
Post No. 9656
Date uploaded in London – – –28 May 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
வைகாசி மூலம் திருஞானசம்பந்தர் குரு பூஜை தினமாகும். அதையொட்டி ஞானமயம் 27-5-21 அன்று ஒளிபரப்பிய சிவஞான சிந்தனை நிகழ்ச்சியில் ஆற்றிய உரை!
தெய்வத் தமிழ் வளர்த்த திருஞானசம்பந்தர்!
சம்பந்தர் குருபூஜை விழா உரை

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்.
இன்று ஒரு நன்னாள். வைகாசி மூலம் திருஞானசம்பந்தரின் குருபூஜை தினம். அதையொட்டி சிவஞான சிந்தனை கொள்ளும் நன்னாள் இது.
சயமிகுத்தரு கரைமுருக்கிய தமிழ்பயிற்றிய நாவன்
வியலியற்றிரு மருகலிற்கொடு விடமழித்தருள் நீதன்
கயலுடைப்புனல் வயல்வளத்தரு கழுமலப்பதி நாதன்
இயலுடைக்கழல் தொழநினைப்பவர் இருவினைத்துயர் போமே
என்று கூறி ஆளுடையபிள்ளையார் திருவடி போற்றி வணங்குகிறேன்.
பல்வேறு சிக்கல்கள் நினைந்த மனித வாழ்க்கை என்னும் கடலில் நீந்திக் கரை ஏறுவது என்பது மலைப்பான ஒரு விஷயம். இதைச் சுலபமாக்க அருளாளர்கள் தோணி போல வந்து உதவி அருள் புரிகின்றனர்.
அந்த வகையில் தமிழையே தன் உடலாகக் கொண்ட தமிழாகரன் திருஞானசம்பந்தர் தமிழால் பாடி உலக மக்கள் அனைவருக்குமே ஒரு அற்புதமான நல்வழியைக் காட்டுகிறார்.
பாஸிடிவ் திங்கிங் என்று இன்றைய நவீன அறிவியல் உலகம் கூறிக் கூறி மகிழ்கிறதே அந்த ஆக்கபூர்வமான சிந்தனையை அன்றே தந்து அருளியவர் அவர்.
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணின் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறைவு இலைக்
கண்ணின் நல்லஃது உறும் கழுமல வள நகர்ப்
பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே
என்ன ஒரு அற்புதமான இறை சிந்தனை! மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்,சிவபிரானை எண்ணின் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறைவு இல்லை!
இப்படிக் கூறி அருள் பாலிப்பவர் 385 பதிகங்களிலே 4169 பாடல்களிலே நமக்கு உற்ற வழியைத் தருகிறார். அவர் பாடிய பதிகங்களின் எண்ணிக்கை குறித்து நம்பியாண்டார் நம்பி,
“பன்னு தமிழ்ப் பதினாறாயிரம் நற்பனுவல்
மன்னு புவியவர்க்கு வாய்ப்பவும் என்று கூறி அவர் பதினாறாயிரம் பனுவல் பாடிய செய்தியைக் கூறுகிறார். ஆனால் நமக்குக் கிடைத்த பொக்கிஷமான 385 பதிகங்களை ஓர்ந்து கற்று ஓதினாலே போதும் அறம். பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு நற்பேறுகளும் யாதும் ஓர் குறைவு இன்றிக் கிடைக்கும்.
‘ஓது, உன்னை அது நன்னெறிக்கு உய்க்கும்’ என்று அவர் கூறுகிறார்.
எதை ஓதுவது, எப்படி ஓதுவது என்று நாம் புரியாமல் அவரிடம் அருள் பாலிக்குமாறு வேண்டும் போது மிக சுலபமாக அஞ்செழுத்தை – பஞ்சாக்ஷரத்தைத் தருகிறார். எப்படி ஓத வேண்டும் என்று அழகுறச் சொல்கிறார்.
