தூயவராக உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள்! – 6 (Post No.7267)

Written by S NAGARAJAN

swami_48@yahoo.com

Date: 27 NOVEMBER 2019

Time  in London – 5-49 AM

Post No. 7267

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

நவம்பர் 23. பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா பிறந்த தினம். அவரை வழிபட்டுத் துதிப்போம்!

உரையின் முற்பகுதி : கட்டுரை எண் 7241; வெளியான தேதி 21-11-2019; இரண்டாம் பகுதி கட்டுரை எண் 7245 வெளியான தேதி 22-11-2019; மூன்றாம் பகுதி கட்டுரை எண் 7250 வெளியான தேதி 23-11-2019; நான்காம் பகுதி கட்டுரை எண் : 7258 வெளியான தேதி : 25-11-19; ஐந்தாம் பகுதி : வெளியான தேதி  ; பார்க்கவும்.

ஸ்ரீ சத்ய சாயிபாபா பிறந்த நாள் செய்தி : தூயவராக உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள்! – 6

ச.நாகராஜன்

மாணவர்களே!

உங்களது கல்வியை இங்கு தொடர்ந்து கற்றுக் கொள்வதோடு ஸ்வாமியின் உபதேசங்களைக் கேட்டிருப்பதால் இலட்சிய மனிதராக உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். தெய்வீகத் திருவுருவின் முன்னர் எப்போதும் வாழ்கின்ற புனிதமான வாய்ப்பு உங்களுக்கு ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதால், அதை முழுவதுமாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு போதும் கடும் சொல்லைப் பேசாதீர்கள். ஒரு போதும் பொய் பேசாதீர்கள். சில சமயம் உண்மையைச் சொல்வதானது ஆபத்தில் கொண்டு போய் விடும். அப்படிப்பட்ட நிலையில் பொய்யும் பேச வேண்டாம்; உண்மையும் பேச வேண்டாம், மௌனமாக இருந்து விடுங்கள்.

பொய்க்கும் மெய்க்கும் அப்பாற்பட்டு அந்த இரண்டையும் நீங்கள் கடக்க வேண்டும். நீங்கள் உங்கள் வாலிபப் பருவத்தின் ஆரம்பத்தில் இருப்பதால், இதுவே புனிதமான பாதையில் செல்வதற்கான நல்ல தருணம். சீக்கிரமாகக் கிளம்புங்கள், மெதுவாக ஓட்டுங்கள், பத்திரமாகச் சேருங்கள்.

 எனக்கு எனது பிறந்த நாளைக் கொண்டாடுவதில் கொஞ்சம் கூட ஆர்வம் இல்லை. பக்தர்கள் வெவ்வேறு நிகழ்ச்சிகளை இந்த நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்ய விரும்பினார்கள். ஆனால் நான் அவர்களை அனுமதிக்கவில்லை. நீங்கள் ஏராளமான பேர்கள் இங்கு குழுமி விட்டதால் இந்தக் கூட்டம் இங்கு நடைபெறுகிறது. இல்லையெனில் இந்தக் கூட்டத்திலும் கூட எனக்கு ஆர்வம் இல்லை. எனக்கு ஒவ்வொரு நாளும் திருநாள் தான். நான் எப்போதும் ஆனந்தமயம். நான் என்றும் நிலைத்திருக்கும் ஆனந்தத்தின் திருவுருவம். எந்த மாதிரியான ஆனந்தம்?  மற்றவர்கள் கொடுக்கின்றது போன்ற ஆனந்தம் அல்ல அது.  மற்றவர்கள் எனக்கு ஆனந்தத்தைத் தருவதற்காக நான் காத்திருப்பதில்லை. எனது ஆனந்தம் உள்ளிருந்து உருவாகிறது.

நித்யானந்தம், பரம சுகதம், கேவலம் ஞான மூர்த்திம், த்வந்வாதீயம், ககன சத்ருஷம், தத்வமஸ்யாதி லக்ஷ்யம், ஏகம், நித்யம், விமலம், அசலம், சர்வாதிசாக்ஷிபூதம், பாவாதீதம், திரிகுணரஹிதம் (கடவுள் என்றும் நிலைத்திருக்கும் ஆனந்தத்தின் திருவுரு. அவன் ஞானத்தின் மொத்த உரு, இரண்டு அற்ற ஏகன், ஒன்றுக்கொன்று எதிர்மறையாக உள்ளவற்றிற்கு அப்பாற்பட்டவன், ஆகாயம் போலப் பரந்தவன், அனைத்தையும் ஊடுருவி எங்கு நிறைந்திருப்பவன், தத்வமஸி என்ற மஹாவாக்யம் கூறியுள்ள லக்ஷியம், நித்யமானவன், விமலன், மாறுதலற்றவன், அறிவின் அனைத்துச் செயல்களுக்கும் சாக்ஷியானவன், அனைத்து மனநிலைகளுக்கும் அப்பாற்பட்டவன், சத்வம், ரஜஸ், தமோ குணம் ஆகிய மூன்று குணங்களுக்கும் அப்பாற்பட்டவன்).

