அறிவியல் மாநாட்டில் சிவபெருமான்! (Post No.2765)

வீர சிவன்

Written  BY S NAGARAJAN

Date: 29 April 2016

 

Post No. 2765

 

 

Time uploaded in London :–  6-12 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

பாக்யா  29-4-2016 தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியான கட்டுரை

 

 

 

103வது இந்திய அறிவியல் மாநாட்டில் சிவபெருமான்!

ச.நாகராஜன்

 

 

“விஞ்ஞானிகளே! பிரதிநிதிகளே. இந்தியாவின் எதிர்காலம் பற்றிய எங்களது நம்பிக்கை நாங்கள் உங்களிடம் வைத்திருக்கும் நம்பிக்கையிலிருந்தே வருகிறது –பிரதமர் நரேந்திர மோடி அறிவியல் மாநாட்டைத் துவக்கி வைத்துப் பேசும் போது கூறியது

 

கோலாகலமாக 103வது  இந்திய ஸயின்ஸ் காங்கிரஸ் (இந்திய அறிவியல் மாநாடு) மைசூரில் 2016 ஜனவரி மூன்றாம் தேதி துவங்கி 7ஆம் தேதி முடிய நடந்தது.

 

வழக்கம் போல இந்திய விஞ்ஞானிகள் மகிழ்ச்சியுடன் இதில் பங்கேற்க வந்தனர்.

 

ஆனால் இதில் சர்ச்சை எப்போது துவங்கியது என்றால் பேச அழைக்கப்பட்டவர்களுள் ஒருவரான அகிலேஷ் கே.பாண்டே  சிவ பெருமானை ஒரு பெரும் சுற்றுப்புறச்சூழலாளராக அவைக்கு முன் வைத்த போது தான்! (ஒரு சிறிய விபத்து நேர்ந்ததால் இவர் தன் உரையைப் படிக்கவில்லை. சுற்றுக்கு இவரது உரை வந்தது)

இதைத் தொடர்ந்து ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் இரு நிமிடங்கள் இடைவிடாது சங்கொலியை முழக்கி அவையைத் திகைப்படையச் செய்தார். இந்த ஒலி சங்கின் அற்புதமான ஒலி இது மனித குலத்தை இன்று பிடித்திருக்கும் பீடைகளை அகற்றும் என்றார் அவர்!

 

 

சில விஞ்ஞானிகள் திகைத்தனர். 2009ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்கட் ராமகிருஷ்ணனோ நொந்து போனார்.இது அறிவியல் மாநாடு இல்லை, இது ஒரு சர்கஸ் என்று விமரிசனமே செய்து விட்டார்.

 

 

சிவபிரானின் பக்தர்களுக்கே இது பிடிக்கவில்லை. ஏனெனில் தென்னாடுடைய சிவன் எந்நாட்டவர்க்கும் இறைவன், கோடானுகோடி அண்டங்களைக் காக்கும் அவனுக்கு சாதாரண சுற்றுப்புறச  சூழலாளர் அந்தஸ்தைத் தந்து அவரைக் கீழே இறக்கலாமா என்பது அவர்கள் வாதம்!

 

அண்ட பிரபஞ்சத்தின் அணுத்துகள் நடனத்தை அறிய வேண்டுமானால் சிதம்பரம் நடராஜரின் பிரபஞ்ச நடனத்தைப் பாருங்கள் என்று பிரிட்ஜாப் காப்ரா உள்ளிட்ட விஞ்ஞானிகள் பெருமிதத்தோடு பேசும் போது அவரைச் சுற்றுப்புறச்சூழலின் காவலராகச் சித்தரிப்பது அவசியமா?

 

 

வெங்கட் ராமகிருஷ்ணன் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ஐஎஸ் ஆர் ஓவில் சோதனை ராக்கட்டுகள் விண்ணில் ஏவப்படும் போதெல்லாம் பூஜைகள் போடப்படுகின்றன. நான் மட்டும் அதன் தலைவராக இருந்தால் அந்த சோதனைகளிலிருந்து விலகியே இருப்பேன்” என்றார்.

 

 

 

ஆனால் ஐ எஸ் ஆர் ஓவின் தலைவராக 2003இலிருந்து 2009 முடிய இருந்த  பத்ம விபூஷன் பட்டம் பெற்ற மதிப்பிற்குரிய விஞ்ஞானி ஜி மாதவன் நாயரோ வேதங்கள் பற்றிய மாநாடு ஒன்றில் பேசுகையில்  வேதங்களில் உள்ள ஸ்லோகங்கள் இன்றும் பொருந்துகின்றன. சந்திரனில் நீர் இருக்கிறது என்று வேதங்கள் கூறுகின்றன. சந்த்ராயன் திட்டத்திலேயே ஆர்யபட்டரின் சமன்பாடுகள் பயன்படுத்தப்பட்டன” என்று பெருமிதத்துடன் கூறியிருக்கிறார்.

 

 

வேதங்களில் உள்ள பிரம்மாண்டமான விஷயங்கள் சூத்திர வடிவில் உள்ளன.அதனால் தான் அதை நவீன விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்வதில் சிரமப்படுகிறார்கள்” என்று அவர் மேலும் கூறினார்.

 

 

 

கிறிஸ்துவுக்கு முன் அறுநூறு ஆண்டுகள் வரை விஞ்ஞானத்தில் செழித்திருந்த நாம், பல்வேறு படைஎடுப்புகள் மற்றும் ஆதிக்கத்தின் காரணமாக்ச் செயலிழந்திருந்தோம் இப்போது பழையபடி வளர்ச்சி அடையத் துவங்கி விட்டோம். அணு விஞ்ஞானத்தை நாம் அமைதிக்குப் பயன்படுத்துகிறோம்” என்றார் அவர்.

