Article written by london swaminathan
Date: 30 May 2016
Post No. 2853
Time uploaded in London :– 8-41 AM
(Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
Contact : swami_48@yahoo.com
மதுரையை விட்டு லண்டனுக்கு வந்து முப்பது வருடங்கள் உருண்டோடிவிட்டன. ஆனால் மதுரை நினைவுகள் மறைவதில்லை. குளிக்கும் போதும், சாப்பிடும்போதும் வரும் பழைய நினைவுகள் திடீரென்று சிரிப்பை உண்டாக்கும். என் மனைவி , ஏதோ அவளைப் பார்த்துதான் சிரிக்கிறேன் என்று நினைத்து என்ன சிரிப்பு? என்பாள். ஒன்றுமல்ல 30, 40 ஆண்டுகளுக்கு முன்னால் மதுரையில் நடந்ததை எண்ணி சிரிக்கிறேன் என்பேன். உங்களுக்கு என்ன பைத்தியமா? என்பாள்.
இதோ ஒரு பழைய, சுவையான சம்பவம்:–
எனது தந்தை வெ. சந்தானம் மதுரை தினமணிப் பதிப்பு துவங்கிய காலத்திலிருந்து மதுரை தினமணிப் பத்திரிக்கையின் செய்தி ஆசிரியராக இருந்தார். சுதந்திரப் போராட்ட தியாகி; காமரஜருடன் சிறையிலிருந்தவர். ஆகையால் அந்தக் கால மனிதரைப் போலவே கதர் ஜிப்பா அணிவார். பணம், புகழ் முதலிய ஆசைகள் கிடையாது. அவருக்குப் பொழுது போக்கு புத்தகம் சேகரித்தல், படித்தல், உரையாற்றுதல்; குறிப்பாக ஆன்மீக விஷயங்களில்.
வீட்டிற்கு நா. பார்த்தசாரதி, கி.வா.ஜ. ஏ.கே. செட்டியார், குன்றக்குடி அடிகளார், சாலமன் பாப்பையா போன்றோர், பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவர்கள் எனப் பலரும் வருவர். அவர்கள் அமரும் முதல் அறையில் இரண்டு ‘காத்ரேஜ்’ பீரோக்கள் உண்டு. பேச்சு வாக்கில் ஏதேனும் புத்தகத்தை எடுக்க அந்த இரும்பு/எஃகு பீரோவைத் திறப்பார். அதில் பழுப்பேறிய புத்தகங்கள் இருப்பதைப் பார்த்து வந்தவர்கள் ‘கொல்.லென்று சிரித்து விடுவர்!
“என்ன சார்! இது? அவனவன் காத்ரேஜ் பீரோவுக்குள் தங்க நகை, பணப்பெட்டி, பட்டுப்புடவை என்று வைத்திருப்பான். நீங்கள் பழுப்பேறிய புத்தகங்களை வைத்திருக்கிறீர்கள்? என்பார்கள். என் தந்தையோ பதில் சொல்லாமல் புன்சிரிப்பை மட்டும் உதிர்ப்பார். அவர் விட்டுச் சென்ற 6000 புத்தகங்களை, நாங்கள் சகோதர்கள் பிரித்தெடுத்துக் கொண்டு இன்றும் அனுபவித்து வருகிறோம்.
ஒரு நாள், என் தந்தையின் சகா (தினமணி உதவி ஆசிரியர்) ஒருவர் வீட்டிற்கு வந்தார். வழக்கம் போல இலக்கிய, தெய்வீக, தேசீய தலைப்புகளில் சம்பாஷணை நீடித்தது. தேவி பாகவதம் பற்றிப் பேச்சு வந்தவுடன் வந்தவர் சொன்னார், “எனக்கும் படிக்க ஆசை. நல்ல புத்தகம் எங்கே கிடைக்கும் “ என்றார்.
உடனே பீரோவைத் திறந்து, இது நல்ல பதிப்பு. இதைப் படி” என்று சொல்லிக் கொடுத்துவிட்டார். அவர் நல்ல மனிதர். ஒரு சத்திய சந்தர். ஆனால் அவரது சகோதரர் அப்படியில்லை. “கெட்ட மனிதர்”; அதாவது சிகரெட் குடிப்பார். அந்தக் காலத்தில் பிராமணர்கள் மீசை வைத்துக் கொண்டாலோ, சிகரெட் குடித்தாலோ, பெண் கூட கொடுக்க மாட்டார்கள்!!!!!
தேவி பாகவதம் இரவல் கொடுத்து பல மாதங்கள் கழிந்தன. நாங்கள் எங்கள் தந்தையுடன் வழக்கம்போல ‘புத்தக வேட்டை’யாட பழைய புத்தகக்கடைக்குச் என்றோம். மதுரை தெற்குச் சித்திரை வீதியில் அக்காலத்தில் இருந்த பழைய புத்தகக்கடைகளில் என் தந்தைக்கு தனி மதிப்பு. என் தந்தை வரும் நாட்களில் அவர்களுக்கு நல்ல வரும்படி உண்டு. ஒரு ரிக்க்ஷா வண்டி நிறைய புத்தகங்கள் வாங்கி வருவார். பழைய புத்தகக் கடைக்குள் நுழைய எங்களுக்கு முழு அனுமதி உண்டு. நாங்களும் நேரத்தை வீணடிக்காமல், அங்கே படியில் அமர்ந்து, அம்புலி மாமா பிரதிகளை எடுத்துக் கொண்டு, மூன்று மந்திரவாதிகள், டனால் கோட்டை, வால் நட்சத்திரம் முதலிய தொடர்கதைகளைப் படிப்போம்.
இவ்வாறு புத்தகங்களைப் புரட்டும்போது திடீரெனக் கண்ணில்பட்டது தேவி பாகவதம். அது என் தந்தை கையெழுத்துடன், அவர் ரப்பர் ஸ்டாம்புடன் இருந்தது. பழைய புத்தகக்கடைக்காரரிடம் இது என்ன விலை? என்று சிரித்துக் கொண்டே விலையைக் கேட்டார். அவன் சொன்ன விலையைக் கொடுத்து அதை வீட்டுக்கும் கொண்டுவந்தார். பழைய புத்தகக் கடைக்காரருக்குத் தெரியாது எங்கள் வீட்டுப் புத்தகம்தான் இரவல் கொடுக்கப்பட்டு, வட துருவம், தென் துருவம் எல்லாம் பயணம் செய்து, பின்னர் அங்கே விற்கப்பட்டது என்பது.
கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை? யார் இரவல் வாங்கினாரோ அவரது ‘கெட்ட’ சகோதரர், சிகரெட்டுக்கு காசு வேண்டி அந்தப் புத்தகத்தை அங்கே விற்றிருக்கலாம் என்று நாங்கள் பேசிக்கொண்டோம்.
போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோட என்று சொல்லுவதைவிட,
“போன புத்தகம் திரும்பி வந்தது புது மணத்தோட” என்று சொல்லுவது சாலப் பொருந்தும்.
–சுபம்–
You must be logged in to post a comment.