
Post No. 9072
Date uploaded in London – –24 DECEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ராமாயணத்தில் சீதையை இராவணன் கடத்திச் சென்றபோது சீதை கீழே எறிந்த நகைகளை குரங்குகள் எவ்வாறு அணிந்தன என்ற அரிய செய்தி புறநானூற்றில் உள்ளது. இதை அனந்தராம தீக்ஷிதர் போன்ற உபன்யாசகர்கள் நகைச் சுவை ததும்பச் சொல்லும்போது அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் பல்லாயிரக் கணக்கானோர் ஆரவாரித்து மகிழ்வர் . புறநானூற்றுப் புலவர் ஊண் பொதிப் பசுங்குடையார்தான் இதை முதல் முதலில் பாடியுள்ளார். பாடல் எண் 378. இது தவிர அக நானூற்றுப் பாடல் ஒன்றிலும் ஒரு ராமாயணக் காட்சி வருகிறது . அதுவும் வேறு எங்கிலும் காணக்கிடக்கில . நிற்க.
கம்பனும் இந்த குரங்கு நகை அணியும் காட்சியை பால காண்டத்தில் ‘வரைக் காட்சிப் படலத்தில்’ பயன்படுத்துகிறான். ஒருவேளை கம்பன் புறநானூற்றைக் கரைத்து குடித்திருக்கலாம் அல்லது அந்தக் காலத்தில் வால்மீகி விட்டு விட் ட செவி வழிச் செய்திகளை பிறர் பாடியிருக்கலாம்.
புறநானூற்றுப் புலவன் ஊண் பதிப் பசுங்குடையார் (378) சோழன் செருப்பாழி எறிந்த இளஞ் சேட் சென்னியைப் பாடுகையில் சொல்கிறார் –

தென் பரதவர் மிடல் சாய ….………..
கடுந்தெறல் இராமனுடன் புணர் சீதையை
வலித்த கை அரக்கன் வௌவிய ஞான்றை
நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப் பொலிந்தாங்கு
அறா அ அறு நகை இனிது பெற்றிகுமே —
இருங்கிளைத் தலைமை எய்தி
அரும்படர் எவ்வம் உழந்தன் தலையே – 378
பொருள் :–
என்னைப் போன்ற பரிசிலர்க்கு சோழ மன்னன் நகைகளை வாரி வழங்கினான் . வறுமையால் வருந்திய என் சுற்றத்தார் அவற்றைக்கொண்டு விரல்களில் அணியத் தக்கவற்றை காதில் அணிபவரும்
காதில் பூணத் தக்கவற்றை விரலில் அணிபவரும்
இடுப்புக்குரியவற்றை கழுத்தில் அணிபவரும்
கழுத்துக்குரியவற்றை இடையில் அணிந்து கொள்பவருமாகி இருந்த காட்சி எப்படி இருந்தது தெரியுமா ?
இராமனுடன் வந்த சீதையை, மிக்க வலிமையுடைய அரக்கனான இராவணன் கவர்ந்துகொண்டு போன சமயத்தில் சீதை கழற்றி எறியக் கீழே விழுந்த அணிகளைக் கண்டெடுத்த குரங்கின்
, சிவந்த முகமுடைய மந்திகள் அந்த நகைகளை தாறுமாறாக அணிந்ததைப் பார்த்து கண்டவர் எல்லாம் நகைத்து மகிழ்ந்தது போல இருந்தது
அது போல பெரிய சுற்றத்துக்குத் தலைமை பூண்ட நாங்கள் மகிழ்ந்தோம். இதுவரை எங்களை வறுமை வாட்டி வந்தது
XXXX

கம்பன் இதை எப்படிப் பயன்படுத்துகிறான் என்றும் காண்போம் —
சரம் பயில் சாபம் என்னப் புருவங்கள் தம்மின் ஆடா
நரம்பினோடு இனிது பாடி நாடக மயிலோடு ஆடி
அரம்பையர் வெறுத்து நீத்த அவிர்மணிக் கோவை ஆரம்
மரம்பயில் கடுவன் பூண மந்தி கண்டு உவக்கும் மாதோ
–வரைக் காட்சிப் படலம், கம்ப ராமாயணம்
பொருள் :–
தசரதன் படைகளும் அயோத்தி மக்களும் சீதா – ராமன் கல்யாணத்துக்காக மிதிலை நகரை நோக்கிச் செல்கின்றனர் .அப்போது மலையைக் கடந்து செல்லும்போது நடக்கும் ஒரு நிகழ்ச்சி இது. தேவ மகளிர்க்கு அம்பு பொருந்திய வில் போன்ற புருவங்கள் உள . அவர்கள் வீணை , யாழ் முதலிய நரம்பு வாத்தியங்களுடன் பாடுகின்றனர் . அவர்கள் மயில்களைப் போல நடனம் ஆடுகின்றனர் அத்தேவமகளிர் கணவனுடன் ஊடல் கொண்டதால் , வெறுத்து , முத்து மாலைகளையும் இரத்தின மாலைகளையும் கழற்றி எறிகின்றனர் . அவற்றை மரத்தில் வாழும் ஆண் குரங்குகள் எடுத்து பெண் குரங்குகளுக்குப் போடுகின்றன. அப்போது அவற்றை அணிந்த்துக்கொண்ட பெண் குரங்குகளும் அதைக் கண்டு மகிழும் .
இப்படி கம்பன் திடீரென குரங்குகளுக்கு நகை போட்டு மகிழ்வது புறநானுற்றில் கண்ட ராமாயணக் காட்சி நினைவுக்கு வந்ததால்தான் என்பதை சொல்லத் தேவையில்லை .
Tags — குரங்கு, நகை, கம்பன், ஊண்பொதிப் பசுங்குடையார், புறநானூறு

–சுபம்–