வேதாந்த தேசிகரின் ஸ்தோத்திரங்கள்! – 4 (Post No.7424)

வேதாந்த தேசிகரின் ஸ்தோத்திரங்கள்! – 4 (Post No.7424)

ஸ்ரீ வேதாந்த தேசிகரின் ஸ்தோத்திரங்கள்! – 4 (Post No.7424)

Written by S Nagarajan

Uploaded in London on  – 6 JANUARY 2020

Post No.7424

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

ச.நாகராஜன்

வேதாந்த தேசிகர் இயற்றியுள்ள நூல்கள் பற்றிய விவரங்களின் தொடர்ச்சி இங்கு தரப்படுகிறது.

11) ஸ்ரீ காமாசிகாஷ்டகம்

9 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அடங்கியது ஸ்ரீ காமாசிகாஷ்டகம்.

காமாசிகா என்பதை காம + ஆசிகா என்று பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும். தனது சொந்த விருப்பத்தின் பேரில் எழுந்தருளியிருப்பவன் என்ற பொருள் கொள்ள வைக்கும் இது.  

இறைவன் அழகிய சிங்கர் எழுந்தருளி இருக்கும் இடம் காஞ்சிக்குத் தெற்கே உள்ள திருவேளுக்கை என்ற ஸ்தலமாகும்.

ஆழ்வார்களால் பாடப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் இதுவும் ஒன்று.

வேள் என்றால் ஆசை என்று அர்த்தம். ஆசையுடன் இங்கு இருப்பதால் வேள் + இருக்கை = வேளிருக்கை என்ற பெயரை இந்த தலம் பெற்றது. காலப்போக்கில் இது வேளுக்கையாக மாறி விட்டது. பர்யங்க நிலையில் அதாவது கால்களை மடக்கி அமர்ந்து, யோக முத்திரையுடன் யோக நரசிம்மராகக் காட்சி அளிக்கும் இறைவனை வேதாந்த தேசிகர் ஒன்பது ஸ்லோகங்களால் துதிக்கிறார். ஒரு சிறப்பு அம்சம் இறைவன் மூன்று கண்களுடன் காட்சி தருகிறார் இங்கு.

இறுதி ஸ்லோகத்தில் இதைக் கூறுவோருக்கு இஷ்ட பலிதம் ஏற்படும் என அவர் அருள்கிறார்.

12) ஸ்ரீ பரமார்த்த ஸ்துதி

10 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் கொண்ட துதி ஸ்ரீ பரமார்த்த ஸ்துதி.

காஞ்சிக்கு மேற்கே 7 மைல் தொலைவில் உள்ள தலம் திருப்புட்குழி. 108 வைணவத் திருத்தலங்களில் இதுவும் ஒன்றாகும். இது திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட தலமும் கூட. இராமாயணத்தில் வரும் ஜடாயு பறவைக்கு மோட்சமளித்து இறுதிச் சடங்குகளை ராமர் செய்த இடம் இது தான். ஆகவே திரு + புள் (பறவை) + குழி = திருப்புட்குழி என்ற பெயரைப் பெற்றது. கோவிலுக்கு எதிர்ப்புறத்தில் ஜடாயு சந்நிதி உள்ளது.

பரமார்த்தம் என்றால் மனித வாழ்க்கையின் இறுதி லட்சியம் என்றாகும். அது ஸ்ரீ ராமரைக் குறிக்கிறது.

போரேறு என்று ஆழ்வார்கள் ராமரைக் குறிக்கையில் இந்த ஸ்துதியில் தேசிகர் ராமரை ரணபுங்கவன் என்றும் ஆஹவபுங்கவன் என்றும் குறிப்பிடுகிறார். அதாவது போரில் வெற்றி பெறும் மிகப் பெரும் வீரன் என்று பொருள் இதற்கு.

சரணாகதி அடைந்தவருக்கு அருள் புரிபவன் என ராமரை தேசிகர் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறார்.

13) ஸ்ரீ தேவநாயக பஞ்சாஷத்

53 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் கொண்ட இந்த ஸ்துதியில் தேவநாதனைப் போற்றுகிறார் தேசிகர். அடியார்க்கு மெய்யன் என்ற பெயர் கொண்ட இறைவன் கடலூருக்கு அருகில் உள்ள திருவயிந்திபுரத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வருகிறான். (திருவஹிந்திபுரம் என்றும் அழைக்கப்படும்) இந்த தலத்தில் வேதாந்த தேசிகர் பல காலம் வாழ்ந்தவர். அவர் வாழ்ந்த இல்லத்தை இங்கு காணலாம். தேசிகர் வெட்டிய கிணறும் இங்கு உள்ளது.

சாதாரணமாக பாதம் முதல் கேசம் வரை பாதாதி கேசம் என்ற மரபை மாற்றி தேசிகர் இதில் இறைவனை கேசம் முதல் பாதம் வரை வர்ணிக்கிறார். மனிதர்களை மட்டுமே இப்படிப் பாடுவது மரபு என்பதால் இறைவனை தேசிகர் தனது நண்பராகக் கருதுவது புலப்படுகிறது. தேவநாதனை உபநிடதம் சத்யம் என்று குறிப்பிடுகிறது. அப்படிப்பட்டவனை தேசிகர் பாடியதால் அவர் சத்யவாதியாக ஒளிர்கிறார் என இறுதி ஸ்லோகம் குறிப்பிடுகிறது.

14) ஸ்ரீ அச்சுத சதகம்

101 சம்ஸ்கிருத ஸ்லோகங்களைக் கொண்ட ஸ்ரீ அச்சுத சதகம் திருவயிந்திபுரத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனைப் பாடும் நூலாகும். நாயிகா பாவத்தில் அமைக்கப்பட்டுள்ள நூல் இது. மதுர பக்தி பாவத்தை இதில் காணலாம்.

15) ஸ்ரீ மஹாவீர வைபவம்

உரைநடையிட்ட செய்யுள் நூலாக அமைந்திருக்கும் சம்ஸ்கிருத நூலான இதில் 96 உரைநடை வரிகள்  செய்யுளைக் காணலாம்.

பெரும் வீரனான ஸ்ரீ ராமரின் சரிதம் வால்மீகி ரிஷியால் ஏழு காண்டங்களில் ராமாயணமாகத் தரப்பட்டுள்ளது. அதைச் சுருக்கமாக கம்பீரமான வார்த்தைகளைத் தொடுத்து அழகுறத் தருகிறார் தேசிகர் இதில்.

இது ரகுவீர கத்யம் என்றும் அழைக்கப்படுகிறது.

தனது இந்த சுருக்கமான ராமாயணத்தை அவரே கடோர- சுகுமார  நடையில் – கடினமான மற்றும் எளிய நடையில் இயற்றியிருப்பதாக இறுதி ஸ்லோகத்தில் குறிப்பிடுகிறார்.

***