Don’t Reblog it for at least a week; don’t use pictures.
Article written by London swaminathan
Date: 20th September 2015
Post No: 2173
Time uploaded in London :– 12-26
(Thanks for the pictures)
பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்பர் – ஆன்றோர்.
நல்லவன் ஒருவன் ஏதேனும் அபூர்வமாக கெட்டது செய்துவிட்டால் – எல்லாம் ‘’சஹவாச தோஷம்’’= சேர்வார் சேர்க்கை என்பர் சான்றோர். இந்தப் பொன்மொழிகளை விளக்கும் கதை கீழே உள்ளது:—
வேத காலத்தில் வாழ்ந்த இரண்டு பெரிய ரிஷிக்கள் வசிஷ்டரும் விஸ்வாமித்திரரும் ஆவர். இருவருக்கும் எப்போது பார்த்தாலும் மோதல். எதிரும் புதிருமாக நிற்பார்கள். கீரியும் பாம்பும் போல சண்டையிடுவர்! காரணம்: விஸ்வாமித்ரர் ஒரு மன்னர். இதனால் ஆட்சியாளருக்கே உரிய தீய குணங்கள் அவரிடம் இருந்தன:-
அஹங்காரம் :–(தன்னை வசிட்டர் வாயினால் பிரம்மரிஷி என்று அழைக்க வேண்டும்.
பெண்வயப்படுதல்:– மேனகாவிடம் வசப்படல்.
வேண்டியவருக்குச் சலுகை:– திரிசங்கு என்பவரை உடலோடு சொர்க்கத்து அனுப்புகிறேன் பார்! என்று சவால் விடுதல்.
பிறர் பொருளுக்கு ஆசைப்படுதல்:வசிஷ்ட முனிவரின் காமதேனு முதலிய அரும்பெரும் விஷயங்களை தனதாக்கிக்கொள்ள விரும்பல்.
இறுதியில் இத்தனை மோக வலைகளையும் தாண்டி வசிட்டர் வாயினால் பிரம்மரிஷி பட்டம் பெற்றார். அதற்கு முன்னால் நடந்த ஒரு மோதல் இதோ:–
எது பெரிது தவமா? நல்லோருடன் இருக்கும் சத்சங்கமா? என்பதே கேள்வி. ஒருவன் நியம நிஷ்டைகளுடன் வாழ்ந்து தவம் இயற்றுவதே சக்தி வாய்ந்தது என்றார் தபோநிதி விசுவாமித்திரர்.
இல்லை அவ்வளவு எல்லாம் கஷ்டப்படவேண்டாம். நல்லவருடன் இருந்து, அவர்களுடைய காற்றோ, நிழலோ மேலே விழுந்தால் அதைவிட சக்தி வாய்ந்தது எதுவுமில்லை என்றார் கருணாநிதி வசிஷ்டர்.
இருவர் வாக்குவாதமும் முடிவில்லாமல் போய் உச்ச ஸ்தாயியை அடைந்தது. இனியும் பேசினால் தொண்டை வறண்டுவிடுமென்று எண்ணி, இருவரும் மஹாவிஷ்ணுவிடம் சென்று முடிவு காண்போம் என்றனர்.
மஹாவிஷ்ணு இருவரையும் பார்த்து விட்டு, இப்பொழுது கொஞ்சம் முக்கியமான அலுவலில் இருக்கிறேன்; கொஞ்சம் ‘பிஸி’. ஆகையால் ஆதிசேஷனிடம் போய்க்கேளுங்கள் அவன்தான் என்னைத் தாங்குகிறான். இந்த பூபாரம் முழுதும் அவன் தலையில்தானே சுழல்கிறது – என்றார்.