காதல் ஆகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சிவாயவே
அனந்தா வை வேதா: – வேதங்கள் அனந்தம். அதை முற்றிலுமாகக் கற்றவர் யாரும் இல்லை. ஆனால் அதன் சாரம் நமசிவாய எனும் நாமம், என்ற பெரும் ரகசியத்தை, உண்மை மெய்ப்பொருளை அவர் தந்து விடுகிறார். அதை உள்ளம் உவந்து ஏற்று காதல் கொண்டு கசிந்து கண்ணீர் மல்கி, உள் ஆர்வம் மிகப் பெருகி நினைந்து சொல்க என்று கூறுகிறார்.
அப்படிக் கூறினால் கொரானா உட்பட்ட எந்த இடர் வந்தாலும் போய் விடும் என்பது அவரது ஆணை.
ஆணை நமதே என்று அவர் நான்கு பாடல்களில் ஆணையிடுகிறார். அனைவருக்குமான நன்மைக்கு ஆணையிடும் அதிகாரம் படைத்தவர் யார்? இறைவனே அப்படி ஆணை இட முடியும். திருஞானசம்பந்தர் முருகனின் திரு அவதாரமே என்பதால் தான் அதிகாரபூர்வமாக அருளுடன் ஆணை இடுகிறார் இப்படி.
அஷ்ட கிரகங்களின் சேர்க்கை வந்த போது உலகமே அஞ்சி நடுங்கியது. அதைப் போக்க கோளறு பதிகமான வேயுறு தோளிபங்கன் பதிகத்தை உச்சரித்தோம்; பயத்திலிருந்து மீண்டோம். அந்தப் பதிகத்தில் நல்ல என்ற வார்த்தை மட்டும் 41 தடவை வருகிறது. நாளும் கோளும் இடியும் மின்னலும், கொலை யானை கேழல் கொடுநாகமொடு கரடி உள்ளிட்ட தீமை அனைத்தும் நீங்கி வருகாலமான பலவும் அலைகடல் மேரு நல்ல நல்ல நல்லவையாகவே அமையும் என்று கூறி ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசு ஆள்வர் ஆணை நமதே என்கிறார்.
நம்மை வம்மின் வாருங்கள் என்று கூவி அழைத்து இறையை நினைமின் என்று கூறி அருளுகிறார். அப்படி
மூரல் வெண்மதி சூடும் முடி உடை
வீரன் மேவிய வேற்காடு
வாரம் ஆய் வழிபாடு நினைந்தவர்
சேர்வர் செய் கழல் திண்ணமே என்று அறுதியிட்டு உறுதி கூறுகிறார்.
இப்படி பொருளும் அருளும் கை கூடும் இது திண்ணம் என்று அவர் ஆறு இடங்களில் உறுதிபடக் கூறுகிறார்.
சேர்வர் செய்கழல் திண்ணமே, தீரா நோய் எல்லாம் தீர்தல் திண்ணமே,சிந்தை செய்வார் வினை ஆயின தேய்வது திண்ணமே, சிரம் மலி சிவகதி சேர்தல் திண்ணமே,புண்ணியர் சிவகதி புகுதல் திண்ணமே என இப்படி உறுதி கூறுதல் இறைவனின் திரு அவதாரத்தைத் தவிர வேறு யாரால் தான் முடியும்?
இறைவன் அணோரணியான் மஹதோ மஹீயான். அணுவுக்கு அணு, பெரிதுக்கும் பெரிதானவன் என்ற வேத சாரத்தைப் பல நூறு பாடல்களில் பிழிந்து தருகிறார் அவர்.
