ஜோதிடம் பற்றி யுதிஷ்டிரருக்கு நாரதர் கூறியது என்ன?(Post.8791)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8791

Date uploaded in London – – 9 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஜோதிடம் பற்றியும் துர்நிமித்தம் பற்றியும் நாரதர் யுதிஷ்டிரருக்குக் கூறியது என்ன?

ச.நாகராஜன்

    ஜோதிட சாஸ்திரம் வேதத்தின் ஆறு அங்கங்களில் ஒன்று. இது பல மஹரிஷிகள் போற்றிய சாஸ்திரமும் கூட.

    கிருஷ்ணனுக்கும் சிசுபாலனுக்கும் யுத்தம் ஆரம்பிக்கும்போது பல நிமித்தங்கள் ஏற்பட்டன.

      அப்போது யுதிஷ்டிரர் பல உற்பாதங்களையும் அபசகுனங்களையும் கண்டார். இவற்றைப் பற்றி அவர் நாரத முனிவரிடம் கேட்க நாரதர் அளித்த பதிலை ஸபா பர்வம் அறுபத்தொன்பதாவது அத்தியாயத்தில் காணலாம்.

     இது ஜோதிட சாஸ்திரம் பற்றியும் துர்நிமித்தங்கள் பற்றியும் நாரதர் கூறிய பகுதியாகும். நாரதர் மரங்களை வெட்டக் கூடாது என்பது பற்றிக் கூறுவது குறிப்பிடத்தகுந்தது. சுற்றுப்புறச் சூழ்நிலைகளை நாம் பாதித்தால் அது நம்மை வெகுவாக பாதிக்கும் என்பதை நாரதர் தெளிவாக விளக்குகிறார்.

     மஹரிஷி நாரதர் கூறுவதன் ஒரு பகுதியை இங்கு பார்ப்போம்.

ஜோதிட சாஸ்திரம் கற்றுணர்ந்தவன் கிரகங்களின் வலிமையையும் செல்லும் வழியையும், சேருதலையும், உச்சத்தையும், ஆரோஹணத்தையும் – அதாவது அபிவிருத்தியையும் – ஒன்றையொன்று எதிர்த்துச் செல்வதையும், கிரணங்கள் சேருவதையும், முயற்சியோடிருப்பதையும், நிலைகுலைதலையும், காணக்கூடிய கிரஹங்கள் காணப்படாதிருத்தலையும், காணக்கூடாத கிரகங்கள் காணப்படுதலையும், நீசம் அடைதலையும், ஏற்றக்குறைவுகளையும், நிறத்தையும், இடத்தையும், பலாபலன்களையும், முழுவதுமாக பரீக்ஷிக்க வேண்டும்.

     இவ்வுலகில் தெய்வீகமாக உண்டாக்கப்பட்ட உற்பாதங்கள், பூமியைச் சார்ந்தவை முதலிலும், ஆகாயத்தைச் சார்ந்தவை பிறகும் உண்டாகின்றன. சூரியன் மேற்குத் திசையில் இருக்கும் போது எல்லாப் பொருள்களின் நிழலும் கிழக்கே திரும்பாமல் இருந்தால் அது தோல்விக்கு ஒரு அடையாளமாகும்.    

     எப்போது கிராமங்களிலுள்ள தலைமையான மரங்களின் நிழல் (வெயில் இல்லாமல் இருக்கும் போது) பிரதிபிம்பம் போலத் தெளிவாகக் காணப்படுகிறதோ அப்போது பெரிய அச்சத்தை அறிய வேண்டும்.

     கிராமங்களின் தலைமையான மரங்கள் இலைகள் உதிர்ந்தும், இலைகளும் தளிர்களும் (அகாலத்தில்) உதிர்ந்தும் துளிர்கள் கெட்டும் போமாயின் அப்போது நாசத்தைச் சொல்ல வேண்டும்.

     கிராம விருக்ஷங்கள் செழித்த இலைகளும் தளிர்களுமுள்ளவையாகவும், விருத்தி அடைகின்றவையாகவும் காணப்படுமாயின் அப்போது க்ஷேமத்திற்குச் சந்தேகமே இல்லை.

     பூவின் மேல் பூவும், காயின் மேல் காயும் சேர்ந்து உண்டாகுமாயின் அப்போது ராஜாவாயினும் ராஜாவைப் போன்றவனாயினும் மரணமடைவான்.

