
Post No. 10,096
Date uploaded in London – 15 September 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Written by London Swaminathan for a magazine recently; (Former BBC Broadcaster, University Tamil Tutor & Dinamani Senior Sub Editor)
ஆங்கில மொழியோ வேறு ஐரோப்பிய மொழியோ பேசும் நாட்டில் வாழும் நாமும் நம் குழந்தைகளும் தமிழ் மொழி கற்பது அவசியமா? வீட்டில் தமிழ் பேசுவது தேவையா? தமிழ் பண்பாட்டைக் காப்பதற்காக நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு ‘டிக்கெட்’ வாங்கிப் போக வேண்டுமா ? தமிழ் மொழியைக் கற்கும் நேரத்தில் வேறு மொழியையோ, புதிய தொழில்களையோ கற்றால் பணமும் சம்பாதிக்கலாம், புதிய வேலைகளையும் செய்யலாமே! — இவ்வாறு பல வாதப் பிரதிவாதங்கள் நடப்பதை நாம் அறிவோம்.

முதலில் ஒரு சுவையான செய்தியைச் சொல்லிவிடுகிறேன். இந்தக் கட்டுரையாளர் 43 ஆண்டுகளுக்கு தமிழ் தொடர்பான வேலைகளை மட்டுமே செய்திருக்கிறார். வேடிக்கை என்னவென்றால் வேறு வேலைகளுக்கு மனுப்போட்டும் கிடைக்கவில்லை!! ஆனால் தமிழ் வேலைகள் மட்டும் தேடித் தேடி வந்தன.(பத்திரிகை ஆசிரியர், பல்கலைக்கழக ஆசிரியர், பி.பி.சி ஒலிபரப்பாளர் ,தமிழ் சங்க மானேஜர், தமிழ் மொழி பெயர்ப்பாளர்…… என்று) சுருக்கமாகச் சொன்னால் எனக்கும் என் குடும்பத்துக்கும், ‘தமிழ் சோறு போட்டது’. அதுவும் லண்டனில்!!
இது எல்லோர் வாழ்விலும் நடக்க முடியாதல்லவா? ஆகவே பொதுவாக விவாதிப்போம் .
ஒருவர் பிறந்த நாட்டையும், பிறந்த மதத்தையும், பேசும் மொழியையும், சேர்த்த புட் பால் (Foot Ball Club) அணியையும், கிரிக்கெட் அணியையும் ஆதரிப்பதை எல்லா கலாசாரங்களிலும் பார்க்கிறோம் . நாம் மட்டும் ஏன் நமது மொழியையும் பண்பாட்டையும் விடவேண்டும்?
அது சரி, ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர், மில்டன், ஷெல்லி ,கீட்ஸ் முதலிய உலகப் புகழ் பெற்றவர்கள் இருக்கிறார்கள். தமிழில் என்ன இருக்கிறது? என்று சிலர் நினைக்கலாம்.
தமிழ் ஒரு கடல். இன்று நாம் படிக்கத் தொடங்கி 100 ஆண்டுகள் வாழ்ந்தாலும் எல்லாவற்றையும் படித்து முடிக்க முடியாது. அதில் பெரும்பகுதி ஆங்கில இலக்கியம் தோன்றுவதற்கு முன்னரே தோன்றியவை! தமிழ் பண்பாடோ மற்றவர்கள் முழு அளவு ஆடையின்றி நாகரீகம் இல்லாமல் திரிந்த காலத்தில் இந்தோனேஷியாவரை கொடிகட்டிப் பறந்து இருக்கிறது.
மேலும், எல்லா மரங்களுக்கும் வேர் இருப்பது போல ஒவ்வொருவருக்கும்- ஒவ்வொரு சமுதாயத்துக்கும் – ஒரு வேர் இருக்க வேண்டும். அதற் காகவும் நம் மூலத்தை (மூலம்= வேர்)ப் பிடித்துக் கொண்டு இருக்கவேண்டும்.
சிறு பிள்ளை ஆக இருக்கும்போது விளையாட்டில் கவனம்; இளம் வயதில் வாழ்க்கைத் துணையில் கவனம்; வயதானபோது உடல் நலனில் கவனம்- இப்படி வாழ்நாள் ஓடிவிடுகிறது. இடையே அலுப்பு சலிப்பு தட்டும். அப்போது ஏதாவது ஒரு பொழுது போக்கு தேவைப்படுகிறது அதற்கும் தமிழில் ஆடல், பாடல் என்று நிறைய இருக்கின்றன. பயனுள்ள விஷயங்களை அறிய தமிழில் எல்லாத் துறைகளிலும் கடல் அளவு செய்திகள் இருக்கின்றன. அற்புதங்கள் செய்ய வேண்டுமானாலும் கூட 18 சித்தர்கள் வழிகாட்டுவார்கள்.

