
Post No. 10,048
Date uploaded in London – 3 September 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஆலயம் காக்க அனைவரையும் அன்றே வணங்கிய பாண்டிய மன்னன் பராக்ரம பாண்டியன்!
ச.நாகராஜன்
ஆலயத்தை அழிக்க இன்றைய நாசகார சக்திகள் முனைந்து துணிந்து வேலை செய்யும் இந்தக் கால கட்டத்தில் நம் தெய்வத் தமிழின் புனிதத்தைக் காக்க ஆலயப் பணியை மேற்கொண்டு அதைத் திருத்தமுற அமைத்த மன்னர்களை நினைத்து நம் நெஞ்சம் உருகுகிறது. அவர்கள் மேல் நம் மதிப்பு மிகவும் கூடுகிறது.
விஜயநகர மன்னர் வம்சத்தால் பாண்டிய நாடு நாயக்க மன்னர் ஆளுகைக்கு உட்பட்ட போது பாண்டிய மன்னர்கள் தென்காசியைத் தலைநகரமாகக் கொண்டு திறம்பட ஆட்சி செய்ய ஆரம்பித்தனர்.
நாடும் அதிகாரமும் அவர்கள் அளவில் சுருங்கினாலும் அவர்கள் மனம் சுருங்கவில்லை. தெய்வத்தமிழின் பால் அவர்கள் கொண்ட அன்பு இம்மியளவும் குறையவில்லை.
தெய்வத்தின் பால் அவர்கள் கொண்ட பக்தி கூடியதே தவிர குறையவே இல்லை.
தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் தமிழராகிய நம் அனைவருக்கும் உத்வேகமூட்டும் ஒரு பெரும் கோவில்.
சடாவர்ம பராக்ரம பாண்டியன் தான் முதன் முதலாக தென்காசியைத் தலைநகரமாகக் கொண்டு பாண்டிய மன்னனாக ஆள ஆரம்பித்த மாபெரும் மன்னன். அவன் ஆண்ட காலம் 1422ஆம் ஆண்டு முதல் 1463ஆம் ஆண்டு முடிய ஆகும்.
அவன் காசி விஸ்வநாதர் ஆலயத்தைப் புதுப்பித்தான். இந்த ஆலயம் பற்றிய வரலாற்றை எழுத வேண்டுமானால் அது தனிப் பெரும் கட்டுரையாக அமையும். (விரைவில் இந்த ஆலயம் பற்றிய தனிக் கட்டுரையும் வரும்)
அப்படிப்பட்ட ஆலயத்தைப் புதுப்பித்த அவன் அங்கு ஒரு கல்வெட்டில் தன் மனதை அப்படியே வடித்து வைத்தான்.

அது இது தான்:
ஆராயினும் இந்த தென்காசி மேவுப் பொன்னாலயத்து
வாராத தோர் குற்றம் வந்தாலப் போதங்கு வந்ததனை
நேராகவே யொழித்துப் புரப்பார்களை நீதியுட்ன
பாராரறியப் பணிந்தேன் பராக்ரம பாண்டியனே
என்ன ஒரு பணிவும் பக்தியும் பாருங்கள்.
இந்த தென்காசி மேவும் பொன் ஆலயத்தில் எப்போதாவது எதிர்காலத்தில் வரக் கூடாத ஒரு குற்றம் வந்தால், அப்போது அங்கு வந்து அதனை நேராக ஆக்கிக் குற்றத்தை ஒழிக்கும் யாராக இருந்தாலும் சரி, அவர்களை பாரோர் அனைவரும் அறிய இப்போதே பணிந்து என் பணிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அந்த மன்னன் எங்கே, ஆலயத்தைச் சீரழிக்கத் துடிக்கும் இன்றைய ஈனப்பிறவிகள் எங்கே?!
இந்தக் கல்வெட்டுத் தலையாய பக்திமானான ஆலயம் காத்த, எப்போதும் காக்கத் துடித்த ஒரு தமிழனின், தமிழர்களை ஆண்ட தமிழ் மன்னனின் கல்வெட்டு. இது போல் இன்னொரு கல்வெட்டு உலகில் உண்டா சொல்லுங்கள், பார்ப்போம்.
இல்லை, இல்லவே இல்லை.
அடுத்து அவன் கூறுவதைப் பார்ப்போம்:
அரிகேசரிமன் பராக்ரம மாறனரனருளால்
வரிசேர் பொழிலணி தென்காசிக் கோயில் வகுத்துவலம்
புரிசேர் கடற்புவி போற்றவைத் தேனனன்பு பூண்டிதனைத்
திரிசேர் விளக்கெனக் காப்பார் பொற்பாதம் சென்னியதே.
அரன் அருளால், அரிகேசர் பராக்ரம பாண்டியனாகிய நான், வரி சேர் அழகு அணியாகத் திகழும் தென்காசித் திருக்கோயிலை, வடிவமைத்து வலம்புரியைத் தன்னுள் அடக்கிய கடலானதைக் கொண்ட புவியானது போற்றும் படி வைத்தேன். இந்தக் கோவிலின் பாலும் இறைவனின் பாலும் அன்பு மிகக் கொண்டு இதனை திரி சேர் விளக்கு ஒளிர்வது போக காப்பவர்களின் பொற்பாதங்களை என் சென்னியில் – என் தலையில் – வைத்துப் போற்றுகின்றேன். (இப்போதே)
என்ன ஒரு உருக்கம் பாருங்கள், என்ன ஒரு பணிவு பாருங்கள்.
அடியார்க்கு அடியானாக இருக்கும் சிறந்த சிவனடியார் இவன் அல்லவோ!
சிவனைப் பணிந்து விட்டு இவனையும் அல்லவோ நாம் பணிய வேண்டும்!
அடுத்த கட்டுரையுடன் முடியும்
***
INDEX
பராக்ரம பாண்டியன்
தென்காசி தலை நகர்
காசி விஸ்வநாதர் ஆலயம் புதுப்பித்தல்
பாரோர் அறியப் பணிதல்
உலகில் உள்ள ஒரு அரிய கல்வெட்டு

tags- பராக்ரம பாண்டியன், தென்காசி