    கார் காலம், சரத் காலம், பனிக் காலம், வஸந்த காலம் ஆகிய எல்லாக் காலங்களிலும் அவ்வக்காலத்திற்குரியவை அல்லாத மலர்களும் கனிகளும் உண்டாகுமாயின் தேசத்தில் கலக்கத்தை உரைக்க வேண்டும்.

    அகாலத்தில் நதிகள் பெருகுவதும் மஹா பயத்திற்கான குறிப்பாகும்.

    சிலாக்கியமான மரமானது பூஜிக்கப் பெற்றதாயினும், பெறாததாயினும் காற்றினால் முறிக்கவாவது அல்லது பெயர்க்கவாவது அல்லது சாய்க்கவாவது படுமாயின் அக்னி பயத்தையாவது, வாயு பயத்தையாவது அறிய வேண்டும்; சிறந்த மனிதனாவது அழிந்து போவான். திசைகள் எல்லாம் எரியுமாயின் ராஜாக்களுக்கு மாறுதல்கள் உண்டாகும்.

     வெட்டித் தள்ளப்பட்ட மரம் சப்தம் செய்யுமாயின் அதனுடன் கூட அந்த ராஜ்யமே விழுந்து போகும். ஆதலால், மரத்தை வீழ்த்தல் கூடாது.

    மரத்தை ஒருவன் வெட்டுவிப்பானாயின் அந்த மரம் அவன் மேல் அதற்காகக் கோபிக்கும். வெட்டினவனும், பெயர்த்தவனும், அம்மரத்திற்கு உடையவனும் உடனே அழிவர்.

     தேவதா விக்கிரஹங்கள் விழுவதும், மண்டபங்கள் இடிவதும், மலைகள் அசைவதும் தோல்விக்கான அறிகுறிகள்.

     இரவில் வானவில்லைக் கண்டாலும் அதனால் பெரும்பயம் உண்டு. ஆனால், அதைக் கண்டவனுக்கு மட்டுமே பயம் உண்டாகுமே தவிர மற்றவருக்கு இராது. இரவில் வானவில்லைக் கண்டவன் உடனே அந்த தேசத்தை விட்டு அகல வேண்டும்.

   எங்கே தேவதா விக்ரஹங்கள் ஆடவும், கூவவும், நகைக்கவும், கண் திறக்கவும், மூடவும் செய்கின்றனவோ அந்த தேசத்தில் கலக்கத்தைச் சொல்ல வேண்டும்.

    கற்களிலிருந்து நீர்க்கசிவுகளும் மற்ற எவ்வகையான மாறுதல்களும் உண்டாகுமாயின் அவை பயத்திற்கான அடையாளங்கள்; பெரிய மனிதர்களாயினும், பரிஜனங்களோடு கூடிய அரசனாயினும் இறந்து போவார்கள். நகரத்தில் வியாதியாவது உண்டாகும்; ராஜ்யத்திலும், தேசத்திலும் கலக்கங்களாவது உண்டாகும்.

தேவதைகளின் ஆலயங்களிலும், ராஜாக்களின் அரண்மனைகளிலும், பூஷண சாலைகளிலும், ஆயுத சாலைகளிலும் தேன்கூடு கட்டப்படுமாயின் அப்போது அந்தத் தேசமே மேலான பலவானால் அழிக்கப்படும். அந்த தேசத்தில் திடீரென்று பயம் உண்டாகும் என்று சொல்ல வேண்டும்.

    மரத்திலிருந்தும், யானை தந்தத்து நுனியிலிருந்தும், காளை மாட்டின் கொம்பிலிருந்தும் சிவந்த ரத்தம் பெருகுமாயின், மரத்தில் பெருகுவதால் தேசம் போகும்; யானை தந்தத்தில் பெருகுவதால் அரசு மாறும்; மாட்டுக் கொம்பில் பெருகுவதால் பசுக்களுக்கும், பிராமணர்களுக்கும் நாசமுண்டாகும் என்று சொல்லலாம்

“அரசனே! ராஜாவின் குடை தரையில் விழுமாயின் அவ்வரசனும், அவன் ராஜ்யமும் உடனே அழிந்து விடும். தேவாலயங்களிலும், ராஜ கிருஹங்களிலும், யானை கட்டுகிற இடங்களிலும் வேறுபாடு காணப்படுமாயின் அந்த தேசத்திற்கும், ராஜாவுக்கும், ஊருக்கும் பீடையுண்டாகும்.