நுண்மைக்கும் நுண்மையான இறைவனை லாபரட்டரியில் சோதனைக்குட்படுத்திக் கண்டுபிடித்து விட முடியுமா? கடவுளின் படைப்புத் தொழில் தனக்குத் தெரிந்து விட்டதாகவும் தன்னால் ஒரு மனிதனைப் படைக்கவும் முடியும் என்றும் சவால் விட்டார் ஒரு விஞ்ஞானி. கடவுளிடம் சென்ற அவர், கடவுளே! நீங்கள் படைத்தது போதும். உங்கள் உதவி எங்களுக்குத் தேவையில்லை. நாங்களே மனிதனைக் கூடப் படைத்து விடுவோம் என்றார். புன்சிரிப்புடன், கடவுள் அப்படியா! சரி செய், எங்கே ஒருவனைப் படைத்து காண்பியேன் என்றார். விஞ்ஞானி பெரு மகிழ்ச்சியுடன் கீழே இருந்த மண்ணை எடுத்தார், தன் படைப்புத் தொழிலை ஆரம்பிக்க! கடவுள் சொன்னார் உடனே” அப்பனே! அது கூடாது, நீ உனது மண்ணை, நீ படைத்த மண்ணை எடுத்து உன் வேலையை ஆரம்பி என்றார். விஞ்ஞானி வெட்கித் தலை குனிந்தார்.
ஞான சம்பந்தர், சிவபிரான் உள்ளம் உருகுவார்க்கு உள்ளேயே இருப்பவன் என்கிறார். கள்ளமிலா நெஞ்சம் உடையவர் மட்டும் அவனைக் காணலாம் என்கிறார்.
ஏனையோருக்கு அவர் ஒரு எச்சரிக்கையே தருகிறார் இப்படி:
ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்
சோதிக்க வேண்டா சுடர் விட்டு உளன் எங்கள் ஜோதி
மா துக்கம் நீங்கல் உறுவீர் மனம் பற்றி வாழ்மின்
சாதுக்கள் மிக்கீர் இறையே வந்து சார்மின்களே
தர்க்கம், அடுக்கு மொழி – LOGIC and REASONING இங்கே உதவாது அப்பா, மனம் ஒன்றி வாழ்மின், இறைவனையே வந்து பற்றுங்கள் என்கிறார்.

நம்பிக்கை இல்லாதவர்களையும், அவருக்கு இடர் விளைவித்தவர்களையும் அவர் எதிர்கொண்ட விதம் தனி. உலகத்தோர்க்கு அவர் காட்டிய அற்புதங்கள் பல. திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் தாம் அருளிய திருக்களிற்றுப்படியார் என்ற நூலில் அவற்றைத் தொகுத்துத் தருகிறார் இப்படி:
ஓடம், சிவிகை, உலவாக் கிழி, அடைக்கப்
பாடல், பனை, தாளம், பாலைநெய்தல் – ஏடு எதிர், வெப்பு
என்புக்கு உயிர் கொடுத்தல், ஈங்கிவைதாம் ஓங்கு புகழ்த்
தென்புகலி வேந்தன் செயல்.
மயிலாப்பூரிலே பூம்பாவை என்ற இறந்த பெண்ணின் எலும்புகளை ஒன்று சேர்த்து உருவமாக்கி உயிர் கொடுத்தார். சமணரை வாதில் வெல்ல மதுரையில் இறைவனின் திருவுள்ளக் குறிப்பை அறிந்தார். ஆண்பனையைப் பெண்பனையாக்கிக் காட்டினார். உலவாக் கிழி பேறு பெற்றார் திருப்பூந்தராயில். பிரமபுரத்திலே இறைவி தந்த ஞானப்பாலை உண்டு, சிவபிரான் அம்பிகை தரிசனம் கண்டு தோடுடைய செவியன் என்று பாடினார். தம்மை சிறு பாலகன் என்று பயந்த மங்கையர்க்கரசியாரைத் தேற்றினார். சமணரை வாதில் வென்றார். ஆற்றின் போக்கை எதிர்த்துச் சென்ற ஏட்டை திருவேடகத்தில் தங்கப் பாடினார். தீயிலிட்ட ஏடு இன்ன ஏதுவால் பச்சையாய் இருக்குமெனப் பாடினார். தோணியில் இருந்த காட்சியைத் திருவீழிமிழலையில் கண்டார். பொன் தாளம், முத்துச் சிவிகை பேறு பெற்றார். மறைக்கதவம் அடைக்கப் பாடினார். திருநல்லூர்ப் பெருமணத்து இறைவனிடம் முக்திப் பேறு வேண்டினார். தன்னுடன் இருந்த அனைவரையும் ஜோதியில் கலக்குமாறு வழி நடத்திச் சென்று முக்தி பெறச் செய்தார்! சம்பந்தரின் அற்புதங்கள் சொல்லால் விளக்க முடியாதவை. அவரது பதிகங்களிலே ஏராளமான புராணச் செய்திகளையும் வரலாற்றுப் பதிவுகளையும் பார்க்க முடிகிறது.