பல திகில் திரைப்படங்களில் சங்கேத மொழியில் செய்தி அனுப்பி வில்லனை மடக்குவதை பார்த்திருப்பீர்கள்; நமக்கோ சங்கேத மொழியே தேவை இல்லை. நமக்குள் ரகசியமாக செய்திகளைப் பரிமாறிக்கொள்ள தமிழ் உதவும். அதாவது ஆங்கிலம் போன்ற மொழி புழங்கும் இடங்களில்!
வேலை வாய்ப்புக்கும் தமிழ் உதவும். நேரடியாக இல்லாவிடினும் மறைமுகமாக . இதன் மூலம் கற்கும் கலைகள் நமக்கு பல இடங்களில் சிறப்பான வரவேற்பைத் தருகிறது. சொல்லுவது புரிகிறதா?
தமிழ் இட்டிலி , தோசை, வடை, பொங்கல், சாம்பார், ரசம் பிடிக்காத வெள்ளைக்காரர்கூட இல்லையே. அந்தக் காலத்திலேயே தமிழ் மிளகு ரசமும், கட்டுமரமும் ஆக்ஸ்போர்ட் அகராதியில் நுழைந்துவிட்டதே!.
ஒவ்வொரு ஆண்டும் நான் லண்டன் பல்கலைக் கழகத்தில், தமிழ் வகுப்பில், எல்லோரையும் அறிமுகம் செய்துகொள்ளும்படி சொல்லிவிட்டு ஏன் தமிழ் படிக்க வந்தீர்கள்? என்றும் சொல்லும்படி கேட்பேன். பெரும்பாலோர் தமிழ் பேசும் ஒருவரைக் கல்யாணம் கட்டியதால் தமிழ் தேவைப்பட்டது என்பர். இன்னும் சிலர் மாமியார், மாமனார் பேசுவது (திட்டுவது??) புரியவில்லை என்பதற்காக வந்தேன் என்பர். இன்னும் சிலர் தமிழ் சினிமா, கலை மூலம் ஈர்க்கப்பட்டதாகச் சொல்லுவார்கள். பலர் தமிழ் நாடு, இலங்கை தொடர்பான ஆராய்ச்சியில் உதவும் என்று எண்ணி வந்ததாக இயம்புவர். ஒரு வெள்ளைக்காரர் துணிச்சலாக ஆண்டு தோறும் இட்லி, தோசை சாப்பிடுவதற்காகவே தமிழ் நாட்டுக்குச் செல்வதாகவும் ஹோட்டல்காரக்ளுடன் நன்கு உரையாட தமிழ் படிப்பதாகவும் சொன்னார். அது பொய்யல்ல என்பது அவர் பல ஆண்டுகளுக்கு என்னிடம் தமிழ் படித்ததிலிருந்து தெரிந்தது. இட்டிலி தோசைக்கு அவ்வளவு மஹிமை!
குறைந்தது தமிழ் திரைப்படங்களில் வரும் நகைச் சுவை காட்சிகளையும் பாடல்களையும் ரசிப்பதற்காகவாது தமிழ் கற்க வேண்டும்.
ஆயினும் பழம் பெருமை மட்டும் பேசுவதோடு நில்லாமல் ஆங்கிலம், இந்தி போல பிறமொழிச் சொற்களையும், நமது மொழியின் அடிப்படை கெடாத அளவுக்கு, ஏற்க வேண்டும். ‘தமிழ் வாழ்க’ என்று உரத்த குரலில் தமிழர்கள் கோஷமிடுவது காதில் கேட்கிறது. உலகிலுள்ள புகழ் பெற்ற பிற மொழி இலக்கியங்களோ, அறிவியல் விஷயங்களோ இன்னும் தமிழில் கால்வாசி கூட மொழிபெயர்க்கப்படவில்லை. வெளிநாட்டில் வாழும் நமக்குக் கிடைக்கும் வசதிகள் தமிழ் மொழி வழங்கும் இடங்களில் கிடைப்பதில்லை. அந்த மொழிபெயர்ப்புப் பணியையும் நம்மில் சிலர் செய்யலாம். அதனால்தான் பாரதியும் ‘சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்’ என்றார் . அத்தோடு ‘பிறநாட்டு சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்’ என்றார் மேலும் ஒருபடி போய் ‘இறவாத புது நூல்கள் இயற்றல் வேண்டும்’ என்றார் .இந்த மூன்று பணிகளில் முடிந்ததை நாம் செய்யலாமே.
முயற்சி திருவினை ஆக்கும்!

–subham–
tags –வெளிநாட்டில், தமிழ், கற்பது, தேவை,