    கொடிய அனாவிருஷ்டியால் (அதாவது மழையில்லாததால்) பயத்தையும், பெரும் பஞ்சத்தையும் சொல்ல வேண்டும்.

    தேவதா விக்ரஹங்களின் கைகள் ஒடிவதால் கிருஹஸ்தர்களுக்குப் பயம் உண்டாகும். (அவற்றின்) ஆயுதம் ஒடிந்தால் சேனாபதி இறப்பான் என்று அறிய வேண்டும்.

    புதிதாக வந்த தேவதா விக்ரஹம் ஆறு மாதத்திற்குள் இடத்தில் நிலை பெறுத்தப்படாமல் போமாயின்  அந்த நகரத்தை விட்டு ராஜா அகலுவான்.

    பூமி வெடித்தாலும், சப்தம் செய்தாலும், இடிந்து விழுந்தாலும் அந்த தேசத்து அரசன் இறப்பான்; தேசமும் கெடும்.

    ஏணீபதம், ஸர்ப்பம், டுண்டுபம், தீப்யகம் என்னும் பாம்பு ஜாதிகளைத் தவளை விழுங்குமாயின் அங்கே ராஜ நாசம் உண்டாகும்.

    அன்னமானது ஒன்று சேர்க்கப்படாமலும், சமைக்கப்படாமலும், அதிகப்படுமாயின்  அந்தத் தேசத்தார்  நோயுற்று இறந்து போவர். அந்த அன்னத்தை அவர்கள் புசியார்.

    தடாகம் முதலிய ஜலாசயங்களில் நீர் பொங்கினாலும், மரம் முதலிய ஸ்தலங்களில் தண்ணீர் உண்டானாலும், அங்கிருந்து வெளிப்பட்டாலும், பெண்கள் காலில்லாமலாவது மூன்று கால்கள், இரண்டு தலைகள், நான்கு கைகளோடு கூடவாவது இருக்கும் குழந்தையைப் பெற்றாலும் அந்த தேசத்திற்குத் தோல்வியைச் சொல்ல வேண்டும்.

    வெள்ளாடுகளும், செம்மறியாடுகளும், பெண்களும், பசுக்களும் மற்றுமுள்ள பல ஜாதிகளும் இயற்கைக்கு மாறான சந்ததிகளைப் பிரசவித்தால் அந்தத் தேசத்தில் தோல்வி நிச்சயம்.

     நதியானது கலங்கிய ஜலமாக எதிர் நோக்கிச் சென்றாலும் திசைகள் ஒளியில்லாமல் போனாலும் அவை தோல்விக்கான் அறிகுறிகளாகும்.

    இவையும் பூமியையும், ஆகாயத்தையும் சேர்ந்த மற்றுமுள்ள சகுனங்களும் கிருஷ்ணனாலேயே உண்டாகின்றன.

    சந்திர சூரியர்கள், க்ரஹங்கள், நக்ஷத்திரங்கள், காற்று, நீர், நிலம் இவையனைத்தும் கிருஷ்ணனிடமிருந்து உண்டானவை. எந்தத் தேசத்துக்குக் குறைவையாவது விருத்தியையாவது கிருஷ்ணன் செய்ய விரும்புகிறாரோ அந்தத் தேசத்தில் அதற்குரிய சகுனங்களை இவரே உண்டு பண்ணுகிறார்.

   “இதோ பார்,  பூமி அசைகிறது. கெட்ட காற்று வீசுகிறது. பருவமில்லாத காலத்தில் ராகு சந்திரனைப் பிடிக்கிறான். இடிகளோடு எரிகொள்ளிகள் விழுகின்றன. இருள் மிகுதியாக உண்டாகிறது.”

இவ்வாறு நாரதர் தர்மபுத்திரரிடம் கூறும் போது இன்னும் பல துர்நிமித்தங்கள் ஏற்பட்டன.அதன் பின்னர் சிசுபாலனின் வதம் நிறைவேறியது.

   இந்தப் பகுதி தரும் நிமித்தக் குறிப்புகள் ஆழ்ந்து ஊன்றிக் கவனிக்கத் தக்கவை. இயற்கை மனிதர்களுடன் பேசும் ஒரு பாஷையே நிமித்தமாகும்.

tags– நாரதர் தர்மபுத்திர , துர்நிமித்தங்கள், Narada images