
Post No. 9969
Date uploaded in London – 13 AUGUST 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையத்தில் தினமும் காலையில் ஒலிபரப்பா காலைமலரில் சூழல் சிந்தனைகள் பகுதியில் சமீபத்தில் ஒலிபரப்பான உரை இது. உரை எண் 8.
தேனீக்கள் இல்லாத உலகில் வாழ முடியாது!
ச.நாகராஜன்

அருகி வரும் இனமான தேனீக்கள் பற்றிய ஒரு ஆச்சரியமான ஆனால் மிகவும் முக்கியமான செய்தி ஒன்று உண்டு. தேனீக்கள் இல்லையேல் மனித குலம் வாழ முடியாது.
உலகில் தேனீக்கள் முழுவதுமாக மறைந்து விட்டால் அடுத்த நான்கு வருடங்களில் மனித குலம் மறைந்து விடும் என்று உலகின் மிகப் பெரும் விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறியது உண்மை தான் என்பதை தொடர்ந்து செய்யப்படும் அறிவியல் ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. உலகின் மிக முக்கியமான 87 பயிர் வகைகளில் 28 தவிர மற்ற அனைத்து முக்கியப் பயிர்களுக்கும் தேனீக்களின் மகரந்தச் சேர்க்கை இன்றியமையாத ஒன்றாக விளங்குகிறது. தேனீக்கள் இல்லையேல் இந்தப் பயிர்கள் அனைத்தும் வளராது. இதை உணவுக்கென நம்பி இருக்கும் மனித குலமும் பிழைக்காது. தேனீக்கள் இல்லையேல் பாதாம் பருப்பு விளையவே விளையாது. காப்பி செடியின் பூக்கள் மூன்று நாட்களுக்கு மட்டுமே மகரந்த சேர்க்கைக்காக திறந்திருக்கும். தேனீக்கள் இல்லையேல் மனித குலத்திற்கு காப்பியே கிடைக்காது. ஆப்பிள், வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு பழம் மற்றும் காய்கறிகள் தேனீக்களாலேயே வளர்கின்றன; மனித குலத்திற்குப் பயன் தருகின்றன. உலகெங்குமுள்ள விவசாயிகள் பெரிதும் நம்பும் விவசாயத்தைக் காக்கும் தேனீக்கள் ஏன் அழிகின்றன?
இதற்கான காரணம் விளைநிலங்களில் போடப்படும் தவறான உரங்களே. நிகோடின் என்ற நச்சுப் பொருளுக்குச் சமமான நியோனிகோடினாய்ட்ஸ் (Neonicotinoids) என்ற உரம்தேனீக்களைக் கொல்லும் ஆற்றல் படைத்தது. இவை விளைநிலங்களிலும் தோட்டங்களிலும் பயன்படுத்தப்படும் போது தேனீக்கள் அழிகின்றன. மலர்கள் இல்லையேல் தேனீக்கள் இல்லை; அது போலவே தேனீக்கள் இல்லையேல் மலர்கள் இல்லை.
அன்றாடம் பல்லாயிரக்கணக்கானோர் தேனீரை அருந்தி விட்டுத் தூக்கி எறியும் பேப்பர் கப்களில் ஒட்டிக் கொள்ளும் தேனீக்கள் கொல்லப்படுகின்றன. இப்படிப் பல்வேறு காரணங்களால் அருகி வரும் தேனீ இனத்தைக் காக்க தீவிரமான ஒரு இயக்கம் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது வரவேற்க வேண்டிய ஒரு செய்தியாகும். நம்மை வாழ வைக்கும் தேனியை வாழ வைக்க வேண்டியது நமது கடமை அல்லவா? அனைவருக்கும் குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு இந்தச் செய்தியைச் சொல்லி மலர்களைக் காக்கும் தேனீக்களை வாழ வைப்போம்.

–SUBHAM–
tags – தேனீக்கள், தேனீ
You must be logged in to post a comment.