

Post No. 9860
Date uploaded in London –17 JULY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

நாடகத்தின் தோற்றம் ரிக்வேதத்தில் உள்ளது. இந்திய நாட்டிய நாடகங்கள் அனைத்தும் சமயம் சம்பந்தப்பட்டவை. கிரேக்க நாடகங்களுக்கும் இதற்கும் சம்பந்தம் எள்ளவும் இல்லை.
ரிக் வேதத்தில் 19 உரையாடல் கவிதைகள் உள்ளன. அவை 12 ஆண்டுகள் முதல் 100 ஆண்டுகள் வரை தொடர்ந்து நடந்த வேள்விகளின் போது கேளிக்கைக்காக நடித்து ஆடப்பட்டன. அதாவது மேடை நாடகங்கள் அல்ல. காமன் பண்டிகைகளின் போது தமிழ் நாட்டின் தெருச் சந்திப்புகளில் நடக்கும் கூத்து போல இவை நடந்தன. ஏனெனில் வேதங்களுக்கு உரை எழுதிய சாயனரும் இவைகளை மதச் சடங்குகளுடன் தொடர்புபடுத்தவில்லை. அதிலிருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளே என்பது புலனாகிறது.
இந்துக்களை மட்டம் தட்டுவதற்காக கிரேக்க நாடகங்களை இந்தியர்கள் ‘காப்பி’ அடித்ததாக வெள்ளைக்காரர்கள் எழுதினர். அது தவறு என்பதை தமிழ் இலக்கியங்களை ஊன்றிப் படிப்போர் உணர்வர். கிருத யுகத்தில் நாட்டியம் இல்லை என்றும் திரேதா யுகத்தில்தான் நாட்டிய நாடகம் தோன்றியதாகவும் பரத முனி எழுதிய நாட்டிய சாஸ்திர நூல் பகரும். ஆகையால் ரிக்வேத உரையாடல் கவிதைகள் மேடை நாடகங்கள் அல்ல, தெருக்கூத்து போன்ற கேளிக்கை நாட்டியங்களே என்று தெரிகிறது.
***
முதல் கட்டம் கி.மு. 3000
ரிக்வேத சம்பாஷணைக் கவிதைகள்.
கிரேக்க மொழியின் முதல் காவியமே கி.மு 800-ல்தான் வந்தது என்பதையும் தமிழ் மொழியின் முதல் நூலே கி.மு 100 ஒட்டித்தான் வந்தது என்பதையும் நினைவிற் கொள்க. தமிழுக்கும் முன்னர் லத்தின் மொழி , எபிரேய மொழி, சீன மொழி நூல்கள் உள்ளன. இவை அனைத்த்துக்கும் முந்தியவை சம்ஸ்க்ருத நூல்கள். ரிக்வேத சம்பாஷணைக் கவிதைகள்.
***
இரண்டாவது கட்டம் கி.மு. 1000க்கு முன்
யஜுர்வேத சாகையான வாஜசநேயி சம்ஹிதையில் நடிகரைக் குறிப்பிடும் சைலூச என்ற சொல் வருகிறது. இது சிலாலின் என்பவர் எழுதிய நட சூத்திரத்துடன் தொடர்புடைய சொல். இதை பாணினியும் தனது சூத்திரத்தில் குறிப்பிடுவதால் 2700 ஆண்டுகளுக்கு முன்னரே நடிப்போருக்கான சூத்திரங்கள், அதாவது ஒரு வழிகாட்டிப் புஸ்தகம் (HAND BOOK) இருந்தது தெரிகிறது.
பாணினி எழுதியது இலக்கண புஸ்தகம். ஆகையால் அதில் ஒரே ஒரு குறிப்புதான் கிடைக்கிறது.
போதாயன தர்மசூத்திரமும் நாடக நடிகர்களை ஆதரிக்கவில்லை. அது சமயத்துக்குப் புறம்பான செயல் என்பது போல அதைத் தள்ளி வைக்கிறது. ஆகையால் நாடகம், நடனம் என்பது பற்றிய அக்கால சமயக் கருத்து தெளிவாகிறது.
****
மூன்றாவது கட்டம் , கி.மு 3000- கிமு.1000
திரேதா யுகத்தில்தான் முதல் முதலில் நாட்டிய நாடகங்கள் இடம்பெற்றதாக பரத முனி கூறுகிறார். இதற்குச் சான்று ராமாயணத்தில் கிடைக்கிறது. லவனும் குசனும் ராமாயணக் கதையை ராமன் முன்னரே வாத்தியக் கருவிகளுடன் நடித்துக் காட்டினார்கள். இதைத் தொடர்ந்து அப்படிப் பாடுவோரின் இனத்தை குசி லவ பாடகர் என்று அர்த்த சாஸ்திரம் கூறுகிறது.