இயல் இசை நாடக நற்றமிழை தெய்வத் தமிழ் ஆக்கி புதிய உயரத்திற்கு ஏற்றினார் அவர். முதல் மூன்று திருமுறைகளில் உள்ள ஏராளமான சொற்றொடர்களும், கருத்துக்களும், இயற்கை வர்ணனைகளும் படிப்போர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும்.
தமிழின் வலிமையைக் காட்ட அவர் பாடிய பாடல்கள் ஏராளம். ஒரே ஒரு பாடலை மட்டும் இங்கு பார்ப்போம்.
யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயா நீ மாமாயா
இதன் அருமையான பொருளைப் பார்ப்போம்:
யாம் ஆமா – ஆன்மாக்களாகிய நாங்கள் கடவுள் என்றால் அது பொருந்துமா? பொருந்தாது!
நீ ஆம் ஆம் – நீயே கடவுள் என்றால் அது பொருந்தும்
மா யாழீ – பெரிய வீணையை வாசிப்பவனே
காமா – யாவரும் விரும்பத்தகும் கட்டழகு கொண்டவனே
காண் நாகா – யாவரும் காணுமாறு பாம்புகளை அணிந்தவனே
காணா காமா – காமனைக் கைகால் அங்கங்களைத் தோன்றாதவாறு அழித்தவனே
காழீயா – சீகாழியில் எழுந்தருளி இருப்பவனே
மாமாயா – லக்ஷ்மி தேவியின் கணவனான திருமாலாகவும் வருபவனே
மா மாயா நீ – கரியனவாகிய மலங்களிலிருந்து எம்மை விடுவிப்பாயாக!
தேவாரத் தலங்கள் என்றப் பேற்றைப் பெறும் வகையில் ஏராளமான தலங்களுக்குச் சென்று இசையுடன் அவர் பதிகங்களைப் பாடினார்.
அவர் பாடலில் இடம் பெற்ற, ஆனால் அவர் செல்லாத தலங்கள், அதாவது வைப்புத் தலங்களும் ஏராளம்.
திருஞானசம்பந்தரின் தேவாரத்தைப் பாடிப் பரவிய கவிஞர்கள், அறிஞர்கள், மகான்கள் தங்கள் வியப்பை நிறையப் பாடல்களில் பதிவு செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் அவருக்குத் தந்த புகழாரங்கள் ஒரு கலைக் களஞ்சியம் அளவு பெரியவை. சில புராணக் கூற்றுகளையும் புலவர் தம் கூற்றுக்களையும் பார்ப்போம். அமுதக் கவி பொழி சிறுவன் இது கூர்ம புராணம். அருளும்சொல் பனவன் இது பேரூர்ப் புராணம். கழுமலப் பேரொளி இது சுழியல் புராணம். காழி ஞானப்பிள்ளை இது பட்டீசுவர புராணம். பண்டித ஞானாசாரியன் இது திருவையாற்றுப் புராணம். மணிச்சிவிகை ஏறினான் இது குற்றாலத்துப் புராணம். நான்மறையவன் இது சிவபுண்ணியத் தெளிவு.
அருட்பிரகாச வள்ளலார் தெள்ளமுதாம் சிவகுருவே, உத்தம சுத்த சற்குருவே என்கிறார். ஒட்டக்கூத்தர் திருஞானசம்பந்தரை பரசமயக் கோளரி என்றும், வைதிக ராஜ சிங்கம், வைதிக வாரணம் என்றும் இன்னும் பலபடியாகவும் பரவிப் புகழ்கிறார்.