இருவரும் மஹாசேஷன் — – ஆதிசேஷன் – என்னும் பாம்பிடம் சென்றனர். அவர் தலையில்தான் பூமி நிற்கிறது என்பது இந்துமத புரானங்கள் சொல்லும் விஷயமாகும். மஹாசேஷன் சொன்னார்: உங்கள் கேள்விக்கு நான் பதில் சொல்லுகிறேன். என் தலைவர் விஷ்ணு அனுப்பிவிட்டால் நான் மறுக்க முடியுமா? ஒரு சின்ன உதவி தேவை. இதோ என் தலையில் இருக்கும் பூபாரத்தை இறக்கிவையுங்கள்; உங்கள் கேள்வியைப் பரிசீலிக்கிறேன் என்றார். உடனே விசுவாமித்திர வழக்கம்போல, ‘முந்திரிக் கொட்டை போல முந்திக் கொண்டு’ சென்று, இதோ பார்! என் தவ வலிமை, நியம, நிஷ்டைகள் அத்தனையையும் பயன்படுத்தி பூமியைத் தூக்குகிறேன் என்று பூமியைத் தூக்க முயன்றார். அதுவோ ஒரு அங்குலம் கூட அசையவில்லை.
இப்பொழுது வசிட்டர், சரி, விடுங்கள்! இப்போது என்னுடைய முறை; நான் முயற்சிக்கிறேன் என்று சொல்லி “நான் நல்லோரிடம் வாழ்ந்த ஒரு நிமிடப் பலனில் இந்த பூமி என் கைக்கு வரட்டும்” என்றார். அவர் கையில் பூமி நின்றது.
மஹாசேஷன் சொன்னார்: “குட் பை! உங்கள் கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது. பை! பை! என்று சொல்லிவிட்டார்.
இருவரும் நிம்மதியாகத் திரும்பினர். இது சுவாமி ராம்தாஸ் சொன்ன கதை.
ராமகிருஷ்ண பரமஹம்சரும் அவரது உபதேசங்களில் சத்சங்கத்தின் பெருமையை நிறை இடங்களில் விளக்குகிறார். ஒரு ஜமீந்தாரிடம் (நிலச் சுவாந்தார்) வேலைபார்க்கும் ஒரு வேலையாள், கிராமத்திற்குள் தனியே சென்றால் பல அடாவடித்தனக்களைச் செய்து தனது அதிகாரத்தைக் காட்டுவார். அவரே ஜமீந்தாரிடம் வந்துவிட்டால், அன்று அவரிடம் உதவி நாடிவந்த ஏழை விவசாயிகளுக்கு ஜமீந்தார் முன்னால், அடக்க ஒடுக்கமாக, அன்பாக அவ்வளவு உதவிகளையும் அள்ளிவீசுவார். நல்லோரின் சந்நிதானத்தில் வாழ்வோரும் இப்படி அஹங்காரம் ஒடுங்கி நிற்பர்.
யானையை எவ்வளவு குளிப்பாட்டினாலும் அது, மண்ணில் இருக்கும் வரை, தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொள்ளும். அதே யானையைக் குளிப்பாட்டி, சுத்தமான இடத்தில் கட்டிவிட்டால் அது அப்படிச் செய்யாது. நாமும் கெட்டவர் சஹவாசத்தில் உள்ளவரை இப்படி நம் தலையில் நாமே மண்னை வாரிப் போட்டுக்கொள்வோம். நல்லோர் சஹவாசம் என்னும் கட்டுத்தறியில் கட்டப்பட்டுவிட்டால் சுத்தமாக இருப்போம் என்பார் பரமஹம்சர்.
ஆதிசங்கரரும் பஜகோவிந்தம் என்னும் துதியில் நல்லோர் சஹவாசம் முக்தி நிலைக்கு இட்டும் செல்லும் என்கிறார்:–
சத்சங்கத்வே நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிஸ்ஸலிதத்வம்
நிஸ்ஸலிதத்வே ஜீவன் முக்தி – பஜகோவிந்தம்.
திருவள்ளுவரும் சத்சங்கத்தின் பெருமையை, தொண்டர்தம் கூட்டை, ‘கேள்வி’ என்னும் அதிகாரத்தில் சொல்லுவார்:
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும் (குறள் 416)
கொஞ்சமாவது நல்லது கேளுங்கள்; அது உங்களுக்குப் பயன்படுகிறபோது நல்ல பெருமையைக் கொண்டுவரும் – என்கிறார்.
இன்னொரு குறளில் சறுக்கி விழும் நிலத்தில் நடக்கும்போது பயன்படும் ஊன்றுகோல் போல (வாக்கிங் ஸ்டிக்), புராண இதிஹாசச் சொற்பொழிவுகள் பயன்படும் என்பார்:
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல் – குறள் 415
–சுபம்—–
You must be logged in to post a comment.