****
நாலாவது கட்டம் கி.மு 4-ம் நூற்றாண்டு
அர்த்த சாஸ்திரத்தை எழுதிய கௌடில்யர் எனப்படும் சாணக்கியர் நடன, நாட்டிய , நாடக சொற்களை விரிவாகவே பேசுகிறார். இவர் பாணினிக்கு 300 ஆண்டுகள் பிற்பட்டவர். இவர் சொல்லும் விஷயங்கள் அக்காலத்தில் எந்த அளவுக்கு நாடகம் பரவி இருந்தது என்பதைக் காட்டுகிறது. இதோ அவர் தரும் விவரங்கள் :-
பாணினி இசைக்குழு /ஆர்கெஸ்ட்ரா பற்றியெல்லாம் பேசுகிறார். கௌடில்யர் அதற்கு மேல் ஒரு படி செல்கிறார்.
நட = நடிகர்கள்
நர்த்தக – நடனம் ஆடுவோர்
காயக = பாடுவோர்
வாதக = வாத்தியம் வாசிப்போர்
வாக் ஜீவன = கதா காலட்சேபம் செய்வோர்
குசி லவ = பாணர்கள்
ப்லவக = கழைக் கூத்தாடிகள்
செளபிக = அதிரடிச் செயல் செய்வோர், மாஜிக் செய்வோர்
சாரணர் = ஊர் ஊராகப் போய்ப் பாடும் பாணர்கள்
இதுமட்டுமின்றி இவை அனைத்துக்கும் கலா = கலை என்று பெயர்கொடுத்து இப்படி சம்பாத்தித்து வாழ்க்கை நடத்துவோரை ‘ரங்கோப ஜீவினி = அரங்க வாழ்வுடையோர்’ என்றும் சொல்கிறார் கௌடில்யர்.
சுருங்கச் சொல்லின் சம்ஸ்க்ருத நாடகங்கள், முழுக்க, முழுக்க இந்தியாவில் தோன்றி இந்தியாவில் வளர்ந்தவையே. பாணினி இலக்கணத்துக்கு மஹாபாஷ்ய உரை எழுதிய பதஞ்சலியும் கம்சனைக் கிருஷ்ணனின் கொன்ற நாடகத்தையும் ரசிகர்களையும் வருணிக்கிறார் .
இதற்கெல்லாம் நமக்கு வேறு வட்டாரங்களில் இருந்தும் சான்று கிடைக்கிறது. வடநாட்டில் இருந்து மல்யுத்தம் புரியவந்த மள்ளர்கள் பற்றி சங்க இலக்கியம் பாடுகிறது. ஆரியக் கூத்தாடிகள் வந்ததையும் அவை செப்புகின்றன.
உலகிலேயே முதலில் பெண்களுக்கு SYLLABUS சிலபஸ் போட்ட காம சூத்திர நூல் ஆசிரியர் வாத்ஸ்யாயனர், 64 கலைகளை பெண்களுக்கான பாட திட்டத்தில் பட்டியல் போட்டுள்ளார். இதை சிலப்பதிகாரமும் பகர்கிறது. மேலும் பல பழைய சம்ஸ்க்ருத நூல்களும் உரைக்கின்றன.
அரை வேக்காட்டு வெள்ளைக்காரர்கள் இந்தியாவின் சிறப்பு மிகு 1000 நூல்களை 400 ஆண்டுகளில் வந்ததாக – கி.மு.2ம் நூற்றாண்டு முதல்- கி.பி 2ம் நூற்றாண்டு வரை வந்ததாக உளறிக்கொட்டி இருக்கின்றனர். மொழியியல் ரீதியிலும் இது தவறு ; கலை வளர்ச்சி வேகத்தைப் பார்க்கிலும் இது தவறு என்று எவரும் அறிவர்.
****
கிரேக்கர்களிடம் நாம் ஜோதிடத்தைக் கற்றோம், நாடகத்தைக் கற்றோம், காவியம் எழுதும் கலையைக் கற்றோம் என்று எழுதாத வெள்ளைக்காரன் இல்லை. இவர்கள் எவருக்கும் தமிழ் தெரியாது. தமிழில் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே வட இந்திய மல்லர்களும் , ஆடுநரும் , பாடுநரும் வந்ததை சங்க இலக்கியம் முதல் திரு விளையாடல் புராணம் வரை மொழிகின்றன . அவை எல்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தவை என்பதை அப்பர் தேவாரம், கல்லாடம், சிலப்பதிகாரம் ஆகியன நமக்குக் காட்டுகின்றன.
சிலப்பதிகாரத்தையும் பரத சாஸ்திர நூலையும் ஒப்பிட்டு ஆராய்ந்தால் மேலும் தெளிவான சித்திரம் கிடைக்கும்.