அருணகிரிநாதரோ முருகனே ஞானசம்பந்தர் என்ற இரகசியத்தை மிகத் தெளிவாக உலகினருக்கு அறிவிக்கிறார், பல இடங்களில்! உதாரணத்திற்கு திருத்தணிகைத் திருப்புகழிலிருந்து ஒரு எடுத்துக்காட்டு பார்ப்போம்.
பொறியுடைச் செழியன் வெப்பு ஒழிதரப்
பறிதலைப் பொறியிலிச் சமணர் அத்தனை பேரும்
பொடிபடச் சிவமணப் பொடி பரப்பிய திருப்
புகலியில் கவுணியப் புலவோனே.
இந்த குருபூஜை நன்னாளில் நமக்கு ஒரு பெரிய பொறுப்பு இருப்பதை நாம் அனைவரும் உணர்ந்திருக்கிறோம். காலம் காலமாக பன்னிரு திருமுறைகளையும் பாதுகாத்து ஓதி அவற்றை நமக்கு நம் முன்னோர்கள் தந்துள்ளனர். அவற்றை அப்படியே இனி வரும் தலைமுறையினருக்குத் தரும் பெரிய பொறுப்பை உணர்ந்து இந்த குருபூஜை நன்னாளில் நமது உள்ளார்ந்த பக்தி உணர்வை அர்ப்பணித்து திருஞானசம்பந்தரை வழிபடுகிறோம்.
சைவ ஆகமம் 28இல் ஒன்றாகிய காரணாகமத்தில் 141ஆம் படலமான மகோற்சவப் படலத்தில் மூன்று ஸ்லோகங்கள் திருஞானசம்பந்தரை எப்படி வழிபட வேண்டும் என்பது பற்றிய விதிகளை வகுத்துக் கூறுவதைக் காணலாம்.அம்சுமதாகமும் விரிவாக வழிமுறைகளைக் கூறுகிறது. ஓதுவாரை அழைத்து ஞானசம்பந்தரின் பதிகங்களைப் பாடச் செய்ய வேண்டும்,பாற்சோறு நிவேதனம் செய்து அந்த பிரசாதத்தை பக்தர்களுக்கு வழங்க வேண்டும். ஓதுவார் உள்ளிட்ட நல்ல சொற்பொழிவாளர்கள் மூலம் சம்பந்தரின் வரலாற்றை அனைவருக்கும் வழங்க வேண்டும். ஓதுவாருக்கு ஆடை முதலியன வழங்கி கௌரவிக்க வேண்டும். இப்படிப் பல நெறிமுறைகள் சொல்லப்பட்டுள்ளன. அந்த வழியிலே, இந்த நன்னாளிலே

காலத்திற்கேற்றபடி, உலகளாவிய அளவில் திருஞானசம்பந்தரின் குருபூஜை நாளை இணையம் வழியே எடுத்துச் சென்றது வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு நிகழ்வாகும். பல பெரியோர்கள், ஆதீனங்கள் அருளுரை வழங்கியது பெரும் பேறாகும். வரும் தலைமுறையை எண்ணி இப்படிப்பட அரும் செயல்களை அயராத முயற்சியுடன் செய்து வரும் லண்டன் ஸ்ரீ கல்யாண சுந்தர சிவாசாரியார் பெரிதும் போற்றுதலுக்கு உரியவர். அவருக்கும், இதில் கலந்து கொள்ளும் பெரியோர்கள்,தாய்க்குலத்தோர், பக்தர்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றியைக் கூறி அமைகிறேன். சேக்கிழார் வழியில் திருஞானசம்பந்தரின் பாதமலரில் சிரம் தாழ்த்தி நமஸ்காரம் செய்கிறேன்.
வேத நெறி தழைத்தோங்க மிகுசைவத் துறை விளங்கப்
பூதபரம்பரை பொலியப் புனிதவாய் மலர்ந்தழுத
சீதவள வயற்புகலித் திருஞானசம்பந்தர் பாதமலரைத் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்!
நன்றி வணக்கம்!
***
tags– தெய்வத் தமிழ், திருஞானசம்பந்தர்