தொழில்களில் சிறந்தது எது? தண்டபாணி சுவாமி பதில் (10,589)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,589

Date uploaded in London – –   23 JANUARY  2022          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; 

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தொழில்களில் சிறந்தது எது?  தண்டபாணி சுவாமிகள் பதில்!

ச.நாகராஜன்

திருநெல்வேலியில் சைவ வேளாளர் மரபிலே உதித்தவர் பெரும் புலவர் தண்டபாணி சுவாமிகள்.

இவரை முருகதாச சுவாமிகள் என்றும் திருப்புகழ் சுவாமிகள் என்றும் உலகம் பாராட்டிக் கொண்டாடியது.

சிறந்த முருக பக்தர். சந்தப் பாக்கள் பாடுவதில் வல்லவர்.

இவர் பல நூல்களை இயற்றியுள்ளார்.

அவற்றில் சில:

தில்லைத் திருவாயிரம்

திருவரங்கத் திருவாயிரம்

ஒலியலந்தாதி

புலவர் புராணம்

திருவாமாத்தூர்ப் புராணம்

அறுவகை இலக்கணம்

திருமயிலைக் கலம்பகம்

சென்னைக் கலம்பகம்

 ஆங்காங்கே சமயத்திற்கு ஏற்றபடி பல தனிப்பாடல்களைப் புனைந்து பாடியவர் இவர்.

செய்யும் தொழில்களுள் சிறந்த தொழில் எது என்று ஒரு கேள்வியைக் கேட்டுக் கொண்ட இவர் பல தொழில்களையும் சீர் தூக்கிப் பார்த்துத் தனது விடையை ஒரு பாடலில் அளித்துள்ளார்.

பாடல் இதோ:

செய்யுந் தொழிலனைத்துஞ் சீர் தூக்கிப் பார்க்குங்கால்

நெய்யுந் தொழிலுக்கு நிகரில்லை – வையகத்தில்

தெள்ளு தமிழ்வேதஞ் செப்பியந்நாட் சீர்படுத்தும்

வள்ளுவனார் கொண்ட தல்ல வா

எல்லாத் தொழில்களையும் ஆராய்ந்து சீர் தூக்கிப் பார்க்கும் போது நெய்யும் தொழிலுக்கு நிகரே இல்லை. இந்தப் புவியில் தெள்ளு தமிழில் வேதம் எனக் கொண்டாடப்படும் அரும் நூலான திருக்குறளை எழுதியவர் திருவள்ளுவர். அவர் மேற்கொண்ட தொழில் அல்லவா இது?

இதற்கு மேல் என்ன சிறப்பு வேண்டும்!

அடுத்தாற் போல பல தொழில்களில் ஈடுபட்டவர்களிடம் பழகி அவர்களிடம் நல்ல அனுபவத்தைப் பெற்ற இவர் பல தொழில்களின் தன்மையையும் அந்தத் தொழில் புரிவோரின் தன்மையையும் நன்கு உணர்ந்து கொண்டார்.

அதை அப்படியே ஒரு பாடலில் பதிவு செய்து விட்டார் இப்படி:-

தட்டா னிடத்தினிற் றங்கப் பணிகள் சமைப்பதுவும்

வட்டாடு வாரைத் திருத்திநன் மார்க்கத்தில் வைப்பதுவும்

பட்டாங்கி லுள்ளதைக் காகிதத் தச்சிற் பதிப்பதுவம்

தொட்டார் மனத்தைப் பலவாறு நாளும் துயர் செயுமே

தட்டானிடத்தில் தங்க நகைகள் செய்யும் பணியைக் கொடுத்து விட்டால் போதும், அதை எண்ணியபடி உருப்படியாக வாங்குவதற்குள் போதும் போதும் என்று ஆகி விடுமாம்.

அடுத்து சூதாட்டம், குடி என தீய பழக்கத்திற்கு அடிமைப் பட்டாரைச் சந்தித்து பேசி அவரை நல் வழிப் படுத்துவது லேசுப்பட்ட காரியமல்ல. அவரை நல்ல மார்க்கத்தில் வைப்பது இருக்கிறதே, அதைச் செய்தால் அது ஒரு சாதனை தான்!

அடுத்து பல பல ஓலைச் சுவடிகளை உள்ளதைப் பாதுகாக்கும் பொருட்டு அச்சுப் பதிப்பாக காகிதத்தில் அடித்துக் கொடுங்கள் என்று அச்சகத்தில் கொடுத்தால், கொடுத்தது கொடுத்தது தான். அதை அச்சிட்டு பிழை திருத்தம் பார்த்து புத்தகமாக வாங்குவதற்குள் போதும் போதும் என்று ஆகி விடும்.

இந்த விஷயங்களை ஆர்வக் கோளாறினாலோ அல்லது அவசியத்தினாலோ தொட்டால் அப்படித் தொட்டவர் படும் பாடு அவரே அறிவார்.

தண்டபாணி சுவாமிகள் தான் பட்ட பாட்டைச் சொல்லி விட்டார்.

ஒரு சமயம் தேவிகோட்டையில் முத்தப்பன் என்று ஒருவனைச் சந்தித்தார் அவர். அவனோ சாதாரணமானவன் அல்ல; திருட்டு எண்ணம் கொண்டவன். ஒரு தப்பு, இரண்டு தப்பு அல்ல மூன்று தப்பு என்று போய்க் கொண்டே இருக்கும் அளவு தப்பு செய்பவன்.

அவன் பெயர் முத்தப்பன்.

அவனது இயல்பு குறித்து தண்டபாணி சுவாமிகள் ஒரு பாடலைப் பாடினார் இப்படி:

சித்தப் பிரமை திருட்டெண்ணந் தீங்குடனே

முத்தப்பு முள்ளானை முத்தப்ப னென்றுரைத்தார்

எத்தப்பு மில்லாநீ ரெப்படியோ கைக்கொண்டீர்

மெத்தப் புகழ்படைத்த மேல வீட் டுள்ளாரே

மெத்தப் புகழ் படைத்த மேல் வீட்டில் உள்ளவரே, எத்தப்பும் இல்லாதவர் நீர்.

ஆனால் முத்தப்பன் கதையைக் கேளும். பைத்தியம், திருடு, தீங்கு ஆகிய முத்தப்பும் உள்ளவனை முத்தப்பன் என்று பெயர் வைத்து அழைத்து வந்தனர். அவனிடம் அல்லவா பலரும் மாட்டிக் கொண்டார்கள்!

சமயத்திற்கேற்றபடி தனது அனுபவங்களையும் தனது கருத்துக்களையும் பாடல்களாகப் பாடுவதில் வல்லவர் தண்டபாணி சுவாமிகள்.

முருகனைப் பற்றிய இவரது பாடல்கள் புகழ் பெற்றவை.மேலே கூறியுள்ள நூல்களும் இவரது புலமையைப் பறை சாற்றுபவை.

***

tags-  தொழில், சிறந்தது,  எது? ,  தண்டபாணி சுவாமிகள்,