கிரேக்க நாடகங்களுக்கும் நமக்கும் ஸ்னானப் பிராப்தி கூட இல்லை.
1.கிரேக்க நாடகங்கள் சமயத்துக்குப் புறம்பான நாடகங்களை, குறிப்பாக அரசியல் கிண்டல், ‘செக்சி’ SEXY நாடகங்கள். சம்ஸ்கிருத நாடகங்கள் சமயம் தொடர்பானவை .
2. கிரேக்கர்கள் சோக நாடகங்களையும் எழுதினார்கள் . சம்ஸ்கிருத நாடகங்கள் சுப முடிவானவை. இன்றைய திரைப்படங்கள் போல அன்றே ‘சுபம்’ என்று நாடகங்களை முடித்தன
3.சம்ஸ்க்ருத, கிரேக்க நாடகங்களின் அமைப்பு முற்றிலும் வேறுபட்டவை. நம்முடைய நாடகங்களில் பிராமண விதூஷகர்/ COMEDIANS காமெடியன்ஸ் உண்டு. இதனால்தான் சமீப காலம் வரை பிராமண கிண்டல் திரைப்படங்களில் இருக்கிறது. இதை காளிதாசன் நாடகங்களிலும் காணலாம்.
4.சம்ஸ்க்ருத நாடகங்கள் முதலில் டைரக்டர்/ சூத்ரதாரர் அறிமுகத்துடன் துவங்கும். அவர் நாடகத்தை அறிமுகம் செய்து என்ன வரப்போகிறது என்பதைக் கோடிட்டுக்காட்டுவார். கிரேக்க நாடகங்களில் இப்படி திட்டமிட்ட அமைப்பு கிடையாது .
5. சம்ஸ்க்ருத நாடகங்கள், பரத வாக்கியம் என்னும் தேசீய கீதத்துடன் நிறைவு பெறும் . இதில் மன்னர் வாழ்க, குடி மக்கள் வாழ்க, வளம் சுரக்க என்றெல்லாம் கீதம் இசைப்பர்.
கி.மு காலத்தில் தோன்றிய பாஷாவின் நாடகங்களையும் காளிதாசரின் நாடகங்களையும் பார்க்கையில் இதை அறியலாம். காளிதாசன் காலம் 2000 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை பிரபல சம்ஸ்க்ருத அறிஞர்கள் காட்டியுள்ளனர். நானும் சங்க இலக்கிய உவமைகள் மூலம் காட்டியுள்ளேன்.
சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய 11 ஆடல்களும் இந்து மத புராணக் கதைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை. தமிழை எள்ளி நகையாடிய பிருஹத் தத்தன் என்ற வட நாட்டுக்காரனை அழைத்து குறிஞ்சிப் பாட்டு பாடிக் காண்பித்தார் கபிலர் என்னும் சம்ஸ்க்ருதம் தெரிந்த பிராமணப் புலவர் . இது காளிதாசன் காவிய நடையின் செல்வாக்கில் பிறந்தது என்பதை ஜி.யூ . போப் போன்றர் பார்த்த மாத்திரத்திலேயே எழுதிவிட்டனர். சிலப்பதிகாரத்தில் கோவலனுக்கு சம்ஸ்கிருதம் தெரியும் என்ற செய்தியும் வருகிறது ஆகையால் அக்காலத்தில் காளிதாசனை தமிழ் மக்கள் அறிந்திருப்பர். அவருடைய நாடகங்களையும் படித்திருப்பர். அவருடைய 1500 உவமைகளில் குறைந்ததது 200 உவமை கள் அப்படியே தமிழில் உள்ளன.
எல்லாக் கலைகளும் வளர்ச்சி அடையும்; அதுவும் பிற கலாசாரங்க்ளில் உள்ள நல்ல அம்சங்களைக் கடன் வா ங்கத் தயங்காது என்பதை உலக இலக்கியங்கள் காட்டுகின்றன. அவ்வகையில் கண்டோமானால் பிற்கால சம்ஸ்கிருத நாடகங்களில் சில அம்சங்கள் கிரேக்க நாடகங்களில் இருந்து வந்திருக்கலாம். மேலும் யவன என்ற சொல் துவக்க காலத்தில் ரோமானியர்கள் போன்ற அனைத்து வெளிநாட்டினரையும் குறித்தது. ஆகையால் யவனிகா என்ற திரைச் சீலை சொல்லை மட்டும் வைத்து பெரிய கற்பனைக் கோபுரம் கட்டுவது பொருந்தாது.
கட்டுரையின் இரண்டாவது பகுதியில் ரிக் வேத உரையாடல் கவிதை பட்டியலைத் தருகிறேன்..
–தொடரும்
–சுபம்—
TAGS- நாடகம், தோற்றம், ரிக்வேதம், உரையாடல் , கவிதைகள்

You must be logged in to post a comment.