தாலும் கெட்டவர்களாக இருந்தால், அவர்களை விட்டுவிடவேண்டும். நாகரத்தின மணி வைத்திருந்தாலும் பாம்பு என்பது பயங்கரமானது இல்லையா!

படித்தும் கெட்டவர்கள் = மாணிக்கம் தரித்த விஷப் பாம்பு

அழகான உவமை!

 

வாழ்க தமிழ்; வளர்க சம்ஸ்கிருதம்.

–சுபம்–