 

 

ஒரு வழியாக மாநாட்டில் விஞ்ஞானிகள் சமாதானம் அடைய வெங்கட் ராமகிருஷ்ணனின் அற்புதமான பேச்சு உதவியது.

அவர் ஆயுர்வேதத்தில் உள்ள உண்மைகளை விளக்கி வெகுவாக அதைப் புகழ்ந்தார்.

 

 

ஆயுர்வேதம் ஒவ்வொரு மனிதனுக்கும் உகந்த மருத்துவ முறையைத் தருகிறது. மரபணுவைப் பற்றிய வரைபடத்தை நாம் பூர்த்தி செய்து விட்டால் ஒவ்வொருவருக்குரிய தனிப்பட்டதான மருத்துவ முறையை நாம் கையாள முடியும் என்றார் அவர்.

IMG_4972

சங்கு ஒலி மூலம் தைராய்ட் நோய்ச் சிகிச்சை!

 

சங்கொலியின் மகத்துவத்தைப் பற்றிக் கூறிய ஐ ஏ எஸ் அதிகாரி ராஜீவ் சர்மா தனது கூற்றில் விஞ்ஞானம் அல்லாத எதுவும் கூறப்படவில்லை என்றும்  உடல் ரீதியிலும் உள்ள ரீதியிலும் ஏற்பட்டுள்ள பல வியாதிகளை சங்கின் ஒலி நீக்கும். இதை இரண்டரை ஆண்டு காலம் நான் பரிசோதித்துப் பார்த்துள்ளேன்.

 

 

சுமார் 40 பேருக்கு இந்த சங்கொலி சிகிச்சையைத் தந்து தைராய்ட் மற்றும் கழுத்தில் ஏற்படும் ஸ்பாண்டிலிடிஸ் உள்ளிட்ட நோய்களைக் குணப்படுத்தியுள்ளேன். இது விஞ்ஞான்ம் இல்லை என்றால் எது தான் விஞ்ஞானம்?” என்று கேள்வியை எழுப்பினார்.

 

 

 

மாநாட்டில் ஆறு நோபல் பரிசு பெற்ற அறிஞர்கள் பங்கேற்றனர். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இந்த அறிவியல் மாநாட்டில் பங்கேற்று உத்வேகம் பெற்றனர்.

 

 

சூடாகவும் சுவையாகவும் இருந்த மாநாடு எதிர்கால அறிவியல் இந்தியா பற்றிய நம்பிக்கையைத் தருகிறது.

 

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

பிரிட்டனைச் சேர்ந்த பிரபல கம்ப்யூட்டர் விஞ்ஞானியான ஆலன் டூரிங் (தோற்றம் 23-6-1912 மறைவு 7-6-1954) ஒரு இளவயது மேதை.

 

 

மூன்றே வாரங்களில் அவர் படிக்கத் தெரிந்து கொண்டாராம். நம்பர்களில் அவருக்கு இயல்பாகவே ஒரு ஆர்வம் இருந்ததால் ஒவ்வொரு தெரு விளக்கு அருகிலும் நின்று அதன் தொடர் எண்ணைக் கவனிப்பாராம்!

 

 

ஏழு வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள உல்லாபூல் என்ற இடத்திற்கு குடும்பத்தினர் உல்லாசப் பயணமாகச் சென்றனர். அங்கு தேனீக்கள் பறக்கும் விதத்தை நன்கு கவனித்த டூரிங் அவற்றின் பயணப்பாதையை வைத்து அவைகள் அனைத்தும் எங்கு ஒன்று கூடுகின்றன என்ற இணையும் புள்ளியைக் கணக்கிட்டு அங்கு சென்றார். அவர் கணித்த படியே அங்கு தேன்கூடு இருந்தது. அதிலிருந்து தேனை எடுத்த அவர் குடும்பத்தினருக்கு வழங்க அவர்கள் மிகுந்த ஆச்சரியத்திற்குள்ளாயினர்.

 

 alan-turing-970-80

ALAN TURING

அவர் வாழ்வில் நடந்த இன்னொரு சம்பவம் இது:

டூரிங்கிடம் ஒரு சைக்கிள் இருந்தது. அதில் கியரிலிருந்து செயின் அடிக்கடி நழுவி விடவே சைக்கிளிலிருந்து கீழிறங்கி அதை மாட்டுவது அவருக்குப் பழக்கமானது. இந்தத் தொல்லை தாங்க முடியாமல் போகவே சக்கரம் எத்தனை முறை சுற்றினால் கியரிலிருந்து செயின் கழறுகிறது என்று கணக்கிட்டு சரியாக அந்தச் சுழற்சி வரும் போது சைக்கிளை நிறுத்தி செயினை அவர் அட்ஜஸ்ட் செய்ய ஆரம்பித்தார். ஆனால் இதுவும் அடிக்கடி செய்ய வேண்டியதாக இருக்கவே அவர் ஒரு விசேஷ கருவியைச் செய்து அதைச் சைக்கிளில் பொருத்தினார். சரியான நேரத்தில் அது கியரில் செயினை மாட்டி விடும். ஆனால் இப்படிப்பட்ட மேதைக்கு ஒரு புது செயினை மாட்டி விட்டால் இந்த பிரச்சினை நிரந்தரமாகத் தீர்ந்து விடும் என்று தோன்றவில்லை.

கணித சவாலாக அதை எடுத்துக் கொண்டு மாற்றி யோசித்து தீர்வைக் காண்பதையே அவர் விரும்பினார் போலும்.

அது தான் ஆலன் டூரிங்!

 

*********