 நான் அனைத்து குணங்களுக்கும் அப்பாற்பட்டவன். நம்பினால் நம்புங்கள், நான் ஆனந்தத்தின் திருவுருவமாக அமைந்தவன். நீங்கள் வேறு விதமாக நினைத்தால் தவறு உங்களிடம் இருக்கிறது. நான் எதைச் செய்தாலும் அது உங்கள் நன்மைக்காகவே, உங்களின் வளத்திற்காகவே, உங்களின் சந்தோஷத்திற்காகவே. ஆனந்தமயமான, கறைபடாத வாழ்க்கையை வாழுங்கள். அதுவே உங்களிடம் நான் விரும்புவது. ஒரு காலத்திலும் நான் கவலைப்பட்டதில்லை; துன்பப்பட்டதில்லை. என்னிடம் எல்லாமே இருக்கும் போது எதற்காக நான் கவலைப்பட வேண்டும்? எனக்கு எந்த வித ஆசைகளும் இல்லை. நான் சொல்வதெல்லாம், நான் செய்வதெல்லாம் உங்களுக்குத் தான் நன்மை, எனக்கு அல்ல. நான் உங்களுக்காகவே வந்திருக்கிறேன். ஆகவே என்னை முழுவதுமாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் புனிதமான எண்ணங்களைக் கொண்டிருந்தால் நான் எப்போதுமே தயார் தான். தெய்வீகமான வாழ்க்கை வாழுங்கள். சில சமயம் நான் உங்களுடன் பேசுவதில்லை. “நாம் ஏதோ தவறு இழைத்திருக்கிறோம்” அதனால் தான் ஸ்வாமி நம்முடன் பேசவில்லை என நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் உண்மையைச் சொல்லப் போனால், மற்றவர்களிடம் குறைகளைப் பார்ப்பது எனது இயற்கையல்ல. எனது காட்சி மிகவும் புனிதமானது. நான் எப்போதுமே உங்களிடம் நல்லதையே பார்க்கிறேன். கெட்டதைப் பார்ப்பதானது உங்களது சொந்தக் கற்பனையே. ஏனெனில் உங்களிடம் கெட்டது இருக்கிறது, ஆகவே மற்றவர்களிடமும் அதையே நீங்கள் பார்க்கிறீர்கள். ஆனால் எனக்கோ கெட்டதும் கூட நல்லதாகத் தான் தெரிகிறது. ஆகவே ஸ்வாமியைப் பற்றி எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடம் கொடுக்காதீர்கள். சம்ஸ்யாத்மா வினஸ்யதி! (யார் சந்தேகப்படுகிறானோ அவன் அழிகிறான்) திடமான நம்பிக்கை கொள்ளுங்கள்.

அன்புத் திருவுருவங்களே!

உங்கள் விருந்தாளிகளை வரவேற்று  மரியாதை செய்யுங்கள். உங்கள் அன்பை அனைவருக்கும் கொடுங்கள். பசித்தோருக்கு உணவு கொடுங்கள். அப்போது மட்டுமே உங்களுக்கு மன அமைதி கிட்டும். உங்கள் எண்ண்ம், சொல், செயல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து லயப்படுத்துங்கள். இதை விடப் பெரிய ஞானம் வேறொன்றும் கிடையாது. ரிதமை பயிற்சி செய்யுங்கள்.  இதுவே தாரகத்திற்கான (முக்திக்கான) வழி. நீங்கள் அவ்வப்பொழுது அலைபாய்ந்து கொண்ட மனதுடன் இருந்தால் நீங்கள் தான் மிகவும் துரதிர்ஷ்டசாலி. அங்குமிங்கும் அலைபாய்வது குரங்கின் மனதிற்கான இயற்கைக் குணம். நீங்கள் மனிதகுலத்தைச் சேர்ந்தவர்கள். மனிதனாகப் பிறந்து நீங்கள் உறுதியான மனத்தைக் கொள்ள வேண்டும். மனிதகுலம் தாரகத்திற்கான அடையாளம். குரங்கு மனம் மாரகத்தைக் குறிப்பிடுவதாகும் (தளை).

அன்புத் திருவுருவங்களே!

இந்தப் பிறந்த நாளில் நீங்கள் மிக முக்கியமான ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். வெற்றுப் பேச்சில் வீணாக நேரத்தைக் கழிக்க வேண்டாம். ஒரு முறை தொலைத்து விட்ட நேரத்தைத் திரும்பிப் பெற முடியாது. ஸத்தியத்தைக் கடவுள் எனக் கொள்ளுங்கள்.

ஸத்யம் நாஸ்தி பரோ தர்ம:

(ஸத்யத்தைக் கடைப்பிடிப்பதைத் தவிர வேறு பெரிய தர்மம் ஒன்றும் இல்லை.)

ஆகவே ஸத்தியத்தின் வழியைப் பின்பற்றுங்கள்; தர்மத்தைக் கடைப்பிடியுங்கள்.

***

பாபாவின் உரை இத்துடன் முற்றுப் பெறுகிறது.

23-11-2002இல் பிரசாந்தி நிலையத்தில் பாபா ஆற்றிய உரை.

ஆங்கிலத்தில் இதைப் படிக்க விரும்புவோர் Sathya Sai Speaks – Vol 35, உரை எண் 23ஐப் பார்க்கவும்.